Published:Updated:

வாட்ஸ் அப் குழுக்கள்... ஃபேஸ்புக் ஸ்டேடஸ்கள்... நிமிடத்தில் உதவி.. எப்படி மீட்டார்கள்? 2015 - சென்னை மழையின் மீள் நினைவுகள் பகுதி - 5

வாட்ஸ் அப் குழுக்கள்... ஃபேஸ்புக் ஸ்டேடஸ்கள்... நிமிடத்தில் உதவி.. எப்படி மீட்டார்கள்? 2015 - சென்னை மழையின் மீள் நினைவுகள் பகுதி - 5
வாட்ஸ் அப் குழுக்கள்... ஃபேஸ்புக் ஸ்டேடஸ்கள்... நிமிடத்தில் உதவி.. எப்படி மீட்டார்கள்? 2015 - சென்னை மழையின் மீள் நினைவுகள் பகுதி - 5

ல்லோரும் ஆழ்மனதில், நல்ல பண்புகளைக் கொண்ட எண்ணங்களால்தான்  கட்டமைக்கப்பட்டிருக்கிறோம். அந்த நல்ல எண்ணங்களும், பண்புகளும் இயல்பான ஒரு தருணத்தில் வெளிப்படுவதில்லை. இயல்பான வெறுப்புகளையும்,கோபங்களையும் சுமந்து கொண்டு அதனை நொடிதோறும் வெளிப்படுத்தி வருகிறோம். ஒரு நெருக்கடியான தருணத்தில், ஒரு பேரிடர் தருணத்தின்போது அடுத்து என்ன செய்வது என்பதான ஒரு கேள்விதான் ஆழ்மனதில் புதைந்திருக்கும் நல்ல பண்புகளை வெளிக்கொண்டு வருகின்றன.

2015-ம் ஆண்டு டிசம்பர் பெருமழை காலத்தில் சென்னை வாசிகளின் நற்பண்புகள் வெளிப்பட்ட தருணம் அது. தமிழ் எனும் செய்தியாளரின் அனுபவத்தின் தொடர்ச்சியை இந்த அத்தியாயத்திலும் கேட்கப்போகிறோம். தமிழ் நம்மிடம் தொடர்ந்து பேசினார்.

துயர தருணங்கள்

“பெருமழை தந்த துயரத்தில் பசியோடு இருந்தவர்கள், ஒருவருக்கு ஒருவர் ஒருங்கிணைந்தனர். என் வீட்டில் அரிசி இருக்கிறது என்று ஒருவர் சொன்னார். இன்னொருவர், என் வீட்டில் காய்கறி இருக்கிறது என்று சொன்னார். அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒரு கம்யூனிட்டி சமையல் செய்யத் தொடங்கினர். அந்த பெரும்மழைக்கு மூன்று நாள்களுக்கு முன்புவரை ஒருவருக்கொருவர் அவர்கள் உதவிகொண்டதில்லை. பெரும்மழையின் நெருக்கடியில் அடுத்த வேளை பசிக்கு என்ன செய்வது என்ற துயரதருணங்கள்தான் அவர்களை இணைத்திருக்கிறது என்று நினைத்தேன்.  

சமையம் முடிந்ததும் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துதான் சாப்பிட்டோம். 50 பேர் வரை ஒன்றிணைந்து சாப்பிட்டோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அடையாறு ஆறு பொங்கிப் பெருகி ஓடுவதைப் பார்க்கிறோம். துணிகள், கழிவுகள் எல்லாம் மிதந்தபடி செல்கின்றன. மனித மலம் கட்டி,கட்டியாக மிதந்து கொண்டு போனது. இதைப் பார்த்த எங்களுக்குச் சாப்பிடவே மனம் வரவில்லை. இருந்த போதிலும், பசி இருந்ததால் ஒரு வழியாக சாப்பிட முடிந்தது. இரண்டு முறை ஹெலிகாப்டர் வருகிறது. ஏதாவது சாப்பாடு போடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். போடவில்லை. மாலை நேரம், நெருங்க, நெருங்க புரளிகள் பரவத் தொடங்கின. செம்பரம்பாக்கம் ஏரி நீரை முழுவதுமாகத் திறக்கப்போகிறார்கள். போரூர் அருகே ஒரு தனியார் கம்பெனியில் வெள்ளநீர் புகுந்து ஏராளமானோர் இறந்து விட்டனர் என்றெல்லாம் புரளிகள் பரவத் தொடங்கின. இரவு நேரம் மெழுகுவத்தி வெளிச்சத்தில் மொட்டைமாடிகளில்தான் தூங்க முடிந்தது. எல்லோரும் தூங்கும்போது ஒரு சிலர் மட்டும் மாறி, மாறி தங்களுக்குள் காவலுக்கு இருக்க ஆரம்பித்தனர்.

உதவிக்கரம் நீட்டியவர்கள்

டிசம்பர் மூன்றாம் தேதி விடியும் போது, மீட்புப் பணிக்கு ராணுவம் வருவதாகச் சொன்னார்கள். மதியத்துக்கு மேல் மெயின் ரோடு பகுதியில் இருந்த வெள்ளநீர் வடியத் தொடங்கியது. காசி தியேட்டர் அருகே மேம்பாலத்தில் வெள்ளத்தின் சீற்றத்தில் 800 குளிர் சாதனப் பெட்டிகள் அடித்து வரப்பட்டிருந்தன. பீரோக்கள் அடித்து வரப்பட்டிருந்தன.

குப்பைகள் மலைபோல் குவிந்திருந்தன. சென்னையின் மற்றப்பகுதிகளை விட தாழ்வான பகுதியான சூளைப்பள்ளம், பர்மா காலனி பகுதிகளில்  நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எல்லோரும், கோட்டூர்புரம், அடையாறு, சென்னைப் புறநகர் பகுதிகளில்தான் கவனம் செலுத்தினர். இந்தப் பக்கம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் குறைவுதான். எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் தங்களுக்குள் உதவிக் கரம் நீட்டினர்.  

இளைஞர்கள், ஆட்டோக் காரர்கள் உள்ளிட்டவர்கள் முதியோர்களை முதுகில் சுமந்து கொண்டு இடுப்பில் அவர்களைத் துணியால் கட்டிக் கொண்டு வடபழனி வரை சென்று மேடான பகுதியில் கொண்டு போய் பாதுகாப்பாக இறக்கி விட்டனர்” என்று பெருமழையின் தவிப்புகளை, துயரங்களை, மனித மனங்களின் இயல்புகளை நம்மிடம் தமிழ் பகிர்ந்து கொண்டார்.

ஊடகங்கள்

சென்னையின் அவல நிலையை ஊடகங்கள்தாம் வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தின. இருந்த போதிலும் புதிய தலைமுறை உள்ளிட்ட செய்தி சேனல்களின் அலுவலகங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்த தால், பல மணி நேரம் ஒளிபரப்புப் பாதிக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நாள் கூட இடைவெளியின்றி வெளியாகும் தி இந்து ஆங்கில நாளிதழ், பெருமழையின்போது ஒரு நாள் அச்சாகவில்லை. அந்தப் பெருமழை காலத்தில் விகடன் நிறுவனத்தின் அனைத்து இதழ்களும் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது. விகடன் இணையதளம் இடைவெளியின்றி சென்னை மக்களின் துயரத்தை வெளி உலகத்துக்கு எடுத்துச் சொன்னது. விகடன் நிறுவனத்தின் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோ கேமரா மேன்கள் மழையிலும், வெள்ளத்திலும் புகுந்து புறப்பட்டு செய்தியை, புகைப்படங்களை, வீடியோக்களைப் பதிவு செய்தனர் என்பதை வாசகர்கள் மறந்திருக்கமுடியாது.

இந்தியாவில் செயல்படும் செய்தி நிறுவனங்களில் பி.டி.ஐ செய்தி நிறுவனம் முதன்மையானது. 2015-ம் ஆண்டு மழை தருணத்தில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் சென்னையின் அவல நிலையை வெளிஉலகத்துக்குத் தெரிய வைத்தனர்.

பி.டி.ஐ நிறுவனத்தின் புகைப்படக்காரர் செந்தில்குமார் என்பவர், அடையாறு ஆற்றின் கரையோரம் இருந்த கோட்டூர்புரம் மழை பாதிப்புகளை படம் எடுப்பதற்காகச் சென்றார். அந்தத் தருணத்தில்தான் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டிருந்தது. ஆற்றில் பொங்கிப் பெருகி வெள்ளம் வந்து கொண்டிருந்தது. அவரது கண்முன்னே மளமளவென ஆற்றின் தண்ணீர் மட்டும் உயர ஆரம்பித்தது. அவர் அதுவரை எடுத்த படங்களை அலுவலகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அந்தத் தருணத்தில் அவர் என்ன செய்தார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்