Published:Updated:

இலியானா இளைக்கலாம் ...தமன்னா கறுக்கலாம் ...ஆனா..?!

தோட்டா ஜெகன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

டுத்த எட்டு மாசத்துல வரப்போகுது தேர்தலு... மக்கள் மனசுல இருக்கானு தெரியலே மாறுதலு. ஆனாலும், நம்ம அரசியல் அண்ணன்களுக்கு கிளி ஜோசியம் பார்த்துச் சொல்வோம் ஆறுதலு. வண்ணக்கிளி... செல்லக்கிளி... வாசல் தாண்டா கூண்டுக்கிளி... நம்ம ஆளு. பேரு காஜல் அகர்வாலு. பட்டுப்போன பனைமரம்தான் இவ ஊஞ்சலு, கதவைத் திறந்து அண்ணன் சரத்குமாருக்கு ஒரு சீட்டு எடுடி என் ஏஞ்சலு! 

அண்ணன் நீங்க வாக்கிங் போறப்ப, அந்த வங்கக்கடல் அலையே வணக்கம் சொல்லும். அண்ணன் நீங்க மழையில நனைஞ்சா, அந்த லைட் ஹவுஸே குடை பிடிக்கும். அப்படிப்பட்ட உங்களுக்கு, 'இனி பொறுத்தது எல்லாம் போதும். பொதுக்கூட்ட மேடையில புல்லட் ரயில் விடும் நேரம்’னு சொல்லி, 'மனோகரா’ பட சிவாஜியே வந்திருக்காரு. பாம்பன் பாலத்தையே பர்த்டே கேக்கா வெட்டுவீங்களே, இப்படி சட்டமன்றத்துல உட்காரவெச்சு மேஜையைத் தட்டவிட்டுட்டாங்களே... ஆயிரம் பேரு வந்தாலும் உங்க அறிவுக்கும் திறமைக்கும் ஈடாகுமா? அடுத்த படத்துக்காக அனுஷ்கா குண்டாகலாம். ஆனா, அஞ்சாறு ஸீட்டுக்காக அண்ணன் நீங்க பெண்டாகலாமா? உங்க பைசெப்ஸ் அளவைவிட பத்து இன்ச் கம்மியா இருக்கிற கேப்டனே, ஒரு கூட்டணிக்குத் தலைவரா இருக்காரு. ஆனா, நீங்க இன்னமும் கார்டன்ல இலை பறிச்சு, பாட்டனி புஸ்தகத்துல ஒட்டிக்கிட்டு இருக்கீங்க. ஆறு மாசத்துல தேர்தல் போரு இருக்கு. இப்ப வந்து, 'சரத்குமார் என்கிற பேரை மறக்கடிச்சு 'புரட்சித் திலகம்’ என்கிற பேரை மக்கள் மனசுல பதியவைங்க’னு அக்கப்போரு பண்றீங்க. ஒரிஜினல் பேரே கல்வெட்டுல கிறுக்கிவெக்கிற மாதிரி கலக்கலா இருக்கிறப்ப 'புரட்சித் திலகம்’, 'வறட்சி உலகம்’னு வேறு பேரு தேடலாமா? தேக்குமரத் தூணாட்டம் இருந்த நமீதாவே, இப்ப டீக்கடையில தேயிலை அள்ளிப்போடுற ஸ்பூனாட்டம் மாறிடுச்சு. ஆனா, நீங்க எட்டு வயசு கட்சியை வெச்சுக்கிட்டு, கூட்டணி கியர் போட்டு டாப்புக்குப் போகாம, இன்னமும் 'குரூப்ல டூப்’பாட்டம் கோரஸ் பாடிக்கிட்டு இருக்கீங்களே! பத்தாமப்போன ஜாக்கெட்டையே பாடியில மாட்ட முடியாது... பத்தவெச்ச ராக்கெட்டையா ஜாடியில போட முடியும். நீங்க எல்லாம் பத்தவெச்ச பி.எஸ்.எல்.வி., பொத்திவெச்ச ஆட்டம் பாம். வடபழனி பிரிட்ஜ் ஏறி திரும்பிப் பார்த்தா, கோடம்பாக்கம். துணிஞ்சு தனிச்சு நில்லுங்கண்ணே... தமிழகமே உங்களை நிமிர்ந்து பார்க்கும்!  

இலியானா இளைக்கலாம் ...தமன்னா கறுக்கலாம் ...ஆனா..?!

அடியே என் காஜல் கிளி, சரத் அண்ணன் சட்டையைக் கிழிச்சது போதும். வா... வந்து நம்ம ஈ.வி.கே.எஸ். சாருக்கு ஒரு சீட்டு எடு.

'வாய்ப்பில்லா வித்துவான், வாயைத் தொறந்தா கத்துவான்’கிற கதையா... உங்க வம்பு சேட்டைக்குப் பொருத்தமா, வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ளயே வந்திருக்காக. அண்ணே... ரணகளத்துலயும் கிளுகிளுப்பா இருந்த நேரம் எல்லாம் ராக்கெட் ஏறிப்போக, இப்ப சனியன் சைக்கிள்ல வாசல் வரைக்கும் வந்து பிரச்னையை பால் பாக்கெட்டா தூக்கிப்போட்டுட்டுப் போறான். தப்புத்தப்பாக்கூட பேசலாம்ணே... ஆனா, கப்புகப்பா பேசலாமா? சென்சாருல 'பீப்’ போடுற வார்த்தைகளை, சென்ஸே இல்லாமத்தான் வீசலாமா? மாடே வந்து மடியைக் காட்டி பால் கறக்கச் சொல்ற மாதிரி, தாங்களே தடியைக் கொடுத்து தங்களையே அடிக்கச் சொல்றீங்களேண்ணே! 'இதுவே என் கட்டளை... என் கட்டளையே சாசனம்’னு கண்டதையும் பேசினா, பொறவு 'கிடைச்சதெல்லாத்தையும் வீசணும்’னு கண்டவனெல்லாம் வரத்தானே செய்வான்? இன்னைக்கு உங்களை ஏசுற ஆளுங்க எல்லாம், குழந்தையா நொண்டி விளையாண்டப்ப, தெருவுல புல்டோசர் வண்டி விட்டவரு நீங்க. இப்ப ஆள் இல்லாத ஹைவேல பஞ்ச்சரான வண்டியோடு புளியமரத்துக்கு அடியில ஒண்டி நிக்கிறீங்களேண்ணே. முன்ஜாமீனை வாங்கிட்டு என்னமோ முந்திரித் தோப்பு வாங்கின மாதிரி ஹேப்பியாகிறது எல்லாம், உங்களுக்கு நல்லாவா இருக்கு! தங்கத்துல கட்டுனாத்தான் தாலி, இப்படி பேர் கெட்டுப்போனா மத்தவங்களுக்குத்தான் ஜாலி, வர தேர்தல் வரையுமாவது வாய்க்குப் போடுங்க வேலி... இல்லைன்னா 2016-லயும் காமராஜர் ஆட்சி காலி!

அன்புனு வந்தா ஆலயமணியாம், ஆத்திரம்னு வந்தா அடங்காமணியாம், அலாரம்வெச்சா ஆறுமணியாம், அனுஷ்கா ஆடுன நோ மணி நோ மணியாம்... எங்க சின்னய்யா அன்புமணிக்கு ஒரு சீட்டு எடுத்து நீட்டுடி என் காஜலு...

ஆகா ஆகா ஆகா... என்னதான் செவுத்துமேல நடந்தாலும், குளத்துமேல கிடந்தாலும், தன் ஆசையை நிறைவேத்த ஆண்ட்ரியா மேல பூசைபோடும் அந்த அரண்மனைப் பேயழகி ஹன்சிகாவே அய்யாவுக்கு வந்திருக்காக.  'நாளைய முதலமைச்சர்’னு குதியாட்டம் போட்டாலும், கனவு உலகத்துக்கும் நினைவு உலகத்துக்கும் நடுவுல ஒரு புனைவு உலகத்துல நீங்க வாழுற காலகட்டம் இது. சீனப் பெருஞ்சுவர்லயே செதுக்கிவைக்கிற மாதிரி நீங்க சொன்ன, 'மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’கிறதை, 'ஏமாற்றம்... தடுமாற்றம்... போண்டாமணி’னு கேண்டி கிரஷ் விளையாட ரெக்வெஸ்ட் விடுறவன்லாம் ஃபேஸ்புக்ல நக்கல் பண்றான். எதிர்காலமே உங்களைப் பார்த்து எந்திரிச்சு நின்னாலும், கடந்த காலத்துல நீங்க மந்திரிச்சுவிட்டதை எல்லாம் மறக்க முடியலையே. பௌலருக்கு ஏத்த மாதிரி பேட்ஸ்மேன்கள் ஃபுட்வொர்க் மாத்துறதுபோல, தேர்தலுக்குத் தேர்தல் நீங்க கூட்டணி நெட்வொர்க் மாத்துனீங்களே..! இப்ப 'தனித்து நிற்கிறேன்’னு இப்படி நீங்க தள்ளி நிக்கிறதைப் பார்க்கிறப்ப, எரியுற கொள்ளியை எடுத்து எவன் எவனுக்கோ கூரியர் அனுப்பத் தோணுது. இலியானாவைக்கூட இன்னும் இளைக்கவைக்கலாம், தமன்னாவைக்கூட கொஞ்சம் கறுக்கவைக்கலாம்... ஆனா, தமிழ்நாட்டுல எப்படிண்ணே நம்ம ஆட்சியை முளைக்கவைக்கிறது? தூத்துக்குடியில நம்மளால சாத்துக்குடி விக்க முடியல... காரைக்குடி போயா நம்மளால கப்பல் விக்க முடியும்? கலைஞர், அம்மா எல்லாம் வெயிலுக்கு ஒதுங்கி வேடிக்கை பார்க்கிறப்ப, நீங்க மட்டும் வெந்நீரைக் குடிச்சுட்டுவந்து வெத்தாட்டம் போடுறீங்களே! அண்ணே... லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், நினைக்கிறது எல்லாம் நடக்காமப்போனா சோறு, தண்ணி புடிக்காது. 'நான் முதல்வரானால்...’ நோய்க்கு அடிக்ஷன் கில்லரும் கிடையாது!

இந்தியா முழுக்க 'இன்னைக்கு பந்த்’னு சொன்னாலும், 'எடுத்துவைங்கடா ஈவ்னிங் விளையாடிக்கலாம்’னு சொல்லும் யதார்த்தவாதியே... மூணே விரல்ல முப்பது தீவிரவாதிகளைப் புடிச்சாலும், 'எதையும் முழுசாப் படிக்காம சொல்ல முடியாது’னு சொல்லும் அகிம்சாவாதியே, 'முடி இருக்கிறதுனால இஷாந்த் ஷர்மாவுக்கும் அனுஷ்கா ஷர்மாவுக்கும் வித்தியாசம் இல்ல. அதனால விராட் கோஹ்லி யாரோடு வேணாலும் விளையாடலாம்’னு தீர்ப்பு சொல்லும் நியாயவாதியே, உங்களுக்கு காஜல் கிளி எடுத்த சீட்டுல வந்திருக்கிறது, 'பேய்க்கும் பேய்க்கும் சண்டை, அதை வேடிக்கை பார்த்தவனுக்கு உடைஞ்சிடுச்சு மண்டை’னு கத்திக்கிட்டே ஓடுற 'காஞ்சானா-2’. பின்ன, கேப்டன் விஜயகாந்த்னா சும்மாவா!

ஆப்பிரிக்கா எரிமலையில தெறிச்சுவிழுற தீப்பிழம்ப வழிச்சு வாயில போட்டுட்டு, சிரிச்சுட்டுப் போறவரு நீங்க. இப்பல்லாம் உளுந்துவடையில ஓட்டை சிறுசா இருக்குன்னு முறைச்சுட்டுப் போறீங்களே... ஏங்க? இந்த ஆறு மாசத்துல நீங்க தலையில கொட்டுன ஆட்கள் எண்ணிக்கை 545. இந்த மூணு மாசத்துல நீங்க திட்டுன ஆட்கள் எண்ணிக்கை 427. இந்த நாலு வாரத்துல உங்களைப் பார்த்து நடுங்கிப்போனவங்க எண்ணிக்கை 524. இந்த ரெண்டு வாரத்துல உங்களைப் பார்த்துப் பதுங்குனவங்க எண்ணிக்கை 158. நண்டு பிரியாணி வர நேரமாச்சுன்னு நாக்கைக் கடிக்கலாமா... கேள்விகேட்டு வர்ற நிருபர்களைத் தூக்கியடிக்கலாமா? குணம் என்பது முகம் மாதிரி, வாழ்க்கை முழுக்க பளிச்னு வெச்சுக்கணும். கோபம் என்பது நகம் மாதிரி, வளர்ந்தா படாருன்னு வெட்டிரணும். செங்கல், சுண்ணாம்பு வாங்கி ஒரு வீட்டைக் கட்டி, அதை சீட்டுக்கட்டுபோலச் சரியவிடலாமா? குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா ஒரு கூட்டைக் கட்டி, கோவத்துல கொள்ளிவெச்சு அதை எரியவிடலாமா? அண்ணே... அன்புதான் உங்க சொத்துனு ஊருக்கே தெரியும். அதை வித்துட்டுப்போகாதீங்க. உங்க மனசு ஒரு முத்துனு தெரியும், அந்த நம்பிக்கையில குத்திட்டுப் போகாதீங்க. வரணும்... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும். அப்படி வரணும்னா, பேசறதுக்கு முன்னால நீங்க சொல்லவேண்டிய வார்த்தை, சாமி சரணம்!

காஜல் செல்லம் அடுத்து அட்டாக் பண்ணப் போறவர்... நம்ம அஞ்சாநெஞ்சன் அழகிரி அண்ணன்!  

வாய்க்கு வெச்சிருக்கிற வெள்ளரிக்காயைக்கூட பேய்க்குப் போடும் நல்லவரே... ஊரு பேரு தெரியாதவங்களுக்கும் ஹார்லிக்ஸ் ஊட்டிவிடும் உத்தமரே... உங்க ராசிக்கு அந்த 'தெய்வமகன்’ சிவாஜியே வந்திருக்காக. அண்ணே உங்களைப் பார்த்தா, பாயுற புயல்கூடப் பதுங்கும்; சுமத்ரா தீவு சுனாமிகூட ஒதுங்கும். ஆனா, வாழ்க்கை எனும் நதியோட்டத்துல, வாய் செஞ்ச சதியாட்டதுல, குபேரனா இருந்த நீங்க, இப்ப குசேலனா இருக்கீங்க. மதுரை நகரின் மாவிளக்கே, அஞ்சாநெஞ்சம் கொண்ட அகல்விளக்கே, உங்களை அணைஞ்சுபோகச் சொல்லலை, பாசத்தில் பரிசுத்தத்தில் கொஞ்சம் பணிஞ்சுபோகத்தான் சொல்றோம். சத்யராஜும் சிபிராஜும் 'கோவை பிரதர்ஸ்’னா, வெங்கட் பிரபுவும் பிரேம்ஜியும் 'கோவா பிரதர்ஸ்’னா, நீங்களும் தம்பி ஸ்டாலினும் தானே தமிழ்நாட்டின் 'கோப பிரதர்ஸ்’! வரப்போற தேர்தல் வரை நீங்க செய்யவேண்டியது எல்லாம்... உங்க கோபத்தை கூகுள்ல தேடுனாலும் கிடைக்காத மாதிரி ஒளிச்சுவெச்சுடுங்க. பேட்டி எடுக்கிறேன்னு யாராவது வந்தா புடிச்சு வெச்சுடுங்க. மீறியும் மைக் நீட்டுனா, அந்தக் கையைக் கடிச்சுக்கூடவெச்சிடுங்க. ஆனா, வெறுத்துப்போற மாதிரி கருத்து மட்டும் சொல்லிராதீங்க. முக்கியமா சென்னை ஏர்போர்ட் பக்கம் காத்துவாங்கக்கூட வந்துராதீங்க. ஏன்னா, நாலு கீ இருந்தா கால்குலேட்டரு, நாப்பது கீ இருந்தா கம்ப்யூட்டரு... இம்புட்டுத்தானே வாழ்க்கை. இனி யாரு உங்கக்கிட்ட கருத்து கேட்டாலும், 'தங்கபாலு தலைக்குக் குளிச்சு என்னாகப்போகுது, இனி அமலா பால் நடிச்சு என்னாகப்போகுது’னு சொல்லிட்டுப்போயிட்டே இருங்க. வங்கக்கடல் இந்தப் பக்கம், அரபிக்கடல் அந்தப் பக்கம், நீங்க மட்டும் பணிஞ்சுபோனா, ஜார்ஜு கோட்டை ரொம்பப் பக்கம்!