Published:Updated:

சீறிவந்த ஆட்டோ... செல்ஃபி எடுத்த ஸ்டாலின்... உருகிய உடன்பிறப்புகள் ! #VikatanExclusive

சீறிவந்த ஆட்டோ... செல்ஃபி எடுத்த ஸ்டாலின்... உருகிய உடன்பிறப்புகள் ! #VikatanExclusive
சீறிவந்த ஆட்டோ... செல்ஃபி எடுத்த ஸ்டாலின்... உருகிய உடன்பிறப்புகள் ! #VikatanExclusive

'மு.க ஸ்டாலின்' என்றாலே இறுக்கமானவர், கடுகடுப்பானவர் , யாரிடமும் நெருங்கிப் பேசாதவர் என்பதே அவரின் அடையாளம். ஆனால், இவையெல்லாம் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குத்தான். 'உண்மையில் அவர் இந்த அடையாளங்களிலிருந்து அப்பாற்பட்டவர்' என்கின்றனர் அவருடன் நெருக்கமாகப் பயணிக்கும் தி.மு.க-வினர். அதற்கு சான்றாக டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த ஒரு பரபர, விறுவிறு சம்பவத்தைக் கூறுகின்றனர்.

அண்ணா சாலையில் காரில் பயணித்துக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். திடீரென அவர் காருக்குப் பின்னால் சீறிக்கொண்டு வருகிறது ஓர் ஆட்டோ. இசட் பிரிவு பாதுகாப்புப் படை வாகனத்தையும் மீறிக்கொண்டு செல்கிறது ஆட்டோ. ஸ்டாலின் காரை நெருங்குகிறது. ஒரு பரபரப்பான சேஸிங் காட்சி போல தென்பட, அண்ணா சாலையில் அனல் பரவியது. தமது காரையொ ட்டி அருகில் வரும் ஆட்டோவைக் கண்டு காரை நிறுத்தச்சொல்கிறார் ஸ்டாலின். அதேநேரம், ஆட்டோவிலிருந்து இறங்கிய இரண்டு இளைஞர்கள் ஸ்டாலினை நோக்கி வருகின்றனர். திக் திக் நொடிகள் தொடர, நெருங்கியவர்கள் சட்டென தங்கள் செல்போனை எடுக்கின்றனர். ''என்னப்பா...?'' என்கிறார் ஸ்டாலின். ''சார் உங்கள எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்" என்க, "இத சொல்லத்தான் இவ்வளவு வேகமா பின்தொடர்ந்தீங்களோ... ஹா ஹா ஹா'' சிரிக்கிறார் ஸ்டாலின். "இல்லைங்க சார்... உங்ககூட செல்ஃபி எடுத்துக்கணும்னு ஆசை. அது நிறைவேறினதே இல்லை. இப்போ வழியில உங்க வண்டியைத் தற்செயலாகப் பார்த்தோம். அதான் எப்படியாவது உங்ககூட செல்ஃபி எடுத்துக்கணும்னு வந்தோம். சாரி சார்" என்றனர் இளைஞர்கள். "ஓ... செல்ஃபிதானே. வாங்க தாராளமா எடுத்துக்கலாம்" என ரோட்டின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, அப்படியே போஸ் கொடுக்கிறார் ஸ்டாலின். பிறகு அங்கிருந்து ஸ்டாலின் கார் புறப்பட, செல்ஃபி இளைஞர்களில் ஒருவரான ஏகாம்பரத்திடம் நாம் பேசினோம். 

“எங்களுக்கு மறக்க முடியாத நாள் இது. அவருக்குப் பல வேலைகள் இருந்திருக்கும். ஆனா எங்களுக்கு நேரம் கொடுத்தாரு. மொதல்ல எடுத்த செல்ஃபில படம் நல்லா விழல. சார் ப்ளீஸ் இன்னொன்னுனு கேட்டோம். சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுத்தாரு. நான் சபரிமலைக்கு மாலை போட்டுருக்கேன். அதைப் பார்த்துட்டு எப்ப மலைக்குப் போற? பத்திரமா போகணும்'-னு சொன்னாரு. தொழில் எல்லாம் எப்படிப் போகுதுன்னு கேட்டாரு. மக்கள்கிட்ட சவாரிக்கு மேல எந்தப் பணமும் வாங்காதீங்கன்னும் சிரிச்சுக்கிட்டே சொன்னாரு. நேரம் ஒதுக்கி புத்தகம் படிங்கன்னு சொல்லிட்டு கிளம்பினாரு. எவ்ளோ பெரிய மனுஷர் அவரு. ஆனா சாதாரண எங்களுக்கு நேரம் ஒதுக்கினாரு. அவரு மெர்சல்... மெர்சல்ண்ணா" என்றார் பரவசத்தோடு.

"இதுபோல பல சம்பவங்கள் இருக்குங்க" என விட்ட இடத்திலிருந்து தொடங்கினர் மூத்த நிர்வாகிகள்.

"தி.மு.க உடன்பிறப்புகளை அறிவுத்தளத்தில் உயர்த்த வேண்டும் என்றுதான் 'பொன்னாடைகளுக்குப் பதில் புத்தகங்களைப் பரிசளியுங்கள்' என்று கூறினார் ஸ்டாலின். 'தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குக் கட்சித் தொண்டர்கள் எப்போது போனாலும் வீடு திறந்திருக்கும்'னு சொல்வாங்க. ஆனா அறிவாலயம்ல தலைவர்களைச் சந்திக்கணும்னா மாவட்டச் செயலாளர் கையெழுத்து வாங்கிட்டு, முன்கூட்டியே அனுமதி வாங்கித்தான் வரணும். தற்போது அந்த முறையை ஸ்டாலின் நீக்கிட்டாரு. 'எங்கிருந்தோ நம்மள பாக்கத்தான் வராங்க. அப்படியிருக்க, அவங்ககிட்ட இருந்து தள்ளியிருக்கிறது சரியா இருக்காது'ன்னு சொல்லி, யார் வந்தாலும் அந்தத் தொண்டரைப் பார்க்கிறார் ஸ்டாலின். செல்ஃபி எடுத்துக்கொள்கிறார். ஓய்வாக இருந்தால், அப்படியே அந்தத் தொண்டரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அறிவாலயம் பின்புறம் ஒரு வாக்கிங் போகிறார். ஒருமுறை மேற்கு மண்டலத்திலிருந்து வந்தத் தொண்டர்களிடம் பேசிக்கொண்டே அவர்களை நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். வந்திருந்த பெண் உடன்பிறப்பிடம், 'இங்குள்ள புத்தகத்தில் எந்தப் புத்தகத்தை முதலில் படிப்பீர்கள்?' என்று வேடிக்கையாகக் கேட்டார். உடனே அவர், 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற பெரியார் புத்தகத்தை எடுத்தார். இதைக் கண்ட ஸ்டாலின், 'மகிழ்ச்சி. இப்படித்தான் இருக்கணும்' என்றவர் தொடர்ந்து,  'இங்குள்ள புத்தகங்கள்தான் கட்சியை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும்' என்றார். 

இப்படித் தன்னை ரொம்பவே மாற்றிக்கொண்டார் ஸ்டாலின். நெருங்கிப் பழகுகிறார். ஏதாவது ஏரியாவுக்குப் போகும்போது, திடீரென அப்பகுதியில் உள்ள தொண்டர்கள் வீட்டுக்கு ஆச்சர்ய விசிட் கொடுக்கிறார். அடிக்கடி பள்ளி மாணவ - மாணவிகளை அறிவாலயத்துக்கு அழைத்து உரையாடல் நிகழ்த்துகிறார். அடுத்த தலைமுறையைக் கொள்கைப்பூர்வமாக வளர்த்தெடுப்பதில் தற்போது ரொம்பவே மெனக்கெடுகிறார் செயல் தலைவர் ஸ்டாலின். அவருடைய மாற்றத்தால், உற்சாக மிகுதியில் உள்ளனர் உடன்பிறப்புகள்" என்கின்றனர் ஆர்ப்பரிப்போடு.

மாற்றம் என்பதுதானே மாறாதது!