Published:Updated:

‘‘மெத்தனப்போக்கைக் கைவிடுங்கள்...’’ மோடி சொல்வது எதற்கு?

‘‘மெத்தனப்போக்கைக் கைவிடுங்கள்...’’ மோடி சொல்வது எதற்கு?
‘‘மெத்தனப்போக்கைக் கைவிடுங்கள்...’’ மோடி சொல்வது எதற்கு?

ண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பட்டேல் சமூகத்தினரின் போராட்டங்கள் உள்ளிட்டவற்றால் குஜராத் தேர்தலில் ஏதாவது மாற்றம் நிகழும் என்று இந்தியாவே எதிர்பார்த்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி மீண்டும் பி.ஜே.பி-யே ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இது, ஒருவிதத்தில் அவர்களுக்கு ஆறுதலே என்றாலும்.... மறுவிதத்தில், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குக் குஜராத்தில் இடங்கள் கிடைக்காதது வேதனையே. 

காங்கிரஸ் வளர்ச்சி!

இத்தனைக்கும் பிரதமரின் சொந்த மாநிலம் குஜராத். அதுதவிர, 1995-ம் ஆண்டுமுதல் பி.ஜே.பி-யின் கோட்டையாகவும் இருக்கிறது. அதேவேளையில், 2012 தேர்தலில் வெற்றிபெற்ற 119 இடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை வெற்றி முன்னிலை சதவிகிதம் பி.ஜே.பி-க்குக் குறைவாகவே உள்ளது. நடந்து முடிந்த இந்தத் தேர்தலில், பி.ஜே.பி., 99 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. எனினும், காங்கிரஸ் 77 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. இதனைவைத்துப் பார்க்கும்போது பி.ஜே.பி. ஓரளவு சரிவையே சந்தித்திருக்கிறது என்று சொல்லலாம். அதேவேளையில், காங்கிரஸ் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதுவும், கடந்த 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகக் குஜராத்தில் காங்கிரஸுக்கு இவ்வளவு தொகுதிகள் கிடைத்திருப்பது அதிசயம். 

‘‘கேள்விக்குறியாக்கி இருக்கிறது!’’ 

குஜராத் தேர்தல் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,‘‘தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது. தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கு நிச்சயம் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கும். கடந்த மூன்று மாதங்களாக நான் அங்கு பிரசாரம் செய்ததில், மோடியின் குஜராத் முன்மாதிரி வளர்ச்சியின்மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக உணர முடிந்தது. பி.ஜே.பி. செய்த பிரசாரம், வியாபார தந்திரம் மிக்கதாக இருந்தது. ஆனால், அதன் உள்புறம் மிகப்பெரிய வெற்றிடம் காணப்பட்டது. குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி மீதான நம்பகத்தன்மையைத் தீவிர கேள்விக்குறியாக்கி இருக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார். 
 

எச்சரிக்கை மணி!

அதேபோல், குஜராத் தேர்தல் முடிவைச் சுட்டிக்காட்டி... பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகையும் கருத்து தெரிவித்திருந்தது. அது எழுதியிருந்த தலையங்கத்தில், ‘‘யதேச்சதிகாரத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்குக் குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது. தேர்தலில் பி.ஜே.பி. வென்று இருக்கலாம்; ஆனால், ராகுல் காந்தியின் முன்னேற்றம் பற்றித்தான் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறுவோம் என்று பி.ஜே.பி. தம்பட்டம் அடித்தது. ஆயினும், 100 இடங்களில் வெற்றிபெறுவதுகூட கடினமான இலக்கு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. குஜராத்தில் ராகுல் காந்தி மற்றும் ஹர்திக் பட்டேலின் உத்தமமான செயல்பாடுகளுக்குச் செவிசாயுங்கள். குஜராத் மக்கள் 99 தொகுதிகளில் மோடிக்குப் பின்னால் நின்றாலும், ராகுல் காந்தி - ஹர்திக் பட்டேல் அணி 77 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. 

ராகுல் காந்தியையும், ஹர்திக் பட்டேலையும் குரங்குகள் என்று ஏளனம் செய்தார்கள். இன்றைக்கு இந்தக் குரங்குகள், சிங்கத்தை அறைந்துவிட்டன; பி.ஜே.பி-க்கு எச்சரிக்கை மணியை ஒலித்துவிட்டன. இதுபோல் ஏளனம் செய்தவர்கள், தேர்தல் பரீட்சையில் மிகவும் அரிதாகவே வெற்றிபெற்றபோதிலும், ஏதோ தனித்துவத்துடன் வெற்றிபெற்றுவிட்டதாகப் பாசாங்கு செய்கிறார்கள். 2019 தேர்தல்கள் இதேபோல் குழம்பிப்போய் விடக்கூடாது என்று மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். ‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ என்ற கனவு இன்னமும் நிறைவேறாமலேயே இருக்கிறது’’ என அது கடுமையாக விமர்சித்து இருந்தது. 

அதுபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது தற்காலிகமான, மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ள உதவிய ஒரு வெற்றி மட்டுமே. ஆனால், தார்மிகரீதியாக இது பி.ஜே.பி-யின் தோல்வியையே காட்டுகிறது. சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட அநீதி, மனக்கவலை மற்றும் அநீதிக்கு எதிராகவே குஜராத் வாக்களித்துள்ளது. மொத்தத்தில் குஜராத், 2019-க்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, ‘‘பி.ஜே.பி-யினர் அனைவரும் அதீத நம்பிக்கை மற்றும் மெத்தனப்போக்கை விட்டுவிட்டுக் கடினமாக உழைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். டெல்லியில் நேற்று (21-12-17) நடந்த பி.ஜே.பி. எம்.பி-க்கள் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

‘‘மெத்தனப்போக்கை விடவேண்டும்!’’

இதில் பேசிய பிரதமர் மோடி, ‘‘குஜராத்தில் பி.ஜே.பி-க்குக் கிடைத்த தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், பெற்ற வாக்குச் சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. எனினும், பி.ஜே.பி. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அதீத நம்பிக்கை மற்றும் மெத்தனப்போக்கை விட்டுவிட்டு, மிகப்பெரிய மைல்கற்களை வென்றெடுக்கும் நோக்கில் கடினமாக உழைக்க வேண்டும். இதற்காக நாடு முழுவதும் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் வேராகக் கருதப்படும் பூத் மட்டத்தில் செய்யப்படும் பணிகள், தேர்தல் வெற்றிக்குத் தாயாக அமையும். எனவே பூத் மட்டத்தில் கட்சி வலுவாய் இருப்பது மிகவும் முக்கியமானது. அத்துடன் மக்களின் ஆசீர்வாதமும் கட்சிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும். கட்சிப் பணிகளில் இளைய தலைமுறையினர் இணைய வேண்டும். கட்சியின் அனைத்து அமைப்புகளிலும் இளம் தலைவர்களை அடையாளம் கண்டு, கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். 

‘‘பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது!’’

பிரதமர் மோடி இப்படிச் சொல்லியிருப்பது குறித்து பி.ஜே.பி-யினரிடம் பேசினோம். ‘‘பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம்  மோடிமீதும் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதுதான் குஜராத் தேர்தலின் வெளிப்பாடு. இருந்தாலும் குஜராத் தேர்தல் முடிவு, பி.ஜே.பி-க்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. இப்போது பலமிருந்து இருக்கும் காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுக்க ராகுல் காந்தி எப்படிப் போராடுகிறாரோ... குஜராத்தில் தனி ஒருவனாக நின்று சூறாவளிப் பிரசாரம் செய்தாரோ... அதுபோல பி.ஜே.பி-யில் இருக்கும் ஒவ்வொருவரும் வருங்காலத் தேர்தலுக்காக உழைக்க வேண்டும் என்பதைக் குஜராத் தேர்தல் கற்றுத் தந்திருக்கிறது. இதைத்தான் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்’’ என்றனர். 

எதிலும் போராடினால்தானே வெற்றிகிடைக்கும். களத்தைப் புரிந்துகொண்டுவிட்டது பி.ஜே.பி.