Published:Updated:

இவர்கள் இல்லையேல், இந்த உணவு இன்னும் எத்தனை நாளைக்கு? #NationalFarmersDay

இவர்கள் இல்லையேல், இந்த உணவு இன்னும் எத்தனை நாளைக்கு? #NationalFarmersDay
இவர்கள் இல்லையேல், இந்த உணவு இன்னும் எத்தனை நாளைக்கு? #NationalFarmersDay

இவர்கள் இல்லையேல், இந்த உணவு இன்னும் எத்தனை நாளைக்கு? #NationalFarmersDay

காய்த்துத் தொங்கும் ஒருமரத்தைப் பார்க்கும்போது, அதன் கனிகள்தாம் நம் கண்களுக்குத் தெரியும். ஆனால், அத்தனை கனிகளுக்கும், இலைகளுக்குமான சத்துகளை அனுப்ப ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் வேர்களின் வேதனை நாமறியாதது. ஒரு சின்னஞ்சிறு செடி வளர, தண்ணீரும், சத்துகளும் போதுமான பராமரிப்பு மட்டும் போதாது. நாம் கொடுக்கும் சத்துகளை அப்படியே எடுத்துக்கொள்ளும் சக்தி வேர்களுக்கு இல்லை. குழந்தைகளுக்குக் கொடுக்கும் சோற்றை, பிசைந்துக் கொடுப்பதுபோல, உரங்களையும் உடைத்துக்கொடுக்க வேண்டும். அதன் மூலங்களை சிதைத்துக்கொடுத்தால்தான் வேர்களால் அவற்றை எடுத்துக்கொள்ள முடியும். வெளியிலிருந்து கொடுக்கும் இடுபொருள்கள் மட்டுமல்லாது... மண்ணிலேயே பல நுண்ணூட்டச் சத்துகள் இருக்கின்றன. அவற்றையும் வேர் உறிஞ்சிக்கொள்ளும் வகையில் மாற்றித்தர வேண்டும். இதையெல்லாம் செய்வது யார்? அதை செய்வதற்காக லட்சக்கணக்கான பணியாளர்களை, மண்ணுக்குள்ளேயே வைத்திருக்கிறது இயற்கை. ‘இது நான் நட்ட மரம்’ என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், 'நான் வளர்த்த மரம்' யாரும் உரிமை கொண்டாடிவிட முடியாது. நீங்கள் நடவு செய்த செடி, லட்சக்கணக்கான உயிர்களின் உழைப்பால்தான் மரமாக நிற்கிறது என்ற உண்மையை நாம் உணர்வதே இல்லை. மண்ணுக்கு மேலே மனிதர்கள் உழைப்பதைப் போல், பல்லுயிர் பெருக்கம் சிதையாமல் காக்கும் பணியில், கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மண்ணுக்குள்ளே உழைத்துக்கொண்டே இருக்கின்றன. மண்ணுக்குள் சதா நடந்தேறிக்கொண்டே இருக்கும் அந்த குருஷேத்திர போரால்தான், உலகம் இன்னமும் உயிர்ப்புடன் உலவுகிறது. அந்த ஊதியமில்லா உழைப்பாளர்கள், ஒரு நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டால், என்னவாகும்?

பூமியில் இறந்து விழும் எந்த உடலும் இற்றுப்போகாது... இலைதழைகள் மக்காது. ஒளிச்சேர்க்கை நடக்காமல், பயிர்களும், உயிர்களும் உண்ணாநோன்பு இருக்க வேண்டிய நிலை ஏற்படும். வளிமண்டலம் விழி பிதுங்கி நிற்கும். கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறிய உயிர்களின் ஓய்வே இத்தனை விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில், நமக்காகச் சேற்றிலும், வெயிலிலும், மழையிலும் உழைத்து, உழைத்து, வியர்வையில் பயிர் வளர்த்து, நம் பசிபோக்க அன்னம் படைக்கும் விவசாயத் தோழர்கள், விவசாயத்தை விட்டு விலகி நின்றால் என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே பீதியாகிறதல்லவா? அவர்களது தேவை புத்தியில் உரைக்கிறதல்லவா? இத்தனை முக்கியமான ஆத்மாக்களை ஆண்டுக்கொருமுறையாவது நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும் அல்லவா? அப்படி நன்றி சொல்லும் நாள்தான் இன்று. ஆம், இன்று தேசிய விவசாயிகள் தினம். 

பாருக்கே படியளிக்கும் அந்தப் பாட்டாளிகள் தற்போது மிக மோசமான சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள். விவசாயிகள்தாம் இந்த நாட்டின் முதுகெலும்பு என ஒவ்வொரு தேர்தலின் போதும் உரக்க உச்சரிக்கும் அரசியல் 'வியாதிகளின்' உதடுகள், வெற்றிக்குப் பிறகு விவசாயிகளின் பரிதாபநிலைக்காக உச் கொட்டக்கூட தயாராக இல்லை. 

ஆட்சியாளர்களின் பாராமுகம் ஒருபக்கம், இயற்கையின் கடும்கோபம் வறட்சி, புயல், வெள்ளம் மறுபக்கம் என, முன்னெப்போதும் இல்லாத மிகமோசமான நிலையில் சிக்கித் தவிக்கிறது விவசாயம். வெளுத்ததெல்லாம் பால் என்ற அந்த வெள்ளை மனதின் அறியாமையை பயன்படுத்தி குளிர்காய்கிறது பெருநிறுவனங்களும், அரசும். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே குறிக்கோள் எனத் தொடங்கப்பட்டதுதான் வேளாண்மைத் துறையும், ஆராய்ச்சி நிறுவனங்களும். ஆண்டுதோறும் திட்டங்கள், ஆராய்ச்சிகள் என்ற பெயரில் கோடிகளை விழுங்கிக்கொண்டிருக்கும் இந்த மலைப்பாம்புகளால், விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதுதான் யதார்த்தம். சகித்து சகித்து சலித்துப்போன உள்ளமும், உழைத்து உழைத்து காய்த்துப்போன கைகளுமாய் உதவிக்கு ஆளில்லாமல் உழன்றுக்கொண்டிருக்கிறார்கள் உழவர்கள்.

கோடையில் கிடைக்கும் மழையாக, காய்ப்பேறிப்போன கைகளுடன் சமீபநாள்களில் இணைந்திருக்கின்றன இளைஞர்களின் கரங்கள். இது ஆறுதலான செய்தி என்றாலும், இந்த எண்ணிக்கை தமிழக மக்கள் தொகையில் வெறும் 2 சதவிகிதம்தான். மற்றவர்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்வதுடன் தங்கள் பிறவிக்கடனை தீர்த்துக்கொள்கிறோம். வாடிவாசல், நெடுவாசல் எனப்போராடும் இனமான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்ல.. அவரசமானதும் கூட. 

இன்றைக்கு விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைக்கு இந்தச் சமூகம்தான் முழுபொறுப்பு ஏற்கவேண்டும். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யக் கூடாது என்பார்கள். ஆனால், நமக்குச் சோறு போட்ட விவசாயிகள், உயிரை மாய்த்துகொண்டபோது, வெறும் ‘உச்‘ சொல்லி நகர்ந்தோமே..இதுதான் நாம் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் முறையா? ஒரு தொழிலால் லாபமில்லை என்றால், அடுத்த தொழிலுக்குத் தாவி விடுவார்கள் தொழிலதிபர்கள். பணியில் போதிய ஊதியம் கிடைக்காதபோது, வேறு வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள் ஊழியர்கள். ஆனால், தொடர் தோல்விகளே பரிசாகக் கிடைத்தாலும், விவசாயத்தை விடாமல் செய்பவர்கள் விவசாயிகள். தனக்கான ஆதாயம் கையளவே ஆனாலும் பாருக்கே படியளக்கும் ஆத்மார்த்த திருப்தியில் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் உன்னத ஆத்மாக்கள் அவர்கள்.

உரலுக்கு ஒருபக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி. ஆனால், விவசாயிகளுக்கோ திரும்பும் திசையெல்லாம் இடி இறங்கிக்கொண்டே இருக்கிறது. ஓடி ஓடி களைத்த நிலையில், உயிர் தேடி அலையும் தற்கொலை எமனின் கையில், தானே சென்று அடைக்கலமாகிறார்கள். இது எத்தனை பெரிய சமூகக் கேடு. விவசாயத்தை தொழிலாகப் பார்க்காமல், அதை பண்பாடாக, கலாசாரமாக பார்த்த மண் இது. மண்ணுக்கும் தமிழர்களுக்குமான உறவு உணர்வுபூர்வமானது. தற்போதைய பிரச்னைக்குக் காரணம் வறட்சி என்று சொல்லப்பட்டாலும், ஆண்டுக்கொரு முறை வறட்சியையும், வெள்ளத்தையும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஒரு பற்றாக்குறையும், ஓர் அபரிமிதமானதும் சாத்தியமான தேசத்தில், ஏன் இரண்டையும் ஒரு புள்ளியில் இணைக்கக் கூடாது. இன்றைய நிலைக்குப் பருவநிலை மாற்றம் முக்கியக் காரணம் என்றாலும், மனிதர்களுடைய தவறுகள், கைவிட்ட பாரம்பர்ய தொழில்நுட்பங்கள், நுகர்வுவெறி, பாரம்பர்ய பயிர்களிலிருந்து பணப்பயிருக்கு மாறியது, பன்னாட்டுச் சூழ்ச்சி என வகைவகையான காரணிகளின் தொகுப்புதான் தற்போதைய வறட்சி. நாம் என்ன தவறு செய்திருக்கிறோம்? இனி என்ன செய்ய வேண்டும்? தற்கொலையிலிருந்து மீண்டும் தற்சார்பு என்ற பாதுகாப்பு வளையத்துக்குள் செல்லும் வழிமுறைகள் என்ன என்பதை இப்போதாவது அரசுகள் யோசிக்க வேண்டும்.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? அனைத்து வளங்களும் இருக்கின்றன. ஆனால் அவை செல்வாக்குப் பெற்றவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கின்றன என்பதுதான் பிரச்னை. விவசாயிகளுக்கு ஆதரவாக அரசாங்கம் ஏராளமான திட்டங்களை வைத்திருக்கிறன. ஆனால், அது ஒருசில பெரும் விவசாயிகளைத் தாண்டி, வேர்வரை நீளவில்லை என்பதுதானே யதார்த்தம். ஏன் இத்தனை முரண்பாடு? இங்கு சட்டங்கள் மட்டுமல்ல.. திட்டங்களும் காகிதங்களில் மட்டுமே இருப்பதுதான் அனைத்துப் பிரச்னைக்குமான அடிப்படை. வேளாண்துறையில் தேவையான ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் விவசாயிகளின் தேவைகளை அல்ல.. சாதாரண சந்தேகங்களுக்கு விடையளிக்கக்கூட நேரமில்லை. இப்படி, பன்னாட்டு நிறுவனங்கள், அரசாங்கம், வேளாண்துறை, அரசியல்வாதிகள், சமூகவிரோதிகள், கமிசன் மண்டி முதலாளிகள் என அனைத்துத் தரப்பிலும் அடித்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது விவசாயம். குற்றுயிரும், கொலையுயிருமாய் தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த விவசாயத்தை எப்பாடுபட்டாவது காப்பற்ற வேண்டும். விவசாயிகளுக்காக மட்டுமல்ல.. நமது நாளைய உணவுக்காகவும் கூட. அதுதான் உலக விவசாயிகள் தினத்தில் நமது உறுதிமொழியாக இருக்க வேண்டும்.

 இவர்கள் இல்லையேல், இந்த உணவு இன்னும் எத்தனை நாளைக்கு? 

அடுத்த கட்டுரைக்கு