Published:Updated:

2013-க்குள் மின் தடை அறவே நீக்கப்பட்டுவிடும்: ஜெ. மீண்டும் உறுதி!

2013-க்குள் மின் தடை அறவே நீக்கப்பட்டுவிடும்: ஜெ. மீண்டும் உறுதி!
2013-க்குள் மின் தடை அறவே நீக்கப்பட்டுவிடும்: ஜெ. மீண்டும் உறுதி!
2013-க்குள் மின் தடை அறவே நீக்கப்பட்டுவிடும்: ஜெ. மீண்டும் உறுதி!

சென்னை: 2013-ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில் மின் தடை அறவே  நீக்கப்பட்டு,மின்சாரத்தில் தமிழகம் விரைவில் தன்னிறைவு பெறுவதோடு,மின் மிகை மாநிலமாக மாறும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா,தமிழ்நாட்டின்  மின்நிலைமை குறித்து விளக்கம் அளித்து பேசுகையில்,"அனைத்திந்திய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு,புதிய மின்திட்டங்களை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் மற்றும்  500 மெகாவாட் மின்திறன் கொண்ட வல்லூர் மின் திட்டத்தின் முதல் அலகு டிசம்பர் 2012-லிருந்தும், 500 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் மின்  திட்டத்தின் இரண்டாவது அலகுமார்ச் 2013-லிருந்தும், 600 மெகாவாட் மின் திறன்  கொண்ட வடசென்னை அனல் மின் திட்டத்தின் முதல் அலகு ஏப்ரல்
2013-லிருந்தும் முழு உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன.  இவைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு 1,900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

அதுபோலவே, 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின்  திட்டத்தின் இரண்டாவது அலகு மே 2013-லிருந்தும், 500 மெகாவாட் மின் திறன்  கொண்ட வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்றாவது அலகு அக்டோபர் 2013-லிருந்தும், 1,000 மெகாவாட் திறன் கொண்ட தூத்துக்குடி அனல் மின்  திட்டத்தின் இரண்டு அலகுகள் டிசம்பர் 2013-லிருந்தும் முழுமையாக செயல்பாட்டிற்கு  கொண்டுவரப்பட உள்ளன.

##~~##
இவைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு 1,330 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆக,  மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்கள் மூலம் 2013 ஆம் ஆண்டில் 3,230 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும்.
இவை மட்டுமல்லாமல், கூடங்குளம் அணுமின் திட்டத்திலிருந்து 925 மெகாவாட்
மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்க  திட்டத்திலிருந்து 230 மெகாவாட் கிடைக்கும்.மொத்தத்தில், 2013 ஆம் ஆண்டு  இறுதியில் 4,385 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும்.
இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு புதிய  மின் திட்டங்களை தொடங்கவும் எனது தலைமையிலான அரசு ஏற்பாடுகளை  செய்துள்ளது.
660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்கத் திட்டம் நிறுவுவதற்கான  ஒப்பந்தப் புள்ளிகள் 26.10.2012 அன்று கோரப்பட்டுள்ளது.
1,600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் திட்டங்கள் பாரத மிகுமின்  நிறுவனத்துடன் இணைந்து உடன்குடியில் நிறுவ வகுக்கப்பட்ட திட்டம் நான்கு  ஆண்டுகளாகியும்,துவக்கப்படாமலேயே இருந்தது.
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியினரால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல்  இருந்த இந்த மின் திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில்,பாரத மிகு மின்  நிறுவனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு,தமிழ்நாடு மின்வாரியமே,  மாநில அரசின் திட்டமாக செயல்படுத்த ஆணையிட்டேன்.இதற்கான சர்வதேச ஒப்பந்தப்  புள்ளிகள் வெகு விரைவில் கோரப்பட உள்ளன.
அது போலவே, 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் திட்டங்களை  வடசென்னையில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதற்கான  சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்பட உள்ளன.
1,600 மெகாவாட் திறன் கொண்ட உப்பூர் அனல் மின் திட்டம், 800 மெகாவாட் திறன்  கொண்ட உடன்குடி அனல் மின் விரிவாக்கத் திட்டம், 660 மெகாவாட் திறன் கொண்ட  எண்ணூர் மாற்று மின் திட்டம் ஆகியவற்றிற்கு மத்திய அரசின் பல்வேறு ஒப்புதல்கள்  கோரப்பட்டுள்ளன.மத்திய அரசின் ஒப்புதல்கள் கிடைக்கப் பெற்றவுடன் இவற்றை நிறுவும் பணிகள் துவங்கும்.
முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் செயலற்ற தன்மையால், அக்கறையின்மையால்,  அலட்சியத்தால்,சுயநலப் போக்கால், இன்று தமிழ்நாடு சந்தித்து வரும் மின்வெட்டு  கடினமானது என்றாலும் தற்காலிகமானதே.
நான் ஏற்கெனவே கூறியது போல், புதிய மின் திட்டங்கள், ஒன்றன்பின் ஒன்றாக முழுத்  திறனுடன் இயக்கத்திற்கு வரவிருப்பதால்,இனி வரும் மாதங்களில் மின் தடையின்  தாக்கம் படிப்படியாக குறையும்.2013-ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டில் மின் தடை அறவே நீக்கப்பட்டுவிடும் என்று உறுதி அளிக்கிறேன்.  மின்சாரத்தில் தமிழகம் விரைவில் தன்னிறைவு பெறும்; மின் மிகை மாநிலமாக மாறும்  என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.