Published:Updated:

திருநங்கையின் கேள்வியும்... மசோதா உருவான பின்னணியும் - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா? பகுதி 1

திருநங்கையின் கேள்வியும்... மசோதா உருவான பின்னணியும் - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா? பகுதி 1
திருநங்கையின் கேள்வியும்... மசோதா உருவான பின்னணியும் - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா? பகுதி 1

“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்

இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே

உயர்திணை மருங்கில் பால்பிரிந் திசைக்கும்”.

எனத் திருநங்கைகள் பற்றித் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் தொல்காப்பியர் பகிர்கிறார். தமிழின் முதல் மூத்த இலக்கண நூலில் திருநங்கைகள் பற்றிய பதிவைச் சாத்தியமாக்கியிருக்கிறார் தொல்காப்பியர். இன்றைய இலக்கியச் சூழலில் மரம், செடி, கொடி, மான், மயில் என எத்தனையோ விஷயங்கள் பற்றி எழுதுகிறார்கள். ஆனால், சமூகத்தில் ஒருவராக ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மாற்றுப் பாலினத்தவர்கள் பற்றிய சிந்தனையும், எழுத்தும் இன்றுவரை அரிதாகிப் போனதே நம் சமூகத்தின் மிகப்பெரிய பின்னடைவு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர், திருநங்கைகள் பற்றி உணர்ந்த விஷயத்தை நிகழ்காலத்தில் வாழும் நாம் உணராதது வேதனையிலும் வெட்கக்கேடானது. 

திருநங்கைகள் சமூகம் பற்றிய விழிப்புஉணர்வும், அவர்களுக்கான உரிமைகளும், தேவைகளும், அதனைப் பெற அவர்கள் நடத்தும் போராட்டங்களும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒருகாலத்தில் இந்தியா முழுவதிலும் திருநங்கைகளின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க இரண்டொருவரே இருந்தனர். அந்த நிலை தற்போது இல்லை. திரும்பும் திசை எங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், திருநங்கைகளை அரவணைத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் சமூக அமைப்புகளும் அதிகரித்துள்ளன. சிலர் லாப நோக்கோடும் இச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்தச் சூழலில், திருநங்கைகள் தொடர்பான பல சமூக ஆய்வுகளும், அதனை ஒட்டிய பல விவாதங்களும் அதிகரித்தன. அதன் வெளிப்பாடுதான் 2014-ல் வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

தேசியச் சட்டச் சேவைகள் ஆணையம்!

நாடு முழுவதும் எழுந்த விழிப்புஉணர்வுகளும், அதனை ஒட்டிய விவாதங்களும் திருநங்கைகள் சமூகத்துக்காக மத்திய - மாநில அரசுகள் இதுவரை என்ன செய்தன என்ற கேள்வியை வழுவாக எழுப்பின. தற்போதையச் சமூகக் கட்டமைப்பில் அவர்களின் தேவையும், உரிமைகளும் என்ன என்பது குறித்த தெளிவான வரையறை தயாரிக்கப்பட்டது. அதில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக இடம்பெற்றது. அதனை அரசு ஏற்று நடைமுறைப்படுத்த நடந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க எண்ணிய இந்தியாவின் மிக முக்கிய திருநங்கைகள் அமைப்பினர் சிலர் ஒன்றிணைந்து, ‘தேசியச் சட்டச் சேவைகள் ஆணைய’த்தின் (National Legal Service Authority) மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ‘மத்திய அரசு Vs தேசியச் சட்டச் சேவைகள் ஆணையம்’ என அமைந்த இவ்வழக்கை, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் விசாரித்தனர். 

விசாரணை முடிவில், 2014 ஏப்ரல் 15 அன்று, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானது. அதில், ‘‘மத்திய, மாநில அரசுகள் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும். ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினம் என வரையறைப்படுத்த வேண்டும்” எனத் தீர்ப்பளித்தது. மேலும், ‘‘இந்தியாவில் வாழும் ஓர் ஆண் பெண்ணுக்கு இருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் உண்டு’’ எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக அங்கீகாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என விரிவாக அந்தத் தீர்ப்பு அமைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பானது, திருநங்கைகள் சமூகத்தில் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்தது. ‘இனி எல்லாம் நல்ல காலம்தான்…’ என்று எண்ணியிருந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் எந்தவித முயற்சிகளிலும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை!

திருச்சி சிவாவின் முயற்சி :

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு நல்ல தொடக்கம் என்றாலும் அது சமூகத்தில் முழுமையான தீர்வைக் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். தீர்ப்பின் அடிப்படையிலும், சில தன்னார்வ அமைப்புகளின் தொடர் முயற்சியாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில மாற்றங்கள், திருநங்கைகளுக்கான அங்கீகாரங்கள் கிடைத்தன. பெரும்பாலான திருநங்கைகளுக்குத் தங்களது உரிமைகள் எட்டாக்கனியாகவே காட்சியளித்தது. அதே புறக்கணிப்புகள், கேலிப் பேச்சுகள் எனத் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளத் தடுமாறினர். 

இதுதொடர்பாகத் தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவைச் சந்தித்த சில சமூக அமைப்பினர் திருநங்கைகளின் நிலையை எடுத்துக் கூறினர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட திருச்சி சிவா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சட்டமாக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார். உடனே, திருநங்கைகள் நலன் சார்ந்து இயங்கக்கூடிய மனிதர்கள், அமைப்புகளின் உதவியுடன், பெரும் முயற்சியால்,  ‘மாற்றுப் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் மசோதா – 2014’  என்ற மசோதாவைத் தயாரிக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் விரிவான தீர்ப்பின் பெரும்பாலான அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றிருந்தன. கூடுதலாகத் திருநங்கைகளுக்கான ஆணையம் மற்றும் நலவாரியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. மசோதா ராஜ்ய சபாவுக்குள் சென்றது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகு சமூகக் கட்டமைப்பில் இருக்கும் ‘திருநங்கைகள்’ எனும் சிறுபான்மைச் சமூகத்தைப் பற்றிய ஒரு சட்ட மசோதா நாடாளுமன்றத்துக்குள் சென்றதை உலகமே உற்றுநோக்கியது; பாராட்டியது. ‘‘என்னிடம் பேசிய திருநங்கை ஒருவர், ‘நான் முறையாக இந்திய அரசாங்கத்துக்கு வரி கட்டுகிறேன். ஏன், எனக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது’ என்று கேட்டார். அவர், கேட்ட கேள்விதான் இன்று மசோதாவாக மாறியிருக்கிறது. நாளை சட்டமாகும்’’ என்றார் திருச்சி சிவா. 

இதில், இன்னொரு சிறப்பு என்னவென்றால், நாடாளுமன்றத்தில் 1970 வரை 14 தனி நபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதன்பிறகு சுமார் 45 வருடங்களுக்குப் பிறகு தனி நபர் மசோதாவாக, ‘மாற்றுப் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் மசோதா – 2014’ தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் பி.ஜே.பி. அரசு, மெளனத்தின் உச்சத்தில் இருந்தாலும், அனைத்து ராஜ்ய சபா எம்.பி-க்களுக்கும் தனிப்பட்ட முறையில் மசோதாவை ஆதரிக்குமாறு கடிதம் எழுதினார் திருச்சி சிவா. 2015 ஏப்ரல் 24 அன்று மசோதா, ராஜ்ய சபாவில் குரல் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டுப் பெரும்பான்மை வாக்குப் பதிவால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும், திருநங்கைகளுக்கு அனைத்து உரிமைகளும் கிடைப்பது அரசின் கையில்தான் இருக்கிறது.

(தொடரும்...)