Published:Updated:

'ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்', அரசை எச்சரிக்கும் மீனவர்கள்!

'ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்', அரசை எச்சரிக்கும் மீனவர்கள்!
'ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்', அரசை எச்சரிக்கும் மீனவர்கள்!

கன்னியாகுமரியைப் புரட்டிப்போட்ட 'ஒகி' புயலால், அம்மாவட்டம் முழுவதும் பெரும் சேதத்தை சந்தித்தது. இந்த நிமிடம் வரை அந்தப் பேரிடரிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது குமரி மாவட்டம். கடலுக்குச் சென்ற மீனவர்களின் நிலை பற்றிய அறிவிப்பிலும், உயிரிழந்த மீனவர்கள் உடலை மீட்டுக் கொடுப்பதிலும் தமிழக அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக உள்ளது என்ற கடும் குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். மேலும், குமரி மாவட்டத்தை கேரள மாநிலத்துடன் இணைத்துவிட வேண்டும் என்றும் ஆதங்கத்துடன் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக தமிழத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துக்கொண்டிருக்கிறது. காணாமல்போன மீனவர்களை மீட்கும் பணியைத் துரிதமாக நடத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளை உடனே மேற்கொள்ளவும் தமிழக அரசைக் கண்டித்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த 25 குப்பத்து மக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

சென்னை, கலங்கரை விளக்கத்திற்கு அருகே உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் தொடங்கி ஜார்ஜ் கோட்டை வரையில் ஊர்வலமாகச் சென்று தங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்குள் போலீஸார் தலையிட்டு, சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் மீனவர்களில் ஆறு பேரை முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியதால் ஜார்ஜ் கோட்டையை நோக்கி ஊர்வலமாகச் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. மீனவர்களைப் பேருந்தின் மூலம் சேப்பாக்கம் கூட்டிச்சென்ற போலீஸார், அவர்களுக்குப் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கித்தந்தனர்.

அப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நொச்சிக்குப்பம் பகுதி மீனவர் சங்க உறுப்பினர் மாறன், "தமிழக அரசின் செயல்பாட்டை உற்று நோக்கும் போது, இவர்கள் மீனவர்களை அப்புறப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதாகவே தெரிகிறது. சென்னையில் துறைமுகம், தூத்துக்குடியில் கூடங்குளம் அணுமின் நிலையம், எண்ணூரில் அணுமின் நிலையம் என மீனவர்களின் இருப்பிடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்து எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சி செய்கின்றனர். இதுமட்டுமல்லாமல் எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு, அடையார்  ஊரூர் குப்பத்தில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது மற்றும் தற்போது ஏற்பட்ட 'ஒகி ' புயல் என அனைத்து இயற்கை பேரிடரையும் பயன்படுத்தி ஒரேயடியாக மீனவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார்களோ என்றே தோன்றுகிறது. தெரிந்து செய்தால் பிரச்னை ஏற்படும் என்று எண்ணி இதுபோல் மறைமுகமாகச் செய்கின்றனர். புயலால் திசை மாறிச்சென்ற தமிழக மீனவர்களை மீட்பதில் கேரள அரசு காட்டும் ஆர்வத்தை, தமிழக அரசு துளிகூட காட்ட மறுக்கிறது. குமரியில் நிவாரணப்பணிகளைப் பார்வையிட சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மூன்று மணிநேரம் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தார்களே தவிர, பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்கவில்லை.", என்று குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர், "தற்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களில் ஆறு பேரை முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் எனக் காவல்துறை கூறியுள்ளது. முதல்வரைச் சந்திக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவிக்க வேண்டும் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்"  என்று கூறினார்.

மீனவர் சங்க உறுப்பினர் ரூபேஷ் குமார் பேசியபோது, "குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். விரைவாகச் செயல்பட்டு காணாமல் போன மீனவர்களின் நிலையை அறிந்து மீட்புப்பணிகளில் ஈடுபட வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

மீனவர் சங்கத்தின் பிரதிநிதியான ஜெய்குமார் பேசுகையில், "தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டு, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆர்.கே நகரில் ஏறத்தாழ 40,000 மீனவ வாக்குகள் உள்ளன. தமிழக அரசிற்கும் மற்ற கட்சிகளுக்கும் பாடம் புகட்டும் விதமாக நங்கள் அனைவரும் இம்மாதம் நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்" என்று கூறினார்.