Published:Updated:

ஜெ.நினைவிடம்... நேற்றும் இன்றும்! #Jayalalithaa

ஜெ.நினைவிடம்... நேற்றும் இன்றும்! #Jayalalithaa
ஜெ.நினைவிடம்... நேற்றும் இன்றும்! #Jayalalithaa

ந்தியாவில் ஆளுமைமிக்க தலைவர்கள் என்ற வரிசையில் நம் அனைவரின் நினைவுக்கும் வருபவர்களில் ஜெயலலிதா குறிப்பிடத்தக்க ஒரு தலைவராகத் திகழ்ந்தவர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவர்மீது மக்களுக்கு இருந்த அன்பைக்காட்டிலும், அவரின் மறைவுக்குப் பின்னர் பெரும்பாலானோருக்கு அவர் மீதான அன்பும் பாசமும் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு முடிந்த நிலையிலும், சென்னை மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்துக்குச் செல்லும் மக்கள் குறைந்தபாடில்லை என்றே சொல்லலாம். முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட மறுநாள் ஜெயலலிதா நினைவிடம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அங்கு நேரில் சென்றோம்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து, டிசம்பர் 5-ம் தேதியுடன் (05.12.2017) ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அ.தி.மு.க. சார்பில் அண்ணா சாலையிலிருந்து ஜெ. நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரைவரை நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். நினைவிடத்தில் அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள். ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ஜெயலலிதா அனுதாபிகளும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனால், மெரினா கடற்கரை சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக அ.தி.மு.கவினரும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஜெ.நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். அனைவரையும் நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்குள் செல்ல போலீஸார் அனுமதிக்காததால், போலீஸாருக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வெளியூர்களிலிருந்த பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்த ஏராளமான பெண்கள், ஜெயலலிதா நினைவிடத்துக்கு அருகே கூட்டமாக நின்றவாறே கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தனர். ஆனால், இன்று நிலைமை வேறாக இருந்தது. 

நினைவு தினத்தன்று ஜெயலலிதா சமாதியில் காணப்பட்ட கரைவேட்டிகள், வி.ஐ.பி-க்கள் யாரையும் இன்று காணவில்லை. என்றாலும் வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் வாகனங்களில் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர். மெரினாவுக்குச் சுற்றுலா வரும் பயணிகளும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தியதைப் பார்க்க முடிந்தது. ஜெயலலிதா மறைந்து ஓராண்டாகிய நிலையிலும், அவரின் விசுவாசிகளால் ஜெ. மறைவைத் தாங்கிக்கொள்ள முடியாமல், துக்கம் மேலிட கண்ணீர்விட்டு அழுததைக் காண முடிந்தது. 

ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று வந்த சிலருடன் பேசினோம். "அம்மா இல்லாத சூழலை எங்களால் இப்போதுவரை ஏத்துக்கவே முடியல. அவர் உயிரோடு இருந்தவரைக்கும் எவ்ளோ கம்பீரமாக இருந்தாங்க. இப்போ பாருங்க. எந்தச் சலனமும் இல்லாம இந்த இடத்துல இவ்ளோ அமைதியாக அடங்கிட்டாங்க. அம்மா மட்டும் இப்போ உயிரோடு இருந்திருந்தா தமிழ்நாட்டுல இவ்வளவுப் பிரச்னைகள் வந்திருக்குமா? அவங்க போனதுமே எங்களுக்கு எல்லாமே முடிஞ்சு போனதாத்தான் உணருகிறோம்" என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

இன்றைய தினம் அங்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் சொன்ன ஒரே பதில், "நேத்து இங்க வந்திருந்தா அம்மா நினைவிடத்தை பாத்திருக்க முடியாது. அவ்ளோ கூட்டமா இருந்தது. அதனாலதான் இன்னைக்கு வந்திருக்கோம். கூட்டத்தை டி.வி.யில பார்த்தோம்" என்பதுதான். 

கோயம்புத்தூர், திருச்சி எனத் தமிழகத்தில் பல ஊர்களில் இருந்தும் மக்கள் பஸ் மற்றும் வேன்களில் வந்து ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்த்துச் செல்கின்றனர். இங்கு வரும் மக்கள் அனைவருமே கோயிலுக்குச் செல்வதுபோன்று நினைவிடத்துக்கு வெளியே பூ வாங்கிக் கொண்டு வருகிறார்கள். பின்னர், தாங்கள் கொண்டுவரும் பூக்களை அங்கு பணியில் உள்ள நபரிடம் கொடுத்து நினைவிடத்தின் மேல் போடச் சொல்கின்றனர். 

இப்படி இயல்பாக மக்கள் வந்து போய்க் கொண்டிருந்த நேரத்தில், திடீரென 20-க்கும் மேற்பட்டோர் குவிந்து, போட்டோக்களும், வீடியோக்களும் எடுத்தனர். என்னவென்று விசாரித்தபோது, அவர்கள் அனைவரும் மலேசியாவிலிருந்து வந்திருப்பதை அறிந்தேன். மலேசியாவில் உள்ள தமிழ் நாளிதழ் ஒன்றில்பணியாற்றும் சுந்தர் என்பவரிடம் பேசினோம். "நாங்கள் மலேசியாவில் வாழ்கிறோம். சென்னை உட்பட தென்னிந்தியாவில் சுற்றுலா வர வேண்டும் என 2016 ஜனவரி மாதமே முடிவு செய்துவிட்டோம். சென்னை வருவதற்கான பயண டிக்கெட்டை புக் செய்தோம். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என நாங்கள் அனைவரும் கேரளா, திருச்சி எனப் பல இடங்களைப் பார்த்துவிட்டு இங்கு சுற்றுலா வந்தோம். நாளை மறுநாள் மலேசியா திரும்பி விடுவோம்" என்றார். மலேசியாவில் உள்ள தமிழ் மக்களையும் ஜெயலலிதாவின் ஆளுமை கவர்ந்துள்ளது என்பதை, அவர்களிடம் பேசியபோது உணர முடிந்தது.

ஜெயலலிதா நினைவிடத்துக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் அஞ்சலி செலுத்தினாலும், வேறு சிலர், அங்கு நின்றவாறே புகைப்படங்களையும், செல்ஃபிக்களையும் எடுத்துக்கொள்கிறார்கள். அதனை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடவும் அவர்கள் தவறுவதில்லை. காதலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதா நினைவிடத்துக்குத் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். பூங்காவில் உலாவுவதுபோல் சில காதலர்கள் ஹாயாக சுற்றுவதையும் பார்க்க முடிந்தது. 

நினைவு தினத்தன்று (டிசம்பர் 5) டி.டி.வி. தினகரன் தன் ஆதரவாளர்களுடன் வந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, அங்குள்ள இரும்புத்தூணில் மோதியதில் ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள இரும்புத் தூணைச் சுற்றி மண் மூட்டைகளை அடுக்கி, பாதுகாப்பு அம்சங்களை போலீஸார் ஏற்படுத்தியுள்ளனர்.  நினைவிடத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர். 

இதற்கிடையே ஜெயலலிதா குறித்து 'கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்', 'அம்மா' என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகம் ஜெயலலிதா நினைவிடத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி; மக்களின் மனதில் நிற்பவர் யார்?" என்று அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்தில் ஒரு பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும். அவரும் அந்தப் பாடல் வரிகளைப் போன்றே இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அவரின் அரசியல் வாரிசாகத் திகழ்ந்து, அவர் தோற்றுவித்த அ.தி.மு.க-வை 30 ஆண்டு காலம் உயிர்ப்புடனும், ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியும், தொடர் வெற்றியைக் கட்சிக்கு உருவாக்கித் தந்தும் சாதனைத் தலைவராக விளங்கிய ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் என்பதை அவரின் நினைவிடத்துக்கு வரும் மக்கள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

என்றாலும், ஒரு தலைவரின் நினைவிடத்தில் செல்ஃபி எடுப்பது, காதலர்களுக்கான இடமாக மாற்றுவது போன்ற செயல்களைத் தடுக்க வேண்டியது நினைவிடத்தைப் பராமரிக்கும் அரசின் கடமை. அதை அரசு செய்யுமா?