Published:Updated:

2ஜி விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த விநோத் ராய் யார்... எங்கே? #2GScamVerdict

2ஜி விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த விநோத் ராய் யார்... எங்கே? #2GScamVerdict
2ஜி விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த விநோத் ராய் யார்... எங்கே? #2GScamVerdict

2ஜி விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த விநோத் ராய் யார்... எங்கே? #2GScamVerdict

“நாங்கள் சியர் கேர்ள்ஸ்களைப் போல உங்களுக்குப் பொழுதுபோக்க இங்கு வரவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு துறையும் நேர்மையாகச் செயல்படுவதற்காகப் போராடிக்கொண்டு இருக்கிறோம்!” - அக்கவுன்ட்ஸ் தொடர்பான ஒரு கருத்தரங்கில் வினோத் ராய் கோபம் கொப்பளிக்கச் சொன்ன வார்த்தைகள் இவை.

ஸ்பெக்ட்ரம் 2 ஜி வழக்கின் மையப் புள்ளிதான் வினோத் ராய்! வெகுஜனங்களுக்கு அறிமுகம் ஆகியிராத இந்தியாவின் பவர்ஃபுல் மனிதர்களில் ஒருவராக ஐந்தாண்டுகளுக்கு முன்பு திகழ்ந்த வினோத் ராய் மீது இப்போது கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

வினோத் ராய் இந்தியாவின் கணக்கு மற்றும் தணிக்கைத் துறையின் தலைவராக இருந்தபோதுதான் 2 ஜி ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. “ ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ என்று செல்போன் நிறுவனங்களுக்கு 2 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அதைப் பொது வெளியில் ஏலம் விட்டிருந்தால், அரசுக்குப் பெருமளவு வருமானம் வந்திருக்கும். அந்த வகையில் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருமான இழப்பு 1 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய்!” என வினோத் ராய் தாக்கல் செய்த அறிக்கைதான், மன்மோகன் சிங் அரசின் மீது வெடித்த முதல் அணுகுண்டு. அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் முடங்கியது. 'அத்தனை லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்?’ என ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார்கள் மக்கள். சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது. அதன் தொடர் நிகழ்வுகள் ஆ.ராசா ராஜினாமா தொடங்கி, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் கைது வரையில் நீண்டது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல், காமன் வெல்த் போட்டி முறைகேடுகள், 52 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடித் திட்ட முறைகேடு என மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்த வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார் வினோத் ராய். “மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடுகள் தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கையில் இருந்து சிலரின் பெயர்களை நீக்க வேண்டும் என எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள்” என அப்போதே திரி கொளுத்திப் போட்டார். “2 ஜி அலைக்கற்றை முறைகேடுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் பொறுப்பாளி” என ஆணித்தரமாக சொன்னார் வினோத் ராய்.

அரசு செயல்படுத்தும் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள திட்டங்களின் கணக்கு வழக்குகள் சரியாக இருக்கின்றனவா என்பதைத் தணிக்கை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் Comptroller and Auditor General of India. சுருக்கமாக... சி.ஏ.ஜி. இதன் கட்டுப்பாட்டுக்குக் கீழே வருவதுதான் இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறை. இந்தத் துறை, அரசு அதிகாரத்தின் கீழ் இருந்தால் ‘ஆமாம் சாமி’ போட்டுவிடுவார்கள் என்பதால், இதை சுயாட்சி கொண்ட அமைப்பாக அமைத்திருக்கிறார்கள். இந்த அமைப்புதான் இந்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் மொத்தக் கணக்கு வழக்குகளையும் தணிக்கை செய்கிறது. அரசின் பொதுத் துறை நிறுவனங்களும் இதன் கழுகுப் பார்வையின் கீழ்வரும். சுருக்கமாகச் சொன்னால், சி.ஏ.ஜி-யின் கீழ் வேலை பார்க்கும் 58 ஆயிரம் பணியாளர்கள்தான் இந்தியாவின் ஆக்டிவ் கேஷியர்கள்.

எந்த ஒரு மகா, மெகா டெண்டரின் மொத்த விவரங்களும் சி.ஏ.ஜி-யின் கைகளுக்குப் போகும். அதன் வரவு - செலவுக் கணக்குகளை ஒரு புள்ளி விடாமல் சரிபார்ப்பார்கள். அந்த டெண்டர் நேர்மையாக விடப்பட்டு இருக்கிறதா? இதனால் அரசுக்கு லாபமா, நஷ்டமா என்றெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து, தங்கள் முடிவை நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் தாக்கல் செய்வார்கள். கிட்டத்தட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு உண்டான அதிகாரம்கொண்டது சி.ஏ.ஜி. பதவி. குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமிக்கப்படும் சி.ஏ.ஜி., குறைந்தது ஆறு வருடங்கள் அல்லது 65 வயதாகும் வரை பதவியில் நீடிக்கலாம். அதுவரை அவரை நீக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அதை முடிவு செய்யவேண்டிய அதிகாரம் உச்ச நீதிமன்றம் வசம் மட்டுமே!

வினோத் ராய் 2008-ல் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, சி.ஏ.ஜி. தணிக்கை மதிப்பீடுகளின் முறையை மேம்படுத்தினார். லட்சம் கோடிகளைத் தொடும் ஊழல்களின் முறைகேட்டு முறைகளைத் வெளிக்கொண்டு வந்தார். சி.பி.ஐ-யைச் சமாளித்துவிடலாம். ஆனால், சி.ஏ.ஜி-யைச் சமாளிக்க முடியாது என்கிற நிலையை வினோத் ராய் ஏற்படுத்தினார்.

'இந்தியாவின் இரும்பு அமைப்பு' என சி.ஏ.ஜி விமர்சிக்கப்பட்டது. 2 ஜி வழக்கு தீர்ப்புக்குப் பிறகு அத்தனையும் தகர்ந்து போனது.

தணிக்கை அறிக்கையில் 1 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என வினோத் ராய் சொன்னபோதும், 'அரசுக்கு 30,984 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது' என குற்றப் பத்திரிகையில் சி.பி.ஐ சொன்னது. இந்தியாவின் இமாலய ஊழல் என வர்ணிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் 2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் வினோத் ராய் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. “வினோத் ராய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என முதல் அஸ்திரத்தை வீசியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “2ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாகத் தவறான அறிக்கை அளித்த வினோத் ராய் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்” என சொல்லியிருக்கிறார். “விநோத் ராயிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என வலியுறுத்துகிறது காங்கிரஸ். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைவதற்கு காரணமாக இருந்தது 2 ஜி ஊழல். இதனால்தான் விநோத் ராய் மீது காங்கிரஸ் கட்சி பாய ஆரம்பித்திருக்கிறது. விநோத் ராய் மீது நடவடிக்கை எடுப்பது சட்டப்படி சாத்தியமில்லை என்கிறார்கள் சட்ட அறிஞர்கள்.

வினோத் ராய் என்ன செய்கிறார்? கணக்கு மற்றும் தணிக்கைத் துறையின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, அவரின் திறமையை பார்த்து, பி.சி.சி.ஐ. நிர்வாக குழு தலைவராக வினோத் ராயை நியமித்தது சுப்ரீம் கோர்ட். மத்தியில் மோடி ஆட்சி அமைந்த பிறகு வினோத் ராய்க்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இப்போது வினோத் ராய் மீது விமர்சனங்கள் கிளம்பியிருக்கும் சூழலில், பி.சி.சி.ஐ. நிர்வாக குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு