ஈஸ்டர் தாக்குதல்: 11 இஸ்லாமிய அமைப்புகள் தடைக்கு அனுமதி! - சர்ச்சையான இலங்கை அரசின் உத்தரவு

கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் எட்டு பயங்கரவாதிகள் உட்பட 277 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை:
இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட `ஜனாதிபதி ஆணைக்குழு’, பயங்கரவாத அமைப்புகள் எனக் குறிப்பிட்டு, சிங்கள இனவாத அமைப்புகள், சர்வதேச மற்றும் உள்நாட்டு இஸ்லாமிய அமைப்புகள் அடங்கிய பட்டியலை அரசிடம் சமர்ப்பித்து, தடைசெய்யப் பரிந்துரை செய்தது.
இந்தநிலையில், இலங்கை அரசின் தலைமைச் சட்ட அதிகாரி தப்புல டி லிவேரா (Dappula de Livera) ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, 11 அமைப்புகளைத் தடை செய்வதற்கான அனுமதி வழங்கி உத்தரவிட்டிருப்பதாக, அரசு வழக்கறிஞர் நிஷா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட அமைப்புகள்:
ஐ.எஸ்.ஐ.எஸ்(ISIS), அல்-கொய்தா (Al Qaeda) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் ஐக்கிய தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத், ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஜம்யதுல் அன்சாரி சுன்னதுல் மொஹொமதியா, தாருல் அதர் எட் ஜம் உப் ஆதர், ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவ சங்கம், சேவ் த பர்ல்ஸ் மற்றும் சுபர் முஸ்லிம் என 11 இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தடைசெய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த ஒரு சிங்கள இனவாத அமைப்பும் இடம்பெறாமல், 11 அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளாகவே இருப்பது அந்த நாட்டு அரசியலில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடைசெய்யப்பட்டது குறித்து அமைப்புகளின் விளக்கம்:
சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பயங்கரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் செயற்படும் ஜனநாயகரீதியான தமது அமைப்பைத் தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” எனத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது. மேலும், ``பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புகளைத் தடை செய்வதற்குத்தான் ஆட்சேபனை கிடையாது. ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படும் ஓர் அமைப்பை தடைசெய்வது, ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்று நியாயம் கேட்கவிருக்கிறோம்” என அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் BBC ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ``இனவாதக் கொள்கைகளைக்கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புகளும் இந்தப் பட்டியலில் காணப்பட்டபோதிலும், அந்த இனவாத அமைப்புகளைத் தடை செய்யாமல், இஸ்லாமிய அமைப்புகளை மாத்திரம் தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். மேலும், ``இந்த நாட்டிலுள்ள சட்டம் சிறுபான்மைச் சமூகத்துக்கு ஒருவிதமாகவும், பெரும்பான்மை மக்களுக்கு வேறொரு விதமாகவும் செயற்படுகிறது என்பது இதனூடாக உறுதிப்படுத்தப்படுகிறது” எனவும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.