Published:Updated:

மந்திரி தந்திரி - 22 !

விகடன் டீம், படம்: ஆர்.எம்.முத்துராஜ் ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா

ந்த வார வி.ஐ.பி விருந்தினரான வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அரசியல் ஆர்வம் உண்டான கதையைத் தெரிந்துகொள்ள ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் இங்கே...    

 தமிழ்நாட்டில் குதிரைவண்டிகள் ஒழிக்கப்பட்டு, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அறிமுகமாகி இருந்த காலம். அப்போது மதுரை அவனியாபுரம் வீதிகளில் வலம்வந்த சைக்கிள் ரிக்ஷாக்களில், போஸின் சைக்கிள் ரிக்ஷாவுக்கு தனிச் சிறப்பு உண்டு. அதற்கு என ரசிகர் பட்டாளம்கூட இருந்தது. வீடுகளில் டிரான்சிஸ்டர் அரிதாக இருக்கும் காலத்தில், தன் ரிக்ஷாவில் டிரான்சிஸ்டர் பொருத்திக்கொண்டு, எம்.ஜி.ஆர் பாடல்களைச் சத்தமாக ஒலிக்கவிட்டு, உற்சாகமாக வலம்வருவார் போஸ். அத்துடன் ரிக்ஷாவின் பக்கவாட்டில், உள்ளே, பின்புறம்... என எங்கு எல்லாம் இடம் இருக்கிறதோ, அங்கு எல்லாம் விதவிதமான எம்.ஜி.ஆர் படங்களை ஒட்டிவைத்திருப்பார். கத்தியுடன் நிற்கும் எம்.ஜி.ஆர்., உற்சாகக் குதிரை சவாரி எம்.ஜி.ஆர்., ராஜ உடை எம்.ஜி.ஆர்., கைகட்டி கம்பீரமாக நிற்கும் எம்.ஜி.ஆர்... என போஸின் சைக்கிள் ரிக்ஷா முழுக்க எம்.ஜி.ஆர்-தான். எம்.ஜி.ஆரை மிகத் தீவிரமாக நேசித்த லட்சக்கணக்கான  ரசிகர்களில் ஒருவர். அந்த அபிமானம்தான் அவருடைய மகன் உதயகுமாருக்கும் அப்படியே தொற்றிக்கொண்டது. அந்தத் தொற்றலின் தொடர்ச்சியும் உதயகுமாரின் முயற்சியும்தான் இன்று அவரை 'மாண்புமிகு’வாக்கி அதிகாரபீடத்தில் அமர்த்தியிருக்கிறது!  

மந்திரி தந்திரி - 22 !

சதுரங்க வேட்டை

உதயகுமாருக்கு பூர்வீகம் கமுதி அருகே உள்ள பொந்தம்புளி. ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாகவே குடும்பம், வானம் பார்த்த சீமையைவிட்டு கோயில் நகரான மதுரைக்கு இடம்பெயர்ந்தது. உதயகுமாரின் அப்பா போஸ், அவனியாபுரம் மீனாட்சி நகர் அ.தி.மு.க கிளைச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். வருமானத்துக்கு சைக்கிள் ரிக்ஷா; செல்வாக்குக்கு கட்சிப் பதவி. அந்தப் பின்னணி, சட்டப் படிப்பு முடித்த கையோடு உதயகுமாரை அரசியல் அரங்கில் செயல்படச் செய்தது. அ.தி.மு.க-வுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்வது, பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வது என முழு அளவில் கட்சிக்காகச் செயல்படத் தொடங்கினார். முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை மூலம், உதயகுமாருக்கு கட்சியில் 'ஜம்ப் ஸ்டார்ட்’ கிடைத்தது. மாணவர் அணிச் செயலாளர், 2001-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் பணிக்குழுவில் இடம் எனப் பரபரப்பானார். முதுகுளத்தூர் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ பதினெட்டாம்படியானின் உறவுப் பெண் தாமரைச்செல்வியை உதயகுமார் மணமுடிக்க, அது கட்சியில் அடுத்தகட்ட அபார வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டது. பதினெட்டாம்படியானின் அண்ணன் மகன் புலிகேசி, அ.தி.மு.க வக்கீல் பிரிவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவர் சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ§க்கு நெருக்கமானவர். அவர் மூலம் வெங்கடேஷ§க்கு அறிமுகம் ஆனார் உதயகுமார். வெங்கடேஷ§டனான அறிமுகம், கட்சியில் உதயகுமாருக்கு விறுவிறு வளர்ச்சியைக் கொடுத்தது.

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விடம் ஆட்சியைப் பறிகொடுத்து அ.தி.மு.க சோர்ந்திருந்த சமயம் அது. அப்போது கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தது. அப்படி விருதுநகர் 'மா.செ’-வாக இருந்த காரியாபட்டி சிவசாமிக்கும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் மற்றும் திருத்தங்கல் நகராட்சித் துணைத் தலைவர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும் (இன்றைய செய்தித் துறை அமைச்சர்) இடையிலான உரசல்களில் பொறிகள் பறந்தன. எனவே, அங்கு சமரசத்தை நிலைநாட்ட, வெங்கடேஷ் சிபாரிசில் உதயகுமாரை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார் ஜெயலலிதா. ஆனால், சிக்கலைத் தீர்க்க நியமிக்கப்பட்ட உதயகுமார், சிவசாமிக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே எந்தச் சமாதானத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்காக முயற்சிக்கக்கூட இல்லை. காரணம், அந்தக் கோஷ்டி மோதலில் இருவரில் ஒருவர் செல்வாக்கு இழந்தால், அந்த இடத்தை தான் நிரப்பிக்கொள்ளலாம் என்ற 'தொலைநோக்குப் பார்வை’யே! மதுரை அரசியலைச் சமாளித்து அங்கு எம்.எல்.ஏ ஸீட் வாங்குவது கஷ்டம். ஆனால், கொஞ்சம் இறங்கி வேலைபார்த்தால், அது விருதுநகரில் சாத்தியப்படும். அதைச் சாத்தியமாக்க விருதுநகரில் கோலோச்சும் சிவசாமி, ராஜேந்திர பாலாஜி ஆகிய இரண்டு காய்களில் ஒன்றை வெட்ட வேண்டும் என்பதுதான் உதயகுமாரின் கணக்கு. அந்தக் கணக்கும் கைகூடியது.

மந்திரி தந்திரி - 22 !

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிவசாமியை திருச்சுழி நம்பிக்கையில் திருப்பிவிட்டுவிட்டு, வெங்கடேஷின் தயவில் சாத்தூர் எம்.எல்.ஏ ஸீட் வாங்கி ஜெயித்தார் உதயகுமார். அதே வெங்கடேஷ் சிபாரிசில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் ஆனார். அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சில நாட்களிலேயே சிவசாமியிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி, அமைச்சராக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்படி சதுரங்க வியூகம் வகுத்து கோட்டைக்குள் கால் வைத்தார் உதயகுமார். கால் வைத்த அந்த அத்தியாயம்... தனி சுவாரஸ்யம்!  

அம்மா என்னும் தெய்வம்...

கோட்டை என்னும் கோயில்!

அமைச்சராகக் கோட்டைக்குள் நுழையும்போது, 'அம்மா இருக்கும் இடம்தான் எனக்குக் கோயில். அதனால் கோட்டைக்குச் செருப்பு அணியாமல்தான் வருவேன்’ எனச் சொல்லி, புல்லரிக்கவைத்தார் உதயகுமார். தொடர்ந்து 'அம்மா புகழ்’ பாடிக்கொண்டே இருந்தார். ஆனால், அந்த ஓவர் ஃபீலிங்ஸ், ஓவர் டோஸாகி அவர் பதவியையும் பறித்தது.  

திருச்சி மேற்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல். அதற்கான பணிக்குழுவில் உதயகுமாரும் இடம்பெற்றிருந்தார். உதயகுமார் செய்த ஒரு தடபுடல், பிரசாரத்துக்கு என திருச்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏக எரிச்சலை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் கடும் மின்வெட்டு அமலில் இருந்த சமயம் அது. தமிழ்நாடு இருளில் தள்ளாடி தமிழர்கள் வியர்வையில் புழுங்கிக்கொண்டிருந்தபோது, உதயகுமார் திருச்சியில்

8 கி.மீ தூரத்துக்கு அலங்கார மின்விளக்குகள் அமைத்திருந்தார். அதுவும்  பகலிலேயே அவை ஜெகஜோதியாக ஒளிர்ந்தன. அந்த மின்கோபுரங்களைப் பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் ஜெயலலிதா. 'மாநிலம் முழுக்க கடும் மின்வெட்டுப் பிரச்னை அமலில் இருக்கும்போது இப்படி எல்லாம் மின்விளக்குகள் அமைத்தால், மக்கள் என்ன நினைப்பார்கள்? இதனால் எனக்கும் ஆட்சிக்கும் எவ்வளவு கெட்ட பெயர் வரும் தெரியுமா?’ என்று சுடுசுடுவெனக் கேட்டு உதயகுமாருக்கு செம டோஸ் விட்டார்.  'அம்மா கோபம்’ சும்மாவிடுமா? இரண்டொரு நாட்களில் உதயகுமாரின் அமைச்சர் / கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. ஐந்தே மாதங்களில் மந்திரி பதவியைப் பறிகொடுத்தார்.

பதவிகள் இழந்ததும் உதயகுமார் கண்களைக் கசக்கிக்கொண்டு நேராகச் சென்று நின்ற இடம் வெங்கடேஷ் வீடு. அவருக்கு அப்போதைக்கு ஆறுதலும் தேறுதலும் சொன்ன வெங்கடேஷ், பின்னர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்தார். அதோடு சட்டசபை உறுதிமொழிக் குழுத் தலைவர் பொறுப்பும் கிடைக்க வழி செய்தவர், 'கொஞ்சம் பொறுமையாக இரு. அமைச்சர் பதவியையும் மீண்டும் வாங்கித்தருவது என் பொறுப்பு’ எனச் சொல்லியிருக்கிறார்.

சொன்னதுபோல, 2013-ம் ஆண்டில் மீண்டும் அமைச்சர் பதவியை உதயகுமாருக்கு வாங்கிக் கொடுத்தார் வெங்கடேஷ். இந்த முறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைகள். அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர் பதவியும் தேடி வந்தது. அதில் சுற்றிச் சுழன்று பணியாற்றியதால், 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் வருவாய்த் துறை உதயகுமாரின் வசமானது. இதற்குப் பின்னால் இருக்கும் 'லாபி’... 'அம்மாடி’ வகையறா!  

ஓ.பன்னீர்செல்வம், உதயகுமார் இருவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சசிகலாவின் அக்கா மகனான டி.டி.வி.தினகரன்  சேனல் மூலம் முதலமைச்சர் பதவி வரை எட்டிப்பிடித்தார் பன்னீர்செல்வம். ஆரம்பத்தில் சசிகலா குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்த பன்னீர்செல்வம், ஒருகட்டத்தில் தன் விசுவாசம் முழுவதையும் ஜெயலலிதா பக்கம் திருப்பிவிட்டார். இதில் சசிகலாவின் குடும்பத்துக்கு பன்னீர்செல்வத்தின் மீது ஏக வருத்தம். இந்த நேரத்தில்தான் தென் மாவட்டத்தில் சசிகலாவின் உறவினர் வெங்கடேஷ், உதயகுமாரை வளர்த்தெடுத்தார். முக்குலத்தோர் பெரும்புள்ளி சமூக ஆதரவை அணைகட்ட உதயகுமாரை வளர்த்தார்கள் என்கின்றனர் கார்டனின் உள்விவகாரம் அறிந்தவர்கள். ஆக, இப்போதைக்கு ராஜ உபசாரத்துடன் அமைச்சரவையில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார் உதயகுமார்!

துறையில் சாதித்தது என்ன?

அரசின் முதுகெலும்பாகத் திகழ்கிறது வருவாய்த் துறை. நிர்வாக அமைப்பில் மிகவும் பழமையான துறையும்கூட. மற்ற அனைத்துத் துறைகளுக்கும் தாய்த் துறையாக இருப்பதும் வருவாய்த் துறைதான். மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய மையப்புள்ளியாக இருப்பவை கலெக்டர் அலுவலகங்கள்தான். அந்த அலுவலகங்களில் பெரும்பான்மையானவர்களாக இருப்பவர்கள் வருவாய்த் துறை அலுவலர்கள். ஆக, அரசின் திட்டங்களைக் கட்டக்கடைசி குடிமகனிடம் கொண்டுசெல்வது வருவாய்த் துறையின் செயல்பாடுகள்தான். ஆனால், அது அந்த அளவுக்கான முக்கியத்துவத்துடன் நடக்கிறதா? பார்ப்போம்...

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நான்கு லட்சத்துக்கும் அதிக மக்கள்தொகைகொண்ட வட்டங்களை, புதிய வட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்பது அரசாணை. 2012-13ம் ஆண்டில் 9 வட்டங்களும், 2013-14ம் ஆண்டில் 25 வட்டங்களும் உருவாக்கப்பட்டபோதிலும், அது போனமானதாக இல்லை. கூடுதல் வட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதேபோல கோட்டங்களை உருவாக்குவதிலும் ஏக சுணக்கம். இந்தத் தகவல் தொழில்நுட்ப யுகத்தில், 'சிவப்பு நாடா’ வரைமுறைகளைக்கொண்டு  காலத்தை ஓட்ட முடியாது என்பது நிதர்சனம். இதற்கு அரசாங்கமும் விதிவிலக்கு அல்ல. திட்டங்களையும் நலத்திட்ட உதவிகளையும் துல்லியமாகச் செயல்படுத்த 'மின் ஆளுமை’ முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். மின் ஆளுமையின் மூலமாக வருவாய்த் துறையின் பொறுப்பில் உள்ள வகுப்புச் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், வருமானச் சான்றிதழ்கள் முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ்கள் வரை வழங்கப்பட்டுவருகின்றன. ஆனால், அவை முழுமையாகவும் திருப்திகரமாகவும் விநியோகிக்கப்படுவதும் இல்லை. மக்கள் பணிகள் இப்படியென்றால், அலுவலக நிர்வாகப் பணிகளிலும் மின் ஆளுமை  சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் இல்லை.

நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற வேளாண் தொழிலாளர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது வருவாய்த் துறையின் பொறுப்பு. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் உரியவர்களுக்கு பணம் போய்ச் சேர்வது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து படிக்கப்படுகிறது. முதியோர் உதவித்தொகை தொடங்கி விதவை உதவித்தொகை வரையில் ஆளும் கட்சியினர் இடைத்தரகர்களாகப் புகுந்து விளையாடுகிறார்கள். இதனால் தகுதியே இல்லாதவர்களுக்கு எல்லாம் அரசின் உதவித்தொகைகள் போய்ச் சேர்கின்றன. சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் மூலம் 35.39 லட்சம் பயனாளிகள் பயன் அடைகிறார்கள் எனக் கணக்குச் சொல்கிறார் அமைச்சர். ஆனால், அந்தக் கணக்கைத் தணிக்கைசெய்தால் போலியானவர்களும் தகுதி இல்லாதவர்களுமே பெரும் அளவில் வெளிச்சத்துக்கு வருவார்கள்.

விலையில்லாத மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்குவது சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை என்றபோதும், அதை விநியோகிப்பது வருவாய்த் துறை. சமூகப் பாதுகாப்பு ஓய்வு ஊதியத்தைப்போலவே இதிலும் குழப்பக் குளறுபடிகள். வருவாய் கிராமப் பகுதிகளுக்கு முதலாவதாகவும், பிறகு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என ஏறு வரிசையில் வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், பல இடங்களில் பலருக்கு இரண்டு முறைக்கு மேல் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பலருக்கு இந்தப் பொருட்கள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் படிக்கப்படுகிறது. கடலுக்குள் போகும் மீனவர்களுக்கு ஒயர்லஸ் போன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் வழங்கப்படவில்லை.

பட்டா மாற்ற பஞ்சாயத்துகள்

கஜினி முகமதுபோல படையெடுப்பு நடத்தினால்தான் வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் பெற முடியும். இதனால் ஏற்படும் கால விரயத்தைப் போக்க 'பட்டா மாற்ற முறை ஒழுங்குப்படுத்தப்படும்’ என  10.06.2011 அன்று ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள காலவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், அதனால் எந்தப் பயனும் விளைந்ததாகத் தெரியவில்லை. கிராம நிர்வாக அலுவலங்களில் பட்டா மாறுதலுக்காகக் காத்திருப்பவர்களைக் கேட்டால், பல கதைகள் சொல்வார்கள்.

பொது மற்றும் தனியார் நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது. 'நில ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டம்’ மற்றும் 'வருவாய் நிர்வாகத்தை வலுப்படுத்தி நிலப் பதிவுகளை மேம்படுத்தும் திட்டம்’ செயல்பாட்டில் இருந்தும், மோசடி நில அபகரிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 'அப்படி எல்லாம் இல்லை’ என அமைச்சரால் சொல்ல முடியாது. காரணம், இவர்கள் ஆட்சியில்தான் காவல் துறையில் 'நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு’ என ஒன்றைப் பிரத்யேகமாகத் தொடங்கினார்கள். நில அளவை மற்றும் நிலவரித் திட்டம், வருவாய்ப் பதிவேடுகள் பராமரித்தல், நில ஆவணங்களைக் கணினிமயமாக்குதல், தொடுதிரைத் தகவல் மேடை, பூகோளரீதியான அளவைப் பணி... போன்றவை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரின் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் கடந்த தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்ட ஒருசில கணிணிமயமாக்குதலைத் தவிர எதிலும் நிலை மாறவில்லை. அதனால்தான் கோயில் நிலங்கள் எல்லாம் போலியாக அளக்கப்பட்டு, தனியார்கள் கனிமவளங்களைக் கொள்ளையடிக்க ஏதுவாக தாரைவார்க்கப்படுகின்றன.

நிலத் தாவா, நில அபகரிப்பு ஆகியவற்றின் காரணமாக வழக்குகள் அதிகரித்துள்ளன. அதற்காக நில ஆக்கிரமிப்புத் தடுப்புப் பிரிவு தனியாக அமைக்கப்பட்டதும், இந்தத் துறை நமக்கும் இனிமேல் நில ஆக்கிரமிப்பு விவகாரங்களுக்கும் சம்பந்தம் இல்லை என நினைத்துவிட்டதுபோல. தன்னுடைய வேலைகளில் இருந்து முற்றிலும் ஒதுங்கிக்கொண்டது. ஆனால், உயர் நீதிமன்றம் அந்தத் தனிப்பிரிவையே கலைத்துவிட்டது. அதன் பிறகும் நில மோசடிகளைத் தடுக்கும் வேலையை வருவாய்த் துறை தீவிரப்படுத்தவில்லை. அரசுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பாளர்கள் கைகளில்தான் இருக்கின்றன.

  வீழ்த்தப்படும் விவசாயி

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களை, விவசாயிகளுக்குக் குறைந்த குத்தகைக்கு வழங்குவதும் துறையின் பொறுப்புதான். அப்படி... பல மாவட்டங்களில் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவை எதுவும் உண்மையில் எந்த விவசாயிக்கும் போய்ச் சேரவில்லை எனக் குமுறுகிறார்கள். ஆளும் கட்சிக்காரர்கள், அவர்களுடைய பினாமிகளுக்கு குறைந்த குத்தகைக்கு அந்த நிலங்கள் வழங்கப்பட, அவற்றில் அவர்கள் காம்ப்ளெக்ஸ் கட்டுவது, வீடு கட்டி வாடகைக்குவிடுவது என தொழில் செய்துவருகிறார்கள் என்றும் புகார்கள் கிளம்புகின்றன. உண்மையான விவசாயிகள் யாரும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு சதுர அடி நிலத்தைக்கூட வாங்கியிருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.

கடவுள் என்னும் முதலாளி

கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி!’ என  சட்டமன்ற உரையில் பாடிக்காட்டி, 'உழவர் பாதுகாப்புத் திட்டத்தை’ மறு அறிமுகம் செய்தார் ஜெயலலிதா. அந்தத் திட்டம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் விவசாயத் தொழிலில் ஈடுபடும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும், பண்பேறிய சிவப்பு வண்ணத்திலும் (மெரூன் வண்ணம்), அவர்களைச் சார்ந்து வாழும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இவ்வாறு அடையாள அட்டை பெறுபவர்களுக்கு திருமண உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, வறட்சிக் காலங்களில் நிவாரண நிதி போன்றவை அளிக்கப்படும் என்பது எல்லாம் வருவாய்த் துறை சார்ந்த அறிவிப்புகள். அட... அந்தத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதுகூட அடுத்த நிலை. ஜெயலலிதா அறிவித்த அந்த அடையாள அட்டைகள்கூட, தமிழ்நாட்டில் உண்மையான விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தாரையும் சென்றுசேரவில்லை. அந்த அட்டைகளை வாங்குவதற்கே இடைத்தரகர்கள், அவர்களுக்கு கமிஷன், ஆளும் கட்சிக்காரர்களின் அடாவடி என ஏக அழிச்சாட்டியங்கள் அரங்கேறுகின்றன.

மற்றும் இன்னபிற...

பள்ளிகள் மூலமாக மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ், வருமான வரிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவை பள்ளிகளிலேயே கொடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கும்கூட இந்த அரசாங்கம் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. அது தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. அதனால், அதை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு சந்தோஷப்படவேண்டியதுதான்.

இந்திய தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தமிழ்நாடு, கிழக்குப் பகுதி வங்காள விரிகுடாவினாலும் தென்பகுதி இந்தியப் பெருங்கடலினாலும் சூழப்பட்டு சுமார் 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் 7.2 கோடி மக்கள்தொகையில் சுமார்

50 சதவிகித மக்கள், அடர்த்தி மிகுந்த கடலோரப் பகுதிகளில் வசிக்கின்றனர். அந்தக் கடற்கரையை அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாக்கும் பேரிடர்களின் அபாயத்தைக் குறைக்க, தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் 'கடலோரப் பேரிடர் அபாயம் குறைப்புத் திட்டம்’ என்ற ஒன்றை, 1,481 கோடி ரூபாய் செலவில் தொடங்கியதாகச் சொன்னது. ஆனால், எந்தக் கடற்கரையில் என்ன பேரிடர் மேலாண்மை செயல்படுத்தப்பட்டது என்பதற்கு அமைச்சரிடம் நிச்சயமாகப் பதில் இருக்காது.

ஆக, மக்கள் நலன் காக்காமல் அமைச்சர் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்? அட, அதுக்காகவா அவர் அமைச்சர் ஆனார் என நமுட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்கள் துறை அதிகாரிகள். ஹ்ம்ம்!  

சினிமா... சினிமா!

மந்திரி தந்திரி - 22 !

அமைச்சர் உதயகுமாரின் தம்பி யோகேஸ்வரன், அவரது நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்துள்ள சினிமா நிறுவனத்தின் பெயர் 'ஸ்பாட் லைட் சினி கிரியேஷன்ஸ்’. மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் நடித்த 'சரித்திரம் பேசு’ என்ற படம் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு. அதில் உதயகுமாரின் தம்பி யோகேஸ்வரனும் நடித்துள்ளார். படத்தின் டைட்டில் கார்டில் அவர் பெயர் 'யோகேஸ்வரன் போஸ்’ என வருகிறது. அந்த யோகேஸ்வரன் மூலம் சினிமா புள்ளிகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் நடைபெறுகிறதாம். அதில் மட்டும் '200-சி’ அளவுக்கு ரொட்டேஷன் சுற்றுகிறது என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.  

முக்கோண கோஷ்டிப் பூசல்!

மந்திரி தந்திரி - 22 !

விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் செய்தித் துறை அமைச்சராகவும் உள்ள ராஜேந்திர பாலாஜி, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ஆகியோருக்கு என தனித் தனிக் கோஷ்டிகள் உண்டு. இதில் ராஜேந்திர பாலாஜி - உதயகுமாரின் கைகள் ஓங்கி உள்ளன. இவர்களைத் தாண்டி வைகைச்செல்வனால் அங்கு தலையெடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும்  உதயகுமாருக்கும் நேரடிப் பகை, பிரச்னை என எதுவும் இல்லை. ஆனால், செல்வாக்கில் தன்னை மற்றவர் மிஞ்சிவிடக் கூடாது என்பதில், இருவரும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இதனால் வாய்ப்பு கிடைத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க சமயம்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!

ஆம்னி பஸ் டிராவல்ஸ் ஏஷென்ட்

மந்திரி தந்திரி - 22 !

மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில், வகுப்பு முடிந்து வீடு திரும்பியதும் வெட்டியாக ஊர் சுற்ற மாட்டார் உதயகுமார். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஆம்னி பஸ் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலைபார்த்தார். அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் குடும்ப பாரத்தைக் குறைத்தார். தனியார் பேருந்துகளில் ஆள் ஏற்றிவிடுவதற்கு அவர்கள் தரும் கமிஷன் தொகை, பேருந்தைக் கழுவுவதற்குக் கிடைக்கும் தொகை போன்றவை, அந்தக் காலத்தில் அவருக்குப் பேருதவியாக இருந்துள்ளன. இந்த வருமானம் மூலமே அடுத்து சட்டக் கல்லூரியில் படித்தபோது, மகேந்திரா வேன் ஒன்றை வாங்கி, வாடகைக்குவிடும் அளவுக்கு உயர்ந்திருந்தார்.

சர்வம் உதயகுமார் மயம்!

மந்திரி தந்திரி - 22 !

டாக்டர் வெங்கடேஷ§க்கு, உதயகுமார்தான் ஆல் இன் ஆல். வெங்கடேஷ் 'எள்’ என நினைக்கும் முன்னரே 'எண்ணெயுடன்’ நிற்பார் உதயகுமார். இப்படி பல வழிகளிலும் வெங்கடேஷின் தேவைகளை நிறைவேற்றினார் உதயகுமார். இதனால் வெங்கடேஷ் குடும்பத்தினர் உதயகுமார் மீது கடுப்பானார்கள். 'அவருக்கு அவ்வளவு இடம் கொடுக்க வேண்டாம்’ என வெங்கடேஷ் வீட்டுக்குள் பிரச்னை புகைய ஆரம்பித்தது. அப்படி குடும்பமே எதிர்த்தாலும், வெங்கடேஷ் உதயகுமாரை விட்டுக்கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு வெங்கடேஷைக் கவர்ந்திருந்தார் உதயகுமார்!