Published:Updated:

அமைச்சர்கள் தோல்விக்கு அடுக்கடுக்கான காரணங்கள்!

தோல்வியடைந்த அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
தோல்வியடைந்த அமைச்சர்கள்

‘மாமா... மாப்ள’ உறவு... வாய்ச்சவடால்... அதீத நம்பிக்கை...

அமைச்சர்கள் தோல்விக்கு அடுக்கடுக்கான காரணங்கள்!

‘மாமா... மாப்ள’ உறவு... வாய்ச்சவடால்... அதீத நம்பிக்கை...

Published:Updated:
தோல்வியடைந்த அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
தோல்வியடைந்த அமைச்சர்கள்
மிடுக்காக வலம்வந்த அமைச்சர்களில் 11 பேரை மண்ணைக் கவ்வவைத்திருக்கிறார்கள் வாக்காளர்கள். அதிகார பலம், பண பலம் இவற்றையெல்லாம் மீறி அவர்கள் தோல்வியைத் தழுவ என்ன காரணம்?

கே.சி.வீரமணி

கடந்த 2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ஜோலார்பேட்டையில் வெற்றிபெற்ற கே.சி.வீரமணிக்கு இந்த முறை சறுக்கல் ஏற்பட முக்கியக் காரணம், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் இருந்த ‘மாமா... மாப்ள’ உறவுதான் என்கிறார்கள்.

‘‘ஜோலார்பேட்டையில் வீரமணியைத் தோற்கடித்த தி.மு.க வேட்பாளர் தேவராஜி, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். வீரமணியும் தேவராஜியும் ஒரே சமூகம் என்பதாலும், கடும் போட்டி நிலவியது. வீரமணியின் சொந்த அக்காள் மகன் தென்னரசு சாம்ராஜ் அ.ம.மு.க வேட்பாளராக, தாய்மாமனை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்தார். சாம்ராஜ் 619 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தாலும், வீரமணியின் தோல்விக்கு அவரும் ஒரு காரணம். குறுநில மன்னரைப் போன்ற ஆதிக்க குணம், நிலப் பஞ்சாயத்து புகார்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் வீரமணிக்கு எதிரான வாக்குகளாக மாறியிருக் கின்றன’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அமைச்சர்கள் தோல்விக்கு அடுக்கடுக்கான காரணங்கள்!

ஜெயக்குமார்

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரின் தோல்வி, தலைநகர் அரசியலைத் தகிக்க வைத்திருக்கிறது. தோல்விக்கான காரணம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலர், ‘‘மீன்பிடி சீன இன்ஜின் படகுகளால் ஏற்பட்ட அதிருப்தி, காசிமேடு மீன்பிடித் துறைமுக விவகாரம் ஆகியவற்றால் மீனவ சமூகத்தினரின் அதிருப்தியை ஜெயக்குமார் சம்பாதித்துவிட்டார். ஆனாலும், மீடியாக்களின் வெளிச்சம் அதிகமாகப் பாய்ந்ததால், அதீத நம்பிக்கையில் கட்சி நிர்வாகிகள் பலரையும் அவர் மதிக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை தி.மு.க சரியாகப் பயன்படுத்திக்கொண்டது.

ராயபுரம் பகுதியிலிருக்கும் பிரபல தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளைக் குறிவைத்து அதன் முதலாளிகளுடன் தி.மு.க-வினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த நிறுவனங்களில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் ராயபுரத்தில்தான் வாக்குகள் இருக்கின்றன. இப்படியான வாக்குகளே 15,000-ஐ தாண்டும். அந்த ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வாக்குகளை தி.மு.க வளைத்துவிட்டது. இது போன்ற களப்பணியை ஜெயக்குமார் செய்யவில்லை’’ என்றார்கள்.

சரோஜா

சின்னத்தை நம்பிய அளவுக்குத் தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக்கொள்ளாததுதான் ராசிபுரத்தில் அமைச்சர் சரோஜாவின் தோல்விக்குக் காரணம் என்கிறார்கள்.

‘‘தொகுதியில் புறவழிச்சாலை, பாதாள சாக்கடைத் திட்டம், மேம்பாலப் பணிகள் என எந்தப் பழைய திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. துறை சார்ந்த புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அதனால், தொகுதியில் இயல்பாகவே சரோஜா மீது அதிருப்தி இருந்தது. வெண்ணந்தூர், ராமகிரிப்பேட்டை ஒன்றியங்களில், ஜி.எஸ்.டி வரிச் சுமையால் நெசவாளர்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கவில்லை. தொகுதியில் மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி-யுமான பி.ஆர். சுந்தரத்துக்கு சீட் கிடைக்காததால், அவருடைய ஆதரவாளர்களும் உள்ளடி வேலை பார்த்தார்கள். சரோஜா அமைச்சராக இருந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்சிக்காரர்களைச் சரியாக கவனிக்கவில்லை. அதனால் கட்சிக்காரர்கள் தீவிரமாக வேலை செய்யாமல், கொடுத்த பணத்தைக்கூட சரியாகப் பட்டுவாடா செய்யவில்லை’’ என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

சரோஜாவிடம் பேசியபோது, ‘‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அரசியல்வாதிக்கு வெற்றி தோல்வி சகஜம். தோல்வியைத் தோல்வியாக எடுத்துக்கொள்ளாமல், எந்த இடத்தில் விட்டோமோ அந்த இடத்திலிருந்து முன்னேற வேண்டும். இனி எனக்கு நல்லதே நடக்கும் என்ற தெளிவு எனக்கு இருக்கிறது’’ என்றார்.

மாஃபா பாண்டியராஜன்

ஆவடி தொகுதியில் மீண்டும் களமிறங்கிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 54,695 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

அ.திமு.க-வைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, ‘‘இந்தத் தொகுதியில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அலுவலகங்கள் அதிக அளவில் இருப்பதால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் குடியிருக்கிறார்கள். ‘பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பால், இவர்களின் ஓட்டுகள் இந்த முறை பாண்டியராஜனுக்குக் கிடைக்கவில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களுடன் மோதல், தொகுதியில் அ.தி.மு.க-வினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாளாகச் செயல்பட்டுவந்தவர், கட்சியினரை அரவணைத்துச் செல்வதில் கோட்டைவிட்டார். உள்ளூர் மக்களின் குறைகளுக்குச் செவி கொடுக்காமல் ஹைடெக் அரசியல் செய்ததும், மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்தியது.

ட்விட்டரில் பாண்டியராஜன் பதிவிட்ட அனிதாவின் சர்ச்சை வீடியோ, தேர்தல் நெருக்கத்தில் அவருக்கு எதிரான கடும் எதிர்ப்பலையை உருவாக்கியது. பா.ஜ.க-வுக்கு இணக்கமாகச் செயல்பட்டது, இந்துத்துவா ஆதரவு நிலைப்பாடு ஆகியவை காரணமாக சிறுபான்மையினர் வாக்குகள் விழாமல் போனதும் பாண்டியராஜனின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம்’’ என்றார்கள்.

பெஞ்சமின்

மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் தோல்விக்கு என்ன காரணம்? அ.தி.மு.க-வினரிடம் பேசினோம். ‘‘அமைச்சர் பெஞ்சமின் குறுகிய காலத்தில் அ.தி.மு.க-வில் அசுர வளர்ச்சியடைந்தவர். கவுன்சிலர், துணை மேயர், அமைச்சர், மாவட்டச் செயலாளர் என அடுத் தடுத்த பதவிகளிலிருந்த பெஞ்சமின் கட்சியினரை அனுசரித்துச் செல்லாமல் கோட்டைவிட்டதே தோல்விக்கு முக்கியக் காரணம். குறிப்பாக சீனியர்களை அவர் அரவணைத்துச் செல்லவில்லை.

பெஞ்சமினின் பெயரைச் சொல்லி அவரின் உறவினர் ஒருவரும், குற்றப் பின்னணியைக்கொண்ட ஒருவரும் குறுநில மன்னர்கள்போல வலம்வந்து, தொகுதி மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் பிசினஸிலும் பெஞ்சமின் தரப்பினரின் தலையீடு இருந்துவந்தது. திருவள்ளூர் மாவட்டத்தை அமைப்புரீதியாக அ.தி.மு.க பிரித்ததில், மாவட்டச் செயலாளர் ஒருவருடன் பெஞ்சமினுக்கு முட்டல் மோதல் ஏற்பட்டது. அத்துடன், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பிடித்ததால், சிறுபான்மையினரின் ஓட்டுகள் இம்முறை பெஞ்சமினுக்குக் கிடைக்கவில்லை’’ என்றார்கள்.

அமைச்சர்கள் தோல்விக்கு அடுக்கடுக்கான காரணங்கள்!

வெல்லமண்டி நடராஜன்

‘‘அ.தி.மு.க-வுக்குள் நடந்த உள்ளடி வேலைகளால்தான் திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் தோல்வியைத் தழுவினார்’’ என்ற பேச்சுகள் அடிபடுகின்றன. அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘‘தொகுதிக்கும் மக்களுக்கும் பெரிதாக எதுவும் செய்யாததோடு, கட்சி நிர்வாகிகளுக்கும் எதுவும் செய்யாதவர் வெல்லமண்டி நடராஜன். கட்சிக்குள் அவருடைய மகன் ஜவஹரின் தலையீடும் தோல்விக்கு ஒரு காரணம். ‘தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கும் திருச்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் சென்னைவாசி. தி.மு.க-வில் இருப்பவர்களே உள்ளடி வேலைகள் பார்க்கிறார்கள்’ என்று தப்புக்கணக்கு போட்டார். உண்மையில் அவருக்கு எதிராகத்தான் அ.தி.மு.க-வினர் உள்ளடி வேலை பார்த்தார்கள். பிரசாரத்தில் கடைசி ஆயுதமாக, தன் பேத்திக்கு ஜெயலலிதாபோல வேடமிட்டு பிரசார வாகனத்தில் கம்பீரக் குரலில் பேசவைத்ததும் எடுபடவில்லை’’ என்றார்கள்.

ராஜேந்திர பாலாஜி

‘‘எனக்கு அங்கீகாரம் கொடுத்ததே ‘சிவகாசி’தான். நான் அரசியல்ல இருக்கும் வரை இங்க மட்டும்தான் போட்டி யிடுவேன்’’ எனச் சொல்லிவந்த ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் தொகுதிக்கு மாறினார். ‘‘சிவகாசி என் சொந்தத் தொகுதி, ராஜபாளையம் என் சொந்தக்காரத் தொகுதி’’ எனப் பேசி தொகுதித் தாவலுக்கு அதிரடி விளக்கமும் சொன்னவர், தி.மு.க-வின் தங்கப்பாண்டியனிடம் தோற்றிருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்திலும் குண்டர் படை சூழ, அடாவடிப் பேச்சையே தொடர்ந்தார் ராஜேந்திர பாலாஜி. ‘‘ஒருவேளை அவர் வெற்றிபெற்றால், அவரைச் சுற்றியுள்ள குண்டர் படையைத் தாண்டி எளிதாகச் சந்திக்க முடியுமா?’’ என்பதும் தொகுதி முழுக்க எதிரொலித்தது.

‘‘எப்படியும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என வாக்குக்காக கிராமப் பகுதிகளில் ஆயிரம் லட்டுகள் வரை கொடுத்தும், நகர்ப்பகுதியில் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டிக்காக டோக்கன்கள் விநியோகித்தும் பலனில்லாமல் போனது. கிராமங்களிலுள்ள இந்துக் கோயில்களின் கட்டுமான வளர்ச்சிக்காக உதவுகிறேன் எனச் சொல்லி, ஊர்க் கோயில் நிர்வாகம் மூலம் கணிசமான வாக்குகளை அள்ளலாம் என்ற அவரின் கணிப்பும் எடுபடவில்லை. ராஜேந்திர பாலாஜியின் தோல்விக்கு, முக்குலத்தோர் வாக்குகளைச் சிதறடித்த அ.ம.மு.க-வைச் சேர்ந்த ராஜவர்மனின் கைங்கர்யமும் ஒரு காரணமாக அமைந்தது’’ என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

எம்.சி.சம்பத்

‘‘பஞ்சரான சாலைகள், பல வருடங்களாகக் கிடப்பில் கிடக்கும் பாதாள சாக்கடைத் திட்டம் போன்றவற்றைச் சரிசெய்யாததால் நகர்ப்புற மக்களிடம் நிலவிய அதிருப்தி, பி.ஜே.பி கூட்டணியால் பட்டியல் சமூக வாக்குகள் அறுவடை செய்ய முடியாதது போன்றவற்றைத் தாண்டி, அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூரில் வெற்றியைப் பறிகொடுக்க முக்கியக் காரணம், அவரின் மகன் பிரவீன்’’ என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

அவர்களே தொடர்ந்து, ‘‘கட்சிக்குள்ளும் தொகுதிக்குள்ளும் பிரவீன் நிழல் அமைச்சராக வலம்வந்தது நிர்வாகிகளை முகம் சுளிக்கவைத்தது. கட்சிப் பணிகள் தொடங்கி, கொடுக்கல் வாங்கல் வரை அனைத்திலும் பிரவீனை முன்னிலைப்படுத்தியதைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை. ஜெயலலிதா இருக்கும் வரை இலைமறை காயாக இருந்த கோஷ்டி மோதல், அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்தது. அதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும்கூட முன்னணி நிர்வாகிகள் கட்சிப் பணி ஆற்றவில்லை. வழக்கம்போல ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்து நிர்வாகிகளைச் சரிசெய்ய முயன்றார் அமைச்சர். வருவதை ஏன் விடவேண்டும் என்று அதை வாங்கிக்கொண்டவர்கள், அப்படியே அமுக்கி ஏப்பம் விட்டுவிட்டார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க-வின் அய்யப்பன், அனைத்துத் தரப்பினருக்கும் லட்டுகளைச் சரியாக விநியோகித்து சாதித்துவிட்டார்’’ என்கிறார்கள்.

ராஜலட்சுமி

கடந்த ஏழு தேர்தல்களில் தொடர்ச்சியாக அ.தி.மு.க வேட்பாளர்களே வெற்றிபெற்ற சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க-வின் ராஜாவிடம் தோற்றுபோயிருக்கிறார் அமைச்சர் ராஜலட்சுமி. அ.ம.மு.க வேட்பாளரான அண்ணாதுரை பெற்ற 22,676 வாக்குகளில் பெரும்பங்கு அ.தி.மு.க-வுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் என்பதால், ராஜலட்சுமிக்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அ.தி.மு.க-வினரிடம் பேசியபோது, ‘‘ராஜலட்சுமி தன்னை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தினாரே தவிர, கட்சியினரைக் கண்டுகொள்ளவே இல்லை. அவரின் கணவர் முருகன், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, கட்சியினர் உள்ளிட்ட 33 பேர் மீது பி.சி.ஆர் சட்டப் படி வழக்கு தொடரக் காரணமாக இருந்திருக்கிறார். இது தொகுதியில் பலமாக இருக்கும் தேவரின மக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், வழக்கமாக அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கும் அவர்களில் பலர் மாற்றுக்கட்சிக்கு வாக்களித்து விட்டார்கள். நிர்வாகிகள் பலரும் உள்ளடி வேலை செய்தனர். இவையெல்லாம் ராஜலட்சுமியை வீழ்த்தியதுடன், 30 ஆண்டுக்கால அ.தி.மு.க கோட்டை தகர்வதற்கும் காரணமாக அமைந்துவிட்டன’’ என்றார்கள்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பரம வைரிகளான தி.மு.க-வின் செந்தில் பாலாஜியும் அ.தி.மு.க-வின் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் மோதியதால், கரூர் தொகுதியில் ஆரம்பம் முதலே பரபரப்புக்குப் பஞ்சமில்லை. வைட்டமின் ‘ப’-வை நம்பி தீவிரமாகக் களப்பணி ஆற்றியும் தோல்வியைத் தழுவியிருக்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘வாக்குக்கு 3,000 ரூபாய், தங்க நாணயம் மற்றும் வாஷிங் மெஷினுக்கான டோக்கன் விநியோகம் எனத் தொகுதியே இரு தரப்பினராலும் பரபரப்பானது. ஆனால், கட்சியினர்களையும், பிற சமூக மக்களையும் கவர அமைச்சர் தவறிவிட்டார். குறிப்பிட்ட சில நபர்களுக்கே கட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பதவிகளைப் பெற்றுத் தந்ததால், கட்சியினர் அவர்மீது கோபத்தில் இருந்தார்கள். தனது சமூகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர்மீது இருந்தது. இவற்றையெல்லாம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட செந்தில் பாலாஜி, தொகுதியிலுள்ள பிற சமூக வாக்குகளையும், மைனாரிட்டி சமூக மக்களின் வாக்குகளையும் தனக்கு விழும்படி பார்த்துக்கொண்டார். எம்.ஆர்.விஐயபாஸ்கர் தேர்தல் வியூகமும் சரிவர வகுக்கவில்லை. தொகுதிக்குச் சொல்லிக்கொள்ளும்படி எந்தத் திட்டத்தையும் கொண்டு வராததும் அவருக்கு எதிராக இருந்தது’’ என்கிறார்கள்.

சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன்தான் மையப்புள்ளி. தற்போது விழுப்புரத்தில் சண்முகம் தோல்வியடையவும் அவரே காரணமாக இருக்கிறார்.

அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் நம்மிடம், ‘‘கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என்றுகூட பாராமல் ஒருமையில் வசைபாடும் ராதாகிருஷ்ணனின் செயலை உள்ளூரில் பாரம்பர்ய கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், தேர்தலில் அவர்களை ஒதுக்கிவைத்த ராதாகிருஷ்ணன் தரப்பு, திண்டிவனத்திலிருந்து அ.தி.மு.க-வினரை இறக்குமதி செய்தது. ஆனால், உள்ளூர் நிர்வாகிகள் ஒத்துழைக்காததால் திணறிப்போனார்கள். தொகுதியில் கணிசமாக இருக்கும் வன்னியர் சமூக வாக்குகளை வீடு வீடாகச் சென்று அறுவடை செய்வதில் சி.வி.சண்முகம் காட்டிய தீவிரத்தை, பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் காட்டவில்லை. அதனால், பட்டியல் சமூக மக்களின் வாக்குகள் அப்படியே தி.மு.க பக்கம் சாய்ந்தன.

ஜெயலலிதாவால் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு, எம்.பி-யாக்கப்பட்ட லட்சுமணன், சி.வி.சண்முகம் மற்றும் அவரின் அண்ணன் ராதாகிருஷ்ணன் கொடுத்த அழுத்தத்தால்தான் தி.மு.க-வில் இணைந்து வேட்பாளரானார். முஸ்லிம் மக்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளில், சி.வி.சண்முகத்தை பி.ஜே.பி-யின் முகமாக நிறுத்திய லட்சுமணனின் வியூகம் நன்றாக வேலை செய்ததும், சி.வி.சண்முகம் தோல்வியடைய முக்கியக் காரணம்’’ என்றார்கள்.