Published:Updated:

2ஜி வழக்கைக் கலக்கிய வாக்குமூலங்கள், இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை, 2ஜி தீர்ப்பு: பூதமா... புஸ்வாணமா? அத்தியாயம் - 5

2ஜி வழக்கைக் கலக்கிய வாக்குமூலங்கள், இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை, 2ஜி தீர்ப்பு: பூதமா... புஸ்வாணமா? அத்தியாயம் - 5
2ஜி வழக்கைக் கலக்கிய வாக்குமூலங்கள், இந்தியாவை உலுக்கிய ஊழலின் கதை, 2ஜி தீர்ப்பு: பூதமா... புஸ்வாணமா? அத்தியாயம் - 5

17,60,00,00,00,000 கோடி நஷ்டம்; தனிப்பட்ட நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன; ‘முதலில் வருபவர்க்கே முன்னுரிமை’ என்ற முடிவு தொலைத்தொடர்பு கொள்கைக்கு எதிரானது” என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் இந்தியாவை அதிரவைத்தன. உலகளவில் இந்தியா ஊழல் நாடாக அடையாளம் காட்டப்பட்டது. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல... அதன் அதிர்வுகள் குறைய ஆரம்பித்தன. அதன்பிறகு நடத்தப்பட்ட 2ஜி ஏலத்தின் மூலம், பழைய சி.ஏ.ஐ ரிப்போர்ட் கேள்விக்குள்ளானது. அது குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பை வலுப்படுத்தியது. இப்படி, முன்னுக்குப்பின் முரணான கேள்விகளுடன் நகர்ந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகப்போகிறது. தீர்ப்பு எப்படி வந்தாலும், அது இந்தியாவின் முக்கியத் தலைப்புச் செய்தியாக இருக்கும். இந்த நேரத்தில், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? அந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் சொன்ன வாக்குமூலங்கள் என்ன? 

இவர்கள் குற்றவாளிகளா?

I.அரசியல்வாதிகள்

 1.ஆ.ராசா-முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்(தி.மு.க)
 2.கனிமொழி-மாநிலங்களவை உறுப்பினர் - தி.மு.க

II.அரசு அதிகாரிகள்

 1.சித்தார்த் பெகுரா-முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர்
 2.ஆர்.கே.சந்தோலியா-ராசாவின் தனிச் செயலாளர்.

III.கார்ப்பரேட் முதலாளிகளும் நிர்வாகிகளும்!

 1.சஞ்சய் சந்திரா-எம்.டி, யுனிடெக் வயர்லெஸ்
 2.கௌதம் தோஷி-எம்.டி, ரிலையன்ஸ், அனில் திருபாய் அம்பானி குரூப்
 3.ஹரிநாயர்-மூத்த நிர்வாகி, ரிலையன்ஸ், அனில் திருபாய் அம்பானி குரூப்
 4.சுரேந்திர பிபரா-மூத்த நிர்வாகி, ரிலையன்ஸ், அனில் திருபாய் அம்பானி  குரூப்
 5.வினோத் கோயங்கா-எம்.டி, டி.பி.ரியாலிட்டி மற்றும் ஸ்வான் டெலிகாம்
 6.ஷாகித் உஸ்மான் பால்வா-டி.பி.ரியாலிட்டி நிறுவனம் மற்றும் ஸ்வான் டெலிகாம்
 7.ஆசிப் பால்வா-இயக்குநர், குஷேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை
 8.ராஜிவ் பி. அகர்வால்-இயக்குநர், குஷேகான் பழங்கள் மற்றும்  காய்கறிகள் விற்பனை நிறுவனம்
 9.சரத்குமார்- எம்.டி, கலைஞர் தொலைக்காட்சி
 10.ரவிராய்-இயக்குநர், எஸ்ஸார் குருப்
 11.விகாஸ் ஷரப்-இயக்குநர், ஸ்டேரட்டஜி அண்டு பிளானிங், எஸ்ஸார் குரூப்
 12.கெய்ட்டனர்-லூப் டெலிகாம்
 13.கிரண் கெய்ட்டன்-லூப் டெலிகாம்
 14.கரிம் மொரானி- சினியூக் பிலிம்ஸ்
 15. தயாளு அம்மாள் - கருணாநிதியின் மனைவி. 
 16.பி.அமிர்தம். 

IV.நிறுவனங்கள்

 1.    யூனிடெக் வயர்லெஸ்
 2.    ரிலையன்ஸ் டெலிகாம்
 3.    ஸ்வான் டெலிகாம்
 4.    லூப் டெலிகாம்
 5.    லூப் மொபைல் இந்தியா
 6.    எஸ்ஸார் டெலி ஹவுஸிங்
 7.    எஸ்ஸார் குரூப்

இவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா? என்பது நாளை தீர்ப்பில் தெரியவரும். ஆனால், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை இவர்களைத்தான் குற்றம்சாட்டுகிறது. 

வழக்கைக் கலக்கிய வாக்குமூலங்கள்! 

2ஜி வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியது குறிப்பிட்ட சிலரின் வாக்குமூலங்கள்தாம். 

ஆசிப் பால்வா- ஸ்வான் டெலிகாம்/குஷேகான் நிறுவனங்களின் இயக்குநர், டி.பி.குரூப் நிறுவனத்தின் செயல் இயக்குநர். 

2ஜி அலைக்கற்றை உரிமத்தைப் பெற்ற உடன், குஷேகான் நிறுவனத்திற்கு 200 கோடியை கடனாகக் கொடுத்தோம். அதற்கான முறையான ஒப்பந்தங்கள் எதுவும் போட்டுக் கொள்ளவில்லை. ஏனென்றால், டி.பி.குரூப் நிறுவனங்களில் என்னைப்போல், வினோத் கோயங்காவும் ஒரு நிர்வாகி. அதனால், முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் நம்பிக்கையின் பேரில் 200 கோடியை குஷேகான் நிறுவனத்திற்கு வழங்கினோம். 

கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர்(தி.மு.க), இயக்குநர் மற்றும் பங்குதாரர் கலைஞர் தொலைக்காட்சி

சன் தொலைக்காட்சியில், எனது தாயார் தயாளு அம்மாளுக்குப் பங்குகள் இருந்தன. அதை விற்றபோது, அவருக்குக் கிடைத்த பணத்தில், 5 கோடியை எனக்குக் கொடுத்தார். அதில், இரண்டறைக் கோடியை கலைஞர் தொலைக்காட்சியில் நான் முதலீடு செய்தேன்; வெறும் 13 நாள்கள்தான் நான் அந்தத் தொலைக்காட்சியின் இயக்குநர் பொறுப்பில் இருந்தேன். எனது தந்தை கருணாநிதி தி.மு.க தலைவராக இருப்பதால், அந்தக் கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்கள், அமைச்சர்கள் என அனைவரையும் பல ஆண்டுகளாகத் தெரியும். அந்தவகையில் மட்டும்தான் ஆ.ராசாவையும் எனக்குத் தெரியும்.

சாதிக் பாட்ஷா (மரணமடைந்துவிட்டார்), கிரீன் ஹவுஸ் புரோமோட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர். 

சாதிக் பாட்சாவின் நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரியுடைய மகன் பரமேஸ்குமார், ராசாவின் மூத்த சகோதரர் கலிய பெருமாள் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். சாதிக் பாட்சா தனது வாக்குமூலத்தில், ஆ.ராசாவை 1993-94 காலகட்டத்தில் இருந்தே தெரியும். 1996-ம் ஆண்டு தேர்தலில் ஆ.ராசாவுக்காகப் பணியாற்றினேன். டெல்லியில் உள்ள ராசாவின் வீட்டில் வைத்தும், சென்னை அரசு விருந்தினர் மாளிகையிலும் ஆ.ராசாவைத் தொடர்ந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

ராசாவின் நம்பிக்கைக்குரிய தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியாவும் எனக்கு நல்ல நெருக்கம். கோவை மற்றும் நீலகிரியில் உள்ள சில பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் டிரான்ஸ்ஃபர் தொடர்பாக சந்தோலியாவைச் சந்தித்துள்ளேன். ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் கோயங்கா, ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ராசா இருந்தபோது அவரைச் சந்திக்க வருவார்கள். அப்போது அவர்களுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அவர்களை மும்பையில் ஒருமுறை அவர்கள் அலுவலகத்தில் வைத்தும், இரண்டு, மூன்று முறை சென்னையில் வைத்துச் சந்தித்துள்ளேன். ஷாகித் உஸ்மான் பல்வா சென்னையில், தமிழகத்தின் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய வீட்டில் வைத்து சந்தித்தபோது நானும் ராசாவும் உடனிருந்தோம். 

(2010-ம் ஆண்டு இறுதியிலேயே 2ஜி வழக்கில் சி.பி.ஐ ரெய்டு மற்றும் விசாரணைகள் இறுக ஆரம்பித்தன. இந்தநிலையில் 2011 மார்ச் மாதம் 16-ம் தேதி சாதிக் பாட்சா மர்மமான முறையில் அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார்.) 

மனோகர் பிரசாத், இணை நிர்வாக இயக்குநர், ஜெமினி நிறுவனம் 

ஜெமினி தொலைக்காட்சியில் சரத்குமார் பணியாற்றிய காலத்திலிருந்து எனக்கு அவரைத் தெரியும். அந்தத் தொடர்பின் மூலம் கலைஞர் தொலைக்காட்சியுடன் விளம்பர ஒப்பந்தம் போட்டுக்கொண்டோம். மேலும், ஜெமினி நிறுவனம் இதுபோல் மிகப் பெரிய விளம்பர ஒப்பந்தத்தை வேறு எந்தத் தொலைக்காட்சியுடனும் செய்ததில்லை. இதன்பொருட்டு சரத்குமார் தன்னைச் சந்திக்க வரும்போது, அவருடன் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் ராஜா சங்கரும் வந்திருந்தார். இதுபோலவே, யுனைடெட் ஸ்பிரிட் நிறுவனம் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ்  நிறுவனமும் வேறு எந்தத் தொலைக்காட்சியுடனும் இத்தனை பெரிய விளம்பர ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால், கலைஞர் தொலைக்காட்சியுடன் மட்டும் இதுபோன்ற ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டன என அந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் அளித்த சாட்சியத்தில் குறிப்பிட்டனர். 

ஏ.கே.ஸ்ரீவத்சவா, துணை இயக்குநர், தொலைத் தொடர்புத் துறை. 

10.01.2008 அன்று, அமைச்சர் ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து, “உடனடியாக 2ஜி உரிமத்தை வழங்க வேண்டும்; நான்கு கவுன்டர்கள் அமைத்து அதில் முதலில் வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்க வேண்டும்’’ என்றார். அதற்கு நான் உள்பட மற்ற அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தோம். உடனே, சந்தோலியா, ‘தொலைத் தொடர்புத் துறை செயலாளர் அறைக்கு வரும்படி என்னை அழைத்தார்; நான் அங்கு போனதும், இது அமைச்சரின் உத்தரவு; அவருடைய தனி உதவியாளர் சந்தோலியா சொல்வதுபோல், உடனடியாக அலைக்கற்றை உரிமத்தை வழங்குங்கள்; அமைச்சரின் உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க நமக்கு அதிகாரம் இல்லை” என்று தொலைத்தொடர்புத் துறை செயலாளர் பெகுகுரா என்னிடம் கூறினார். அதன்பிறகுதான் ஆர்.கே.சந்தோலியா சொன்னபடி 13 நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கினோம்!  

ஆசிர்வாதம் ஆச்சாரி, ஆ.ராசாவின் உதவி தனிச் செயலாளர்

1999-ல் இருந்து 2008-வரை அமைச்சர் ஆ.ராசாவுடன் பல்வேறு வகைகளில் பணியாற்றி உள்ளேன். அமைச்சர் ராசாவுக்கான நாடாளுமன்ற அவைக் குறிப்புகள் மற்றும் கடிதங்களை ஆங்கிலத்திலும் இந்தியிலும் தயார் செய்து கொடுப்பது என் வேலை. ஆ.ராசா சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, ஷாகித் உஸ்மான் பல்வா போன்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் அவரைச் சந்திக்க வருவார்கள். தங்களுடைய திட்டங்களுக்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழ் கேட்பார்கள். இவர்களில் வினோத் கோயங்கா மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர், ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான பின்னும் அவரை தொடர்ந்து சந்திந்து வந்தார்கள். ஏனென்றால், அப்போது அவர்கள் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து, தொலைத் தொடர்புத் துறையிலும் அடியெடுத்து வைத்திருந்தனர்.

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டிற்கு அடிக்கடி வருவார். கனிமொழியும் ராசாவும் தொடர்ச்சியாக தொலைபேசியிலும் பேசிக்கொள்வார்கள். தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர், கலைஞர் தொலைக்காட்சியைத் தொடங்கிய போது, மத்திய ஒலிபரப்புத் துறையிடம் அதற்கு அனுமதி வாங்க சரத்ரெட்டி ராசாவை சந்தித்தார். அப்போது, ராசா, அன்றைய மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மற்றும் அவருடைய தனிச் செயலாளர் மனோஜ்குமார் அகர்வால் ஆகியோரிடம் தொலைபேசியிலேயே பேசி அதற்கான அனுமதியை வாங்கினார். இந்த வாக்குமூலங்கள்தான் ராசாவுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியது; இந்த வழக்கை மிகப்பெரிய ஊழல் வழக்காக அடையாளப்படுத்தியன!

தொடரும்...