Published:Updated:

திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!

விகடன் விமர்சனக்குழு
திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!
திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!
திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்!

சென்னை:தமிழக சட்டசபையில் இன்று சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக  எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.  
 
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று ஒரு  பிரச்னை குறித்து பேச அனுமதி கேட்டனர்.அப்போது சபாநாயகர் தனபால், நான் ஒரு  அறிவிப்பை வெளியிட போகிறேன்.அதன் பிறகு உங்களுக்கு பேச அனுமதி தருகிறேன்  என்றார்.
 
சபாநாயகர் அறிவிப்பை வெளியிட்ட பின்னர் துரைமுருகன் எழுந்து நின்று,தமிழ்நாட்டில்  கடுமையான மின்வெட்டு இருப்பது குறித்தும்,இன்னொரு பிரச்னை குறித்தும் விவாதிக்க  அனுமதி கேட்டார்.

அதற்கு சபாநாயகர் மின்வெட்டு குறித்து மட்டும் பேச அனுமதி வழங்கப்படுகிறது.அவர்  குறிப்பிட்ட மற்றொரு பிரச்னை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்றார்.
 
ஆனால் திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 பிரச்னை குறித்தும் பேச அனுமதிக்க  வேண்டும் என்றும்,அது குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க  வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.அதற்கு சபாநாயகர் மின்வெட்டு குறித்து  முதலமைச்சர் விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்தார்.
 
ஜெயலலிதா: மின்வெட்டு பிரச்னை பற்றி நான் பதில் அளிக்க தயராக இருக்கிறேன்.
 
துரைமுருகன்: இந்த பிரச்னை குறித்து எங்களை பேச அனுமதிக்க வேண்டும்.(இதற்கு  ஆதரவாக திமுக எம்.எல்.ஏக்கள் குரல் கொடுத்தனர்.)
 
சபாநாயகர்: மின்சார பிரச்னை குறித்து பேச துரைமுருகன் அனுமதி கேட்டார்.  ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கேட்கவில்லை.நேரமில்லா நேரத்தில்  இந்த பிரச்னையை கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் அதற்கு  பதில் சொல்ல தயாராக இருக்கிறார்.(இதையடுத்து திமுக வினருக்கும் சபாநாயகருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது)
 
ஜெயலலிதா:துரைமுருகன் எழுப்பும் மின்சாரம் தொடர்பான பிரச்னைக்கு பதில் அளிக்க  நான் தயாராக இருக்கிறேன்.ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி  அளிக்கவில்லை.எனவே சபாநாயகர் சொல்வதை கேட்க வேண்டும்.(தொடர்ந்து திமுக  உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் எழுப்பினார்கள்)சபாநாயகர் எச்சரித்தும்  கேட்கவில்லை. 
 
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்ற  சபாநாயகர் உத்தரவிட்டார்.இதையடுத்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு  வெளியேற்றப்பட்டனர்.
 
அவையை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை  முருகன்."எங்கள் கருத்துக்களை பேச அனுமதிக்கவில்லை.ஒத்திவைப்பு தீர்மானத்தை  ஏற்கவில்லை.பேச்சுரிமை மறுக்கப்பட்டது.பேச வாய்ப்பு கேட்டோம்.எங்கள்  கருத்துக்களை ஏற்காமல் வெளியேற்றி விட்டனர்”என்றார்.