Published:Updated:

“ஊருக்கெல்லாம் செருப்புத் தச்சுக் கொடுக்கிற என்னால செருப்புப் போட முடியாது!” - கலங்கடிக்கும் சாந்தி பாட்டியின் கதை

“ஊருக்கெல்லாம் செருப்புத் தச்சுக் கொடுக்கிற என்னால செருப்புப் போட முடியாது!” - கலங்கடிக்கும் சாந்தி பாட்டியின் கதை
“ஊருக்கெல்லாம் செருப்புத் தச்சுக் கொடுக்கிற என்னால செருப்புப் போட முடியாது!” - கலங்கடிக்கும் சாந்தி பாட்டியின் கதை

“புருஷன்தான் வேலைக்குப் போறாரே. நாம வீட்ல நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சிருந்தா, இந்நேரம் இதே ரோட்டுல பிச்சை எடுத்துகிட்டு இருந்திருப்பேன். புருஷன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்க நினைச்சேன். அவரோடு போய் செருப்புத் தைக்கக் கத்துகிட்டேன். வேலை செஞ்சு கெளரவமா வாழறேன். என்னடா செருப்புத் தைக்கிறதை கெளரவம்னு சொல்லுதே கிழவினு நினைக்காதீங்க. இதுல என்ன கேவலம் இருக்கு? நான் யாரையும் ஏமாத்தலை, யார்கிட்டையும் கையேந்தலை, இந்த வயசுலேயும் உழைச்சுச் சாப்பிடுறேன். இதுதானே கெளரவம்'' என வார்த்தைகளால் நெஞ்சைத் தைக்கிறார் 60 வயது சாந்தி பாட்டி. 

கோயம்புத்தூர், சாய்பாபா காலனி சாலையில் உள்ள அந்தப் புளியமரத்தை கடக்கும்போதெல்லாம், மரத்தடியில் செருப்புத் தைத்துக்கொண்டிருக்கும் சாந்தி பாட்டியைப் பார்க்கலாம். ஆண்களை மட்டுமே செருப்புத் தைப்பவர்களாகப் பார்த்துப் பழகிய நமக்கு, வயதான ஒரு பெண்ணைப் பார்க்கும்போது மனம் கனக்கும். ஆனால், பாட்டியிடம் எந்தக் கலக்கமும் இல்லை. “ஏ... சாமி செய்யற வேலையில ஆம்பளை, பொம்பளை என்ன இருக்கு. எனக்கு கோயம்புத்தூர்தான் சொந்த ஊரு. அப்பாவுக்குக் கூலி வேலை. நான் பொறக்கும்போதே ஒரு கால் ஊனம். அதனால், எனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்தாங்க. என் மண்டைக்குப் படிப்பு ஏறலை. மூணாவதோடு பள்ளிக்கூடத்துக்கு முழுக்குப் போட்டுட்டேன்.

‘ஊனமான புள்ளைக்கு யாரு வாழ்க்கை கொடுப்பாங்க’னு என் அம்மா தெனமும் புலம்பிட்டே கெடக்கும். அதனால், பதினைஞ்சு வயசுலேயே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நிறைய பேர் என்னைப் பார்த்துட்டு வேணாம்னு சொல்லிட்டாங்க. தினம் மனசுக்குள்ளே அழுவேன். அப்போதான், ‘ஊனமெல்லாம் பெருசு கெடையாது. நல்ல மனசு இருந்தா போதும். நான் கட்டிக்கிறேன்னு ஒரு பய சொல்றான். உனக்குச் சம்மதமா?’னு அப்பா கேட்டார். எனக்கு அவரை புடிச்சுப் போச்சு. அவர் பேரு கருப்பசாமி. அவர்தான் எனக்கு சாமினு முடிவு பண்ணிட்டேன்'' என்றபடி தன் கையில் பச்சை குத்தியிருக்கும் பெயரைக் காட்டுகிறார் சாந்தி பாட்டி. 

கணவரின் நினைவுகளில் கண்கள் கலங்க தொடர்கிறார், ''அவர் வண்டி இழுக்கும் கூலி வேலைதான் பாத்துட்டிருந்தார். அம்பது, நூறுனு கிடைக்கிற காசுல சந்தோஷமா குடும்பத்தை நடத்தினோம். ரெண்டு பொம்பள புள்ளைங்க பொறந்தாங்க. எங்களை மாதிரி அதுங்களுக்கும் படிப்பு ஏறலை. கஷ்டப்பட்டு வளர்த்து, நல்லபடியா கட்டிக் கொடுத்துட்டோம். ஒரு கட்டத்தில் வீட்டுக்காரருக்கு உடம்புக்கு முடியாமல் போயிடுச்சு. வண்டி இழுக்க முடியலை. ரெண்டு பேரும் கஞ்சி குடிக்கணும். மிச்ச காலத்தை ஓட்டணும். 'இனிமேல் என்னால் ஓடியாடி வேலை பார்க்க முடியாது. உட்கார்ந்த இடத்துலயே செருப்புத் தைக்கப்போறேன்’னு சொன்னார். 'நீங்க ஒண்டியா கஷ்டப்பட வேணாம். நானும் உங்களோடு வர்றேன்’னு சொன்னேன். தனக்கு உடம்புக்கு முடியாதபோதும் பொண்டாட்டியைக் கண்கலங்காம பார்த்துக்க நினைச்ச அந்த மனுஷனின் மனசு யாருக்கு வரும் சொல்லுங்க? இப்படியே ஓடிட்டிருந்தப்போ, திடீர்னு ஒருநாள் செத்துப்போயிட்டார். எனக்கு ஒலகமே இருண்ட மாதிரி ஆகிருச்சு. இடிஞ்சுப்போய் உட்கார்ந்துட்டேன். மருமகன் வீட்ல உட்கார்ந்து சாப்பிட்டால் மருவாதையா இருக்காதில்லியா? அதான் புருஷன்கிட்ட கத்துக்கிட்ட தொழிலையே செய்யலாம்னு இறங்கிட்டேன். இதோ என் புருஷன் போய் 14 வருஷம் ஆயிடுச்சு. இத்தனை வருஷமும் செருப்பு தைச்சுதான் வாழ்க்கை ஓட்டுறேன். என்னை அரவணைச்சுகிட்டது இந்த மரத்தடிதான். ஒரு வேடிக்கை என்ன தெரியுமா ராசா? ஊருக்கெல்லாம் செருப்புத் தச்சுக் கொடுக்கிற என்னால் செருப்புப் போட முடியாது'' என்றபடி, போலியோவால் பாதிக்கப்பட்ட தன் காலை காண்பிக்கிறார் சாந்தி பாட்டி. நம்மை அறியாமல் வழிகிறது கண்ணீர்

உடல் ஊனமுற்றோருக்கான சான்றிதழ்கள் இருந்தபோதும், கணவர் இருந்த வரை அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவே இல்லையாம். காரணம், ‘உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது எதுக்கு உதவித்தொகை?' என்று மறுத்துவிட்டாராம் சாந்தியின் கணவர் கருப்பசாமி. அவர் இறந்த பிறகு, மூன்று முறை முதியோர் உதவித்தொகை கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்துள்ளார் சாந்தி. 

“ஆனால், இதுவரைக்கும் ஒண்ணும் நடக்கலை. பார்ப்போம்... உடம்புல தெம்பு இருக்கும் வரைக்கும் வேலை செய்வோம்” என்று வேதனையை மறைத்துப் புன்னகைக்கிறார் சாந்தி பாட்டி. 

முதிர்ந்த வயதில் சாந்தி பாட்டிக்கு உதவித்தொகை தேவைப்படுகிறது. கோவை மாவட்ட கலெக்டர் மனசு வைப்பாரா?