Published:Updated:

“பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல்... பிச்சை எடுத்தல்... குற்றமாகும்!” - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 3

“பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல்... பிச்சை எடுத்தல்... குற்றமாகும்!” - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 3
“பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல்... பிச்சை எடுத்தல்... குற்றமாகும்!” - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 3

பிச்சை எடுத்தல் மற்றும் பாலியல் தொழில் செய்தால் தண்டனை :

மாற்றுப் பாலினத்தவர்களின் (உரிமைப் பாதுகாப்பு) மசோதா – 2016-ல் எட்டாவது அத்தியாயம், செக்‌ஷன் 19-ல் 'தண்டனை மற்றும் அபராதம்' பற்றிப் பேசப்பட்டுள்ளது. எந்தெந்த குற்றம் தண்டனைக்குரியது என்று அதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

'மாற்றுப் பாலினத்தவரை கட்டாயப்படுத்திப் பிச்சை எடுக்கவைப்பதும், அவர்களைக் கட்டாயப்படுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடவைப்பதும் குற்றம். குறிப்பிட்ட இடத்தில் அடைத்துவைத்து அவர்களைத் துன்புறுத்துவதும், பாலியல் வன்புணர்வு செய்வதும் தண்டனைக்குரிய குற்றம். இதற்கு, குறைந்தபட்சம் ஆறு மாதம் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக இரண்டு வருடச் சிறைத்தண்டனையும் விதிக்கலாம். உடன், அபராதமும் விதிக்கலாம். இவ்வாறு மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும் முன்வைக்கும் முதல் விஷயம் இந்தத் தண்டனை குறித்தானதாகவே இருக்கிறது. 

மத்திய அரசின் பார்வைதான் என்ன?

மசோதாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், பிச்சை எடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என அழுத்தமாகச் சொல்லும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தலைத் தடைசெய்வதால் திருநங்கைகள் வேறு தொழிலுக்குச் செல்வார்கள்; அவர்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்கிறார்கள். சரிதான். ஆனால், பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தலைத் தண்டனை என்று சொல்லும் இந்த மசோதா, அதற்கான தீர்வைச் சொல்ல மறந்தது ஏன் என்ற கேள்வியை அனைவரும் எழுப்புகிறார்கள். 

தீர்வு இல்லாமல் நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றை முன்னிறுத்துவது எப்படிச் சரியாக இருக்க முடியும்? மத்திய அரசின் பார்வைதான் என்ன என்பது போன்ற பல கேள்விகளோடு, 'தாய்மடி' அறக்கட்டளை மூலம் பல திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், கடந்த சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட திருநங்கையுமான தேவியிடம் பேசினோம். “பெண் தன்மை மேலோங்கி, வீட்டைவிட்டு வெளியேறும் ஓர் ஆண், தன்னைப்போலவே இருக்கும் கூட்டத்தைத் தேடி அவர்களுடன் சேர்கிறான். அந்தக் கூட்டம் அவனை அரவணைத்துப் பாதுகாக்கிறது. இதனை, ‘ஜமாத்’ முறை என்பார்கள். இந்த ஜமாத்தில் இருக்கும் பெரியவர்களின் வழிகாட்டுதலின்படிதான் அனைத்தும் நடக்கும். மத்திய அரசின் மசோதா இந்த ஜாமத் முறையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது. வீட்டிலிருந்து துரத்தப்படும் ஓர் இளம்வயது பையன், தெருவில் பாதுகாப்பில்லாமல் படுத்து உறங்கும்போது சந்திக்கும் சிக்கல்களுக்கும், பிரச்னைகளுக்கும் இந்த மசோதா என்ன பதில் கொடுக்கிறது என்று தெரியவில்லை.

கடுமையான தண்டனை கொடுத்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வார்கள் என்று சொல்வதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கான தீர்வு எங்கே என்பதுதான் எங்கள் முதல் கேள்வி... அடுத்ததாக, வீட்டிலிருந்து பெற்றோர்கள் விரட்டாமல் வீட்டிலேயே ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமாகும்... 15 வயதுவரை ஆணாக வளரும் ஒரு பையன், திடீரென பாவாடை தாவணி அணிந்துகொண்டு தன்னை ஒரு பெண்ணாக அங்கீகரிக்க முயற்சி செய்வதைப் பெற்றோர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்... பெற்றோர்களுக்கு என்ன மாதிரியான விழிப்பு உணர்வை மத்திய அரசு செய்தது... செய்ய இருக்கிறது... இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். மத்திய அரசின் மாற்றுப் பாலினத்தவர்களின் (உரிமைப் பாதுகாப்பு) மசோதா – 2016, ஒரு நல்ல தொடக்கம் என்றாலும் சில குறைகள் இருப்பதாகவே நான் பார்க்கிறேன். அதனைக் களைந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

கடந்த முறை ராஜ்ய சபாவில் திருச்சி சிவா அறிமுகம் செய்த மசோதாவில், பாலியல் தொழில் குறித்தும் பிச்சை எடுப்பது குறித்தும் ஆரோக்கியமான, வேறொரு கோணத்தில் பேசப்பட்டது. திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பட என்ன வழி என்பது குறித்து சில கருத்துகள் அந்த மசோதாவில் முன்வைக்கப்பட்டன. அதில், தொழில் பயிற்சி வழங்குதல், அதற்கான சிறப்புப் பயிற்சிப் பள்ளியை ஏற்படுத்துதல், திருநங்கைகள் ஆணையம் ஏற்படுத்துதல் எனப் பல தளங்களில் ஷரத்கள் இடம்பெற்றிருந்தன. இதுமட்டுமல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய மாநில அரசுகள் 2 சதவிகித இடஒதுக்கீட்டைத் திருநங்கைகளுக்கு வழங்கிட வேண்டும் என்றும் மசோதா கூறியது. ஆனால், இடஒதுக்கீட்டைப் பற்றி மத்திய அரசின் மசோதா எதுவும் தெரிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றமே.

விளைவுகள் மோசமாக இருக்கும்…

மத்திய அரசின் நிலைப்பாட்டின்படி பாலியல் தொழிலில் ஈடுபடுதலும், பிச்சை எடுத்தலும் தண்டனைக்குரிய குற்றமாகச் சட்டம் அங்கீகாரம் கொடுக்கிறது என்றால், அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்றையச் சூழலில் போலீஸாருக்கும் திருநங்கைகள் சமூகத்துக்குமான உறவு பற்றி அனைவரும் அறிந்ததே. இதில் பாலியல் தொழில் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்படும் நிலையில், அவர்களின் நிலை பற்றி விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. பாலியல் தொழில் செய்ய அவர்களுக்கு விருப்பமா என்ன? வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், தன்னைப் பெண்ணாக அங்கீகரிக்க, தனது பிறப்புறுப்பையே வெட்டி எடுக்கும் ஒரு திருநங்கைக்கு உடலுறவில் என்ன சுகம் இருந்துவிடப்போகிறது? அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுதல் குறித்த ஆரோக்கியமான விவாதத்தை அரசு ஏற்படுத்தியிருக்கலாம் என்றே பலரும் கருதுகிறார்கள்.

ஒற்றைவரியின் அர்த்தம் :

பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தல் குற்றம் என்று சொல்லும் மசோதா, அதற்குத் தீர்வாகச் சில விஷயங்களைச் சொல்ல மறக்கவில்லை. 'எந்த அமைப்புகளிலும் மாற்றுப் பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக் கூடாது' என ஒற்றை வரி மசோதாவில் குறிப்பிடப்படுகிறது. எந்தக் கல்வி நிறுவனங்களிலும், எந்த வேலைவாய்ப்புகளிலும், எந்த மருத்துவமனைகளிலும் திருநங்கைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்பதுதான் அதன் பொருள். இப்படி, 'அமைப்புகள்' என்று பொதுவாகக் குறிப்பிடுவதன் நோக்கம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. அமைப்புகள் என்ற ஒற்றைவரிக்குள் ஆயிரம் அர்த்தம் சொல்லும் மசோதா, அதனைச் சற்று விரிவாகச் சொல்லியிருக்கலாம். 

பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தலில் இருந்து திருநங்கைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க அரசால் நிச்சயம் முடியும். அப்படிச் செய்வது குறித்து மசோதாவில் குறிப்பிட்டிருக்கலாம். இன்றையச் சூழலில், பெரும்பாலான திருநங்கைகள் அவர்களின் அம்மாக்களோடுதான் வாழ்ந்துவருகிறார்கள். வீட்டிலிருந்து விரட்டிய அதே அம்மாக்கள்தாம், அவர்களின் கடைசிக் காலத்தில் தனது மகளைத் (திருநங்கை) தேடி வருகிறார்கள். எனவே, வீட்டில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்தான். மக்கள் மனங்களில் திருநங்கைகளின் இடம் என்ன என்பது குறித்த விரிவான ஆய்வு ஒன்றை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுப்பதன் மூலமும், அதனைத் தொடர்ந்து திருநங்கைகளுக்குச் சமூகத்தில் சமமான அங்கீகாரம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதன் மூலமும், மிகப்பெரிய மாற்றத்தை விதைக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

தற்போதைய மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'அமைப்புகள்' செய்யும் புறக்கணிப்புகள் என்ன... அதனை எதிர்த்து திருநங்கைகள் இத்தனை ஆண்டுகாலமாக நடத்திய போராட்டங்கள் என்ன... இன்றைய மசோதா, திருநங்கைகள் புறக்கணிக்கப்படுவதை மீண்டும் வழிமொழிகிறதா?

(தொடர்ந்து அலசுவோம்….)

இந்த தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க,