Published:Updated:

"அழகிரி ’முடியட்டும்’...ஸ்டாலின் ’விடியட்டும்’

தி.மு.க - வின் புதுப் பாதை!ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா

மிழ்நாடு, சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறது. ஆனால், 'கட்சித் தலைவர்’ நாற்காலியைத் தக்கவைப்பதும் கைப்பற்றுவதுமான சண்டையே தி.மு.க-வில் எந்நாளும் நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், அழகிரிக்கான கவலை அது மட்டும்தான். லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கோட்டையை நோக்கி வண்டியைத் திருப்ப... இவர்கள் மூவரும் கோபாலபுரத்தின் பக்கமாக வண்டியை இழுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

இரண்டு தி.மு.க-காரர்கள் சந்தித்துக்கொண்டால், ஜெயலலிதாவைப் பற்றி கோபப்பட்டுப் பேசுவதைவிட, இந்த கோபாலபுரத்து மல்யுத்தத்தைப் பற்றியே பேசுகிறார்கள் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். இதை உணர இவர்கள் மூவரும் தவறினால், 'காகித ஓடம் கடலலை மீது போவதுபோலே மூவரும் போவோம்... ஆதரவின்றி...’ கதையே அரங்கேறும்.

முதலில் கருணாநிதி மூடவேண்டியது, அழகிரியின் வாயை. விமான நிலையங்களில் இருந்து இவர் வில்லங்கம் கிளப்பும்போது, அறிவாலயத்தின் கண்ணாடிகள் உடைகின்றன. சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி 50-வது முறை உடைந்திருக்கிறது என்றால், அறிவாலயத்தின் கண்ணாடி 500-வது முறை உடைந்தேவிட்டது. கண்ணாடி உடைந்தால் ஒட்டவைக்க முடியாது என்பது கருணாநிதிக்குத் தெரியாதா என்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"அழகிரி ’முடியட்டும்’...ஸ்டாலின் ’விடியட்டும்’

கட்சியைவிட்டே நீக்கியாகிவிட்டது; 'மகனே இல்லை’ என்றும் சொல்லியாகிவிட்டது. இந்த இரண்டு அவமானங்களுக்குப் பிறகும் அழகிரி எப்படித்தான் ஊடகங்கள் முன் நின்று கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை. அழகிரிக்குத் தரப்பட்ட இரண்டு வாய்ப்புகளும் வீணடிக்கப்பட்டுவிட்டன. கட்சியில் தரப்பட்ட தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பொறுப்பு, ஆட்சியில் தரப்பட்ட மத்திய கேபினெட் அமைச்சர் பதவி... இவை இரண்டையும் வைத்துக்கொண்டு, எந்த நல்ல பெயரையும் அவரால் வாங்கித்தர முடியவில்லை. டெல்லிக்கே போகவில்லை; டெல்லிக்குப் போனாலும் நாடாளுமன்றத்துக்குப் போகவில்லை; மன்றத்துக்குள் போனாலும் பேசவில்லை. 'ஆங்கிலம் தெரியாது’, 'இந்தி புரியாது’ என்பது எல்லாம் சமாதானமே தவிர, சரியானவை அல்ல. அழகிரியிடம் இல்லாமல்போனது ஆங்கிலமும் இந்தியும் அல்ல... ஆர்வமும் அக்கறையுமே!

சரி... தென் மண்டல அமைப்புச் செயலாளர் வேலையையாவது ஒழுங்காகப் பார்த்திருக்கலாம்தானே! அவரைப் பூஜிக்கும் மனிதர்கள்தானே, அன்று மாவட்டச் செயலாளர்களாக தென் மாவட்டங்களில் இருந்தார்கள். ஒரே ஒரு கூட்டம், வீட்டில் நடத்தியதோடு சரி. அதோடு முடிந்தது தென் மாவட்டக் களப்பணி. என்ன காரணம்? தமிழும் பேசத் தெரியாதா? ஒவ்வோர் ஆண்டும் முதல் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் உற்சாகமாக இருந்தால் போதும் என நரசிம்மர் கோயில் ஜோசியர் சொன்னாரா? காவேரி மணியமும் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனும், தா.கிருட்டிணனும் மனவேதனையில் நொந்து இறந்த நிலையில், 'கருணாநிதியின் மகன்’ என்ற காரணத்துக்காகச் சூட்டப்பட்ட இரண்டு மகுடங்களையும் தூக்கிக் கடாசிவிட்டு, தலைவர் பதவியைச் சூறையாடக் கிளம்பியிருக்கிறார் அழகிரி.

"அழகிரி ’முடியட்டும்’...ஸ்டாலின் ’விடியட்டும்’

மதுரையில் இருந்து மல்லுக்கட்ட வரும் அழகிரிக்கு அணைபோடுவது இருக்கட்டும். பத்து தெருக்கள் தள்ளி இருக்கிற கருணாநிதியும் ஸ்டாலினும் தங்களுக்குள் நடக்கும் மௌன யுத்தத்தை முதலில் நிறுத்தட்டும். பேசிக் கொல்கிறார் அழகிரி என்றால், பேசாமலேயே அந்தக் காரியத்தைச் செய்கிறார் ஸ்டாலின். தேர்தலே நடக்கவில்லை. அதற்குள் 'முதலமைச்சர் யார்?’ என்ற போட்டி கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும். இவர்களில் யாரிடம் எம்.எல்.ஏ பதவி கேட்பது என நிர்வாகி முழிக்கிறார். ஒரு கப்பலுக்கு கேப்டனே இல்லாவிட்டாலும் பரவாயில்லை. காற்றடிக்கும் திசை நோக்கித் தானாக நகரும். முரண்பட்ட இரண்டு கேப்டன் இருந்து இவர்கள் போடும் சண்டையை நடுக்கடலில் இருந்து ரசிக்க முடியுமா?

'தலைவரா... தளபதியா?’ என்ற விபரீதக் கேள்வி, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஸ்டாலினுக்கு நல்லது செய்வதாக நினைத்து, பாதகம் செய்யும் பாவத்தை தி.மு.க-விலேயே சிலர் செய்தார்கள். இணையதளங்களில் கருணாநிதியை விமர்சித்து அவரது எதிரிகளே எழுதத் துணியாத விமர்சனங்களை, 'தி.மு.க அனுதாபிகள்’ எனச் சொல்லிக்கொண்டவர்களே செய்ததன் பின்னணி என்ன? ஸ்டாலின் ஆதரவு சக்திகளால் கூட்டப்பட்ட கலந்துரையாடலில், கருணாநிதியைக் கிண்டலடித்து எழுதுபவர்கள் வரவழைக்கப்பட்டதன் மர்மம் என்ன? அதுவரை இணையத்தில், ஈழத்தமிழர் பிரச்னைக்காக மட்டுமே விமர்சிக்கப்பட்டு வந்த கருணாநிதியை... உடல்நிலை, மூப்பு போன்ற தனிப்பட்ட கிண்டல், கேலிகள் செய்து எழுதியவர்கள் யார்? இவர்கள் எல்லாம் யார் எனக் கண்டுபிடிக்க முடியாமலேயே திணறியபோது, இதைக் கேள்வி கேட்கும் துணிச்சல் தி.மு.க-விலேயே ஒரு 'மாவீரனுக்கும்’ இல்லாதபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரிதான் அந்தக் காரியத்தைப் பார்க்க வேண்டிவந்தது.

கருணாநிதிக்கு, வயதாகிவிட்டது; செயல்பட முடியவில்லை... சூறாவளி சுற்றுப்பயணத்துக்கு உடல்நலம் இடம் அளிக்காது என்பது எல்லாம் உண்மைதான். ஆனால், அதை அவர் ஒப்புக்கொள்வதே இல்லையே!

"அழகிரி ’முடியட்டும்’...ஸ்டாலின் ’விடியட்டும்’

உடல் வலிமை குறைந்தாலும் மனவலிமை கொண்டவரோடு மல்லுக்கட்டுவது சிரமம். எம்.ஜி.ஆரோ, வைகோவோ... வெளியாளாக இருந்தால் வெளியேற்றிவிடலாம். பெற்ற தகப்பனிடம் யுத்தம் நடத்துவதும், பேரம் பேசுவதும் சரியானவை அல்ல. பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியதுதான்!

'முரசொலி’ நாளிதழின் முதல் பக்கம் தவிர கருணாநிதிக்கு வேறு எதிலும் இப்போது அதிகாரம் இல்லை. அ முதல் ஃ வரை அனைத்தும் ஸ்டாலின் கட்டுப்பாட்டில். கருணாநிதியை மறந்துவிட்டு...  தொண்டர்கள் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவதில்தான் ஸ்டாலினின் வெற்றி அடங்கியிருக்கிறது.

இப்போது ஸ்டாலின், ஒரு கோஷ்டியின் தலைவர் அல்ல; கட்சியின் தலைவர் ஆகும் இடத்துக்குப் பக்கத்தில் இருப்பவர். அவருக்கு முன்னாள் அமைச்சர்களும் ஒன்றுதான்; மாவட்டச் செயலாளர்களும் ஒன்றுதான்; இவர்களுக்கு எதிர் கோஷ்டியும் ஒன்றுதான். இந்த மூன்று படைகளுமே தி.மு.க-வுக்காகப் பாடுபடுபவர்கள்தான். முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஓர் அரண் அமைத்துக்கொண்டு அடுத்தவர்களை அரண்மனைக்குள் வரவிடாமல் தடுக்கும் காரியம், எல்லா மாவட்டங்களிலும் இருக்கிறது. மாவட்டத்தில் இன்னும் முழுமையாக அறிமுகமாகாத மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் புதுக்கோட்டை மேடையில் இருக்க... புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமனும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பழனிமாணிக்கம் மற்றும் ரகுபதி, சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் அறந்தாங்கி ராஜன் போன்றவர்கள் கீழே உட்காரவைக்கப்படுவதும், தேர்தல் நேரத்தில் மன வருத்த விதைகளை விதைத்துவருகின்றன. மேடையைக் கெட்டியாகப்போடுவதே எடை கொள்ளும் அளவுக்கு ஆட்களை ஏற்றுவதற்காகத் தான். மேலும், தி.மு.க-வில் அ.தி.மு.க மாதிரி 'ஒன்மேன்’ ஷோ காட்ட முடியாது. அந்தக் கட்சியில் இருப்பவர்கள், ஒரே ஒரு மனிதனுக்காகத் திரண்டவர்கள்; ஒரே ஒரு மனுஷிக்காக வாழ்பவர்கள். தி.மு.க-வோ பலதரப்பட்ட மனிதர்களின் சேர்க்கையால் உருவானது. பலதரப்பட்ட மனிதர்களை அரவணைத்துச் செல்வதன் மூலமாக மட்டுமே ஸ்டாலின் அந்தப் பதவியை அடையவும் முடியும்; தக்கவைக்கவும் முடியும்.

பெரிய யுத்தம் நடக்கும்போது, சின்ன யுத்தமும் ஆங்காங்கே நடக்கும் அல்லவா?

சேலத்தில் வீரபாண்டி ராஜாவுக்கும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் மோதல் முடியவில்லை. கரூரில் சின்னச்சாமிக்கும் ராஜேந்திரனுக்கும் பிரச்னை. ஈரோட்டில் என்.கே.கே.பி.ராஜாவுக்கும் முத்துசாமிக்கும் மோதல். எப்போதும் விநோதமாகவே இருக்கும் மதுரையில் பழைய ஸ்டாலின் ஆட்களுக்கும் புதிய ஸ்டாலின் ஆட்களுக்கும் ஏக கலாட்டா. முந்தைய விசுவாசியான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கும் புதிய சிஷ்ய புத்திரரான திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கும் மீசை முறுக்கும் போட்டி தொடர்கிறது. விழுப்புரத்தில் பொன்முடி - புஷ்பராஜ் மோதல். இவற்றைச் சரிப்படுத்துவதில் நேரம் செலவுசெய்ய வேண்டும் ஸ்டாலின். மாவட்டக் கழக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அறிவாலயத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்டங்களை 63 ஆக பிரிப்பதற்கு முன்பே கீழ் மட்டத்தில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அனைவருமே ஒரே கோஷ்டி ஆட்களாகவே இருக்கிறார்கள். இந்த விபரீதத்தை தலைமை உணர்ந்ததாகத் தெரியவில்லை. நிர்வாகிகள் மட்டுமே கட்சி அல்ல; அவர்களை மட்டுமே வைத்து வெல்ல முடியாது.

'முடியட்டும்... விடியட்டும்!’ - என்பது ஸ்டாலினின் இப்போதைய முழக்கம். ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக அவர் நடத்தும் மாநாடு போன்ற பொதுக்கூட்டத்தின் முகப்பில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் இது. கோபாலபுரம் தொடங்கி அருப்புக்கோட்டை வரை நடக்கும் இந்த உள்கட்சி யுத்தம் முடிந்தால்தான்... செனடாப் ரோட்டில் விடியும்!