Published:Updated:

எழும்பூர் கவின்கலைக் கல்லூரியில் சாதி அரசியலா? - ஜோயல் பிரகாஷ் பேசிய வீடியோ ஆதாரம் என்ன சொல்கிறது?

எழும்பூர் கவின்கலைக் கல்லூரியில் சாதி அரசியலா? - ஜோயல் பிரகாஷ் பேசிய வீடியோ ஆதாரம் என்ன சொல்கிறது?
எழும்பூர் கவின்கலைக் கல்லூரியில் சாதி அரசியலா? - ஜோயல் பிரகாஷ் பேசிய வீடியோ ஆதாரம் என்ன சொல்கிறது?

''எனக்கு எந்த ஒரு பிரச்னை வந்தாலும், 'கடவுள் கொடுத்த இந்தத் திறமை இருக்கிறது; வாழ்க்கையைத் தொடர்வதற்கு வழி இருக்கிறது; சில நாள்கள் வரைதான் இந்தத் துன்பங்கள் எல்லாம்' என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். மேலும், இதுதான் நமது முதல் குறிக்கோள், மற்ற பிரச்னைகளால் இது பாதிப்படையக் கூடாது என்றும் சொல்லிக்கொண்டு, எனக்கான தனி வழியில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நான் படிக்கும் இடத்திலேயே நீங்கள் என்மீது இவ்வளவு அழுத்தம் கொடுத்து, படிக்கும் இடம் என்பதையே இல்லாமல் செய்தால், எனக்கு ஏன் இந்த வாழ்க்கை?''

எழும்பூர் கவின்கலைக் கல்லூரியில் சாதி அரசியலா? - ஜோயல் பிரகாஷ் பேசிய வீடியோ ஆதாரம் என்ன சொல்கிறது?

இவை பிரகாஷ் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தன் பேராசிரியர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் பேசிய காணொளியில் கூறிய வார்த்தைகள். முப்பது நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தக் காணொளியில் பிரகாஷ் தனது கோபத்தையும், சோகத்தையும், ஆற்றாமையையும் மிகவும் உருக்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

அவரது முழுப்பெயர் ஜோயல் பிரகாஷ். வயது 24. சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரியில் சுடுமண் (Ceramic) துறையில் இறுதியாண்டு பயின்று வந்தார். சொந்த ஊர் வேலூர். அப்பா அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணிபுரிகிறார்.  அண்ணன் பிரதாப்புக்கு பெங்களூரில் பணி.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சொந்த ஊரிலேயே பி.பி.ஏ படிப்பில் சேர்ந்தார். அவரது ஓவியத் திறமையைக் கண்ட அவரது ஆசிரியர்கள், பிரகாஷை கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து, முறையாக ஓவியக் கலையைக் கற்க ஊக்குவித்திருக்கிறார்கள். இரண்டாம் ஆண்டு வரை படித்த பி.பி.ஏ படிப்பை நிறுத்திவிட்டு, கவின்கலைக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார் பிரகாஷ்.

முன்பு படித்த கல்லூரியிலிருந்து சான்றிதழ் வாங்கித் தருவதில் தாமதம் ஏற்பட, பிரகாஷுக்கு அவர் விருப்பப்பட்ட பாடமான தூரிகை ஓவியம் (Painting) கிடைக்காமல் போகிறது. அடுத்த ஆண்டு முயன்றால் விருப்பப்பட்ட துறையில் சேரலாம் என்று கல்லூரித்தரப்பில் கூறியும், புதியவற்றைக் கற்றுக் கொள்ளலாம் என்ற முனைப்பில் சுடுமண் துறையைத் தேர்வுசெய்தார்.

''பிரகாஷ் ரொம்ப சாஃப்டான கேரக்டர். தன்னால மத்தவங்க கஷ்டப்படக் கூடாதுனு இருப்பான். காலேஜ் ஃபீஸ் கட்டணும்னாகூட அப்பாகிட்ட கேட்டு, அவர கஷ்டப்படுத்தாம, அண்ணன்கிட்ட கேப்பான். சென்னைல தங்கிப் படிச்சா வீட்டுக்கு செலவாகும்னு, தினமும் வேலூர்ல இருந்து ஒன்றரை மணி நேரம் ரயில்ல ட்ராவல் பண்ணி வருவான். அவனுக்கு போர்ட்ரெய்ட் (Portrait) பண்றதுனா ரொம்பப் பிடிக்கும். செராமிக் டிபார்ட்மெண்ட்ல இருந்ததால, அதுலயும் ஆர்வமா செயல்பட்டான். இரண்டாம் ஆண்டுலயும், மூன்றாம் ஆண்டுலயும் அவன்தான் 'சிறந்த மாணவன்' விருது வாங்கினான்.'' என்று தன் நண்பனைப் பற்றிப் பேசத் தொடங்கினார் பிரகாஷ் அம்பேத்கர். இவர் அரசு கவின்கலைக் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையில் இறுதியாண்டு பயின்று வருபவர்.

தொடர்ந்து பேசியவர், ''அரசு கவின்கலைக் கல்லூரியைப் பொறுத்தவரை, எந்தத் துறையிலும் போதுமான கட்டமைப்பு இருக்காது. காட்சி தொடர்பியல் துறையில் ஒளிப்படக் கருவி ஒன்றுதான் இருக்கும். அதைப் பயன்படுத்த முடியாது. டெக்ஸ்டைல் துறையில் நெசவுக்கான இயந்திரங்கள் பழுதடைந்து கிடக்கும். செராமிக் துறையில் மாணவர்களுக்குத் தேவையான அளவுக்கு களிமண் இருக்காது. இந்தப் பிரச்னையை எல்லாம் தாண்டித்தான், மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டியிருக்கு. ஆசிரியர்களும் தகுதியானவர்களாக இல்லை'' என்று அரசு கவின்கலைக் கல்லூரியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிக் கூறினார்.

பிரகாஷ் தற்கொலை தொடர்பான பிரச்னையின் தொடக்கப் புள்ளி சுடுமண் துறையில் இருந்த புத்தர் சிலையில் இருந்து தொடங்குகிறது. சுடுமண் துறைப் பேராசிரியர் சிவராஜ் மாணவர்களைப் பயன்படுத்தாமல், கல்லூரிக்கு வெளியிலிருந்து சிற்பி ஒருவரை வரவழைத்து, அய்யனார் சிலையொன்றைச் செய்கிறார். புத்தர் சிலை அகற்றப்பட்டு அய்யனார் சிலை வைக்கப்படுகின்றது.

வெளியிலிருந்து வந்தவரால் செய்யப்பட்ட அய்யனார் சிலையில் பிழைகள் இருப்பதைக் கண்ட பிரகாஷ், தனது நண்பர்களிடம் அவற்றைப் பகிர்ந்திருக்கிறார். தன்னால் அதைவிட மிகச் சிறப்பான வெளித்தோற்றம் உள்ள சிலையைச் செய்ய முடியும் என்று கூறி, தனது சொந்த ஊரிலுள்ள ஜிம் ஒன்றுக்குச் சென்று, உடற்பயிற்சி செய்பவர்களைப் புகைப்படம் எடுத்துவந்திருக்கிறார். ஆறடி உயரத்தில், ஆதாம் சிலை ஒன்று செய்வதாக முடிவெடுத்து, அதன் கால் பகுதி வரை செய்திருக்கிறார்.

அவருடன் இருந்த மற்றொரு மாணவர், ''பிரகாஷ் ஆளுருவ ஆதாம் சிலை செய்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட துறைத்தலைவர் ரவிக்குமார் அவனிடம் அந்த சிலை பாடத்திட்டத்தில் வராது எனவும், அதனை உடைத்து எறியுமாறும் கூறினார். அவன் எவ்வளவோ கேட்டும், அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. வேறு வழியில்லாமல், அவன் தன் மூன்று மாத உழைப்பால் செய்த சிலையை தன் கையாலேயே உடைத்தான்.'' என்று அந்த தினத்தில் நடந்தவற்றை விளக்கினார். பிரகாஷ் அன்று தன் நண்பர்களிடம் வெளிப்படையாகவே தான் மதரீதியாக ஒடுக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

''ஒருமுறை துறைத்தலைவர், பிரகாஷிடம் 'உன்னை நல்லவன் என்று நினைத்துத்தானே பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்ட் கொடுத்தேன். இப்போ ஏன் சர்ச்சுக்கு எல்லாம் போகிறாய்?’ என்று கேட்டிருக்கிறார். அதை அவன் எங்களிடம் சொல்லிக்கொள்ளவில்லை. மற்றொரு முறை பிரகாஷ் பட்டியல் சாதி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதைக் கேட்டு அறிந்துகொண்டு, ‘சோறு போட்டா மதம் மாறிடுவீங்களாடா?’ எனக் கேட்டிருக்கிறார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, ஆதாம் சிலையை உடைக்கச் செய்தது அவனைப் பெரிதும் பாதித்தது. பாடத்திட்டத்தில் இல்லை என்று கூறி சிலை செய்ய அனுமதி மறுத்ததால், பாடத்திட்டத்தின்படி துறைத்தலைவர் செயல்பட்டாரா என்று வினா எழுப்பத் தொடங்கினான். அவரது தகுதியையும், வகுப்பு நேரங்களில் அவர் அலுவலகத்திலேயே இருந்துவிட்டு வகுப்புக்கு வராததைப் பற்றியும் புகார் செய்யப்போவதாகக் கூறினான். அனைத்து மாணவர்களும் அவனை ஆதரித்தோம். பேராசிரியர் சிவராஜ், பிரகாஷிடம் 'கல்லூரி முதல்வர் மதியழகனைச் சந்தித்து புகார் கூற'ச் சொன்னார்.

பிரகாஷ், கல்லூரி முதல்வரைச் சந்தித்து, துறைத்தலைவர் ரவிக்குமார்மீது புகார் அளித்தபோது, முதல்வர் அவனிடம் புகார்களைக் கடிதமாகத் தரச் சொன்னார். மறுநாள் பிரகாஷ் கல்லூரிக்கு வருவதற்குமுன் துறைத்தலைவர் ரவிக்குமாரும், பேராசிரியர் சிவராஜும் எங்களை மிரட்டினர். அவர்களுக்கு எதிராக செயல்பட்டால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் கூறினர். பிரகாஷ், கல்லூரிக்கு வந்து, கடிதம் எழுதி எங்கள் கையொப்பம் கேட்டபோது, பயத்தில் நாங்கள் மறுத்துவிட்டோம். இப்போது அதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.'' என்றார்.

மேலும் அவர், ''பேராசிரியர் சிவராஜ், பிரகாஷிடம் 'ஹெச்.ஓ.டி என்றால் அப்படித்தான் இருப்பார். நீதான் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அன்று முழுவதும் பிரகாஷ் தனிமையில் இருந்தான். அந்த நாளன்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கல்லூரியில் மேற்பார்வையிட்டார். நாங்கள் வகுப்பை விட்டு வெளியே போக முடியவில்லை. அமைச்சர் வருகையால் இரவு 9.30 மணி வரை நாங்கள் வகுப்பிலேயே இருந்தோம். ஆனால், பிரகாஷ் வகுப்புக்கும் வரவில்லை; வீட்டுக்கும் செல்லவில்லை. கல்லூரி வளாகத்தில் இருந்தான்.

அப்போது மற்றொரு மாணவனிடம் 'அடிப்படை வசதிகள் இல்லாததால்தான் அனிதா இறந்தாள். நமக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. அதற்காக நாம் போராட வேண்டும்’ என்று கூறியிருக்கிறான். இதனைத் தெரிந்துகொண்ட பேராசிரியர் சிவராஜ் அவனை அழைத்து, ‘அனிதா மாதிரி தற்கொலை செய்வதாகக் கூறுகிறாயாமே?’ என்று மிரட்டியிருக்கிறார். அன்று அவன் வீட்டுக்கு மிகுந்த மன வருத்தத்துடன் சென்றுவிட்டான்.'' என்றார்.

மறுநாள் காலையில் பிரகாஷ் தனது நண்பர் பிரகாஷ் அம்பேத்கருக்கு போன் செய்து அழுதிருக்கிறார். தன்னுடன் போராடிய மாணவர்களே தன்னைக் கைவிட்டதாகக் கூறி, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அழ, அந்த உரையாடலை பிரகாஷ் அம்பேத்கர் பதிவு செய்து, கல்லூரி முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் பிரகாஷ், தனது பெற்றோருடன் கல்லூரிக்குச் சென்று முதல்வர் மதியழகனிடம் முறையிட்டு இருக்கிறார். கல்லூரி முதல்வரும் பிரச்னையை சுமுகமாக முடித்துக்கொள்ளலாம் என்று, அவர்களைத் தேற்றி அனுப்பி வைத்திருக்கிறார்.

அதன்பின், ஏறத்தாழ இரண்டு வாரங்கள், பிரகாஷ் கல்லூரிக்குச் செல்லவில்லை. வீட்டில் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றாலும், அந்த இடைவெளியில் கண் தானம் செய்வது தொடர்பாக அறிய முயன்றிருக்கிறார். கண் தானம் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கி, அதனைப் பூர்த்தி செய்திருக்கிறார்.

‘ஆர்டிஸ்டுக்கு கண் ரொம்ப முக்கியம்னு சொல்வாங்க சார். இந்தக் கண் எத்தன வொர்க் பண்ணுச்சு. என்கூட இருந்துச்சு. அப்போ இதுக்கு அப்புறமும் யூஸ் ஆகணும். இதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ண கண், மத்தவங்களுக்கும் யூஸ் ஆகணும்’ என்று தன் இறுதி வீடியோவில் பதிவுசெய்து, அக்டோபர் 25-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பிரகாஷின் தாய் செந்தாமரை புகார் அளித்தும், வேலூர் கணியம்பாடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில், பிரகாஷின் தற்கொலை ‘சந்தேகத்துக்குரிய மரணம்’ என்றே பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு ஒருமாதமாக பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் செய்த போராட்டங்களுக்குப் பிறகே கல்லூரி முதல்வர் மதியழகன், துறைத்தலைவர் ரவிக்குமார், பேராசிரியர் சிவராஜ் ஆகியோர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பதியப்பட்டுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவாகவில்லை.

ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, கவின் கலைக் கல்லூரியில் படித்த மாணவர் சசி கல்லூரி நிர்வாகம் மீதும், பேராசிரியர்களின் செயல்பாடுகள் மீதும் குற்றம் சுமத்திவிட்டு, தற்கொலை செய்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதைப்பற்றி அரசு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஓவியர் சந்துருவிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னை நீண்ட நாள்களாகவே நடந்துகொண்டு வருகிறது. அதன் காரணம், அங்கு இருக்கும் ஆசிரியர்கள் அவர்கள் பயிற்றுவிக்கும் பாடங்களுக்கு தகுதியற்றவர்கள். இவர்கள் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் உதவியுடன் நியமனம் செய்யப்பட்டு விடுகிறார்கள். புள்ளியல், தொல்லியல் துறைகளைப் போல, கலைப்பண்பாட்டுத் துறை என்பது பெரிதாக வருமானம் எதுவும் இல்லாத துறை. இங்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அரசியல் காரணங்களுக்காக, தண்டனை பெறுவதுபோல, இந்தத் துறைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். வருமானம் வராத துறை என்பதால், அதிகாரிகளும் தீவிர அக்கறை காட்டுவதில்லை. பிரச்னையின் ஆரம்பம் அங்கு இருக்கிறது. கலைப்பிரிவுகள் மாணவர்களின் படைப்புத் திறனுக்காக இயங்குபவை. பாடத்திட்டங்களுக்குள் சுருங்கி, பொருள் ஈட்டும் மற்றக் கல்விகளைப் போல் இல்லை இவை. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாத ஆசிரியர்கள் இருக்கும்வரை இந்தப் பிரச்னைகள் தொடரும். மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு இருப்பதுபோல, ஆசிரியர்களுக்கு நுழைவுத்தேர்வு வைத்து, அவர்களின் திறனையும் சோதிக்க வேண்டும்'' என்றார்.

கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் பேசுகையில், ''கல்லூரியில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. பொருள்கள் பற்றாக்குறை, தகுதியற்ற ஆசிரியர்கள் முதலிய பல பிரச்னைகளை அனுபவித்திருக்கிறோம். ஆனால், பேராசிரியர்கள் ரவிக்குமார், சிவராஜ் ஆகியோர்மீது, 'மத ரீதியாக பாகுபாடு காட்டுகிறார்கள்' என்று சொல்வது நம்ப முடியாதது. அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை!'' என்று தெரிவித்தார்.

பிரகாஷ் முதல் முறை புகார் அளித்தபோதே ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று மாணவர் ஒருவர் கல்லூரி முதல்வர் மதியழகனிடம் கூறியபோது, ''நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன். பிரகாஷும் அதே சமூகத்தைச் சார்ந்தவன். அவன் புகாரை நான் ஏற்றுக்கொண்டால், நான் என் சமூகத்தைச் சார்ந்த பையனுக்கு உதவியிருக்கிறேன் என்று, பேராசிரியர் ரவிக்குமாரும், சிவராஜும் கோபித்துக் கொள்வார்கள். அதனால்தான் கடிதமாகக் கேட்டேன்.'' என்று கூறியிருக்கிறார்.

எழும்பூர் கவின்கலைக் கல்லூரியில் சாதி அரசியலா? - ஜோயல் பிரகாஷ் பேசிய வீடியோ ஆதாரம் என்ன சொல்கிறது?

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுடுமண் துறையின் தலைவர் ரவிக்குமார் அவர்களைத் தொடர்புகொண்டோம். அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பேராசிரியர் சிவராஜ் அவர்களிடம் பேசியபோது, ''வழக்கு நடந்துவருகிறது. எனவே, அதைப்பற்றி பேச முடியாது. எங்கள் தரப்பு நியாயங்களை நாங்கள் நீதிமன்றத்தில் முன்வைப்போம்'' என முடித்துக்கொண்டார்.

இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசுவதற்காக கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் ஆணையராக இருக்கும் ராமலிங்கம் அவர்களைத் தொடர்புகொண்டோம். ராமலிங்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி அலுவலராக இருந்தவர். அவர், ''பிரகாஷ் மரணம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக தனிக்குழு ஒன்றை அமைத்தோம். அந்தக் குழு துறைத்தலைவர், ரவிக்குமார் , பேராசிரியர் சிவராஜ் ஆகியோரைக் குற்றமற்றவர்கள் எனக் கூறியுள்ளது. கவின் கலைக் கல்லூரிக்குப் போதுமான அளவுக்கு நிதி வசதிகள் செய்யப்பட்டுத்தான் வருகின்றன. அமைச்சரே நேரடியாக வந்து, மேற்பார்வையிட்டிருக்கிறார். தகுதியற்ற ஆசிரியர்கள் இருப்பதாகப் புகார் வந்தால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்துவருகிறது.'' எனக் கூறினார்.

இந்தியா முழுவதும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அது தகுதியின் அடிப்படையில் இயங்குவதில்லை என்றக் குற்றச்சாட்டையே முன்வைக்கின்றனர். ஆனால், முழுத்தகுதி பெற்றிருந்தும், ஓர் ஓவியரையும் மருத்துவரையும் தமிழ்ச்சமூகம் கடந்த சில மாதங்களுக்குள் தூக்குக் கயிறுக்கு இழந்துள்ளது.

''நான் உயிருடன் இருக்கும்போது நீங்கள் பதிலளிக்காத கேள்விகளுக்கு, நான் இல்லாத போது பதிலளிப்பது எப்படி உண்மையாகும்?'' என்று தன் இறுதி வீடியோவில் ஓவியர் பிரகாஷ் கேட்டிருக்கிறார். அந்தக் கேள்விக்கு அரசு இப்போதேனும் செவிசாய்க்கட்டும்.