Published:Updated:

ராசா, கனிமொழிக்கு திகார் சிறை.. திகீர் திருப்பம்! அத்தியாயம் - 3

ராசா, கனிமொழிக்கு திகார் சிறை.. திகீர் திருப்பம்! அத்தியாயம் - 3
ராசா, கனிமொழிக்கு திகார் சிறை.. திகீர் திருப்பம்! அத்தியாயம் - 3

2ஜி அலைக்கற்றை விவகாரம் 2009-ல் இருந்து புகையத் தொடங்கியது. ஆனால், 2010-ல் சி.ஏ.ஜி அறிக்கை வெளியான பிறகே, அது காட்டுத் தீயாய் வேகமெடுத்துப் பரவியது. அந்த நெருப்பின் வேகத்தில், காங்கிரஸ்-தி.மு.க உறவு மெள்ளக் கருகத் தொடங்கியது. ஆ.ராசாவின் அமைச்சர் பதவி காலியானது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் டெல்லி அரசியல் வாரிசாகப் பார்க்கப்பட்ட கனிமொழி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த அளவுக்கு இந்த விவகாரத்தில், சி.ஏ.ஜி அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக மாறியது. சி.ஏ.ஜி அறிக்கைக்குப் பிறகுதான், 2ஜி இந்தியா முழுதும் பேச்சாக மாறியது. 21 டிசம்பர் 2009-ல் சி.பி.ஐ எப்.ஐ.ஆர் பதிவுசெய்தது. அதில், குற்றவாளிகள் என்று குறிப்பிட்டு யாரையும் சேர்க்கவில்லை; அடையாளம் தெரியாத தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் என்று மட்டுமே பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், 2010-ல் சி.ஏ.ஜி அறிக்கை வெளியான பிறகு காட்சிகள் மாறின; தி.மு.க-வுக்கு அடிவயிற்றில் தீப்பிடித்தது!  

ஆ.ராசா மற்றும் 9 பேர்! 

சி.பி.ஐ பதிவுசெய்த எப்.ஐ.ஆரில் ஆ.ராசா உள்பட 9 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்; அதோடு, 4 கம்பெனிகளையும் குற்றவாளிகளாகச் சேர்த்தது சி.பி.ஐ. இந்த விவகாரத்தில், வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்ற அடிப்படையில் அமலாக்கத்துறையும் ஒரு எப்.ஐ.ஆரை எழுதியது. அதில், ஆ.ராசா உள்பட 10 நபர்களையும், 9 கம்பெனிகளையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தது. அதன்பிறகு, 2ஜி சூறாவளி நாடாளுமன்ற அவைகளை துவம்சம் செய்தது. இந்திய அரசியல் 2ஜி-யைச் சுற்றியே அந்த நேரத்தில் சுழன்றது! மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தனக்கு நெருக்கமான கூட்டாளியான தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்தது. தி.மு.க-வைச் சேர்ந்த ஆ.ராசாவை அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி தி.மு.க தலைமைக்கு அழுத்தம் கொடுத்தது. முடிந்தவரை ராசாவின் ராஜினாமாவைத் தவிர்ப்பதற்கு தி.மு.க தவித்தது; ஆனால், முடியவில்லை! 
நவம்பர் 14, 2010-அன்று இரவு, ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிப்ரவரி 2, 2011-ல் ராசா கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 2ஜி விவகாரத்தில் லாபமடைந்த நிறுவனங்கள், ‘கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்யும் பாணியில் பணம் கொடுத்தன’ என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கனிமொழியும் கைதுசெய்யப்பட்டார். 2011 மே 20-ம் தேதி கைது செய்யப்பட்ட கனிமொழியும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, 2ஜி அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்களின் இயக்குநர்கள், நிர்வாகிகள், அலைக்கற்றை விவகாரத்தில் அமைச்சர் ராசாவுக்கு உதவிய தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் என ஒரு டஜன் பேர் கைதுசெய்யப்பட்டனர். 

உச்சநீதிமன்றத்தின் சாட்டையடிகள்!

2ஜி வழக்கு, டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்தது. ஆமை வேகத்தில் அந்த வழக்கு நகர்வதைப் பார்த்துக் கொதித்துப்போன, ‘டெலிகாம் வாட்ச் டாக்’ என்ற தன்னார்வ அமைப்பு, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுடைய மனுவின் சாரம், “2ஜி வழக்கு விசாரணையை வேகப்படுத்த உத்தரவிட வேண்டும்” என்பதே. அவர்களுடைய மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், “இவ்வளவு பெரிய குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவர் எப்படி இப்போதும் அமைச்சராக நீடிக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியது. அதன்பிறகுதான் ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லி அழுத்தம் அதிகரித்தது. அதுபோல, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், “இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த வழக்கை விசாரிப்பீர்கள்... உங்களுக்கு இன்னும் 20 வருடங்கள் தேவைப்படுமா” என்று  கேட்டு சாட்டையைச் சுழற்றியது. அதுபோல, இந்த வழக்கை விரைந்து முடிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அமைக்க 2010 டிசம்பர் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இதுபோன்ற வலி மிகுந்த சாட்டையடிகளால்தான் 2ஜி வழக்கு இன்று தீர்ப்புத் தேதியை எட்டியிருக்கிறது. இல்லையென்றால், இன்னும் ஒரு பல தசாப்தங்களுக்கு இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!  

தயாளு அம்மாளை விடுவிக்க முடியாது!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சி 200 கோடி ரூபாய் ஆதாயம் அடைந்தது. கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த அந்த 200 கோடி ரூபாய்  முறைகேடான பணப்பரிவர்த்தனை என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை ஒரு வழக்கை பிரத்யேகமாகப்  பதிவுசெய்தது. அதில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி சரத்குமார் ரெட்டி, கரீம் மொரானி, ஷாகித் பல்வா உள்ளிட்டோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், “தயாளு அம்மாளை அமலாக்கத்துறை பதிவுசெய்துள்ள வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்; தயாளு அம்மாள் ‘அல்சைமர்’ என்னும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்; மேலும் வயோதிகத்தின் காரணமாக அவரது உடல்நிலையில் பல பாதிப்புகள் இருக்கின்றன” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நிறுவனத்தின் 60 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் ஒருவரை, உடல்நிலையைக் காரணம் காட்டி வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது” எனக் குறிப்பிட்டு செல்வியின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, தயாளு அம்மாளும் அந்த வழக்கில் வலுவாகச் சிக்கிக்கொண்டார். 

ஆனந்த் குரோவர் கர்ஜனை!

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குத் தொடங்கியபோது, சி.பி.ஐ சார்பில் யு.யு.லலித் நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றதையடுத்து, 2ஜி வழக்கை சி.பி.ஐ சார்பில் நடத்த புதிய வழக்கறிஞர் தேர்வு நடைபெற்றது; மூன்று வழக்கறிஞர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கும்படி உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் கேட்டது. கே.கே.வேணுகோபால், “மூன்று வழக்கறிஞர்களின் பெயர்களைப் பரிந்துரைக்கவில்லை; மாறாக, ஆனந்த் குரோவர் என்ற ஒரே பெயரை மட்டும்தான் பரிந்துரைத்தார். உச்ச நீதிமன்றம் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு, 2ஜி வழக்கைத் தொடர்ந்து நடத்த ஆனந்த் குரோவரை சி.பி.ஐ.யின் வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டது. ஆனந்த் குரோவர் இடதுசாரி சிந்தனையாளர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக திறம்பட பல ஆண்டுகள் பணியாற்றி வருபவர். ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பல வழக்குகளை நடத்தி புகழ் பெற்றவர். அதுபோல, பொருளாதாரக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.  

கறார் நீதிபதி ஓ.பி.சைனி! 

டெல்லியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி.சைனி, கொஞ்சமும் ஈவு இரக்கம் காட்டாமல் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார். சி.பி.ஐ 80 ஆயிரம் பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையை 2011-ம் ஆண்டு தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை 2014-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2ஜி மெயின் வழக்கு, அதன் கிளை வழக்குகளான, கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி பணம் வந்த வழக்கு, ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு என அனைத்தையும் நீதிபதி ஓ.பி.சைனிதான் விசாரித்தார். ‘டே டூ டே’ விசாரணை என்ற அடிப்படையில், வாரத்தின் ஆறு நாள்கள் விசாரணை நடைபெற்றது.  குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஓரிரு முறை ஆஜராகாமல் டிமிக்கி கொடுக்க நினைத்தபோது, ‘ஜாமீனை ரத்து செய்துவிடுவேன்’ என்று சாட்டையடி கொடுத்தார். நீதிபதியின் இந்தக் கறார்... எந்த இடத்திலும் தளரவில்லை; அதனால், வழக்கு வேகமாக நடைபெற்றது. அனைத்துக் கட்டங்களையும் தாண்டி, 2015 ஏப்ரல் 15-ம் தேதி இறுதிவாதம் தொடங்கியது. அதே ஆண்டு, நவம்பர் மாதம் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிகாரி ஷாகித் உஸ்மான் பால்வா, கலைஞர் டி.வி. சரத் ரெட்டி, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் ஆஜராகி இருந்தனர். ‘உடல்நலம் சரியில்லை’ எனச் சொல்லி ஆ.ராசா அப்போது ஆஜராகவில்லை. அன்றைய தினம், நீதிபதி ஓ.பி.சைனி, ‘எப்போது உங்கள் இறுதிவாதத்தை முடிப்பீர்கள்?’ என்று சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவருக்குப் பொறிவைத்தார். நீதிபதி சைனியின் கேள்விக்குச் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்ன வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘இந்த மாத இறுதிக்குள் என்னுடைய வாதத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்’ என்றார். 

கனிமொழிக்குக் கருணை காட்டாத உச்ச நீதிமன்றம்!

2015-ம் ஆண்டு, கனிமொழி உச்ச நீதிமன்றத்தை அணுகி, ‘தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று கேட்டு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘2ஜி வழக்கில், என்னைச் சந்தேகத்தின் அடிப்படையில் சி.பி.ஐ சேர்த்துள்ளது; குற்றம்சாட்டப்பட்ட ஒருவர்மீது உறுதியான சந்தேகம் இருந்தால் மட்டுமே குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட வேண்டும்; நான் துளி அளவு தவறு செய்ததற்கான ஆதாரம்கூட இல்லை; எனவே, என்மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டை ரத்துசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதேபோன்ற மனுவை ஷாகித் உஸ்மான் பால்வாவும் தாக்கல் செய்தார். ‘ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் கனிமொழி இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருதரப்பு சாட்சி விசாரணை முடிந்துவிட்டது. இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் அதை முடிக்க சி.பி.ஐ சார்பில் திட்டமிட்டுள்ளேன். இந்த நிலையில், இவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது’ என்று வாதிட்டு வெற்றிபெற்றார். அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட, ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி, ரோஹிண்டர் நார்மன் ஆகியோர், ‘வழக்கில் தீர்ப்பு வரும்காலம் நெருங்கிவிட்டது; இந்த நிலையில், இதில் எந்தவிதமான இடைக்கால உத்தரவோ, விடுதலையோ அளிக்க முடியாது. கனிமொழி, ஷாகித் உஸ்மான் பால்வா ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிக்கும் மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகு, இதில் தொடர்புடையவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உத்தரவு பிறப்பித்தனர். 

தொடரும்...