சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் மோசமான கணவன்: ராம் ஜெத்மலானி


புதுடெல்லி: சீதையை காட்டுக்கு அனுப்பிய ராமர் மோசமான கணவன் என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜனதா எம்.பி. ராம் ஜெத்மலானி பேசியிருப்பது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண் - பெண் உறவு தொடர்பான ஒரு புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது.இவ்விழாவில் பா.ஜனதா எம்.பி.-யும்,பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது ஒருவர் ராமர்-சீதை பற்றி கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த ஜெத்மலானி, ராமரை கடுமையாக விமர்சித்தார்.
"ராமர் ஒரு மோசமான கணவன் ஆவார்.காரணமே இல்லாமல் அவர் சீதையை காட்டுக்கு அனுப்பியதால் ராமர் நல்ல கணவர் இல்லை.யாரோ ஒரு மீனவன் சொன்னான் என்பதற்காக சீதையை ராமர் சந்தேகப்பட்டது எந்த விதத்தில் நியாயம்?.ராமரின் தம்பி லட்சுமணன் இன்னும் மோசம்.சீதை கடத்தி செல்லப்பட்ட போது,அவளை மீட்டு வருமாறு லட்சுமணனுக்கு ராமர் உத்தரவிட்டார்.
அப்போது லட்சுமணன், "நான் அண்ணி முகத்தை இதுவரை நேருக்கு நேர் பார்த்தது இல்லை.எனவே எனக்கு சீதையை அடையாளம் தெரியாது என்றார்.அவரையும் சிறந்த ஆண் என்று எப்படி ஏற்க முடியும்?”என்று கூறினார் ஜெத்மலானி.
##~~## |
வருத்தம் தெரிவிக்க மாட்டேன்
இதனிடையே ராமர் குறித்து தாம் கூறிய கருத்து தவறுதலாக கூறப்பட்டதல்ல என்றும், அந்த கருத்துக்காக தாம் வருத்தம் தெரிவிக்கப்போவதில்லை என்றும் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.