Published:Updated:

”ஐ.டி வேலை ஒரே ஸ்ட்ரெஸ்... இப்ப ஆப் மூலமா கீரை விக்கிறோம்..!” - மென்பொருள் தொழிலதிபர்கள்

”ஐ.டி வேலை ஒரே ஸ்ட்ரெஸ்... இப்ப ஆப் மூலமா கீரை விக்கிறோம்..!” -  மென்பொருள் தொழிலதிபர்கள்
”ஐ.டி வேலை ஒரே ஸ்ட்ரெஸ்... இப்ப ஆப் மூலமா கீரை விக்கிறோம்..!” - மென்பொருள் தொழிலதிபர்கள்

”ஐ.டி வேலை ஒரே ஸ்ட்ரெஸ்... இப்ப ஆப் மூலமா கீரை விக்கிறோம்..!” - மென்பொருள் தொழிலதிபர்கள்

“கீரைகளுக்கென்று  தனியா  ஷோரூம் வைக்கப்போறேன்’னு  சொன்னதும் சிலர்பேர் சிரிச்சாங்க. பத்து,  பதினைஞ்சு ரூபாய்க்கு மேல விற்க முடியாத கீரைக்கு  இவ்ளோ மெனக்கெடுறான் பாரு’ன்னு சிலர் பாவமா பார்த்தாங்க. ஆரம்பிச்ச  ஒரே நாள்ல  ‘கீரைக்கடை டாட்காமிற்கு’  கிடைச்ச ரெஸ்பான்ஸை பார்த்துட்டு இப்போ எல்லாரும் பிரம்மிச்சு போறாங்க. சூப்பர் ஐடியா’னு தட்டிக் கொடுக்குறாங்க” பரவசம் நிறைந்த முகத்துடன் பேசுகிறார்  ஸ்ரீராம்பிரசாத்.

இவ்வளவு நாள்களாக கூடைக்குள்  அடங்கிக் கிடந்த கீரை வியாபாரத்தை பிரத்யேக ஷோரூம், மொபைல் ஆப், வெப்சைட் என டெக்னாலஜியின் உதவியோடு வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரீராம்பிரசாத். கோவை சாய்பாபா காலனியில் இருக்கும் கீரைக்கடை டாட்காம் ஷோரூமில் அவரைச் சந்தித்துப் பேசினோம், “எனக்கு சொந்த ஊரு மதுரை.  தாத்தா வீடு, தேனியில இருந்துச்சி. நான் சின்ன பையனா இருக்கும்போது வாராவாரம் தாத்தா வீட்டுக்குப் போயிடுவேன். தாத்தாவுக்கு 40 ஏக்கர்ல தோட்டம் இருந்துச்சி, அவர் எப்பவும் தோட்டத்துலயேதான் இருப்பார். அதனால நானும் அவர்கூடவே தோட்டத்தை சுத்துவேன். என் தாத்தா மூலமாதான் எனக்கு விவசாயம் அறிமுகமாச்சு.  பயிர் விதைக்கிற, அறுக்கிற நேரங்களெல்லாம் திருவிழாபோல அவ்வளவு குதூகலமா இருக்கும். என் அப்பா அக்ரி டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணார். அடிப்படையிலேயே எங்களுடையது  விவசாயக் குடும்பம்.

ஆனால், வழக்கமா எல்லா பெற்றோரும் நினைக்கிறமாதிரிதான் எங்க அப்பா அம்மாவும் நினைச்சாங்க. விவசாயத்துல கிடந்து கஷ்டப்பட வேணாம்னு இன்ஜினீயரிங் படிக்க வைச்சாங்க. கம்ப்யூட்டர் கலர்ஃபுல்லான வாழ்க்கையை கொடுக்குங்கிற நெனைப்புல இன்ஜினீயரிங் முடிச்ச கையோட நான் ஐ.டி ஃபீல்டுக்கு போயிட்டேன். நிறைய சம்பாதிச்சேன். நிறைய பணம் சம்பாதிச்சி என்ன பண்ணறது? நிம்மதி இல்ல. பயங்கரமான ஸ்ட்ரெஸ். எவ்வளவு வேலை செஞ்சாலும் ’வாட் நெக்ஸ்ட்’னு என் அடுத்தடுத்த வேலை வந்து விழுந்துகிட்டே இருந்துச்சி.  18 மணி நேரத்துக்கும் மேலாக சில நாள் வேலை பார்க்க வேண்டிய சூழல்.  ஃபிசிக்கல் ஆக்டிவிட்டியே இல்லாத வேலைங்கிறதால. மென்டல் ஸ்ட்ரெஸ் மட்டுமில்லாமல், உடல்ரீதியாவும் பல பிரச்னைகள் வர ஆரம்பிச்சது. அந்த நேரத்துலதான் ஹாபிக்காக வீட்டுல மாடித்தோட்டம் அமைச்சேன். அதில் நிறைய கீரைகள் பயிர் பண்ணேன். நானே எதிர்பார்க்காத அளவுல நல்லா வந்துடுச்சு. முதல்ல எங்க வீட்டுத்தேவைக்கு மட்டும்தான் பயன்படுத்தினோம். நாட்டுவிதையில் ரசாயன உரம்போடாமல் வளர்த்த கீரைகள் ரொம்பவும் ருசியா இருந்துச்சி. அது பக்கத்துவீடு, அதுக்கு அடுத்த வீடுனு பரவி, எங்க தெரு முழுக்க கீரைக்காக எங்க வீடு தேடி வர ஆரம்பிச்சாங்க.

அந்த நேரத்துலதான் நான் கோயமுத்தூர்ல ஒரு ட்ரேடிங் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். பழங்கள், காய்கறிகள், மளிகை பொருள்களை சேல்ஸ் பண்ணும் இ- காமர்ஸ் கம்பெனி அது. அதுல வேலை பார்க்கும்போதுதான் சத்து நிறைஞ்ச உணவான கீரைகளை யாரும் பெருசா கண்டுக்க மாட்டேங்குறாங்கங்கிற உண்மை எனக்கு புரிஞ்சது. அந்த வேலையிலேயும் பயங்கர ஸ்ட்ரெஸ். ஒரு கட்டத்துக்குமேல என்னால ஹேண்டில் பண்ண முடியல. இனிமேல் யாருக்கு கீழேயும் நாம வேலை பார்க்கக்கூடாதுனு ஒரு முடிவுக்கு வந்தேன். அப்போ என் கண் முன்னால தெரிஞ்ச ஒரே ஆப்ஷன் கீரை விவசாயம். யாரும் கண்டுக்காமல் இருக்கிற ஆனால் அதிமுக்கிய உணவான  கீரையை ஆன்லைன்ல சேல்ஸ் பண்ணா என்னனு தோணுச்சி. பால், நியூஸ் பேப்பர் போல கீரையையும் சப்ஸ்க்ரப்ஷன் டைப்ல எல்லா வீடுகளுக்கும் கொண்டுபோய் சேர்க்கணும்ங்கிறதுதான் என்னுடைய கோல். ஆப்ல ஆர்டர் பண்ணிவிட்டால் வீடுதேடி வர்ற பீட்சா, பர்கர் மாதிரி கீரையையும் கொண்டுபோய் கொடுத்தால் எப்டி இருக்கும்னு யோசிச்சேன். இந்த ஐடியா என் நண்பரான பிரேமும் பிடிச்சிருந்தது. அவரும் என்கூட கைகோத்தார்.

வெறும் மாடித்தோட்டத்து அனுபவத்தை மட்டும்  வெச்சிகிட்டு அதை பண்ணிட முடியாதுங்கிற உண்மை எனக்கு புரிஞ்சது. இயற்கை விவசாயிகளை தேடி அலைஞ்சோம். அந்தத் தேடுதலில் கிடைத்தவர்தான் இருகூர் தங்கவேல் அய்யா. 35 வருஷத்துக்கு மேலாக இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கார். அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லி கிட்டத்தட்ட இரண்டு வருஷம் அவர்கூடவே இருந்து இயற்கை விவசாயத்தை கத்துக்க ஆரம்பிச்சேன்” என்றவர் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார். அவர் எந்தளவுக்கு இந்த வேலையை விரும்புகிறார் என்பதை அவரது நான் ஸ்டாப் பேச்சே எடுத்துச் சொன்னது.

” ஏசி ரூம், கம்ப்யூட்டர்தான் நல்ல வாழ்க்கைனு நெனைச்சு எவ்வளவு நாள்களை வீணடிச்சிட்டோம்னு அந்த ரெண்டு வருஷத்துல தோணுச்சி. இயற்கையான காத்து, விவசாயிகளோட கலகல பேச்சு, நேரநேரத்துக்கு சாப்பாடுன்னு  விவசாய வாழ்க்கை ரொம்ப சூப்பரா போக ஆரம்பிச்சிருச்சி. விவசாயம் கத்து முடிச்சவுடனே தங்கவேல் அய்யா தன்னோட 7 ஏக்கர் நிலத்தை கொடுத்து விவசாயம் பண்ணிக்கச் சொல்லிட்டார். அதுல கீரைகளை பயிர் பண்ணிட்டு, கீரைக்கடை டாட்காம்ங்கிற பேர்ல நானே ஒரு ஆப், வெப்சைட் கிரியேட் பண்ணேன். இதை எப்டி மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கிறதுங்கிறது யோசிச்சப்பதான் ஒரு ஐடியா சிக்குச்சி. 

வாரம்வாரம் ஒரு ஏரியாவா போய் கோயம்புத்தூர்ல இருக்கிற முக்கியமான அப்பார்ட்மென்ட்கள்ல கீரைகளை டிஸ்ப்ளே பண்ண ஆரம்பிச்சோம். நல்ல ரெஸ்பான்ஸ். களத்துக்குப் போனப்பதான் பல குடும்பங்கள்ல கணவன், மனைவி இரண்டுபேருமே வேலைக்குப் போறவங்களா இருக்குறதால கீரையை கழுவி, ஆஞ்சு சமைக்கிறதுக்கெல்லாம் அவங்களுக்கு சுத்தமா நேரம் இருக்கிறதில்லைனு புரிஞ்சது. அப்போ ’ரெடி டு குக் ’ உடனே சமைக்கிற மாதிரி கீரையை அலசி கட் பண்ணி பாக்கெட் பண்ணி கொடுத்தோம். அதுக்கும் நல்ல வரவேற்பு. 7 ஏக்கர்ல குறிப்பிட்ட வகை கீரைகளைதான் பயிர் பண்ண முடியும். ஆனால், நாங்கள் எல்லா வகை கீரைகளையும் மக்களுக்கு ஒரே இடத்துல கொடுக்கணும்னு நினைச்சோம். தங்கவேல் அய்யா கீரை பயிரிடும் இயற்கை விவசாயிகளோட தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து உதவி பண்ணார். அவங்க எங்களுக்காகவே கீரைகளை பயிரிட்டு தர்றாங்க. பயிரிடுவதற்கு ஆகுற செலவு மட்டுமில்லாம இதுல கிடைக்கிற லாபத்துலயும் அவங்களுக்கான ஷேரை கொடுத்திடுறோம். இப்போ 40 வகையான கீரைகள் எங்கள்கிட்ட இருக்கு. கூடிய சீக்கிரத்தில் 100 வகையான கீரைகள் எங்ககிட்ட இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. சாய்பாபா காலனில ஷோ ரூம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அப்பார்ட்மென்ட் விசிட் மூலமா எங்களுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட கஸ்டமர்ஸ் உருவாகிட்டாங்க. 15 கிலோ மீட்டர் வரைக்கும் 35 ரூபாய்க்கு மேல கீரை வாங்குறவங்களுக்கு இலவசமாக டோர்டெலிவரி செய்யுறோம். கூடிய விரைவில் சப்ஸ்க்ரிப்ஷன்ஸ் கொண்டுவந்துருவோம் என்ற ஸ்ரீராம்பிரசாத் விவசாயத்தில் டெக்னாலஜியை புகுத்துவதோடு விளைவித்த பொருள்களை விற்பனை செய்யவதிலும் டெக்னாலஜியை புகுத்தினால்  விவசாயிகளின் வாழ்க்கையும் விவசாயத்தின் மீதான கெட்ட அபிப்ராயமும் மாற்றலாம் என்று முடித்தார். 

அடுத்த கட்டுரைக்கு