Published:Updated:

அடமானத்தில் பிறந்த ஆளுநர் மாளிகை - சென்னை பிறந்த கதை! - பகுதி -4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அடமானத்தில் பிறந்த ஆளுநர் மாளிகை - சென்னை பிறந்த கதை! - பகுதி -4
அடமானத்தில் பிறந்த ஆளுநர் மாளிகை - சென்னை பிறந்த கதை! - பகுதி -4

அடமானத்தில் பிறந்த ஆளுநர் மாளிகை - சென்னை பிறந்த கதை! - பகுதி -4

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே விஸ்தாரமான தோட்ட வீட்டில் தங்கிக் கொண்டிருந்த மெட்ராஸ் ஆளுநர், பிரெஞ்சுப் படைகளின் முற்றுகை காரணமாக கோட்டைக்கே திரும்பினார். பின்னர் பிரெஞ்சுப் படைகளிடம் போராடி இழந்ததை மீட்டது கிழக்கிந்திய கம்பெனி. ஆனால், அந்த ஆனந்தம் நிறைந்த தோட்ட வீட்டை அவர்களால் மீட்டெடுக்க முடியவில்லை. இதனால் அடுத்து வந்த ஆளுநர் சாண்டர்ஸ் மீண்டும் பழைய கோட்டை அலுவலக வீட்டிலேயே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முன்னாள் ஆளுநர்கள் எல்லாம் ரம்மியமான சூழலில் வசித்துவிட்டுப் போயிருக்கையில், தான் மட்டும் இப்படி மீண்டும் ஓங்கி உயர்ந்த கோட்டைச் சுவர்களுக்குள் அடைப்பட்டதில் அதிருப்தி அடைந்தார் ஆளுநர் சாண்டர்ஸ். எனவே, ஆளுநருக்காக வாடகை வீடு தேடும் படலம் தொடங்கியது. 

அடமானத்தில் பிறந்த ஆளுநர் மாளிகை - சென்னை பிறந்த கதை! - பகுதி -4

அப்போதுதான் இன்று அண்ணாசாலையில் அரசு பல்நோக்கு மருத்துவமனை இருக்கும் அரசினர் தோட்டத்தில் இருந்த ஒரு வீடு கண்ணில்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்கே நிதியுதவி அளிக்கும் அளவுக்கு பணவசதி படைத்த அண்டோனியோ தி மதீராஸ் என்ற செல்வச் சீமாட்டிதான் அந்த வீட்டின் உரிமையாளர். அவரிடம் இருந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள் கிழக்கிந்திய கம்பெனியினர். பின்னர் ஒரே ஆண்டில் அதாவது 1753-ல் அந்த வீட்டை ரூ. 12,250 கொடுத்து விலைக்கு வாங்கினர். அன்றைய சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு வாங்கியதால் இது ஒரு நல்ல டீல் என்றே கம்பெனி நிர்வாகமும் கருதியது. சில ஆண்டுகள் கழித்து அருகில் இருந்த நிலங்களையும் விலைக்கு வாங்கி ஆளுநர் இல்லத்தை விஸ்தரித்தனர்.

இப்படி எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது, கேப்டன் லாலி தலைமையில் மீண்டும் படையெடுத்து வந்தார்கள் பிரெஞ்சுப் பங்காளிகள். 1758-ல் மெட்ராஸைக் கைப்பற்ற முயன்ற பிரெஞ்சுப் படைகள், முதலில் ஆளுநரின் தோட்ட வீட்டை முற்றுகையிட்டார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்ததால், ஆத்திரத்தில் ஆளுநர் வீட்டை முடிந்தவரை சேதப்படுத்தி விட்டார்கள். ஆத்திரத்தில் இருந்த ஆங்கிலேயப் படைகள் இரண்டு ஆண்டுகள் கழித்து பிரெஞ்சுப் படைகளைப் பந்தாடி பாண்டிச்சேரியை கைப்பற்றியது. கேப்டன் லாலி கைது செய்யப்பட்டு மெட்ராஸ் கொண்டு வரப்பட்டார். அவரை இங்கிலாந்து அனுப்புவதற்கான கப்பல் வரும்வரை, அவர் சேதப்படுத்திய தோட்ட வீட்டிலேயே ஒரு பாழடைந்த அறையில் சிறைவைக்கப்பட்டார். முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்தது லாலிக்கு. 

1798-ல் சரித்திரப் புகழ்பெற்ற ராபர்ட் கிளைவின் மகனான இளைய க்ளைவ் பிரபு, மெட்ராஸ் ஆளுநராகப் பதவியேற்றார். அவர்தான் ஆளுநர் இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுத்தவர். 1801-ல் சுமார் 3 லட்சம் ரூபாய்  செலவில் தோட்ட வீட்டை புதுப்பித்து அரசு இல்லமாக மாற்றினார். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து மேலும் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து, அரசு இல்லம் அமைந்த வளாகத்தில் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சிக் கூடத்தை கட்டினார். மைசூர் போரில் திப்பு சுல்தானின் தோல்வியை இந்த கூடத்தில்தான் பார்ட்டி வைத்து கொண்டாடினார் கிளைவ் பிரபு. இவர்தான் ஆளுநர்கள் தங்குவதற்கென நகருக்கு வெளியே இரண்டாவது அரசு இல்லம் தேவை என முடிவெடுத்தவர். அப்படி பிறந்ததுதான் இன்றைய ஆளுநர் இல்லமாகத் திகழும் ராஜ்பவன். ஆனால், கிளைவுக்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த இடத்தைப் கண்டுபிடித்து பயன்படுத்தியவர் கவர்னர் வில்லியம் லாங்ஹார்ன்தான். 

இன்றைய ராஜ்பவன் 1670-களில் கிண்டி லாட்ஜ் என்று அழைக்கப்பட்டது. புனித தோமையார் மலைக்கு இந்த வழியாகச் சென்ற கவர்னர் வில்லியம் லாங்ஹார்ன் கிண்டி காட்டுப் பகுதியின் அழகில் மனதைப் பறிகொடுத்ததால் இங்கு ஒரு வீடு கட்டி, அதனைச் சுற்றித் தோட்டம் அமைத்தார். வார இறுதி நாள்களில் இங்கு ஓய்வெடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். பின்னர் 1678-ல் ஒரேயடியாக இங்கிலாந்துக்கு புறப்பட்ட கவர்னர், சின்ன வெங்கடாத்ரிக்கு இந்த வீட்டை விற்றுவிட்டார். ஆங்கிலேயர்களுக்கு மெட்ராஸ் என்ற நிலப்பகுதியைப் பெற்றுத் தந்த பேரி திம்மப்பாவின் இளைய சகோதரர்தான் இந்த சின்ன வெங்கடாத்ரி. 

அடமானத்தில் பிறந்த ஆளுநர் மாளிகை - சென்னை பிறந்த கதை! - பகுதி -4

சின்ன வெங்கடாத்ரிக்கு கிழக்கிந்திய கம்பெனியோடு சில பிரச்னைகள் வந்தபோது, கம்பெனியைச் சரி கட்டுவதற்காக இந்த வீட்டை அடிமாட்டு விலைக்குக் கொடுத்துவிட்டார். பின்னர் சில பல கைகள் மாறி கடைசியில் அரசு வங்கியிடம் அடமானத்துக்கு வந்தது இந்த வீடு. 1821-ல் இந்த வீட்டையும், இதற்கு அருகில் ஷாமியர் என்ற ஆர்மீனியரின் சொத்தையும் அரசாங்கம் வாங்கிக் கொண்டது. அப்போது ஆளுநராக இருந்த சர் தாமஸ் மன்றோ, இடையூறு இல்லாமல் பொதுவிஷயங்களைக் கவனிக்க ஒரு இடம் தேவை என்று விரும்பியதால், இந்த வீடு வாங்கப்பட்டது.

தாமஸ் மன்றோ இங்கிருந்தபடி தனது அலுவல்களைப் பார்த்தார். இப்படித்தான் ஆளுநரின் அதிகாரபூர்வ இல்லம் என்ற கௌரவம் கிண்டி லாட்ஜுக்குக் கிடைத்தது. இவருக்குக் கோட்டைக்குள்ளேயும் ஒரு வீடு இருந்தது. பின்னர் ராஜ்பவன் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது. 

பின்னர் 1837-ல் கிண்டி லாட்ஜ், ஆளுநர் எல்பின்ஸ்டன் பிரபுவால் மீண்டும் விரிவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த வீட்டுக்கும் மவுன்ட் ரோட்டுக்கும் இடையில் சைதாப்பேட்டை வழியாக சாலை அமைத்தவர் இவர்தான். பரந்து விரிந்த அந்த கிண்டி மாளிகையில்தான் இனி வரப் போகும் ஆளுநர்கள் தங்க வேண்டும் என்றும், அண்ணாசாலையில் உள்ள பழைய அரசு இல்லத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும் அப்போதுதான் தீர்மானிக்கப்பட்டது. 

இப்படித்தான் பல்வேறு சுவாரஸ்யமான வரலாற்றுத் திருப்பங்களுக்குப் பிறகு சென்னைக்கு ஒரு பிரமாண்டமான ஆளுநர் மாளிகை கிடைத்தது.

இந்த தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அத்தியாயம் 1
அத்தியாயம் 2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு