Published:Updated:

2ஜி தீர்ப்பால் திமுக உறவில் மாற்றமா? - சிபிஎம்-ன் நிலை என்ன? #VikatanExclusive

2ஜி தீர்ப்பால் திமுக உறவில் மாற்றமா? - சிபிஎம்-ன் நிலை என்ன? #VikatanExclusive
2ஜி தீர்ப்பால் திமுக உறவில் மாற்றமா? - சிபிஎம்-ன் நிலை என்ன? #VikatanExclusive

2ஜி தீர்ப்பால் திமுக உறவில் மாற்றமா? - சிபிஎம்-ன் நிலை என்ன? #VikatanExclusive

இரண்டாம் (2ஜி) அலைக்கற்றை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது தமிழக அரசியல் கூட்டணிகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா எனும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக அணிக்கு எதிராகக் களம்கண்ட சிபிஎம், சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துப் பிரசாரம் செய்தது. மதவாதத்துக்கு எதிரான கூட்டணி எனும் பெயரில் இரு கட்சிகளும் ஒரே அணியில் இணைவதற்கான தொடக்கமாக இது பார்க்கப்பட்டது. 

இடைத்தேர்தல் பரபரப்புக்கு இடையில் வாக்குப்பதிவன்று காலையிலேயே அலைக்கற்றை வழக்கில் திமுகவின் முன்னாள் மைய அமைச்சர் ஆ.ராசா, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரையும் விடுதலைசெய்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு முன்னர் இந்த விவகாரத்தில் திமுகவையும் முந்தைய மத்திய ஆளும் கட்சியான காங்கிரசையும் சிபிஎம் கட்சி நாளடைவில் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வந்தது. சரியாகச் சொல்வதென்றால், நாடாளுமன்றத்தில் ‘அலைக்கற்றை ஊழல்’ குறித்து முதல் முறையாக முக்கிய ஆவணங்களுடன், சிபிஎம் கட்சியின் இன்றைய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிதான் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொலைபேசித் துறையின் வளங்களை குறிப்பிட்ட தனியார் பெருநிறுவனங்களுக்கு தாரைவார்த்ததாக முன்னைய காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது குற்றம்சாட்டிய சிபிஎம் கட்சியானது, அதையொட்டியே கடந்த தேர்தல் கூட்டணியையும் அமைத்துக்கொண்டது. 

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்தபிறகு, அந்தக் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்படிகளும் ஆட்சி நிர்வாகத்தில் நடந்துவரும் பல மாற்றங்களும் மாநிலத்தில் புதியதோர் அரசியல்சூழலை ஏற்படுத்தியது. மத்திய பாஜக ஆட்சியின் கட்டுப்பாட்டில் அதிமுக ஆட்சி செயல்படுவதாக சிபிஎம் கட்சியும் உட்பட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம்செய்கின்றன. அலைக்கற்றை வழக்குத் தீர்ப்பு குறித்து நேற்று சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்ட அறிக்கையில், “இத்தீர்ப்பு, பதில்களைவிட மேலும் பல கேள்விகளையே எழுப்பியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடானது 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது என மத்திய தலைமை கணக்குத்தணிக்கை அதிகாரியால் மதிப்பீடு செய்யப்பட்டது; அது மிகத்தெளிவாக நிறுவப்பட்ட ஒன்று. இந்த ஒதுக்கீடுகளை தவறான முறையில் பெற்றதில் ஈடுபட்ட சில தொலைத்தொடர்பு நிறுவனங்களை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது; அந்த நிறுவனங்களின் உரிமங்களை ரத்துசெய்திருக்கிறது. இந்நிலையில், சிபிஐ நடத்திய வழக்கும், அதன் விசாரணை நடைமுறைகளும் போதுமான அளவு நிரூபிக்கப்படவில்லை. எனவே இதை சட்டபூர்வமாக எடுத்துச்செல்லத் தேவையான நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்; அப்போதுதான் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என மிகச் சுருக்கமாகவும் அதேவேளை, அரசியல்தளத்தில் பிரசாரம் செய்ததைவிட மாறுபட்டவகையிலும் கருத்துத் தெரிவித்துள்ளது. 

சென்னையில் கூடிய சிபிஎம் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில், “2ஜி வழக்கில் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான உரிமம் வழங்கப்பட்டதில் மத்திய அரசுக்கு ரூ. 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த ஒதுக்கீடுகளை தவறான முறையில் பெற்றதற்காக சில தொலைதொடர்பு நிறுவனங்களை உச்சநீதிமன்றம் கண்டித்தது. 122 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்களையும் ரத்தும்செய்தது. இதைத் தொடர்ந்தே அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக சிபிஐ இரண்டு வழக்குகளையும், அமலாக்கத்துறை ஒரு வழக்கையும் நடத்தியது.

கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்குகளில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றச்சாட்டுக்கள் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டினால் நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பீட்டுக்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி குற்றத்தை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு சிபிஐக்கும், அமலாக்கத்துறைக்கும் உள்ளது என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இதன் மூலமே குற்றமிழைத்தோர் தண்டிக்கப்படுவார்கள். சிபிஐயும் அமலாக்கத்துறையும்  சட்டரீதியாக அனைத்து மேல்நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்” என்று கூடுதல் அம்சங்களுடன் சிபிஎம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. 

மதவாத எதிர்ப்புக் கூட்டணி என வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளை எதிர்த்து சிபிஎம் கட்சி எடுத்திருந்த கடுமையான நிலைப்பாட்டில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதா எனும் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பேசினோம். 

“இதை இரண்டுவிதமாகவே பார்க்கமுடியும். தீர்ப்பளித்த நீதிபதியே, அலைக்கற்றை வழக்கில் ஆஜராகவேண்டிய உயர் அதிகாரிகள் வராமல் கீழ்நிலை அதிகாரிகள்தாம் வந்தார்கள்; தொடக்கத்தில் காட்டிய ஆர்வத்தை அரசுத்தரப்பு காட்டவில்லை என வழக்கைத் தொடுத்த சிபிஐ அமைப்பின் மீது விமர்சனம் வைத்துள்ளார். அந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை என்பதால், அதைவைத்து தொடுக்கப்பட்ட பணப்பரிமாற்ற வழக்கும் அடிபட்டுவிட்டது. இதில் அடுத்து மேல்முறையீடு செய்வதே உரிய செயல்பாடாக இருக்கமுடியும். அதைச் செய்யவேண்டும் என சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தெளிவாகக் கூறியுள்ளது. இதுதான் எங்கள் நிலைப்பாடு.

இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் தொடர்பா எனக் கேட்பது ரொம்பவும் அனுமானத்தின் அடிப்படையிலானதாக இருக்கிறது. முன்னர் ஜெயலலிதா தொடர்புடைய சிறுதாவூர் பங்களா குறித்து நாங்கள்தான் பிரச்னை எழுப்பினோம்; விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது அதிமுகவுடன் கூட்டணி இருந்தது. தேர்தல் நிலை என்பது குறிப்பிட்ட காலத்தில் அரசியல்நிலை எதனுடன் தொடர்புடையது என்பதைப் பொறுத்தது; அதிமுகவை தன் கைப்பாவையாக பாஜக பயன்படுத்திவரும்நிலையில், அதைத் தோற்கடிக்க தனி மேடையில் திமுகவை ஆதரிப்பது என முடிவெடுத்தோம். நீங்கள் சொல்வதைப் போல ஒரு கூட்டணி வராதபோது, நாங்கள் சேர்ந்து போகவில்லை. பத்து, இருபது சீட்டுகளுக்காக ஒரு கட்சியுடன் கூட்டுவைப்பது என்றால் எந்தக் கட்சியுடனாவது கைகோத்து விடமுடியும். எல்லாருடனும் சேர்ந்து நிற்பதா, அப்படி காங்கிரஸுடன் முன்னர் கைகோத்தபோது அது மக்களுக்கான கொள்கைகளைச் செயல்படுத்தாமல் போய்விட்டதே; அதைப் போல மீண்டும் செயல்படுவதா என வரும் ஏப்ரலில் நடக்கும் எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்படும். அதன் பிறகே முடிவெடுக்கப்படும்” என்று விவரித்தார், கனகராஜ்.

அடுத்த கட்டுரைக்கு