Published:Updated:

சுற்றுலா மாவட்டம் மயானமாவதை எதிர்பார்க்கிறீர்களா? - தமிழக அரசுக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்தவரின் குமுறல் கடிதம்!

சுற்றுலா மாவட்டம் மயானமாவதை எதிர்பார்க்கிறீர்களா? - தமிழக அரசுக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்தவரின் குமுறல் கடிதம்!
சுற்றுலா மாவட்டம் மயானமாவதை எதிர்பார்க்கிறீர்களா? - தமிழக அரசுக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்தவரின் குமுறல் கடிதம்!

தமிழக அரசுக்கு...

ஆழிப்பேரலையால் கடல்கொண்ட குமரிக்கண்டத்தின் மிச்சஎச்சமான கன்னியாகுமரி மாவட்டத்து மக்களின் கண்ணீரை மையாக்கி, அவர்களின் பிரதிநிதியாக இதனை எழுதுகிறேன். இந்தியாவின் கடைக்கோடியாகத் திகழ்வது கன்னியாகுமரி. அதுபோல தமிழகத்தின் கடைக்கோடியாகவும் உள்ளது. அதனால் இதுவரை எந்த வருத்தத்தையோ, வெறுப்பையோ பெரிய அளவில் நாங்கள் காட்டியதில்லை. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குள் அடைபட்டுக்கிடந்த தமிழ் தாலுகா பகுதிகள், தாய்த் தமிழகத்தோடு இணைய வேண்டும் என சுதந்திரப் போராட்டம் நடத்தி, தமிழகத்தோடு இணைந்தோம். ஆனால், இன்றுவரை எங்களை வேற்றுக்கிரகவாசிகளைப் போல தமிழக அரசு நடத்துவதுதான் கொடுமை. கன்னியாகுமரி மாவட்டம் எந்தவொரு வளர்ச்சியும் பெறாமல் போய்விட்டது என்பது நிதர்சனமான உண்மை. 'நெல்லை எங்களது எல்லை; குமரி எங்களது தொல்லை' என தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்பு சொன்ன வாக்கியத்தைத்தான், அவருக்குப் பின் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிவரை எல்லோரும் தங்கள் சொந்தக் கருத்தாகக்கொண்டு செயல்படுகிறார்கள் என்பதுதான் வேதனை. தமிழ் எல்லை வரையறைகளை சங்க இலக்கியங்கள் மூலம் வரையறுக்க மேற்கோள்காட்ட மட்டும்தான் கன்னியாகுமரி இன்று தேவைப்படுகிறது. தமிழகத்தோடு இணைந்த குமரி மாவட்டத்தில் இரண்டாம் தலைமுறை உருவான பின்னரும், எங்கள் மாவட்டம் பற்றி எந்தவொரு கவனமும், அக்கறையும் உங்களுக்கு வராமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. திருநெல்வேலி சென்றால் எங்களை மலையாளி என்று  விரட்டுகிறார்கள். களியக்காவிளை தாண்டிப்போனால் பாண்டிக்காரன் என்று சொல்லி கேரள மாநிலத்தவர் துரத்துகிறார்கள். இன்னொருபக்கம் கடல் சூழ்ந்துள்ளது. அங்கு தவறி விழுந்தாலும் காப்பாற்ற நாதி இல்லை. சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எங்கள் மாவட்டத்தின் அஸ்தமனத்தைச் சொல்லி விவரிக்க முடியாது. என்றாவது எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக, பாடுபட்டது உண்டா என உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

சுற்றுலா மாவட்டம் மயானமாவதை எதிர்பார்க்கிறீர்களா? - தமிழக அரசுக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்தவரின் குமுறல் கடிதம்!

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்து 61 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால், இன்னும் மாவட்டத்தின் அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமல்தான் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நீர்நிலைகளே இப்போதும் மக்களின் தண்ணீர்த் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. விவசாயத் தேவைகளுக்காக கட்டப்பட்ட பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகளிலிருந்து தண்ணீர் எடுத்து மக்களின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. பருவமழைக் காலங்களில் லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் தேங்காய்ப்பட்டினம், மணக்குடி கழிமுகப் பகுதிகளில் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் வீணாகும் தண்ணீரைக் குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் மாற்றும் திட்டங்கள் இதுவரை எந்த அரசாலும் வகுக்கப்படவில்லை. சுற்றுலா மாவட்டமாக கருதப்படும் கன்னியாகுமரியில் திற்பரப்பு, மாத்தூர் தொட்டிபாலம், பத்மநாபபுரம் அரண்மனை, சுசீந்திரம் கோயில், சிதறால் மலைக் கோயில், வட்டக்கோட்டை என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆனால், சுற்றுலாத்துறை எந்த முன்னேற்ற நடவடிக்கையையும் இதுவரை எடுக்காதது வருத்தத்துக்குரியது. கல்வியறிவு அதிகமுள்ள மாவட்டம் என தமிழகத்தில் பெயர் பெற்றிருந்தாலும் பல்கலைக்கழகங்கள் எதுவும் இங்கு கிடையாது. சுமார் 48 மீனவ கிராமங்களைக் கொண்ட குமரி மாவட்டத்தில் மீன்பிடிப்புக்குப் போதிய வசதிகள் இல்லை. இந்தியாவின் தென்கோடி பகுதியில் எங்கள் மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தங்க நாற்கரச் சாலைத் திட்டம், இன்னும் நிறைவடையாமல் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட ரப்பருக்கு சர்வதேச மதிப்பு உண்டு. அதனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா தந்த வாக்குறுதியான ரப்பர் தொழிற்சாலை இன்னும் கானல் நீர் திட்டமாகவே உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் குடிநீர்த் தேவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. மாற்றுத் திட்டங்கள் எதுவும் இல்லை. இன்னமும் பல கிராமங்கள் கோடைக்காலத்தில் குடிநீர்த் தேவைக்காக அலைந்து திரியும் நிலைதான் நீடிக்கிறது. இம்மாவட்டத்தில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் தொற்றுநோய் பரவுவதும் தொடர்கதையாகவே உள்ளது. கேரளாவின் குப்பைக் கழிவுகளைக் கொட்டும் இடமாகவும் கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. மாவட்டத்தில் மலைகள், காடுகள், ஆற்றுப் படுகைகள், கடற்கரை கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டும்,  சுரண்டப்பட்டும் வருகின்றன. நாளுக்குநாள் வெளியிடப்படும் மத்திய அரசின் புதிய புதிய திட்டங்களால் இயற்கைச்சூழல்கள் ஒருபுறம் அழிக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சி என்கிற பெயரில் குமரி மாவட்டம் தொடர்ந்து சூறையாடப்படுகிறது. வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழை என இரு பருவமழைகளும் பெற்று செழிப்பாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம், தற்போது இயற்கை அழிக்கப்படுவதால் மழைப்பொழிவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால், விவசாய விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் கைகளுக்கு செல்லும் நிலை உருவாகிவிட்டது. 'திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியம்' என அழைக்கப்பட்ட நாஞ்சில்நாடு பகுதியானது, இப்போது விவசாயத்தை கொஞ்சம்கொஞ்சமாக இழந்துவிட்டது என்றே சொல்லலாம். தமிழக அரசின் எந்தவொரு துறையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுமையாகச் செயல்படவில்லை. இம்மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் மலிந்து காணப்படுகிறது. காவல்துறை வெறும் ஹெல்மெட் சோதனையில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு, சட்டம்-ஒழுங்கையும், மக்களின் உடமைகளையும் பாதுகாப்பதில் தவறி விடுகிறது. கடற்கரைப் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்பு இல்லை. கிழக்குக் கடற்கரையும், மேற்குக் கடற்கரையும் ஒருங்கே அமைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி தடைக் காலம் வரும்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதும் எங்கள் மீனவர்கள்தான். அந்த மீனவர்கள் இருக்கிற தைரியத்தில்தான், இந்தியாவின் தென் எல்லையைக் பாதுகாப்பாக இப்போதும் வைத்துக்கொள்ள முடிகிறது. அவர்களுக்காக என்ன செய்தது உங்கள் அரசு? என்ன செய்யப்போகிறது? ஒகி புயல் தாக்குதலுக்குமுன் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. புயலும் வந்து ருத்ர தாண்டவமாடிவிட்டுப் போய் விட்டது. புயலின் கோரத்தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா அல்லது புரியவில்லையா? 

சுற்றுலா மாவட்டம் மயானமாவதை எதிர்பார்க்கிறீர்களா? - தமிழக அரசுக்கு கன்னியாகுமரியைச் சேர்ந்தவரின் குமுறல் கடிதம்!

புயலின் தாக்கத்தால் குமரி மாவட்டத்தில் மிகப்பெரும் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டிருந்த விவசாயமும் அழிக்கப்பட்டுவிட்டது. கடற்கரை கிராமங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. உயிர்களின் மதிப்பை பண ஏலம் வைத்து உயர்த்துகிறீர்கள். அ.தி.மு.க. நிறுவனர் அமரர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் உங்கள் அரசு, உயிரோடு கடலில் தத்தளிக்கும் மீனவர்களைப் பாதுகாக்க எந்த முனைப்பும் காட்டாதது ஏன்? அவர்களின் மரண ஓலம் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா, இல்லை உங்கள் அரசு தூங்குகிறதா அல்லது அரசின் காதுகள் செவிடாகி விட்டனவா? இன்னும் புயல் வீசட்டும்; சுனாமி வரட்டும்; வாழ்வாதாரம் நசுக்கப்படட்டும், எங்கள் குமரி மாவட்டம் இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகட்டும் என காத்திருக்கீறீர்களா? சொல்லுங்கள்...இன்னும் கொஞ்ச நாள்களில் சுற்றுலா மாவட்டமான குமரி, சுடுகாடாக மாறும். அப்போதாவது ஒப்பாரி வைக்க வருவீர்களா தமிழக அரசே.

இப்படிக்கு

இரண்டாம் தலைமுறை மைந்தன், குமரி மாவட்டம்.