Published:Updated:

”உரிமை எல்லாம் வேண்டாம்... உயிர்பாதுகாப்பு தான் கேட்கிறோம்!” - சர்வதேச மனித உரிமை நாளில் குமுறும் மீனவர்கள்

விகடன் விமர்சனக்குழு
”உரிமை எல்லாம் வேண்டாம்... உயிர்பாதுகாப்பு தான் கேட்கிறோம்!” - சர்வதேச மனித உரிமை நாளில் குமுறும் மீனவர்கள்
”உரிமை எல்லாம் வேண்டாம்... உயிர்பாதுகாப்பு தான் கேட்கிறோம்!” - சர்வதேச மனித உரிமை நாளில் குமுறும் மீனவர்கள்

ன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். ஒவ்வொருவரும் வாழ்நாளில் கண்ணியத்தோடு வாழவேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கிடைக்கவேண்டும் என்று ஐ.நா சபை தீர்மானம் செய்த நாள்.

மனித உரிமைகள் பற்றி ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இது தொடர்பான வெவ்வேறுவிதமான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. மனித உரிமைகளைக் காக்கவும், அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் இன்று தனிமனிதர்களும், நிறுவனங்களும் போராடும் நிலையில், அன்றாடம் நாம் கடந்து வரும் சாமானிய மக்கள் தங்களுடைய உரிமைகளாக எதைக் கருதுகிறார்கள்?..அவர்களிடம் கேட்டு அறிந்ததில் இருந்து...

”இவங்களுக்கு இறப்பிலாவது மரியாதை கிடைக்கணும்!” 

நாம் பேட்டி எடுத்தது புதுச்சேரி காவலர்களை. ஊடகம் என்று சொன்னதுமே தங்களுடைய பெயர், புகைப்படம் எதையும் வெளியிட வேண்டாம் என்று கோரிக்கைவைத்தபடியே பேசத்தொடங்கினார்கள் இரண்டு காவலர்கள். “இது டூரிஸ்ட் ஏரியாங்க, வார இறுதியில கூட்டம் பலமா இருக்கும். அதனால மேலதிகாரி சொன்னா மறுபேச்சு பேசாம வேலை செய்யனும். சில சமயம் காலையில ஆறு மணிக்கு ஆரம்பிச்சோம்னா சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் ஒரே இடத்துல நின்னு வேலை பாக்கணும். நடுவுல பாத்ரூம்கூட போக முடியாதுங்க. காலையில இப்படின்னா ராத்திரி வேற மாதிரி இருக்குங்க.

இதோ (அவரது கை சுட்டிக்காட்டும் இடத்தில் ஒரு தெரு தெரிகிறது ) இந்தத் தெருவுல அடிக்கடி பிச்சைக்காரங்க, ஆதரவு இல்லாதவங்க இறந்து கிடப்பாங்க. அவங்களை நாங்கதான் கொண்டுபோய் அடக்கம் செய்யனும். ஆனால் தெருவுல இப்படி இறந்து கிடந்தா எங்ககிட்ட சண்டைக்கு வர மக்கள். அடக்கம் செய்ய சாட்சிக் கையெழுத்து போடச் சொன்னா மட்டும் வரமாட்டாங்க. அப்போ சாட்சிக்கு ஆள் தேட நாங்க நிறையவே சிரமப்படுவோம். எங்களுக்கு அலைஞ்சு ஆள் தேடுறது கூட சிக்கல் இல்லைங்க, யாருமே இல்லாம இறக்கற அவங்களோட இறுதி நிமிடங்களாவது கண்ணியமா இருக்கனும். அதுக்காகதான் இப்படி அக்கறை எடுத்துச் செய்யறோம். எங்களைப் பொருத்தவரைக்கும் அதுதான் மனித உரிமை” என்று முடித்தார்கள்.

”எல்லோருக்கும் நிலம் கையில் இருக்கற உரிமை வேணும்!”

இவரும் பெயர், புகைப்படம் எதுவும் வெளியிடத்தேவை இல்லை என்றபடியே தொடர்ந்தார். “இளநீர்க்கடைனு பார்க்காதிங்கம்மா.. நான் ரெண்டு முறை வார்டு கவுன்சிலரா இருந்திருக்கேன். ஊர்ல சுனாமியால பாதிகப்பட்டவங்களுக்கு வீடு எல்லாம் கட்டிக் கொடுத்து இருக்கேன். இதோ... (தண்ணீர் நிரம்பியிருந்த பாட்டிலைக் காட்டுகின்றார்) நான் போட்ட போர்வெல்லில் இருந்து எடுத்த தண்ணீர்.. இன்னமும் நல்லா தண்ணி கிடைக்குது. இப்படியான வசதிகள் என் வார்டில் இருக்கற மக்களுக்கு மட்டும் என்று இல்லாமல் எல்லாருக்கும் கிடைக்கனும்ங்க, கூடவே எல்லா மக்களுக்கும் நிலம் கையில இருக்கிற உரிமை வேணும்ங்க” என்றார்  

 நினைத்தபடி வாழவேண்டும் என்ற கொரிய சுற்றுலாப் பயணி மோமோ

நாம் சந்தித்தவர்களில் இவரது பதில் சற்று வித்தியாசமாக இருந்தது, “கடந்த காலத்தை மறந்து... எதிர் காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல், நிகழ்காலத்தில் நான் நினைத்தபடி வாழவேண்டும் . எனக்கு அதைவிட வேறென்ன உரிமை தேவைப்படப்போகிறது?” என்றார்.

”மரியாதைதாங்க....வேற என்ன கேட்கப்போறோம்!”

 மிதமான காலை வேளையில் மும்முரமாகச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள் அந்த துப்புரவுத் தொழிலாளர்கள். நாம் சென்று பேச்சு கொடுத்ததும் ”நீ பேசு...நான் பேசுகிறேன்...!” என்று ஒருவரை ஒருவர் கைகாட்டிக் கொண்டு முதலில் போக்குக் காட்டியவர்கள் பிறகு மெல்லமாய் பேசத் தொடங்குகிறார்கள்... “எங்களுக்கு இந்த கூட்டிப் பெருக்கற வேலையை ஆர்டர் பிடிச்சுதான் தராங்க. இந்த ஆர்டரே டெண்டர் எடுக்கறவங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாதான் கிடைக்கும். அதனால் அதுக்கு தரும் பணம் போக மிச்சத்தில்தான் எங்களுக்கு கூலி தருவாங்க. அதனால், கிடைக்குற சம்பளமும் குறைவு.ஒருநாளைக்கு இருநூறு ரூபா தேறும்” என்றவரை மறித்த இன்னொரு கூட்டிப் பெருக்கும் அக்கா, “ ஏண்டி இருநூறுன்னு பொய் சொல்லுற?... இருநூத்தி முப்பது ரூபாய்ங்க” என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்தவர்,” அப்புறம்...நாங்க எல்லாம் பெருக்கறதுக்குனே பொறப்பெடுத்த மாதிரி எங்களைக் கேவலமா பார்க்கறாங்க. நாங்களும் மனுஷங்கதானே? நாங்க கேட்கறது எல்லாம் சரியான சம்பளமும், கொஞ்சம் மரியாதையும்தாங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த இடத்தைச் சுத்தம் செய்யப் புறப்படுகிறார். ஆம், நம் சுற்றுச்சூழலையே சுத்தம் செய்பவர்களைதான் நாம் மதிக்கத் தவறிவிடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

”நாப்கின் பற்றி அப்பாகிட்ட பயப்படாம பேசணும்”

அடுத்து நாம் சந்தித்த நான்கு பேருமே அரசுக் பள்ளி மாணவிகள். அவர்களிடம் பேசியதிலிருந்து பல்வேறு தளங்களில் அவர்களுக்கு உரிமைகள் தேவையாக இருப்பது புரியவந்தது. “நாங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதாலேயே எங்களை மட்டம் தட்டுறது இன்னிக்கும் தொடருது. டியூசன்ல கூட எங்க டீச்சரு தனியார் பள்ளியில படிக்கற பசங்க முன்னாடியே எங்களை மட்டம் தட்டிப் பேசுவாரு. நாங்களும் அவங்களை மாதிரி நிறைய போட்டிகளில் கலந்துகிட்டு பரிசு வாங்கி இருக்கோம். இதே ஸ்கூல்ல படிச்ச எங்க சீனியர் எல்லாமும் நல்ல ரேங்க் வாங்கியிருக்காங்க. அதெல்லாம் ஏன் இப்படி மட்டம் தட்டுறவங்களுக்கு புரிய மாட்டேங்குது?” என்கின்றனர் ஏக்கத்துடன். வெளிச்சூழல் அளவிற்கு அவர்களுக்கு கல்வி அளவிற்கு வேறு சிலவற்றிலும் உரிமை தேவையாக இருக்கிறது, “ எங்களுக்கு சாதாரணமா மாதவிடாய் வந்தா கடையில போய் நாப்கின் வாங்குறது...எதோ தப்பான பொருளை வாங்குற மாதிரி பயந்து ஒளிஞ்சு வாங்கவேண்டியதா இருக்கு.. எங்க அப்பாகிட்ட மாதவிடாய் பத்திப் பேசக்கூட பயமா இருக்கு. இதுக்கெல்லாம் உரிமையும் சுதந்திரமும் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்கிறார்கள் ஏக்கத்துடன். நமக்கு சாதாரணமாய் கிடைத்துவிடுவது மற்றவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை என்பது எத்தனை உண்மை.

”ஆளுறவங்க காதுல மீனவன் பிரச்சனை விழ மாட்டுதே! “

ஒகியின் தாண்டவத்தால் தற்போது மீனவர்களின் ஓலக் குரல்தான் தற்போது எங்கும் ஒலிக்கிறது. இந்த நேரத்தில் அவர்களை விட வேறு யாருடைய குரல் மனித உரிமைக்கு பொருத்தமாக இருந்துவிடப் போகிறது. அவர்களிடம் கேட்கச் சென்றோம்...”நாங்களே வயித்தெரிச்சல்ல இருக்கோம். எங்ககிட்ட ஏன் கேட்கறிங்க?” என்றுவிட்டுப் பொறுமையாகத் தொடர்ந்தார்கள்.

“மீனவனுக்குன்னு என்னங்க சொல்ல முடியும், அடிப்படை உரிமைன்னு? இதோ, ரெண்டு வருஷமா கொடுக்க வேண்டிய மானியம் அப்படியே நிலுவையில் இருக்கு. அரசியல்வாதிங்க தேர்தல் நேரத்துல மட்டும் வருவாங்க. அதற்கு அப்புறம் என்னான்னு கூட எட்டிப்பாக்க மாட்டாங்க. எங்களுக்குனு இருக்கற மீன்வளத்துறையும் அப்படித்தாங்க இருக்கு. நாங்க எங்க தொழிலுக்கு ஏத்த மாதிரி வலையும் படகுக்கு மானியமும் கேட்கறோம். ஆனா, இரண்டுமே சரிவரக் கிடைக்கறது இல்லை. இன்னொரு பக்கம் இப்ப புயலினால் தமிழ்நாட்டுல கன்னியாகுமரில இருக்கற எங்காளுங்கலாம் கதறுறத டி.வி பொட்டில பாக்குறோம். புயலுக்கு இரண்டு நாளுக்கு முன்னாடி கடலுக்கு போனவங்க ஆழ்கடலுக்குதான் மீன் பிடிக்கப் போயிருப்பாங்க. குறைந்தபட்சம் இருநூறு நாட்டிகல் மைல் அளவுக்காவது தேடனும். ஆனா அரசு அதைச் செய்யலை. உரிமை எல்லாம் வேண்டாம்...உயிர்பொழைச்சாலே போதும். வேலைக்குப் போகற எங்காளுங்களுக்கு அந்த பாதுகாப்பையும் ஒழுங்கா தரலை.சரி, குறைந்தபட்சம் வீடு, ரோடு, தண்ணீர் இதாச்சும் ஒரு மீனவனுக்கு ஒழுங்கா கிடைக்கனுமேங்க. இதைத்தான் நாங்க உரிமைன்னு கேக்கறோம். ஆனா ஆளுறவங்க காதுல மீனவன் பிரச்சனை விழ மாட்டுதே! “ என்றார் .

சமவாய்ப்பு...மரியாதை...உயிர்பாதுகாப்பு .. இவை மூன்றும்தான் இவர்கள் எதிர்பார்க்கும் உரிமை. இனியாவது கிடைக்கச் செய்வோமா?