Published:Updated:

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள்..!

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள்..!
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள்..!

குஜராத் தேர்தல் முடிவுகள் ஒருவழியாக வெளியாகி விட்டன. எதிர்பார்த்தபடியே குஜராத்தில் ஆளும் பி.ஜே.பி., மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 99-ல் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால், இந்த வெற்றி பி.ஜே.பி.-க்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததற்கும், இப்போது பிரதமராகப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநிலத்தில் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சி அமைந்திருப்பதற்கும் ஏராளமான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

தவிர, ஒவ்வொரு தேர்தலிலும் பி.ஜே.பி. வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. அதிலும், பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என மிகப்பெரும் படையே குஜராத்தில் தீவிர பிரசாரம் செய்த நிலையிலும், அங்கு 99 தொகுதிகளில் மட்டுமே பி.ஜே.பி-யால் வெற்றிபெற முடிந்துள்ளது என்றால், அது அக்கட்சிக்கு பின்னடைவுதானே? காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இன்னும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கத் தவறியதும் அந்தக் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்து விட்டது என்றே கூறலாம். 

இந்தக் கருத்தை, முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) மூத்த தலைவருமான பிரஃபுல் படேலும் உறுதி செய்துள்ளார். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியுடன் என்.சி.பி. கூட்டணி அமைந்திருந்தால், காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும் என்று பிரஃபுல் படேல் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அங்கமாக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருந்தது. குஜராத் மாநிலத்தில் 2007, 2012-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து என்.சி.பி. போட்டியிட்டது. 2007-ல் மூன்று தொகுதிகளிலும், 2012-ல் இரண்டு தொகுதிகளிலும் என்.சி.பி. வெற்றிபெற்றது. இந்தமுறை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல், 72 தொகுதிகளிலும் என்.சி.பி. தனித்துப் போட்டியிட்டது. இதுவும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்து விட்டது. இதனையே பிரஃபுல் படேல் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பி.ஜே.பி. வெற்றி பெற்றுள்ள பல இடங்களில் காங்கிரஸ் 200 முதல் 2000 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றவாய்ப்பை இழந்துள்ளது. காங்கிரஸ் கொஞ்சம் போராடி இருக்கலாம். பி.ஜே.பி. தரப்பில் கடைசிக் கட்டத்தில் பட்டேல் சமுதாய ஓட்டுகளைச் சிதறடித்து விட்டார்கள். அது மத்திய அரசின் ஒரு சூழ்ச்சி வலையாகவே பார்க்கப்படுகிறது. தான, தண்ட, பேதங்களை முறியடித்து காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றிபெற்றதே பெரிய விஷயம்தான் என்ற அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மக்கள் அளித்துள்ள இந்த அங்கீகாரத்தை, கட்சியின் அகில இந்தியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

குஜராத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை ஏழு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஆயிரத்து 500 வாக்குகளுக்கும் குறைவாகவே தோல்வியைத் தழுவியுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் கூறுகையில், "சூரத், ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் ஆகிய பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. முறைகேடு நடைபெற்ற தொகுதிகளில் பி.ஜே.பி. மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. முறைகேடு செய்து வெற்றிபெற்ற பி.ஜே.பி-வுக்கு வாழ்த்துகள்" என்றார்.

தேர்தல் களத்தில் வெற்றியை உறுதிசெய்வது எப்படி என்கிற வித்தையை பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையிலான பி.ஜே.பி. கற்றுத் தேர்ந்திருக்கிறது என்பதோடு, தங்களுக்கு எதிரான மக்களின் மனநிலையைக்கூட சாதகமாக மாற்றிக்கொள்ளும் சாமர்த்தியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறது என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. 

2012-ம் ஆண்டு தேர்தலில் 115 இடங்களில் வென்ற பி.ஜே.பி. தற்போது 99 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. எனவே தேர்தலுக்குத் தேர்தல் பி.ஜே.பி-யின் பலம் குறைந்து வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1990-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. என்றாலும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு எதிராகக் களம் இறங்கிய ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் ஆகிய மூவரையும் தங்களுக்கு ஆதரவாக இணைத்துக் கொண்டது காங்கிரஸ் கட்சியின் ராஜதந்திரமாக இருக்கலாம். ஆனால், அரசியல்ரீதியான வெற்றியை அவர்களின் ஆதரவு காங்கிரசுக்கு தரவில்லை என்பது உண்மை. இவர்கள் மூவரின் சமுதாய வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபோன்ற சூழல் இல்லை என்பதுதான் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவருகிறது. 

2012 தேர்தலில் 61 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலில் 77 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், சில தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பதும், குஜராத்தில் அந்தக் கட்சிக்கான அங்கீகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. தவிர, ராகுல் காந்தியின் விரிவான தேர்தல் பிரசாரமும் இங்கு கவனிக்கத்தக்கது. என்.சி.பி உள்ளிட்ட வேறு சில கட்சிகளையும் காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ராகுல் தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 

டீமானிட்டைசேஷன், ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பி.ஜே.பி-க்கு எதிரான நிலைப்பாட்டை, தங்களின் வசீகரப் பேச்சுகளாலும், மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையிலான வார்த்தை ஜாலங்களாலும் மறக்கடித்து தங்கள் பக்கம் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் மோடியும், அமித் ஷாவும் என்பதை மறுக்க முடியாது. எனவே, கட்சியின் அகில இந்தியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு குஜராத் தேர்தல் முடிவுகள் பல பாடங்களை கற்பித்துள்ளன. அவற்றில் இருந்து அவர் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளது. 

அதே நேரத்தில் இந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக பி.ஜே.பி. மார்தட்டிக் கொண்டு கொண்டாடும் சூழலில் இல்லை என்பதை அக்கட்சியும், மோடியும் உணர வேண்டும். 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்களின் வெற்றியை பி.ஜே.பி. எடுத்துக்கொள்ள முடியாது என்பது நிதர்சனம். இன்னமும் பி.ஜே.பி மீதான மக்களின் கோபம் குறைந்து விட்டதாகக் கருதினால், அது ஏமாற்றத்தையே அளிக்கும் என்பதையும் அக்கட்சி உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. 

பி.ஜே.பி-யும், காங்கிரசும் தற்போதைய கள நிலவரத்தை உணர்ந்து செயல்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.