Published:Updated:

உப்பு அரசியலும்... கள்ள நாணயம் உருவான கதையும்! - பழங்குடிகள் குற்றவாளிகளா?

உப்பு அரசியலும்... கள்ள நாணயம் உருவான கதையும்! - பழங்குடிகள் குற்றவாளிகளா?
உப்பு அரசியலும்... கள்ள நாணயம் உருவான கதையும்! - பழங்குடிகள் குற்றவாளிகளா?

ண்மையில், தேனி மாவட்டம் குரங்கனி என்னும் மலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அங்கே ஓர் அரிய காட்சியைக் காண நேர்ந்தது. மலை உச்சியில் அமைந்திருந்த மச்சு வீடுகளில் ஒவ்வொரு வீட்டின் மேலேயும் மலை உச்சியைப் பார்த்து அமர்ந்தபடி மக்கள் ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வாசலில் யாரும் அமர்ந்திருப்பது போலத் தெரியவில்லை. அவர்களுக்குத் தேவை எல்லாம் ஒரு பெரிய திறந்தவெளி என்பதாகவேப் பட்டது. அந்த வீடுகளுக்கு இடையே பூட்டப்பட்டிருந்த நிலையில், ஒரு பள்ளியும் தென்பட்டது. அக்கம்பக்கத்தில் விசாரித்ததற்கு அந்தப் பள்ளிக்கு இரண்டே ஆசிரியர்கள் என்றும் அவர்களும் எப்போதாவதுதான் வருவார்கள் என்றும் சொன்னார்கள். பள்ளிக்கு நேரெதிரே தெரிந்த வீட்டின் உச்சியில் அமர்ந்திருந்த பிள்ளைகளைப் பார்த்ததும் அவர்களைப் புகைப்படம் எடுக்க முனைந்தேன். ஆனால், கேமராவைப் பார்த்ததும் அந்தப் பிள்ளைகள் சட்டென சுவர்களுக்குப் பின்னே ஒளிந்துகொண்டார்கள். மலை வாழ் பழங்குடியின மக்கள் என்பதால், அவர்களுக்கு கேமரா போன்ற பொருள்கள் பழக்கமாகியிருக்கவில்லை. அவர்களது பெரிய தேவையெல்லாம் கொண்டாட்டமானதொரு வாழ்க்கை... வயிற்றுக்கு உணவு... அதை ஈட்டுவதற்கு உழைப்பு..! இப்படியான மக்களை நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் மலைப்பகுதிகளில் இன்று காணமுடிகிறதா? அப்படியே யாரேனும் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களைப் பழங்குடியினர் என்று அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. சமவெளி மக்களிடமிருந்து தனித்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவந்தப் பழங்குடிகள் எதனால் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்...? உண்மையில், உலகின் பெரும்பாலான பழங்குடியின மக்கள் இன்றும் குற்றவாளி சமூகமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். தங்களது நிலங்களில் எரிபொருள் எடுக்க வந்த நிறுவனங்களை எதிர்த்துப் போராடிய 'ஸ்டேண்டிங் ராக் ட்ரைப்' என்னும் அமெரிக்கப் பழங்குடியின மக்கள் குழு, அந்த நாட்டு அரசால் கையாளப்பட்ட விதம் இதற்கான சிறந்த உதாரணம். 

சரி, சமீபத்தில் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு படைப்பு, கவலையற்ற ஒருவனிடம் கலகம் செய்வதாகவும் கலக்கமுற்றிருப்பவனுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கவேண்டும் என்பார்கள். அந்த வகையில்,  இந்தத் திரைப்படம் எதிர்மறையான சில விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் ‘பவாரியா’ என்னும் பழங்குடி இன மக்களைப் பற்றிய தனது கதைக்களத்தின் வழியாக ‘குற்றப் பழங்குடிகள்’ பற்றிய விவாதத்தை நம் முன்னே வைத்துள்ளது. பழங்குடிகள் மீதான, 'குற்றப் பழங்குடிகள்' என்கிற அதிகாரபூர்வ பழிச்சொல் எதனால் உருவானது என்கிற கேள்வி இயல்பாகவே எழுந்தது? இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் விளக்கமாகப் பதிவு செய்திருந்த மானுடவியல் ஆய்வாளர் ஹேமமாலினியைச் சந்திக்க திண்டிவனத்தை அடுத்த தெள்ளார் என்னும் சிற்றூருக்குச் சென்றேன்.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் திண்டிவனத்தைக் கடந்து சுமார் 6 அல்லது 7 கி.மீ தூரம் பயணம் செய்து வெளியே வந்தால், சுற்றிலும் வயல்வெளிகளும் பாறை முகடுகளும் தென்படுகின்றன. கூடவே, விதவிதமான வடிவங்களில் தேவாலயங்களும் தெரிகின்றன. அவற்றைக் கடந்து சுமார் நாற்பது நிமிட நேரம் பயணித்தால் தெள்ளார் வருகிறது. 'நந்திவர்ம பல்லவன் மூவேந்தர்களான சேர, சோழ மற்றும் பாண்டியர்களுடன் போரிட்ட ஒரே இடம் தெள்ளார்' என்கிற வரலாறு அந்தப் பகுதிக்கு இருக்கிறது. 

ஊரில் இறங்கியதுமே ஒரு வித்தியாசமான காட்சி நம்மை வரவேற்கிறது. காளை மாட்டுக்கு  உடல்மீது வண்ணத்துணிகள் போர்த்தப்பட்டு அதன் தலையில் ஓர் உண்டியல் வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது.  அந்த மாட்டை  அழைத்துவரும் மனிதர் தன்னிடம் இருக்கும் தாளக்கருவியை வாசித்தபடியே, அதனைக் கடைகடையாகப் பிச்சை எடுக்க வைக்கிறார். தமிழகத்தில் முற்றிலுமே வழக்கொழிந்துவிட்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் வகையறாக்களைச் சேர்ந்தவர்தான் அவர்.

ஹேமமாலினியைச் சந்தித்ததும்... நான் எழுப்பிய முதல் கேள்வி, அந்த பூம்பூம்மாட்டுக்காரரைப் பற்றியதுதான். “அவருமே ஓர் அலைகுடி...அதாவது நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர்தான். கல்வி, பொருளாதாரச் சூழல், வாழ்வியல் போன்றவை பெரும்பாலும் பழங்குடி சமூகத்தினரைப் போலவே இருக்கும். இவர்களைப் பழங்குடிகளாக அரசு அங்கீகரிக்கலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பழங்குடி என்கிற அங்கீகாரம்கூட இதுவரை தரப்பட்டதில்லை" என்றார்.

உண்மையில், பழங்குடிகளில் நிலையான பழங்குடிகள் , நடோடிக் குடிகள் உள்ளிட்ட பல வகைகள் உண்டு. இவர்களில் குறிப்பிட்ட சில சமூகத்தினர் மட்டுமே பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். நாடோடிப் பழங்குடியினர், நாடோடிகளாக இருப்பதாலேயே அவர்களுக்கான அடையாளங்களும் அங்கீகாரமும் மறுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் தவிர்த்து குற்றப் பழங்குடியினர்கள் என்று சொல்லப்பட்ட பழங்குடியினர்களோ, இந்தியா முழுவதும் பரவி இருந்திருக்கின்றார்கள். இதுபற்றி பேசத் தொடங்கிய ஹேமா, “தீரன் திரைப்படம் காண்பித்தது அந்தப் பழங்குடிகளில் குறிப்பிட்ட ஓர் இனத்தைத்தான். ஆனால், அதுபோல பலர் இந்தியா முழுவதும் பரவி இருந்தார்கள். தமிழகத்தில் (சென்னை மாகாணம்) லம்பாடிகள், குறவர்கள், எருக்குலர்கள், கொரச்சர்கள், பஞ்சாராக்கள் மற்றும் ராணுவத் தன்மை கொண்ட கள்ளர் போன்ற சாதிகளும் இதில் அடக்கம். இவர்கள் சந்தித்த பல பிரச்னைகள் ஆங்கிலேயர்களின் வன உரிமைச் சட்டத்தால்தான் தொடங்கியது” என்று விவரிக்கத் தொடங்குகிறார். 

உப்பு அரசியல்...

அவர் கூறுவது கிட்டத்தட்ட ஒரு கதைக்களம் போல நம் கண்முன்னே விரியத் தொடங்குகிறது. மலையில், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்க்கை நடத்திய மக்களுக்கு அவர்களுடைய வனத்தின் மீதான உரிமை ஆங்கிலேயர்களால் மறுக்கப்படுகிறது. இதனால் தங்களது மலை நிலத்தையே பெரும் சொத்தாக நம்பியிருந்த மக்கள் மலையிலிருந்து சமவெளிக்கு இடம்பெயர்ந்தார்கள். இன்னும் பலர் காடுகளிலேயே உருவாக்கப்பட்ட தேயிலை மற்றும் காபித் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களானார்கள். ஒரு பக்கம் காட்டை பழங்குடிகளிடமிருந்து ஆக்கிரமித்த ஆங்கிலேயர்கள், மறுபக்கம் உப்பு வணிகம் முழுவதையும் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் கொண்டுவந்தார்கள். ஏனென்றால், அவர்களுக்கு இங்கே பொருளாதாரம் ஈட்டும் விஷயங்கள் என்னென்ன என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. அதன் பிறகு பழங்குடிகள் உப்பு கொண்டுசென்று விற்கும் வழிகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டன. தலையில் உப்பு தூக்கிச் சென்று வணிகம் செய்வதும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. தங்களது குடிதொழில் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டதை அடுத்து, அதைச் சார்ந்து இருந்த உப்புக்குறவர் என்னும் இனமே தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தது. 

'கள்ளநாணயம் உருவான கதை!'

பொருளாதார ரீதியாக, எந்த ஒரு நாட்டில் கள்ளநாணயம் அதிகப் புழக்கத்தில் இருக்கிறதோ... அந்த நாட்டின் ரூபாய் மதிப்பை எளிதில் வீழ்த்திவிட முடியும். இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மானியர்கள் அமெரிக்காவில் கள்ள டாலர்களைப் புழக்கத்தில் விட்டது அதற்கான சிறந்த உதாரணம். தற்போதைய 'பண மதிப்பிழப்பு' நடவடிக்கையும் அப்படியான இந்தியக் கள்ள ரூபாய் நோட்டுகளை தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான். ஹேமமாலினி கூறுகையில், “1860-களின் இறுதியில், வட இந்தியாவில் கள்ள நாணயம் தயாரிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்த கூட்டத்தாரைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சியே தொடர்ச்சியாகக் 'குற்றப் பரம்பரைச் சட்டம்' என்ற வடிவத்தைப் பெற்றது. முதலில் இவ்வகைக் குழுக்களைக் கட்டுப்படுத்த பிடி ஆணையில்லாமல் கைதுசெய்தல் மற்றும் ஜாமீனில் வெளிவர இயலாமல் சிறைவைக்கக்கூடிய அம்சங்களுடன் சில சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இறுதியாகக் குற்றத் தொழில் செய்பவர்கள் எனக் கருதப்படுகின்ற இனக்குழுக்கள் வகைப்படுத்தப்பட்டன. பின்னர் அவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததோடு, அவர்களை ஓர் இடத்துக்குள் கட்டுப்படுத்தி வைக்கின்ற வகையில், 1871 இல் 'குற்றப் பரம்பரைச் சட்டமும்' இயற்றப்பட்டது” என்றார். கிரேக்கத்தில், முதன்முதலில் நாணயங்கள்  புழக்கத்தில் வந்த காலத்திலேயே கள்ள நாணயமும் புகுந்துவிட்டது என்கிறார்கள் நாணய ஆய்வாளர்கள். சீனர்கள் பேப்பர்களை அறிமுகப்படுத்திய காலத்திலேயே கள்ள நோட்டுகளும் சந்தைக்குள் நுழைந்துவிட்டன.இந்தியாவைப் பொறுத்தவரை  வணிகமுறையில் உப்பு விற்று வியாபாரம் நடத்திய ஆங்கிலேயர்களின் வியாபாரம் செழித்திருந்த காலத்தில் சில சமூகத்தினர் கள்ள நாணயங்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டிருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு. அதைத் தடுக்கவே அந்தச் சட்டமும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கலாம்.  

1911-ல் சென்னை மாகாணத்தில்...

இந்தியா முழுக்க நடைமுறைக்கு வந்தாலும் 1911-ல் தான் சென்னை மாகாணத்தில், குற்றப்பரம்பரைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஹேமமாலினி கூறுகையில், “ராணுவத் தன்மை உடைய சமூகங்கள் இங்கு ஏற்கெனவே காவல் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் இங்கே அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அந்தக் காவல் பணியும் அவர்கள் வசம் சென்றது. இப்படி பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னைகளினால் ஒருகட்டத்தில், ஆங்கிலேயர்களிடமே கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள் பழங்குடிகள். இப்படியாக உப்பின்மீது படிப்படியாகக் கட்டப்பட்ட அரசியல் சில பழங்குடியினக் குழுக்களையே குற்றவாளிகளாக்கியது” என்று விவரித்து முடிக்கிறார்.

வரலாறும் - சட்டமும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுவருவது ஏன்?