Published:Updated:

ஷீலா பிரியாவும் சர்ச்சைகளும்! - தகவல் ஆணையத்துக்கு பொருத்தமானவரா?

ஷீலா பிரியாவும் சர்ச்சைகளும்! - தகவல் ஆணையத்துக்கு பொருத்தமானவரா?
ஷீலா பிரியாவும் சர்ச்சைகளும்! - தகவல் ஆணையத்துக்கு பொருத்தமானவரா?

மிழகத்தின் தலைமைத் தகவல் ஆணையராக பதவி ஏற்றுள்ளார் ஷீலா பிரியா! இந்தப் பதவி ஏற்பு வைபவம் ஆளுநர் மாளிகையில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், 'ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதற்கு தலைமை தகவல் ஆணையர் பதவி எதற்கு? கட்சி நிர்வாகியாகவே இருந்துவிடலாமே' எனக்கொதிக்கிறார்கள் தகவல் அறியும் உரிமை  சட்ட ஆர்வலர்கள்.

கடந்த 8 ஆம் தேதி அதாவது, வெள்ளிக்கிழமை மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஷீலா பிரியா பதவி ஏற்றுள்ளார். அவருடன் எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்குமார், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகிய நான்குபேரும் தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இது தொடர்பாக  தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்களிடம் பேசியபோது, ''ஷீலா பிரியா மற்றும் 4 ஆணையர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் எந்த சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை. அது மட்டுமன்றி ஷீலா பிரியா எப்போதும் ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டவர். அப்படிப்பட்டவர் எவ்வாறு மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்குவார்?'' எனச் சொல்லி அதிரவைக்கிறார்கள்.

ஷீலா பிரியா யார் ? 

மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ராமானுஜத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலானக் குழு தலைமைத் தகவல் ஆணையரைத் தேர்வு செய்தது. இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், 8 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில், தகவல் ஆணையராகப் பதவி ஏற்றுக்கொண்டார் ஷீலா பிரியா. இவர் ஏற்கெனவே தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இறுதியாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயலராகவும் பணியாற்றியுள்ளார். 2014 ஆம் ஆண்டில், இவருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக தமிழக ஆளுநராகப் பதவிவகித்த சென்னாரெட்டி மற்றும் ஃபாத்திமா பீவி ஆகியோரிடமும் பணியாற்றியவர்.

ஷீலா பிரியாவின் செயல்பாடுகள் குறித்து கோட்டை வட்டார அதிகாரிகளிடம் பேசினோம். ''ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவருடைய காரின் பின் சீட்டிலேயே அமர்ந்திருப்பார். ஜெயலலிதாவின் கண் அசைவுக்காகக் காத்திருப்பார். அப்படி செயல்பட்டு வந்தாலும் ஷீலாவின் தவறான செயல்கள் ஜெயலலிதாவுக்குத் தெரிய வரவே அவரை ஒதுக்கி வைத்தார். அவ்வப்போது  ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெறுவதற்கு போராடுபவர் ஷீலாபிரியா. ஆளுநராக இருந்த ஃபாத்திமா பீவியோடு நெருக்கம்கொள்ள பலவகையிலும் காய்களை நகர்த்தியவர். பொதுப்பணித்துறை மற்றும் ஆளுநர் மாளிகை அதிகாரச் சலுகை என பலவற்றையும் பயன்படுத்தி தன்னுடைய வீட்டைக் கட்டிக்கொண்டார். ராஜ்பவனில் இருந்த கலைப் பொருட்களை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். சுருக்கமாகச் சொன்னால், கை சுத்தமில்லாதவர்" என்றனர்.

எந்த விதியும்  பின்பற்றப்படவில்லை

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர் கோபாலகிருஷ்ணனிடம் பேசியபோது, ''ஷீலா பிரியா பற்றி எனக்குத் தெரியாது. மாநிலத் தலைமைத் தகவல் ஆணையராக இதுவரை பதவி வகித்து வந்த ஸ்ரீபதி, ராமானுஜம் போன்றவர்கள் நேர்மையாகச் செயல்படவில்லை. இந்தப் பதவிக்கு வரக்கூடியவர்கள் பெரும்பாலும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள். அதுவும் குறிப்பாகத் தம்மை பதவியில் அமர்த்தியர்வர்களுக்கு மிகவும் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் பதில் வராது. இந்தத் துறைக்கு நேர்மையானவர்கள்  தலைமையாக வந்தால்தான் அங்கிருந்து பெறப்படும் தகவல்களும் உண்மையானதாக இருக்கும். இதுவரைக்கும் பலகட்டப் போராட்டத்தை நடத்தியப் பிறகுதான் தகவல்களைப் பெற்றுள்ளேன். அதுவும் முழுமையானத் தகவல்களாக இருந்ததில்லை. மாநில மகளிர் ஆணையம், குழந்தைகள் நல ஆணையத்தில் எவ்வாறு ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் நியமிக்கப்படுகிறார்களோ... அவ்வாறே  தங்களுக்கு விசுவாசியாக  செயல்படக்கூடியவர்களை இந்த ஆணையத்திலும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறு நியமிக்கப்பட்டிருப்பதில்  எந்த விதியும் பின்பற்றப்படவில்லை. அரசுத் தரப்பிலிருந்து எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. இப்படித்தான் பல விதிமீறல்கள் இந்த ஆணையத்தில் நடைபெற்று வருகின்றன'' என்றார்.

ஆணையங்கள் என்பது தனித்து இயங்கும்  தனி அமைப்புகள் என்பதை  ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உணர்ந்தால் மட்டுமே மக்கள் கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் கிடைக்கும்! அறிவார்களா ஆட்சியாளர்கள்?