Published:Updated:

“காவலர்கள், ஆயுதங்கள் பற்றாக்குறை... பெரியபாண்டியன் போன்றவர்கள் இறப்புக்கு இதுவும் காரணமா?” - சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

“காவலர்கள், ஆயுதங்கள் பற்றாக்குறை... பெரியபாண்டியன் போன்றவர்கள் இறப்புக்கு இதுவும் காரணமா?” - சட்டப்பஞ்சாயத்து இயக்கம்
“காவலர்கள், ஆயுதங்கள் பற்றாக்குறை... பெரியபாண்டியன் போன்றவர்கள் இறப்புக்கு இதுவும் காரணமா?” - சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

சென்னை, கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றைத் திருடியது ஒரு கும்பல். இந்தக் கும்பலின் தலைவனைப் பிடிக்க காவலர்கள் குழுவினருடன் ராஜஸ்தான் சென்றார் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். அவர் நினைத்திருக்கக்கூடமாட்டார். ராஜஸ்தான் பயணத்துக்கு அடுத்து, தான் மேற்கொள்ளப்போகும் பயணம், தனது இறுதி யாத்திரைப் பயணம் மட்டுமே என்று! அங்கு கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது நடந்த மோதலில், பெரியபாண்டியன் சுட்டுக்கொள்ளப்படுகிறார். தமிழகத் திரைகளில், 'தீரன்' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், நிஜத்தில் ஒரு தீரன் வீரமரணம் அடைந்தது கண்டு தமிழகமே அதிர்ந்து நிற்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுடப்பட்ட டிசம்பர் 13-ம் தேதியன்று பெரும்பாலான தமிழக மக்கள் கேட்ட மூன்று கேள்விகள் இதுவாகத்தான் இருந்திருக்கும்.

அவரது குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிப்பது, அவரது உடலுக்கு மாலை அணிவிப்பது மனிதநேயத்தின் அடிப்படையிலானது. அத்தோடு இதை நாம் கடந்துவிடக்கூடாது. எதிர்காலத்திலாவது பெரியபாண்டியன் போன்ற துடிப்பும், திறமையும் கொண்ட காவல்துறை அதிகாரிகளை நாம் இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை, சிந்தனையின் முடிவுகளை செயலாக்குதல் போன்றவையே உண்மையில் நாம் பெரியபாண்டியனுக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

பெரியபாண்டியன் மரணத்தை இரண்டு கோணங்களில் ஆராயவேண்டி இருக்கிறது. ஒன்று, ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கக் காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சி குறித்தானது. இரண்டாவது, அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள 1 கோடி ரூபாய் நிவாரண நிதி குறித்தானது.

ஆந்திரா, தெலங்கானா, பீகார், மேற்குவங்காளம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு குற்றவாளிகளைப் பிடிக்கச்சென்ற காவல்துறை படையில் பணியாற்றிய சிலரிடம் பேசினோம்.

‘எந்த அதிகாரி தலைமையில் காவல்துறை படை செல்கிறது, எத்தனை காவலர்கள், கொண்டு செல்லும் துப்பாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு ஆயுதங்கள், நவீன தொழில்நுட்பம், மொழிச் சிக்கல், போக்குவரத்து வசதிகள், பயணப்படி, உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்பு' எனப் பல விஷயங்கள் முறையாக இருந்தால்தான் வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்து கைது செய்ய முடியும் என்கிறார்கள் அவர்கள். இதில் ஒவ்வொரு விஷயத்திலும் பல ஓட்டைகள் உள்ளதாக நமக்குத் தகவல் தெரிவித்தார்கள்.

குற்றவாளிகள் அதிநவீன கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கும் காலத்தில், பிடிக்கச் செல்லும் குழுவில் உள்ள காவலர்களின் பாதுகாப்புக்கு குண்டடிபட்டால் காப்பாற்றும் புல்லட் புரூஃப் ஆடை எதுவும் கிடையாது; குறிப்பிட்ட பதவிக்கு மேல் உள்ளவர்கள் கையில்தான் பிஸ்டல் இருக்கும். கான்ஸ்டபிள் உள்ளிட்டோருக்கு இன்னும் கட்டைத்துப்பாக்கிதான். இதைத் தூக்கிக்கொண்டு பலநூறு கி.மீ ரயிலில் பயணிக்கும்போது தனது துப்பாக்கியைப் பாதுகாப்பதே காவலர்களுக்கு பெரும்பிரச்னையாக இருக்கிறது.

உள்ளூர் காவல்துறையின் ஒத்துழைப்பை விரைவாகப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் ஏராளம். ராஜஸ்தானில், இரவு 12 மணிக்கு ஒரு துப்பு கிடைத்ததும், உள்ளூர் காவல்துறையிடம் உதவி கேட்டு, அவர்கள் தங்களது மேலதிகாரிகளிடம் அனுமதிகேட்டு அது கிடைப்பதற்குள் காலதாமதம் ஆகிவிடும், குற்றவாளிகள் தப்பிவிடக்கூடும் என்ற காரணத்தினால்தான் அவர்களிடம்கூட தெரிவிக்காமல், நேரடியாக களத்துக்குச் சென்றார் பெரியபாண்டியன். உள்ளூர் குற்றவாளிகளுக்கும், உள்ளூர் காவல்துறைக்கும் 'நல்ல நட்புறவு' இருக்கும் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டி இருக்கிறது. எல்லா இடத்திலும், நேர்மையான அதிகாரிகள்தான் இருப்பார்கள், அவர்கள் குற்றவாளிகளுக்கு தகவல் தெரிவித்துவிடமாட்டார்கள் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

பயணப்படி பெறுவதில் சிக்கல்கள் ஏராளம். ரயிலில் சென்று வருவதானால் டிக்கெட் புக் செய்வதிலிருந்து பல பணிகளைக் காவலர்களே செய்துகொள்ள வேண்டிய அவலநிலை. குற்றவாளிகளைக் கைதுசெய்து வடமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு - சென்னைக்கு கொண்டுவருவதற்குள் காவலர்கள் படும்பாடு சொல்லிமாளாது. குற்றவாளிகள் தப்பிவிட்டால், கைதுசெய்து கொண்டுவந்த காவலர்கள்தான் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். துறைரீதியான நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

கண்காணிப்பு வாகனத்தில் (பேட்ரோல் வண்டி) இருக்கும் ஒரு காவலர் எங்களிடம் பேசும்போது, “இந்த வண்டியில் மொத்தம் 5 காவலர்கள்

இருக்கணும் சார்... ஆனா, இப்ப நான் ஒருத்தந்தான் இருக்கேன்.. என்ன சார் பண்ண முடியும்?''னு வேதனையோடு கேட்டார். காரணம்? காவலர்கள் பற்றாக்குறை. கடந்த ஆண்டே, 20 ஆயிரம் காவலர்கள் பற்றாக்குறை என்ற நிலை இருந்தது. ஒரு பக்கம் காவலர்கள் பற்றாக்குறை. மறுபக்கத்தில், ஆர்டர்லி முறையில் (உயரதிகாரிகள் வீட்டில், சட்டத்துக்குப் புறம்பாக வேலைக்காரர்களாகப் பணியாற்றுவது) ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் வீட்டில் இன்றுகூட காவலர்கள் பணியாற்றுகிறார்கள். இதில்லாம, வி.ஐ.பி பாதுகாப்பு, அரசியல்வாதிக்கு பாதுகாப்பு என்று நூற்றுக்கணக்கான போலீஸை பந்தோபஸ்துப் பணியில் அமர்த்திவிட்டால், அப்புறம் எப்படி குற்றவாளிகளைப் பிடிக்க காவலர்கள் கிடைப்பார்கள்?

தமிழக அரசு பெரியபாண்டியனின் குடும்பத்துக்கு நிவாரணம் 1 கோடி ரூபாய் என அறிவித்திருக்கிறது. அவரின் இரண்டு மகன்களின் படிப்புச்செலவை அரசே ஏற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  உயிரின் மதிப்பு விலைமதிப்பற்றது. குடும்பத்தின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. எவ்வளவு வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால், அதை சட்ட திட்டங்களுக்கு உட்படுத்துங்கள். 'பணியில் இருக்கும் அரசு ஊழியர் இந்தந்த முறையில் இறந்தால், அவர்களுக்கு இவ்வளவு நிவாரணம், பிற உதவிகள் அளிக்கப்படும்' என்பதுகுறித்து தெளிவான விதிமுறைகளை உருவாக்கவேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் விருப்பம்போல் உதவித்தொகையை ஏற்றியோ, குறைத்தோ கொடுப்பது நல்ல நிர்வாக நடைமுறையாக இருக்காது.

காவல்துறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரி 1996-ல் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் (பிரகாஷ் சிங் வழக்கு), 2006-ல் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்து 11 ஆண்டுகளாகியும், இன்னும் அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட பல சீர்திருத்தங்கள் (அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை செயல்படுவது எப்படி, காவலர்களின் குறைகளைத் தீர்ப்பது எப்படி, இன்னபிற...) நடைமுறைக்கு வரவில்லை. ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதுகுறித்து வருத்தம், கோபம், கண்டனம் என்று பலவழிகளில் ஒவ்வொரு மாநில அரசின் தலையில் குட்டு வைக்கிறார்கள். ஆனாலும், மாநில அரசுகள் சாக்குபோக்கு சொல்லி சமாளித்துவருகிறார்கள்.

IPS என்பது Indian Police Service. காவல்துறையினர், உண்மையில் தாங்கள் பொதுமக்களுக்காக சேவை செய்யப்பணியில் உள்ளோம் என்ற மனநிலையில் இருக்க வேண்டும், அதாவது Indian Public Service. ஆனால், உண்மையில் விதிவிலக்கான சில ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தவிர மற்ற அனைவரும் INDIAN POLITICIAN'S SERVICE என்னும் நிலைக்கு கீழிறங்கி, INDIAN POLITICIAN'S SERVANT என்ற நிலையில், ஆட்சியாளர்களின் அட்டூழியங்களுக்குத் துணைபோகிறார்கள். இதனால், பாதிக்கப்படுவது கீழ் மட்டத்திலுள்ள, களத்தில் பணியாற்றும் காவலர்களே. ஆட்சியாளர்களின் மனதைக் குளிரவைக்கும் பணிகளை விட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க களத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு எப்படி உதவலாம் என்ற மனப்போக்குக்கு உயரதிகாரிகள் வரும்போதுதான், பெரியபாண்டியன் போன்றவர்களின் உயிரிழப்புகள் எதிர்காலத்திலாவது தவிர்க்கப்படும்... குறைந்தபட்சம் குறைக்கப்படும். செய்யுமா அரசு?

- செந்தில் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்.