Published:Updated:

ரஜினியும்... அவரது கால்நூற்றாண்டு கால அரசியலும்... ஒரு டைம்லைன்! #HBDRajinikanth

ரஜினியும்... அவரது கால்நூற்றாண்டு கால அரசியலும்... ஒரு டைம்லைன்! #HBDRajinikanth
ரஜினியும்... அவரது கால்நூற்றாண்டு கால அரசியலும்... ஒரு டைம்லைன்! #HBDRajinikanth

னது அறுபத்து எட்டாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்னும் நிகழ்தலும் தமிழ் சினிமாவும் எப்படிப் பிரிக்கமுடியாததோ அதைப் போலதான் ரஜினியும் அரசியலும். இன்றுவரை, தான் அரசியலுக்கு வர இன்னும் காலம் இருக்கிறது என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசியல் அவரை விட்டுவைத்ததாகத் தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளில் அரசியல் சார்ந்த அவரது மூவ் தொடர்பான டைம்லைன், இதோ... உங்கள் பார்வைக்காக!

1991-ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த இக்காலகட்டத்தில்,போயஸ் கார்டனில் குடியிருந்தார் ரஜினிகாந்த். அப்பொழுது ரஜினியின் வாகனத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுவே  அ.தி.மு.க. மீதான தனது எதிர்ப்பை ரஜினி பதிவு செய்யக் காரணமாக அமைந்ததாக இன்றளவும் அவரது நெருங்கிய ரசிக வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.

1992- 'அண்ணாமலை' திரைப்படம் வெளியான சமயத்தில் திரைப்படங்களுக்கான போஸ்டர்கள் ஒட்டுவதற்கு எதிராக அப்போதைய ஜெயலலிதா அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது. கூடவே, படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனங்கள் அனல் பறந்தது.

1995-இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்தில் நடந்த 'குண்டு  வெடிப்பு' சம்பவத்தை பற்றி, 'பாட்ஷா' படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி, 'தமிழகத்தில் வெடி குண்டு கலாசாரம் பரவத் தொடங்கிய அறிகுறியே இது' என்று கூறினார். அப்போதைய அ.தி.மு.க.  தமிழக அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன், அந்த விழாவில் கலந்துகொண்டது ஜெயலலிதாவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

‘செவாலியர்’ விருது பெற்ற நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த சமயம், புதிதாய் தொடங்கப்பட்ட திரைப்பட நகருக்கு 'ஜெ. ஜெ திரைப்பட நகர்' என்று பெயர் வைத்திருந்தனர். அவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், 'புதிதாக திறக்கப்பட்ட இந்த நகருக்கு எம்.ஜி. ஆர் அல்லது சிவாஜி நகர் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்' என்றார். அந்த விழாவில் கலந்துகொண்ட ஜெயலலிதாவிடம் ரஜினியின் இந்தப் பேச்சு கோபத்தை ஏற்படுத்தியது.

1996-  'இந்த ஆட்சி மீண்டும் வந்தால், ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என்று அப்போதைய ஆளுங்கட்சியைச் சாடி ரஜினி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு நில்லாமல் ரஜினி, அப்போதைய சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் த.மா.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கடும் தோல்வியை சந்தித்தது. ரஜினி அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுத்தது அப்போதுதான்.

1998-நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கோவையில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. அப்பொழுது ஆளும் தி.மு.க. அரசை ஆதரித்துப் பேசிய ரஜினி, 'நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது' என்று கூறினார். இது பி.ஜே.பி., மற்றும் பிற இந்து அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ரஜினியை எதிர்த்துப் போராட்டம் செய்யத் தொடங்கிய இவ்வமைப்புகள், பின்னர் அதைக் கைவிட்டது.

2001- அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் இருந்தார் ரஜினிகாந்த். அதன் பின்னர், தான் நடித்த படங்களில் அரசியல் வசனங்களை தொடர்ந்து பயன்படுத்தினார்.

2002- 'பாபா' திரைப்படத்தில் ரஜினி சிகரெட்  பிடித்துள்ள காட்சிகள் இடம்பெறுகிறது என்ற எதிர்ப்பை பயன்படுத்தி பா.ம.க. பட வெளியீட்டை நிறுத்த முயன்றது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ் திரையுலகம் நெய்வேலியில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் போராட்டத்தை நடத்தியது. அதில் ரஜினி கலந்துகொள்ளாமல், அடுத்த நாள் சென்னையில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார். 'நதி நீர் ஒருங்கிணைப்பு மட்டுமே தீர்வாகும், பணம் இல்லையென்று அரசு இனியும் காலம் தாழ்த்த வேண்டாம், முதல் ஆளாக நானே 1 கோடி ரூபாய் தருகிறேன்' என்று உண்ணாவிரத மேடையில் கூறினார்.

2004-அப்போதைய தேர்தலில் பா.ம.க.வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தனது ரசிகர்களை வேலை செய்ய உத்தரவிட்டார் ரஜினி. அப்போது பா.ம.க. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.1996 தேர்தலில் எடுபட்ட ரஜினியின் ‘வாய்ஸ்’ இந்த தேர்தலில் எதிரொலிக்கவில்லை என்பது கவனிக்கவேண்டியது.

அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு திரையுலகம் ஒரு பாராட்டு விழாவை நடத்தியது. அப்போது மேடையில்  ஜெயலலிதாவை 'தைரிய லட்சுமி' என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ரஜினிகாந்த்.

2008- ஒகேனக்கல் திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார். அதற்கு கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அப்போது பேசிய ரஜினி, 'தமிழ்நாடு, கர்நாடகா எதுவாவேணாலும் இருக்கட்டும். சத்தியம் பேசுங்க... உண்மையைப் பேசுங்க... நம்ம இடத்துல தண்ணீர் எடுக்க அவங்க தடுத்தாங்கன்னா, அவங்கள உதைக்க வேண்டாமா?' என்று ரஜினி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

2009- ஈழ இனப்படுகொலையைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில், '35 ஆண்டுகளாக தமிழர்களை உங்களால ஒழிக்க முடியலைன்னா நீங்க என்ன வீரர்கள்? ஆம்பிளைகளா நீங்கள்?' என்று இலங்கை அரசை மிகக்கடுமையாக விமர்சித்தார்.

ரசிகர் சந்திப்பின்போது, 'அரசியல்ல ஜெயிக்கணும்னா சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் எல்லாம் சரியா இருக்கணும். நான் வரணும்னு முடிவு பண்ணிட்டா வந்துருவேன், அதை அவன் (கடவுள்) தான் காட்டணும்' என்று கூறினார்.

2011-சட்டமன்ற தேர்தலில் ரஜினி அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டார் என்று பத்திரிகையில் செய்தி வெளியானது. அன்று மாலையே 'பொன்னர் சங்கர்' திரைப்படத்தை கருணாநிதியுடன் பார்த்தார். அப்பொழுது அரசியல் பற்றி எதுவும் அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை என்று கூறப்பட்டது.

2012- உடல்நிலை சரியாகி 12.12.12 அன்று அதாவது, தனது பிறந்தநாளன்று தனது ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். 'நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், நான் மருத்துவமனையில் இருந்தபோது ரசிகர்களின் பிரார்த்தனைகளை அறிந்தேன், நான் நலம் பெறுவதற்கு இதுவே காரணம், இதற்கு நன்றி என்று சொல்ல முடியாது, ஏதாவது செய்ய வேண்டும், ஆனால், அது என் கையில் இல்லை? ' என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

2017- எந்திரன் 2-ம் பாகமான ’2.0’-ன் தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா', தனது 'ஞானம்' அறக்கட்டளையின் மூலம் இலங்கையில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை ரஜினி முன்னிலையில் தமிழர்களுக்கு வழங்கத் தயாராய் இருந்தது. தமிழகத்தில் இதற்கு சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததினால், அப்பயணத்தைக் கைவிட்டார் ரஜினிகாந்த். மீண்டும் இலங்கை சென்றால், 'மீனவர் பிரச்னை' குறித்து இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் பேசுவதாக' அப்போது கூறினார்.

மாபெரும் ரசிகர்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த சந்திப்பின்போது,'போர் வரும். வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறி தனது ரசிகர்களை மீண்டும் களத்துக்குத் தயார் படுத்தினார். கால் நூற்றாண்டு காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி., காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளிடமும் நட்பு பாராட்டி வருகிறார் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வந்தால் யாரை எதிர்த்து நிற்பார் , ரஜினி சொல்வதுபோல் 'எல்லாம் அந்த ஆண்டவன் கையில இருக்கு!'