Published:Updated:

பாரம்பர்யத்தை நோக்கிய பயணம்... ‘காஞ்சி மரபு நடை’ 2 நாள் சுற்றுலா தந்தது என்ன?

பாரம்பர்யத்தை நோக்கிய பயணம்... ‘காஞ்சி மரபு நடை’ 2 நாள் சுற்றுலா தந்தது என்ன?
பாரம்பர்யத்தை நோக்கிய பயணம்... ‘காஞ்சி மரபு நடை’ 2 நாள் சுற்றுலா தந்தது என்ன?

யற்கை தன்னைத்தானே மீட்டெடுக்கும் மாபெரும் வல்லமை படைத்தது. அது தன்னைப் புதுப்பித்துக்கொள்வதோடல்லாமல் தன்னுடைய இயல்பை பூமியில் எப்போதும் இருத்திக்கொள்ளும். படிப்படியாக மேலைநாட்டு மோகத்துக்கு அடிமையாகிவிட்ட நாம், நமது பண்பாடு, பாரம்பர்யம், மருத்துவம், உணவு என ஒவ்வொன்றாகத் தொலைத்துவிட்டு அதன் விளிம்பில் நிற்கிறோம். நாம் தொலைத்தவற்றை அதன் வரலாற்று எச்சங்களின் வழியாக தேடிக்கொண்டிருக்கிறோம். அதை இப்போது மீட்காவிட்டால், எப்போது மீட்பது? ஒவ்வொரு துறையும் மீண்டும் நமது பாரம்பர்யத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அந்த வகையில் காஞ்சிபுரம் பகுதியில், முன்னோர்களின் வாழ்வியல் வரலாற்றை நோக்கிய ஒரு பயணம் நடைபெற்றிருக்கிறது. ‘காஞ்சி மரபு நடை’ என்ற அந்த நிகழ்வு, பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இளைஞர்களைப் பயணம் செய்யவைத்து மகிழ்வித்திருக்கிறது.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ‘சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்’ மற்றும் ‘செலிபரேட் காஞ்சி’ ஆகிய இரு அமைப்புகளும் சேர்ந்து 'காஞ்சி மரபு நடை' என்னும் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றன. இதன் மூலம் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தொன்மையான கோயில்களுக்கு இரண்டு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பாரம்பர்யக் கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் நமது வரலாற்றை இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். அதற்கு ‘காஞ்சி மரபு நடை’ என்று பெயர் சூட்டி தனது முதல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 140 பேர் காஞ்சிபுரம் வந்திருந்தார்கள்.

இந்த நிகழ்வின் முதல் நாளான சனிக்கிழமையன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் அருகில் உள்ள திருமுக்கூடல் பகுதியில் அமைந்திருக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிலிருந்து பயணத்தைத் தொடங்கினார்கள். அந்தக் கோயிலின் வரலாற்றை தெரிந்துகொண்டவர்கள் அடுத்ததாக உத்திரமேரூர் நோக்கி பயணிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு கோயிலின் உள்ளே நுழையும்போதும் அதன் வரலாற்றை ஓய்வுபெற்ற கல்வெட்டு ஆய்வாளர் மார்க்ஸிய காந்தி விளக்கிக் கூறினார். பின்னர் அங்குள்ள கல்வெட்டுகளில் உள்ளவற்றைப் படித்து விளக்கமளிக்கிறார். அதன் பிறகு ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிப்பார்க்கிறார்கள். உத்திரமேரூர் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், குடவோலை கல்வெட்டு மண்டபம், கைலாசநாதர் கோயில் ஆகியவற்றைச்  சுற்றிப்பார்த்தனர்.

உத்திரமேரூர் பற்றி விளக்கமளித்த மார்க்ஸிய காந்தி, “இங்குள்ள கோயில்கள் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டவை. பல்லவ சாம்ராஜ்யம் முடிவுற்ற பிறகு, நீண்டகாலம் கழித்து அதன் கிளைக் குடும்பத்திலிருந்து புதிய பல்லவனாக வந்த முதல் அரசன் நந்திவர்மன். அவனை அரசாளவிடாமல், இங்கிருப்பவர்கள் தொடந்து போர் தொடுத்துக்கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்தைந்து வருடங்களாக போர்புரிந்துகொண்டே இருந்தான் நந்திவர்மன். எதிரிகளையெல்லாம் வீழ்த்திய அவன், அதன் பின்னரும் முப்பத்தைந்து ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்திருக்கிறான். தமிழக வரலாற்றிலேயே அதிக அளவு ஆட்சிசெய்த மன்னன் நந்திவர்மன்தான். உத்திரமேரூர் என்ற பெயரிலேயே ஒரு சதுர்வேதி மங்கலத்தை இங்கு உண்டாக்கினான். சதுர்வேதிமங்கலம் என்பது நான்கு மறைகளில் வல்ல அந்தணர்களுக்குக் கொடுக்கப்படும் ஊர். 1,200 அந்தணர்களுக்குக் கொடையாக இந்த ஊரை வழங்கினான் நந்திவர்மன். வாஸ்து நூல்களில் உள்ளதைப் போன்ற ஒரு கிராம அமைப்பாக இந்த ஊரை உருவாக்கினான். ஊருக்கு நடுவில் திருமாலின் கோயில் மண்டபம் இருக்கும். இதற்கு ‘சபா மண்டபம்’ என்று பெயர். வடகிழக்கில் சிவன் கோயில், மேற்கில் திருமால் கோயில், தென் மேற்கில் அம்மன் கோயில் (பிடாரி), வடக்கில் வடவாழி செல்வி என்று சொல்லக்கூடிய துர்கை கோயில், தென்மேற்குப் பகுதியில் சப்தகன்னி கோயில் என கோயில்கள் இருக்கின்றன. எந்தெந்த திசையில் என்னென்ன கோயில்கள் இருக்க வேண்டுமோ, அத்தனை கோயில்களும் ஒரே காலத்தில், ஒரே அரசனால் கட்டப்பட்டவை என்பது சிறப்பு” என உத்திரமேரூர் கோயில்களின் வரலாற்றை விளக்கினார்.

அதைத் தொடர்ந்து மாலையில் மாமண்டூர் பகுதியில் உள்ள குடைவரைக் கோயிலுக்குச் சென்றனர். அந்தக் குடைவரைக் கோயில்கள் பற்றி விளக்கிய மார்க்ஸிய காந்தி, “சங்க இலக்கியத்தில் செங்கல்லாலும் மரத்தாலும் கோயில்கள் கட்டப்பட்டிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. மகேந்திரவர்மனின் கல்வெட்டில், ‘மரம், சுதை, உலோகம், செங்கல் ஆகிய நான்கும் இல்லாமல் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்கு விசித்திரசித்ரனாகிய நான் கோயில் செய்கிறேன்’ எனக் கல்வெட்டுகளில் பதிந்திருக்கிறான். தமிழகத்தில் முதன்முதலில் மகேந்திர பல்லவன்தான் குடைவரைக் கோயில்களைக் கட்டினான். மாமண்டூர் பகுதியில் உள்ள குடைவரையில் ஆரம்பத்தில் ஒன்பது கருவறைகளுடன் செதுக்க ஆரம்பித்தான். பாறையில் உள்ள குறைகளால் அவற்றை முழுமையாகச் செய்ய முடியவில்லை. ஆனாலும், கோயில்களில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், மகா மண்டபம் ஆகியவை இருக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதை இந்தக் குடைவரையிலேயே கொண்டுவர முயற்சி செய்தார்கள். மாமண்டூர் குன்றில் நான்கு குடைவரைகள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் இரண்டு குடைவரைகள் முழுமை பெறவில்லை. அடுத்துள்ள இரண்டு குடைவரைகள் முழுமையடைந்திருக்கிறன. இந்தக் கோயில்கள் பல்லவர்கள் காலத்தில் வழிபாட்டில் இருந்ததற்கான அடையாளமாகக் கல்வெட்டுகள் இருக்கின்றன” என்று குடைவரைக் கோயில்கள் பற்றிய வரலாற்றை விளக்கினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று காஞ்சிபுரம் நகரில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயில், மதங்கீஸ்வரர் கோயில் உட்பட பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது வரலாற்று ஆய்வாளர் சசிதரன், கோயில்களைப் பாதுகாக்கவேண்டிய அவசியம் குறித்தும், கோயில்களின் வரலாறு குறித்தும் வந்திருந்தவர்களுக்கு விளக்கினார்.

கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மட்டுமல்லாமல், அந்தக் கோயிலின் வரலாறு, தொன்மைச் சிறப்பு, கல்வெட்டுகள் சொல்லும் சேதி எனப் பல தகவல்களை இளைய தலைமுறையினர் ஆர்வமாகத் தெரிந்துகொண்டு மகிழ்வான நினைவுகளோடு வந்திருந்தவர்கள் புறப்பட்டனர்.

நம்முடைய கோயில்களின் தொன்மை, வரலாற்றுச் சிறப்புகள், கலாசாரம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் ஆவலுடன் மரபை நோக்கிப் பயணிக்கிறது, ‘காஞ்சி மரபு நடை’யெனும் இளம்படை!