Published:Updated:

‘‘தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களே...’’ - ஹாசினிகளின் உருக்கமான கடிதம்!

‘‘தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களே...’’ - ஹாசினிகளின் உருக்கமான கடிதம்!
‘‘தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களே...’’ - ஹாசினிகளின் உருக்கமான கடிதம்!

‘‘இந்த உலகில் நாங்கள் வாழத் தகுதியற்றவர்களா..? இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் மக்களே... ஐந்தறிவு உள்ள விலங்குகளை யாராவது கொடுமைப்படுத்திவிட்டால் போதும்... அது, குக்கிராமமாக இருந்தாலும் குரல்கொடுத்து போராட்டம் நடத்த புளூகிராஸ் அமைப்புகள் இருக்கின்றன. ‘பீப்’ பாடல் மூலம் பெண்களைக் கிண்டலடித்துவிட்டால் போதும்... போராடச் சமுதாயப் பெண்கள் அமைப்புகள் உள்ளன. ஆனால், நாங்கள் என்ன பாவம் செய்தோம்? 

‘சட்டம் ஓர் இருட்டறை’! 

எங்களுக்காகப் போராட யார் இருக்கிறார்கள்? ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்படக்கூடாது’ என்று சட்டத்தில் சொல்லப்படுவது உண்டு. நியாயம்தானே... ஆனால், இங்கே குற்றவாளிகள் எங்கே தண்டிக்கப்படுகிறார்கள்? ராஜவாழ்க்கை அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அது, அடுத்தவீட்டு வயல் தகராறாக இருந்தாலும் சரி அல்லது அரசியல்வாதியின் ஊழலாக இருந்தாலும் சரி... எதுவாக இருந்தாலும் இப்போதெல்லாம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைந்துதானேவருகிறது. அப்படியே ஒருவேளை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும், சிறையிலும் செல்வச் செழிப்புடன்தானே இருக்கிறார்கள். 

இதனால்தான் அன்றே, ‘சட்டம் ஓர் இருட்டறை’ என்று சொன்னார்கள். அது, இப்போது மேலும் முன்னேறி ஓட்டையாகிவிட்டது என்பதைப் பல தருணங்களில் பார்க்க முடிகிறது. ‘அண்ணா’ என்று அழைத்தால் தவறா? ஒருகாலத்தில் அன்புக்கு, அறிவுக்கு, அரசியலுக்கு எனப் பல வகைகளில் பலருக்கு ஆசானாய் இருந்தவர் அறிஞர் அண்ணா. அதனால்தான், அவர் கடைசிவரை மக்கள் மனங்களில் ‘அண்ணா’வாகவே ஜொலித்தார். ஆனால், இன்று அடுத்தவீட்டில் இளைஞனாய் வளர்ந்து நிற்கும் ஒருவனை நாங்கள் ஆசையோடு, பாசத்தோடு ‘அண்ணா’ என்று அழைக்கிறோம்... அதில் எந்தத் தவறும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையில், இந்த இருட்டு உலகத்துக்குள் பல உயிர்கொடுக்கும் ‘அண்ணா’க்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... அதேவேளையில், அவர்களுடைய ஆண்மையைப் பரிசோதிப்பதற்காக எங்கள் வயது சிறுமிகளை இரையாக்கும் வக்கிரபுத்திகொண்ட சில ‘அண்ணா’க்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... இல்லை, உருவாகிறார்கள். இருட்டு என்றால், என்னவென்பதைத் தாயின் கருவறைக்குள்ளேயே பத்துமாதம் இருந்து பார்த்துவிட்டு வெளியில் வந்த எங்களுக்கு இப்போதும் இருட்டைத்தானே பார்க்க முடிகிறது... இல்லையில்லை, அதில்தானே சுவாசிக்க முடிகிறது. ஆம், எங்களை இரையாக்கும் சில தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களால்!

‘‘எரிந்துமுடிக்கும் கற்பூரம்!’’

பள்ளிக்குத் துள்ளியோடிய எங்கள் வயது சிறுமிதான் சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி. குழந்தைப் பருவம் மாறாத அவளைத்தான் பாலியல் வன்புணர்வு செய்து கொன்று புதைத்துவிட்டான் தஷ்வந்த். இதற்கு என்ன தண்டனை கிடைத்திருக்க வேண்டும் அவனுக்கு? எங்களுக்குத் தெரியவில்லை... சட்டம் படித்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ‘ஹாசினியைக் காணவில்லை’ என்று அவளது பெற்றோர் அக்கம்பக்கம் தேடியபோதுகூட உண்மையைச் சொல்லாமல், அவர்களுடனேயே சேர்ந்து தேடிய நம்பிக்கைத் துரோகி அவன். இறுதியில் போலீஸிடம் சிக்கி, குண்டர் சட்டத்தில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால், அங்கேயும் அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்க... ஜாமீனில் வெளியே வந்தான். ஜாமீனில் அவனை வெளியேவிட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பின, எரிந்துமுடிக்கும் கற்பூரம்போல. 

‘‘ஒரு பூச்சிகூட வெடிக்கவில்லை!’’

நாங்கள் கேட்பதெல்லாம் இதுதான்! எத்தனையோ நாள்கள், எத்தனையோ மனிதர்கள் எங்கெங்கோ கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திப் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுத்தீர்களே... அதுபோல், எதிர்கால இந்தியாவை மாற்றுவதற்காகப் பிறந்திருக்கும் எங்களுக்காக, இதுபோன்று போராட ஏன் முன்வரவில்லை? குரங்கைக் கொன்று புதைத்ததற்காகப் புளு கிராஸ் போராடியது...வேலைக்கு செல்லும் பெண்களைக் கிண்டல் செய்தால் விசாகா போராடுகிறது. ஆனால், ஒரு குழந்தையைக் கொன்று புதைத்ததற்காக யாருமே போராடவில்லையே? போராட்டத்தின் மூலம்தான் புரட்சி வெடிக்கும் என்பார்கள்... இங்கே, ஒரு பூச்சிகூட வெடிக்கவில்லையே!? அதனால்தான், வெளியே வந்த தஷ்வந்த், ஹாசினியைப் பறிகொடுத்த தந்தையையே மிரட்டுகிறான். இதைவிடக் கொடுமை... அவன் தாயையே கொலை செய்கிறான். இப்படிப்பட்டவனைத்தான் அவன் அப்பா ஜாமீனில் எடுத்து, இன்று அவருடைய மனைவியையே இழந்திருக்கிறார். 

‘‘எவ்வளவு பெரிய தவறு?’’ 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல்எனும் சொல்
 
- என்பார் வள்ளுவர். 

அதாவது, மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ, என்று பிறர் புகழ்ந்து சொல்வதாகும். ஆம், இங்கே இப்படிப்பட்ட தஷ்வந்தைப் பெற அவர் என்ன தவம் செய்தாரோ? தவறு செய்தவன் தன் மகனே என்று தெரிந்தபோதிலும், அவனைத் தேர்க்காலில் இட்டுக்கொன்றவன் மனுநீதிச் சோழன் என்று வரலாறு சொல்கிறது. தன் மகன் தவறு செய்திருந்தும் அவனை தண்டனையிலிருந்து காப்பாற்றியதால்தான், இங்கே தஷ்வந்த் அடுத்த தவறு செய்யத் துணிகிறான். சாதாரண தவறென்றால் அவனை மன்னித்திருக்கலாம். அவன் செய்ததோ மிகப்பெரிய தவறு. பாலியல் வன்புணர்வோடு குழந்தையையும் அல்லவா கொன்றிருக்கிறான். அப்படியென்றால், இது எவ்வளவு பெரிய தவறு? 

‘‘விளையாட்டு என்றால் உயிர்!’’

இப்படித்தான் இன்னும் பல இடங்களில் நாங்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுப் பலிகடாவாக்கப்படுகிறோம். அது பலருக்கும் தெரிவதில்லை. எப்போதும் செல்வம் படைத்தவர்கள், சேதாரம் அடைந்தவர்கள்மீதே குற்றம்சுமத்துகிறார்கள் சிபாரிசுமூலம்... இல்லையென்றால், சில்லறைகள்மூலம். ஏழைகள் என்பதால்தானே எங்களுக்கு விடியல் கிடைப்பதில்லை... இதே அரசியல்வாதியின் மகளாகவோ அல்லது அதிகாரத்தில் இருப்பவரின் மகளாகவோ அல்லது அயல்நாட்டில் இருந்து வந்தவரின் ஒரு மகளாகவோ இருந்து இந்தக் கதி ஏற்பட்டிருந்தால், இருட்டறையான சட்டத்துக்குள்கூட ஒரு பல்பு தொங்கவிடப்பட்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம்.
‘இன்று ஏடு தூக்கும் சிறுவர்கள் நாளை நாடுகாக்கும் தலைவர்களாவர்’ என்று சொல்லி எத்தனையோ தலைவர்கள் மறைந்துவிட்டனர். அதுபோன்ற தலைவர்களை இப்போது பார்க்க முடிவதில்லை என்பதும் கவலைப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், மக்களின் பிரதிநிதிகளான அவர்களுக்குக் கட்சியையும், ஆட்சியையும் தக்கவைக்கவே நேரம் சரியாக இருக்கிறது. அப்புறம் எப்படி மக்களைக் கவனிப்பார்கள்? நாற்றமெடுத்த அந்தக் கதையை விடுவோம்... நம் கதைக்கு வருவோம். நாங்கள் இன்னும் வகுப்பிலேயே தலைவர்கள் ஆகவில்லை. அதற்குள்ளேயே எங்கள் வளர்ச்சிக்கு முடிவுகட்டி முள்காட்டுக்குள் புதைத்துவிடுகிறார்கள்... இல்லையென்றால், கொளுத்திவிடுகிறார்கள். விளையாட்டு என்றால் எங்களுக்கு உயிர். இந்த வயதில் அதைத் தவிர, வேறு என்ன தெரியும் எங்களுக்கு? 

‘‘தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களே...!’’ 

பாலியலும் ஒரு விளையாட்டு என்பதை, பாவிகள் எங்களிடம் விளையாடுவதன்மூலம் அல்லவா தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தோழிகளோடு விளையாடும் நாங்கள், விளையாட்டு முடிந்தபின்பு அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றுவிடுவோம்... ஆனால், இந்த விளையாட்டை எங்களிடம் விளையாடுபவர்கள் எங்களுக்கே சமாதி கட்டிவிடுகின்றனர். இது நியாயமா? தஷ்வந்த் போன்ற ‘அண்ணா’க்களே... உங்களுக்குத் திருமண வயது வந்துவிட்டதென்றால், தைரியமாய் உங்கள் பெற்றோரிடம் சொல்லிப் பெண் பார்க்கச் சொல்லுங்கள். அதற்கும் பயமாக இருக்கிறதா? இன்னொரு வழி இருக்கிறது... அதைச் சொல்வதற்கு எனக்குத் தகுதியும் இல்லை... அதில், உங்களைத் தள்ள மனமும் இல்லை. ஆனால், எங்களைப் போன்ற அரும்புகளை இதுபோல் தொந்தரவு செய்யாதீர்கள்... ஏனெனில், அடுத்த தலைமுறைக்கும் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்துவிடப் போகிறது. ஒருகணம், நீங்கள் யோசித்துப் பாருங்கள்... உங்கள் மகளையே நீங்கள் இப்படிச் செய்வீர்களா என்று! அதேபோல் எங்களையும் எண்ணுங்கள்.

பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்று குறைபட்டுக்கொள்ளும் உலகமே... இதுபோன்று நாங்கள் அழிக்கப்படுவதற்கு ஏன் குரல் கொடுப்பதில்லை? முதலில், கள்ளிப்பாலால் அழிக்கப்பட்டோம்... பிறகு, கருவிலேயே கலைக்கப்பட்டோம்... இப்போது, காமக் கொடூரர்களால் கொல்லப்படுகிறோம். அப்படியென்றால், பெண்சிசு அழிக்கப்படுவதுதான் விதியா... இதற்கு முடிவே இல்லையா?  

இந்த உலகில் நாங்கள் வாழப் பதில் சொல்லுங்கள் மக்களே...’’

இப்படிக்கு,
உங்கள் அன்பு ஹாசினிகள்