Published:Updated:

மிஷன் சி.எம்.

‘எனக்கு நானே’ ஸ்டாலின்!ப.திருமாவேலன், படங்கள்: எம்.விஜயகுமார், ரா.ராம்குமார்

ரல்வாய்மொழியில் இருந்து மு.க.ஸ்டாலின் ஆரம்பித்துள்ள பிரசாரப் பயணம், தமிழ்நாடு அரசியலில் ஆச்சர்ய மாற்றத்துக்கான ஆரம்பம்! 

'தலைவர் கலைஞர் வாழ்க... தளபதி ஸ்டாலின் வாழ்க. இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா... இப்படை தோற்கின் எப்படை வெல்லும்... இதோ வந்துகொண்டு இருக்கிறார்... நம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் வந்துகொண்டு இருக்கிறார்...’ இந்த மாதிரியான எந்தக் கூச்சலும் இரைச்சலும் இல்லாமல் திடீரென தெருவில் இறங்கி நடக்கிறார்; சைக்கிள் ஓட்டுகிறார்; பைக்கில் போகிறார்;

டீ குடிக்கிறார்; பால்கோவா சாப்பிடுகிறார்... திடீரென ஒரு கடை வாசலில் கூட்டம் கூடியதைப் பார்த்ததும் 'என்ன?’ என ஆர்வம் பொங்க அடுத்தவர்கள் மொய்க்கும்போதுதான், ஊருக்குள் வந்திருப்பது மு.க.ஸ்டாலின் என்பதே தெரிகிறது. செல்போனில் போட்டோ எடுக்கிறார்கள் சிலர்; வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புகிறார்கள் பலர். செய்தி பரவி ஆட்கள் குவிய, அங்கு இருந்து வேறு இடத்துக்குப் போய்விடுகிறார் ஸ்டாலின். உண்மையான சூறாவளிப் பயணம் இது. சுழன்று சுழன்று அடிக்கிறார் ஸ்டாலின். இந்தப் பயணத்துக்கு அவர் சூட்டி இருக்கும் பெயர் 'நமக்கு நாமே!’

மிஷன் சி.எம்.

சபரியே சரணம்!

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, வெள்ளைச் செருப்பு... எப்போதாவது கறுப்பு- சிவப்பு மஃப்ளர் என இருந்த மாமா ஸ்டாலினை, பளிச் ஷர்ட், சிக் டிஷர்ட், ஸ்மார்ட் பேன்ட், ஹை ஷூ என மாற்றி, மக்கள் மத்தியில் உலா வரவைத்ததில் பெரும்பங்கு, ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசனுக்கு உண்டு. கலைஞர் கருணாநிதிக்கு மருமகன் முரசொலிமாறன் இருந்ததைப்போல, ஸ்டாலினுக்கு இப்போது சபரீசன்.

இளைஞர்களை ஈர்க்கும் இணையத்தைக் குறிவைத்ததில் தொடங்கினார் சபரீசன். 2008-ம் ஆண்டு முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு இணையத்தில் அதிகமாக வறுத்தெடுக்கப்பட்டது தி.மு.க-தான். எனவே, அந்த இணையத்தில் பதில் சொல்ல தி.மு.க-வினரைக் களம் இறக்கினார். தி.மு.க ஆதரவுப் பதிவர்களை ஒருங்கிணைத்தார். ஸ்டாலினுக்காகப் பிரத்யேகத் தளங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலினின் ஒவ்வோர் அசைவும் இவற்றில் பதிவானது.

2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, 2013-ம் ஆண்டிலேயே காரியங்கள் தொடங்கப்பட்டன. காலம் காலமாக இதுவரை இருந்த பொதுக்கூட்ட உத்திகள் அனைத்தையும் மாற்றி புதுமைகள் புகுத்தப்பட்டன. மாநாடு, பெரிய பொதுக்கூட்டம் அனைத்துமே 5 மணிக்குக் கூட்டம் தொடங்கி 7 மணிக்குள் முடியும் என்பது வரை திட்டமிட்டப்பட்டது. மதுரை, கடலூர், திருப்பூர் ஆகிய மூன்று இடங்களில் 'மக்கள் ஓரணி... கேள்வி கேட்கும் பேரணி’ என்ற தலைப்பில் பிரமாண்டமான கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. இது கருணாநிதியையே மாற்றிவிட்டது. சென்னை ஆலந்தூரில் 'மெட்ரோ ரயில் யாரால் கொண்டுவரப்பட்டது?’ என்பதை விளக்கும் பொதுக்கூட்டத்தில் அவரும் இருட்டுவதற்கு முன்னரே பேசி முடித்துவிட்டார். அந்த அளவுக்கு சபரீசன் பாதையில் தி.மு.க பயணிக்க ஆரம்பித்து விட்டது.

மிஷன் சி.எம்.

'ஓரணி பேரணி’, 'முடியட்டும் விடியட்டும்’ என்பது மாதிரி அடுத்த முழக்கம்தான் 'நமக்கு நாமே!’

செப்டம்பர் 20-ம் தேதி குமரி மாவட்டத்தில் தொடங்கிய முதல்கட்டப் பயணம், அக்டோபர் 2-ம் தேதி திருச்சியில் முடிகிறது. இதேபோல் மூன்றுகட்டப் பயணங்களைத் திட்டமிட்டுள் ளார்கள். நான்கு கோடிப் பேரைச் சந்திப்பது ஸ்டாலின் இலக்கு.

விடியல் மீட்புக்குழு!

ஸ்டாலினின் மருமகன் சபரீசன், திருச்சி அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி ஆகிய மூவர்தான் இந்த விடியல் மீட்புப் பயணத்தின் மூளையும் கையும் காலும். கடந்த இரண்டு மாதங்களாக இவர்கள் இரவும் பகலுமாகத் திட்டமிட்டதே இந்தப் பயணம். சபரீசன் சென்னையிலேயே இருந்து ஏரியல் வியூவில் கண்காணிக்கிறார். மகேஷ§ம் செல்வகணபதியும் ஸ்டாலினுடன் இருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் நடப்பதால் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி உடன் இருக்கிறார்.

மிஷன் சி.எம்.

ஸ்டாலினின் செனடாப் தெரு வீட்டிலேயே இதற்கான அலுவலகம் இருக்கிறது. தமிழ்நாடு அரசில் முன்பு பி.ஆர்.ஓ-வாக இருந்த ஹரிகிருஷ்ணன் இங்கு இருக்கிறார். அரசியல் தரவுகள், தி.மு.க-வின் முந்தைய சாதனைகள் போன்றவற்றை இவர் தயாரித்துத் தருகிறார். சபரீசன், இதற்காகத் தனி அலுவலகம் போட்டுள்ளார். தனக்குக் கீழே சில இளைஞர்களை வைத்து, அனைத்துச் செய்திகளையும் உடனுக்குடன் இணையத்தில் பதியவைக்கிறார். ஸ்டாலினுடன் இப்போது தினேஷ் என்கிற இளைஞர் எப்போதும் இருக்கிறார். எம்.பி.ஏ பட்டதாரி. கார்ப்பரேட் வடிவிலான பயணமாக இதை மாற்றியதற்கு இவர்கள்தான் காரணம். 'முரசொலி’யிலேயே 'டவுன் ஹால் மீட்டிங்’ என்ற வார்த்தை வந்திருக்கும். இது எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களில் சொல்லப்படுவது, அதை தி.மு.க-வுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்.

பத்திரிகையாளர் பார்த்திபன் இந்தக் குழுவில் இருக்கிறார். 'ஸ்டாலின் எத்தனை மணிக்குப் பேச ஆரம்பித்தால், டி.வி-களில் லைவ் காட்டுவார்கள்; ஒவ்வொரு நாள் இதழுக்கும் எத்தனை மணிக்குள் செய்தி போய்ச் சேர வேண்டும்...’ என்பதை எல்லாம் சொல்வது இவரது வேலை. கலைஞர் டி.வி-யின் நிருபர், கேமராமேன்கள் என ஆறு பேர் கொண்ட குழு எப்போதும் ஸ்டாலினுடனேயே இருக்கிறது. ஸ்டாலினின் ஒவ்வொரு நிமிடத்தையும் இவர்கள் காட்சிப்படுத்துகிறார்கள். அடுத்த நிமிடமே ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் வந்துவிடுகிறது. இன்றைய தேதியில் ஸ்டாலினின் தளபதிகள் இவர்கள்தான்!

மிஷன் சி.எம்.

மக்களிடம் செல்!

ஓர் ஊருக்கு நாளை ஸ்டாலின் வரப்போகிறார் என்றால், அந்த ஊருக்குள் 11 டிரக் வாகனங்கள் 'நமக்கு நாமே’ என்ற பேனருடன் வருகின்றன.

11 இடங்களில் போய் அது நிற்கும். 'முடியட்டும்... விடியட்டும்’ என்ற பாடலை ஒலிக்கவிடுகிறார்கள். பாடல் ஒலித்ததும் கூட்டம் கூடும். அதன் பிறகு எல்.இ.டி ஸ்கிரீனில் ஒரு படம் ஓட ஆரம்பிக்கிறது. தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகளைச் சொல்லி, இவற்றை எல்லாம் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை என அந்தப் படம் குற்றம் சாட்டும். இடையில் ஸ்டாலின் பேசுவார். இறுதியாக, 'மக்களே கோபப்படுங்கள். நீங்கள் கோபப்பட்டால்தான் மாற்றம் வரும். சகித்துக்கொண்டால் மாற்றம் வராது. இதை எல்லாம் உணர்த்தவே, உங்களைச் சந்திக்க நான் நாளை வருகிறேன்’ என்பார் ஸ்டாலின். அங்கு இருந்து உடனேயே டிரக் புறப்பட்டுவிடும். நாளை ஸ்டாலின் வரப்போகிறார் என்பது ஊருக்குள் பரவும். போஸ்டர் கிடையாது. பேனர் கிடையாது. ஆர்ச் கிடையாது. டிரக் பிரசாரம் மட்டும்தான்.

தொழிலாளர்களை அவர்களது இடத்துக்குப் போய்ப் பார்ப்பது, சாலையில் நடந்துபோகும்போது பொதுமக்களைப் பார்ப்பது, ஓர் இடத்துக்கு கல்லூரி மாணவர்களை வரவைத்துப் பார்ப்பது - இப்படி மூன்றுவிதமான மக்கள் தரிசனத்தை மாறிமாறி செய்கிறார் ஸ்டாலின். குமரியில் தென்னை விவசாயிகள், ராதாபுரத்தில் செங்கல் தொழிலாளர்கள், சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள்... என அவர்கள் இடங்களுக்கே  போய்ப் பார்ப்பதும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா சாப்பிடுவது, நெல்லையில் அல்வா, மதுரையில் ஜிகர்தண்டா வாங்குவது என இதில் கலர் சேர்த்ததுதான் ஸ்டாலின் பயணத்தைச் சுவாரஸ்யம் ஆக்கிவிட்டது.

மக்களின் கேள்வி!

'எங்க தொகுதி எம்.எல்.ஏ இங்க வந்ததே இல்லை...’ என்பதுதான் பொதுமக்கள் அனைவரின் குற்றச்சாட்டாகவும் இருந்துள்ளது. 'தொகுதியின் நன்மைக்காகச் செய்வதாகச் சொன்ன வாக்குறுதிகள் செய்து தரப்படவில்லை’ என்கிறார்கள். 'ரேஷன் பொருட்கள் ஒழுங்காகக் கிடைக்கவில்லை; சுத்தமாக இல்லை; அளவு சரியில்லை’ என்பது இவர்களது வேதனை. 'முதியோர் பென்ஷன் சரியாகக் கிடைக்கவில்லை’ எனப் புலம்புகிறார்கள். 'மதுவிலக்கு வர வேண்டும்’ என அனைவருமே சொல்லியிருக்கிறார்கள்.

'உங்கள் குறைகளைத் தெரிஞ்சுக்கிறதுக்காகத்தான் வந்திருக்கிறேன். நீங்க சொன்ன நல்ல யோசனைகளை தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்வோம். ஆட்சிக்கு வந்ததும் நடைமுறைப்படுத்துவோம்’ எனச் சொல்கிறார் ஸ்டாலின்.

மிஷன் சி.எம்.

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கேள்விகள் அதிகமாக வந்துள்ளன.

கேள்வி கேட்பவர்களுக்கு மைக் தரப்படுகிறது. கேள்விகளுக்கு ஸ்டாலினும் பதில் தருகிறார். பல நேரங்களில் இது விவாத மேடையாகவும் இருக்கிறது.

'நீங்க ஷோ காட்டுறதுக்காக வர்றீங்களா... சேவை மனப்பான்மையோடு வர்றீங்களா?’ என ஒரு மாணவி தூத்துக்குடியில் கேட்டார்.

'நீங்க என்ன நினைக்கிறீங்க?’ எனத் திருப்பிக் கேட்டார் ஸ்டாலின்.

'சேவை மனப்பான்மையோடு வர்றீங்கனுதான் நினைக்கிறேன்’ என்றார் அந்த மாணவி.

'அது போதும்’ என்றார் ஸ்டாலின்.

- இப்படி லைவ்வாக இருக்கிறது பயணம்.

வேறு வழி இல்லை!

ஸ்டாலின் இந்தப் பயணத் திட்டத்தை எதற்காக ஆரம்பித்தாரோ தெரியாது. எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்தப் பயணம் இரண்டு உண்மைகளை உணர்த்திவிட்டது.

மிஷன் சி.எம்.

பொதுமக்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு ஒரு கிளாமர் இருப்பதை இந்தப் பயணம் உணர்த்திவிட்டது. ஆளைப் பார்க்க, பேச, கை கொடுக்க, காத்திருக்க, ரசிக்க, பொதுமக்களை ஈர்க்கும் மனிதராக அவர் இருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது.

அடுத்தது... ஸ்டாலினைத் தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராகவோ கருணாநிதி அறிவித்தாலும் அறிவிக்காமல்போனாலும் அவரை அப்படித்தான் தொண்டர்களும் பொதுமக்களும் பார்க்கிறார்கள்; பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த உண்மைகளை மு.க உணர, மூன்றாம் கட்டப் பயணம் வரை காத்திருக்க வேண்டுமா?