Published:Updated:

'நெருப்பாற்றில் நீந்தி மீண்டு இருக்கிறோம்' - 2ஜி தீர்ப்பு குறித்து தி.மு.க கருத்து

'நெருப்பாற்றில் நீந்தி மீண்டு இருக்கிறோம்' - 2ஜி தீர்ப்பு குறித்து தி.மு.க கருத்து
'நெருப்பாற்றில் நீந்தி மீண்டு இருக்கிறோம்' - 2ஜி தீர்ப்பு குறித்து தி.மு.க கருத்து

''மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுத்து மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்கே உயர்வை கொடுக்கிற இயக்கம் தி.மு.க. 2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆகிவிட்டார்கள். இந்தத் தீர்ப்பின் மூலம் தி.மு.க அப்பழுக்கற்ற இயக்கமாக வெளிவந்திருக்கிறது'' என்று கூறினார் தி.மு.க மாநில செய்திதொடர்பு இணைச் செயலாளர் வக்கீல் பிரசன்னா.

இதுதொடர்பாக அவர்  கூறுகையில், ''இன்றைக்கு 2 ஜி தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை பெற்றிருக்கிறார்கள். இத்தனை நாள்களாக ஊழல் ஊழல் என்று வாய்களுக்கு அவல் போட்டீர்கள்; இன்று நியாயம் வென்றிருக்கிறது. தி.மு.க மாபெரும் ஜனநாயகப் பேரியக்கம்; மக்களுக்கு நலன் செய்வதில் மட்டுமே அக்கறை உள்ள இயக்கம். அந்த விஷயத்தில் இன்றைக்கு 2 ஜி தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விடுதலையின் மூலம் இமாலய ஊழல், அவ்வளவு பெரிய ஊழல், இவ்வளவு பெரிய ஊழல் என்று வாய் கிழிய வக்கனை பேசியவர்களே இன்று வரிசையாக வந்து நில்லுங்கள்; அண்ணா அறிவாலயம் உங்களையும் மன்னிக்கும்.

எத்தனை பேர் நடுநிலை நாயகன்களாக ஊடகங்களின் மத்தியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் போர்வை போர்த்திக் கொண்டு அது ஊழல், இது ஊழல் என்று வாய்கிழிய பேசினீர்களே... எங்கள் இயக்கத்தை ஊழல் இயக்கம் என்று குற்றம் சாட்டினீர்களே.. வாருங்கள் காலம் பதில் சொல்லி இருக்கிறது. தலைவர் கலைஞரும் தளபதியும் அதிகாரத்தில் ஒருவரை உட்கார வைத்தால் அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துதான் அந்த வாய்ப்பை கொடுப்பார்கள்.  இந்த வழக்கை போட்டபோது, ''வழக்கை சட்டப்படி சந்தித்து அதில் இருந்து வெளியே வருவோம் என்று  தலைவர் கலைஞர் சொன்னார். வழக்கை இழுத்தடிக்காமல் அதை வென்றிருக்கிறோம். வழக்கு விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். சட்டப்போராட்டம் நடத்தி 2 ஜி வழக்கு என்கிற நெருப்பாற்றில் நீந்தி தி.மு.க கரை கண்டிருக்கிறது. மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுத்து மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்கே உயர்வை கொடுக்கிற இயக்கம் தி.மு.க. ஆக, '2 ஜி ...ஸ்பெக்ட்ரம் ராசா நான் தான்' என்று சொன்னவரை வாழ்த்துகிறேன். இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளான அக்கா கனிமொழியையும் வாழ்த்துகிறேன். எல்லாரும் விடுதலை பெற்று தி.மு.க அப்பழுக்கற்ற இயக்கமாக வெளிவந்திருக்கிறது'' என்று கூறினார்.