Published:Updated:

‘ஜெ.’ கேம் பிளான்!

அ.தி.மு.க ‘2016’ அட்டாக்ப.திருமாவேலன், படங்கள்: சு.குமரேசன், ரா.ராம்குமார், ஆர்.எம்.முத்துராஜ்

'ஜெயலலிதா ஓய்வெடுக்கப் போய்விட்டார்’ என எழுதினால், அந்த ஒரு வார்த்தைக்காகவே வழக்குகள் பாயலாம். எனவே, 'முதலமைச்சர் ஜெயலலிதா, சிறுதாவூரில் தங்கி பணிகளைக் கவனித்துவருகிறார்’ என்றே எழுதுவோம். இன்னும் சில நாட்களில் கொடநாடுக்கு அவர் முகாம் மாறக்கூடும். போயஸ், சிறுதாவூர், கொடநாடு என எங்கே இருந்தாலும் அவரது இப்போதைய ஒரே சிந்தனை... தேர்தல், தேர்தல், தேர்தல்! 

வெற்றிக்கு ஜெயலலிதா வைத்திருக்கும் வியூகங்கள் என்னென்ன?

1. எண்ணிக்கை பலம்!

அ.தி.மு.க-வின் உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்கள், ஒரு கோடிப் பேர் என்பது தலைமைக் கழகம் சொல்லும் கணக்கு. அவர்கள் கணக்கை நாம் ஒப்புக்கொண்டால், ஒரு கோடி ஓட்டுகள் தயார். உறுப்பினர் எண்ணிக்கையை மேலும் ஒரு கோடி அதிகரிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளார் ஜெயலலிதா. உறுப்பினர் சேர்ப்புப் படலம் தொடர்ந்து நடக்கிறது. போலி உறுப்பினர்கள் இதில் நிறையவே இருப்பார்கள். இருந்தாலும் 'இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்த்துவைத்துக்கொள்வது என்பது கூடுதல் பலத்தைக் கொடுக்கும்’ என ஜெயலலிதா நம்புகிறார்.

2. நிர்வாகிகள் உற்சாகம்!

கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை புதிய நிர்வாகிகள் தினமும் நியமிக்கப்படு கிறார்கள். புதிய நிர்வாகிகளை நியமிப்பதன் மூலமாக கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சப்படுவதாக ஜெயலலிதா நினைக்கிறார். இத்தகைய நிர்வாகிகளே பல லட்சம் பேர் இருக்கிறார்கள். பிரச்னைக்குரிய, பல்வேறு புகார்களில் சிக்கியவர்களை நீக்கியும் ஒதுக்கியும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, புதிதாக பலரும் பதவியை அடைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் இந்தத் தேர்தலில் உற்சாகத்துடன் வேலைபார்ப்பார்கள் என ஜெயலலிதா நினைக்கிறார்!

 ‘ஜெ.’ கேம் பிளான்!

3. உதவிபெற்றவர்களின் உற்சாகம்!

கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், கறவை மாடுகள் போன்ற விலையில்லாப் பொருட்களைப் பெற்றவர்கள், இதுபோன்ற இதர நலத்திட்ட உதவிகளை இந்த அரசாங்கத்தின் மூலமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்றவர்கள் என 50 லட்சம் பேருக்கு மேல் இருப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, பள்ளி மாணவர்களுக்குச் சீருடை, புத்தகப் பைகள் என வழங்கப்பட்டுள்ளன. இந்தக் குடும்பங்களையும் கணக்கு எடுத்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் முழுமையாக அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்கவைக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் இலக்கு.

4. சாதனைகள் பேசும்!

காவிரி ஆணையத்தின் தீர்ப்பு அரசு இதழில் வெளியானது, முல்லைப் பெரியாறு அணைக்காக கேரளாவை எதிர்த்து வழக்கு, மூன்று தமிழர்களின் தூக்குக்கு எதிர்ப்பு, ஈழத் தமிழருக்கு ஆதரவான சட்டமன்றத் தீர்மானங்கள், புதிய தொழில்கொள்கை, புதிய முதலீடுகள், அம்மா உணவகங்கள், அம்மா உப்பு, அம்மா சிமென்ட், அம்மா இலக்கிய விருது (அம்மம்மா  திட்டங்கள்), மெட்ரோ ரயில் போன்ற பல்வேறு சாதனைகளை மக்களிடம் சொல்ல  வேண்டும் என ஜெயலலிதா நினைக்கிறார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் சிறுசிறு ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டுவருகின்றன. இவை எல்.இ.டி ஸ்கிரீன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. பொதுமக்கள் கூடும் இடங்களில் இனி அம்மா படம் ஓடும். சில துறைகள், இந்தப் படங்களைத் தயாரித்துவிட்டன; மக்களிடம் ஓட்டிக்கொண்டும் இருக்கின்றன.

5. அறிவிப்போ அறிவிப்பு!

கடந்த ஒரு மாத காலமாக நாளிதழ்களைப் புரட்டினால், அந்த அறிவிப்பு, இந்த அறிவிப்பு என முழுப் பக்கங்களை ஆக்கிரமிக்கிறார் ஜெயலலிதா. இவை மொத்தத்தையும் செயல்படுத்த ஒரு லட்சம் கோடி வரை வேண்டும். அமல்படுத்த பணமும் இல்லை; கால அவகாசமும் கிடையாது. இருந்தாலும் ஏன் தூள்கிளப்புகிறார் என்றால், அரசாங்கம் மலை அளவு சாதனைகளைச் செய்துவருகிறது என மக்களிடம் ஒரு பிரமையை ஏற்படுத்தியாக வேண்டும். '24 மணி நேரமும் துடிப்போடு அரசாங்கம் செயல்பட்டுவருகிறது’ என்ற பிரசாரம் வலுப்பெறும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.

 ‘ஜெ.’ கேம் பிளான்!

6. கரன்சியே கடவுள்!

இன்றைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ பதவியைக் குறிவைத்துச் செயல்படும் பிரமுகர்கள் என யாரும் ஏழைகள் அல்ல; பணக்காரர்கள் என்பதும் மிகச் சாதாரண வார்த்தை; 'எதையும்’ விலைகொடுத்து

வாங்கக்கூடிய சக்தி படைத்தவர்கள். இவர்களை வேட்பாளர்கள் ஆக்கினால் அல்லது தேர்தலில் கட்சியை வெற்றி பெறவைக்கும் பொறுப்பைக் கொடுத்தால், அவர்கள் தங்கள் கஜானாவைக் கரைத்தே வெற்றியை 'விலைக்கேனும்’ வாங்கி வந்துவிடுவார்கள் என்றும் மேலிடம்

நினைக்கிறது. அ.தி.மு.க ஆட்சியால் பலன்பெற்று கோடீஸ்வரர்கள் ஆன பலரும் தொகுதிகளைக் கைப்பற்ற இப்போதே ஆள்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் துணிந்து எவ்வளவு வேண்டுமானாலும் செலவுசெய்வார்கள். எனவே பணத்தால், பணக்காரர்களால் வெல்லலாம் என்றும் நினைக்கிறார்கள்.

7. ஒற்றுமை இல்லாத எதிர்க்கட்சிகள்!

வெற்றியைத் தீர்மானிப்பது ஒருவரின் பலம் மட்டும் அல்ல... எதிரியின் பலவீனமும்தான். எதிர்க்கட்சிகள் நாலாபுறமும் பிரிந்துகிடப்பது ஜெயலலிதாவுக்கு உற்சாகம்கொடுத்துள்ளது. தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகியவற்றைச் சேர்த்து மெகா கூட்டணி அமைக்க தி.மு.க திட்டமிட்டது. அது காரிய சித்தியாகவில்லை. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து 'மக்கள்நலக் கூட்டு இயக்கம்’ தொடங்கி, இதையே தேர்தல் கூட்டணியாக அறிவித்துவிட்டன. பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டும் தே.மு.தி.க., இன்னமும் தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் ஆகவில்லை.

 ‘ஜெ.’ கேம் பிளான்!

'தேர்தல் நேரத்திலாவது சேருவார்’ என எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் ராமதாஸ், தி.மு.க-வைத்தான் கடுமையாக எதிர்க்கிறார். இன்றையச் சூழலில் தி.மு.க-வுடன் காங்கிரஸ் ஒருவேளை சேரலாம். அவர்களும் ஆட்சியில் பங்கு எனப் பயமுறுத்துகிறார்கள். இப்படி தி.மு.க யாரையும் சேர்க்க இயலாத, யாரும் சேர முன்வராத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இப்படி தனக்கு எதிரானவர்கள் வாக்குகள் நான்காகச் சிதறும்போது தனது வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என்பது அவருடைய எளிமையான கணக்கு!

8. சிங்கிள் சிங்கம்!

ஜெயலலிதா நினைத்தால் பா.ஜ.க உள்பட பல்வேறு கட்சிகளை, தனது கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள முடியும். எப்போது அவரிடம் இருந்து அழைப்பு வரும் எனப் பலரும் காத்திருக்கிறார்கள். ஆனால், 'சிங்கிள் சிங்கமாக’ இருப்பதே தனக்கு கம்பீரம் என நினைக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 39-க்கு 37 தொகுதிகளைப் பிடித்ததுபோலவே, இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து நின்று ஜெயித்தோம் என நிரூபிக்க நினைக்கிறார். 'யார் தயவும் தேவை இல்லை’ எனப் போட்டியிடுவதிலேயே பாதி வெற்றி அடங்கியிருக்கிறது என நினைக்கிறார். இன்றைய சூழ்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன் போன்ற ஒருசிலரை மட்டுமே சேர்த்துக்கொள்வது அவரது திட்டம்.

பா.ஜ.க சார்பாக மோடியில் இருந்து தொடங்கி  பலரும் அ.தி.மு.க கூட்டணிக்காக முயற்சி எடுத்துவிட்டார்கள். ஜெயலலிதா அதை ஏற்கவில்லை. பா.ஜ.க-வைச் சேர்ப்பதன் மூலமாக சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க வேண்டிவரும், அது மொத்தமாக தி.மு.க-வுக்குப் போய்விட வழிவகுத்ததாக ஆகிவிடும் என ஜெயலலிதா நினைக்கிறார். மேலும், பா.ஜ.க தனியாக இருந்தால்தான் அவர்கள்  விஜயகாந்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தனிக் கூட்டணி வைப்பார்கள். பா.ஜ.க இல்லாவிட்டால் விஜயகாந்த் பார்வை, தி.மு.க பக்கம் போய்விடக் கூடும் என்றும் ஜெயலலிதா நினைக்கலாம்!

9. ஆனால்..?

இவ்வளவு சாதகமான சூழ்நிலைகளைக் கணித்துவைத்திருக்கும் ஜெயலலிதா, சில விஷயங்களைக் கவனிக்கத் தவறிவருகிறார் என்பதுதான் உண்மை. அமைச்சர்கள்,எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், மேயர்கள், கவுன்சிலர்கள்... போன்றோர் தங்களால் முடிந்த அளவுக்கு கட்சிக்குக் கெட்ட பெயர் சம்பாதித்துகொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். இன்றைய ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 150 பேரில் அதிகபட்சம் 25 பேர் மீதுதான் தொகுதியில் விமர்சனமோ, கெட்ட பெயரோ இல்லை. மற்றபடி 'அனைவரும் தொகுதிக்கே போகாமல், நல்லது கெட்டதுகளில் பங்கேற்காமல், சொந்தக் கட்சிக்காரர்களை மதிக்காமல், அவர்களுக்கு அடிப்படை சேவைகளைக்கூட காசு இல்லாமல் செய்துதராமல், ஒரு குரூப்புக்கு மட்டும் வேண்டியவர்களாக வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்’ என்ற கோபம் பொதுமக்கள் மத்தியில் ஏராளமாக இருக்கிறது. அது தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்புகள் அநேகம்!

 ‘ஜெ.’ கேம் பிளான்!

அ.தி.மு.க-வின் ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா வுக்கு முதல் இரண்டு ஆண்டு காலம் பெங்களூரு வழக்கு விவகாரத்தில் போனது; அடுத்த ஓர் ஆண்டு, பதவி இல்லாமல் கழிந்தது; இப்போது உடல்நலக் குறைவு, செயல்பாட்டைக் கட்டுப்படுத்திவிட்டது. மொத்தத்தில் அரசாங்கம் செயல்படுகிறதா... இல்லையா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் பலமாக வேரூன்றி இருக்கிறது. அதுவும் நகர்ப்புற, படித்த, நடுத்தரவர்க்க வாக்காளர்கள் மத்தியில் இந்த அதிருப்தி அதிகம். புதிய வாக்காளர்கள், இளைஞர்களை ஈர்க்கும் காரியங்கள் இந்த ஆட்சியில் இல்லை. பணம் இருந்தால்தான் எந்தக் காரியமும் நடக்கும் என்ற சூழ்நிலையை அதிகாரிகள், பதவியில் இருப்பவர்கள் உருவாக்கிவிட்டதை நித்தமும் மக்கள் உணர்கிறார்கள். அரசு உத்தரவுகளுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதும், அரசுத் துறைகள் பதில் மனுக்கள் தாக்கல் செய்வதும், ஆட்சி செயல்பாடுகளை நீதிபதிகள் கண்டித்து, கொட்டுவதும் தொடர்கின்றன. அரசின் செயல்பாட்டில் உள்ள மெத்தனமே இதற்கு எல்லாம் காரணம்!

அனைத்துக்கும் மேலாக, முன்பைப்போல ஜெயலலிதா ஊர்ஊராகச் சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முடியுமா என்பதும் விவாதப்பொருளாக இருக்கிறது. ஒருவேளை, அவரால் சூறாவளி பிரசாரப் பயணம் மேற்கொள்ள முடியாவிட்டால், அது கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக இருக்கும். அதை எப்படிச் சரிக்கட்டப்போகிறார்?

மற்ற விஷயங்களைவிட இறுதியில் சொன்னதுதான் அ.தி.மு.க-வின் வெற்றியை மிகப் பெரிதும் பாதிக்கக்கூடியது... மிக முக்கியமாகத் தீர்மானிக்கப்போவது!