Published:Updated:

“பகத்சிங் தியாகி என்பதை யாரும் நிரூபிக்க வேண்டியதில்லை!” - பாலபாரதி

“பகத்சிங் தியாகி என்பதை யாரும் நிரூபிக்க வேண்டியதில்லை!” - பாலபாரதி
“பகத்சிங் தியாகி என்பதை யாரும் நிரூபிக்க வேண்டியதில்லை!” - பாலபாரதி

‘கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா’ என்று ஒரு பழமொழி சொல்லப்படுவது உண்டு. அந்தக் கதையாகத்தான் இருக்கிறது இந்திய விடுதலைக்காக உயிர்நீத்த பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் கதை. அதாவது, ‘‘அவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும்’’ என்று வழக்கறிஞர் வீரேந்தர் சங்க்வான் மனுத் தாக்கல் செய்திருப்பதும், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் தற்போதைய ஹாட் டாபிக்.

புரட்சியாளர் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பகத்சிங்தான். தன்னுடைய கடைசி மூச்சின்போதும் தன் பாதங்கள், இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என்று கருதியவர் பகத்சிங். தூக்கில் தொங்கி அந்தரத்தில் சாவதை விரும்பாத அவர், துப்பாக்கிக் குண்டு ஏந்தி உயிரிழக்கவும் தயாராக இருந்தவர். தன்னுடைய கடைசி மூச்சுவரைக்கும் இந்திய விடுதலையை மட்டுமே சுவாசமாகக் கொண்டவர் பகத்சிங்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அகிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது என்று எண்ணினார். மார்க்சியக் கொள்கைகளையும், கம்யூனிசக் கொள்கைகளையும் ஏற்றுக் களத்தில் இறங்கினார். அவரைப் போன்ற எண்ணங்கள்கொண்ட தன்னுடைய நண்பர்களான ராஜ்குரு மற்றும் சுக்தேவை ஒன்றுசேர்த்துப் போராட்டத்தைத் தொடங்கினார். 1928-ம் ஆண்டு சைமன் கமிஷனில் சட்டவரையரைகள் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு முதுவதும் போராடினர். இதில், பிரிட்டிஷ் போலீஸார் தடியடி நடத்த உத்தரவிட... அந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் உயிரிழந்தார். இதனால், கோபமடைந்த புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் சாண்டோஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்று தலைமறைவாயினர். பின்னர், ஆங்கிலேயர் சட்டங்களை எதிர்த்து குண்டுவீச்சில் ஈடுபட்டனர். சாண்டோஸைக் கொன்றதற்கும், குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு பகத்சிங் இந்தியர்களிடையே தியாகியாகப் போற்றப்பட்டார்.

இந்த நிலையில், ‘‘ஆங்கிலேயர் சாண்டோஸைக் கொன்றதற்காகத் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும்’’ என்று வழக்கறிஞர் வீரேந்தர் சங்க்வான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கீதா மிட்டல், சி.ஹரி சங்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வில் நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த விஷயம் தொடர்பாக எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது; அதனால், இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்’’ என்று கூறினர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாலபாரதியிடம் பேசினோம். ‘‘சுதந்திரப் போராட்டத்தின்போது பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சிறைக்குப் போனார்கள்; அதில் சிலர் தூக்குமேடை ஏறினார்கள். குறிப்பாகப் புரட்சியாளர் பகத்சிங் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவருடைய புரட்சி, சுதந்திரப் போராட்டத்துக்கு உந்துசக்தியாக இருந்தது. அவரை, நிராகரித்துவிட்டு வரலாற்றை யாராலும் பேசிவிட முடியாது. அவரைப் பற்றி எழுத்துகளில் இருப்பதைவிடவும் எழுதப்படாமல் போனதே அதிகம். இப்படியிருக்கும் பட்சத்தில், அவர் தியாகி என்பது நம் அனைவரும் அறிந்ததே. இதற்காக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ அவர் தியாகி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்றார் தெளிவாக.

பகத்சிங் பற்றி இந்தியாவில் இருக்கும் ஒருவர், இப்படி வழக்குத் தொடுத்து அது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் வேளையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் பகத்சிங்கைப் பற்றிப் புகழ்ந்து அவரது பெருமைகளைப் போற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் இம்தியாஸ் ரஷீத் குரேஷி. இவர், பகத்சிங் இறந்து 86 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கக் கோரிக்கை மனு ஒன்றை லாகூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘இந்திய விடுதலைகாகப் போராடியவர் பகத்சிங். லாகூரில் பஞ்சாப் மொழி பேசுபவர்களுக்கு அவர் ஒரு ஹீரோ’’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்தியர்களுக்கு மட்டுமல்ல... பாகிஸ்தான் மக்களுக்கும் அவர்மீது மிக உயர்ந்த மரியாதை இருக்கிறது. முகமது அலி ஜின்னாவும் அவருக்கு இரண்டு முறை அஞ்சலி செலுத்தியுள்ளார். இது அனைத்துமே நாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் விடுதலைக்காக, பகத்சிங் செய்த தியாகச் செயல்கள் இன்றைய இளைஞர்களுக்கு உந்துசக்தியாக இருக்கிறது. அதனால், அவரின் தியாகச் செயல்களே அவரைத் ‘தியாகி’யாக மக்கள் நெஞ்சில் நிலைநிறுத்திவிட்டது.