Published:Updated:

”சசிகலா சொல்லித்தான் தினகரன் என்னிடம் கொடுத்தார்” - வீடியோ வெளியிட்டதன் பின்னணி சொல்லும் வெற்றிவேல் #Jayalalithaa #VikatanExclusive

”சசிகலா சொல்லித்தான் தினகரன் என்னிடம் கொடுத்தார்” - வீடியோ வெளியிட்டதன் பின்னணி சொல்லும் வெற்றிவேல் #Jayalalithaa #VikatanExclusive
”சசிகலா சொல்லித்தான் தினகரன் என்னிடம் கொடுத்தார்” - வீடியோ வெளியிட்டதன் பின்னணி சொல்லும் வெற்றிவேல் #Jayalalithaa #VikatanExclusive
”சசிகலா சொல்லித்தான் தினகரன் என்னிடம் கொடுத்தார்” - வீடியோ வெளியிட்டதன் பின்னணி சொல்லும் வெற்றிவேல் #Jayalalithaa #VikatanExclusive

இரண்டு வருடங்களில் இரண்டு முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்னும் இரண்டு நாள்களில் இறுதியாக அந்தத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது ஆர்.கே.நகர். இந்த நிலையில், தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேல், இன்று... மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவப்படுக்கையில் அமர்ந்துகொண்டு பழச்சாறு அருந்துவது போன்ற வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பு தவிர, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அத்தனை தரப்புகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘‘தேர்தல் நெருங்கும் சமயத்தில் வீடியோவை வெளியிடக் காரணம் என்ன?’’ 

வெற்றிவேலிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

‘‘இந்த வீடியோவைத் தற்போது வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்த என்ன காரணம்?’’

‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் இறந்தசமயம் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதனால் அவர் இறந்தசமயம் அவரது உடலைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. அதனால், ஜெயலலிதாவின் இறுதிக்கால வீடியோக்களைச் சசிகலா தரப்பிடமும்  தினகரனிடமும் தொடர்ந்து கேட்டு வந்தேன். அந்த அடிப்படையில்தான்,  ஒருமுறை சசிகலாவைச் சிறைக்குச் சென்று பார்த்தபோது... என்னிடம் வீடியோக்களைக் கொடுக்கும்படி சசிகலா தினகரனிடம் கூறினார். அதன்படியே அந்த வீடியோக்களை எனது செல்போனில் வைத்திருந்தேன். தினகரன் எக்காரணத்தைக்கொண்டும் அந்த வீடியோவை வெளியிடக் கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டுதான் அந்த வீடியோவைக் கொடுத்தார். ஆனால், நாளுக்குநாள் ஜெயலலிதாவுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்கள் நடந்துகொள்கிறார்கள். ஆர்.கே.நகரில் அதுதொடர்பாகத் துண்டறிக்கை கொடுத்து பிரசாரம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், ஜெயலலிதாவுக்குக் குழந்தை பிறந்ததா... எத்தனை குழந்தை... ஒன்றா அல்லது இரண்டா... என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். இதைத் தினமும் கேட்டு எனக்கு ‘ஸ்ட்ரெஸ்’ ஏற்பட்டுவிட்டது. ‘ஸ்ட்ரெஸ்’ தாங்கமுடியாமல்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். ‘அம்மா’ என்றுதான் நாங்கள் எல்லோரும் ஜெயலலிதாவை அழைக்கிறோம். ஒரு மகன் இருந்திருந்தால், அவரது களங்கத்தைப் போக்க என்ன செய்திருப்பாரோ அதைத்தான் நான் செய்தேன்’’.   

‘‘ஆனால், ‘நீங்கள் வெளியிட்டது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை’ என்று  சில தரப்புகள் மறுக்கின்றார்களே?’’ 

‘‘அவர்கள் ஆளும் கட்சிக்கு ஏற்பத்தான் பதில் சொல்வார்கள். இது, ஜெயலலிதா உடல்நிலை சீரான பிறகு அப்போலோவில் சசிகலா எடுத்த வீடியோ. அவர், அப்போது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார். தான் எப்படி இருக்கிறேன் என்று பார்ப்பதற்காக ஜெயலலிதாவே சசிகலாவை எடுக்கச் சொன்ன வீடியோதான் அது’’. 

‘‘ ‘தற்போது வெளியிட்டிருப்பது முற்றிலும் தேர்தல் விதிமீறல்’ எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியிருக்கிறாரே?’’ 

‘‘நான் ஒன்றும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் அந்த வீடியோவைத் தரவில்லையே. நாங்கள் ஒன்றும் அவர்களைப்போலச் சவப்பெட்டியைக் காண்பித்து கீழ்த்தரமாக வாக்குகள் கேட்கவில்லையே! இதில் என்ன முறைகேடு இருக்கிறது?”

‘‘ஒருவேளை, தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக உங்கள் தரப்பின்மீது நடவடிக்கை எடுத்தால்..?’’

‘‘தினகரனுக்குத் தெரியாமல்தான் இந்த வீடியோவை நான் வெளியிட்டேன். அதனால், அவர்மீது நடவடிக்கை எடுக்கவே முடியாது. நான் வெளியிட்டது தெரிந்து என்னை அழைத்து மிகவும் கோபமாகப் பேசினார்; திட்டினார். ‘எனக்கு, அம்மா (ஜெயலலிதா) பேரில் இருக்குற களங்கத்தைத் துடைக்க வேறு வழி தெரியவில்லை’ என்று கூறிவிட்டேன்”.

‘‘ஆர்.கே.நகர் தேர்தல் நடக்கக் கூடாது என்பதுதான் எண்ணமா? ‘மதுசூதனன் தரப்பு ஜெயித்துவிடுமோ’ என்கிற அச்சத்தில்தான் நீங்கள் வீடியோ வெளியிட்டிருப்பதாக எடப்பாடி அணியினர் கூறுகிறார்களே?’’

‘‘அவர், (மதுசூதனன்) ஜெயிப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எங்களுக்குத்தான் வெற்றி என்று ‘விகடன்’ நடத்திய ஆன்லைன் கணிப்புகள் உள்பட அனைத்துக் கருத்துக்கணிப்புகளுமே கூறிவிட்டன. பிறகு, நாங்கள் எதற்காகத் தேர்தலை நிறுத்தப்போகிறோம்? மேலும், அவர் (மதுசூதனன்) தரப்புத்தானே ஜெயலலிதாவின் மரணத்தில் உண்மை என்ன என்று தொடக்கத்திலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த உண்மையை வீடியோவில் தற்போது பார்த்துக்கொள்ளட்டும்’’.

‘‘நீங்கள் ஏன் விசாரணை கமிஷன் முன்பாக இந்த வீடியோவைக் கொடுக்கவில்லை?’’

‘‘அவர்கள், தினகரனிடம் கேட்கவில்லை. அதனால், கொடுக்கவில்லை’’.

‘‘இது, எந்தத் தேதியில் எடுக்கப்பட்ட வீடியோ?’’

‘‘அதெல்லாம் வேண்டாமே... ப்ளீஸ்!’’

‘‘ ‘மேலும் பல வீடியோ ஆதாரம் இருக்கிறது. இது, அதில் பாதிதான்’ என்று கூறியிருக்கிறீர்களே?’’

‘‘ஆமாம். இன்னும் நிறைய வீடியோக்கள் இருக்கின்றன. ஓ.பி.எஸ். அணியினர் இதற்குமேலும் எங்களிடம் வாலாட்டினால் அந்த வீடியோக்களும் வெளியிடப்படும்”.