Published:Updated:

2ஜி... ஊழல் இல்லை. ஆனால், 122 உரிமங்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன..?

2ஜி... ஊழல் இல்லை. ஆனால், 122  உரிமங்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன..?
2ஜி... ஊழல் இல்லை. ஆனால், 122 உரிமங்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன..?

2ஜி... ஊழல் இல்லை. ஆனால், 122 உரிமங்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன..?

176 என்கிற எண்ணுக்கு அடுத்து 10 பூஜ்யங்கள். இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கைப்படி இத்தனை இலக்க எண்கள், அதாவது 1.76 லட்சம் கோடி ரூபாய் 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தால் இழப்பீடு ஏற்பட்டதாகக் காண்பிக்கப்பட்டது. டைம்ஸ் இதழின் 2011 ஆம் ஆண்டுக்கான டாப் 10 அதிகார துஷ்பிரயோகப் பட்டியலில் அந்த வருடம் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் இடம்பிடித்திருந்தது. இந்தியாவில் ஊழல் ஒன்றும் புதிதாக நடந்துவிடவில்லை என்றாலும் கணக்காய்வாளர் காட்டிய இழப்பீட்டு எண் அதுவரை இல்லாத அளவாக பிரம்மாண்டமாக இருந்தது. 

இதன் எதிரொலியாக 2012 ஆம் வருடம் உச்சநீதிமன்றம் 122 அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்தது. இந்த அலைக்கற்றை உரிம ரத்து கிட்டத்தட்ட 5.3 கோடி தொலைபேசி இணைப்புகளை பாதித்தது. இந்திய டெலிகாம் இணைப்புகள் மறுவரையறை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. ஏற்கெனவே ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்துக் கொண்டிருந்த அன்னா ஹசாரேவின், 'ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்க'த்துக்கு இது தீனி போடுவதாக இருந்தது. அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக மோடி தரப்பு 'ஊழலற்ற இந்தியா' என காங்கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய இதுவே காரணமாகவும் அமைந்தது.

ஆனால், இதற்கு எதிர் க்ளைமாக்ஸாக கடந்த வியாழனன்று இந்த 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி சைனி தலைமையிலான சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், ‘ஊழல் உண்மையில் நடக்கவில்லை, அப்படி நடந்ததாக பிம்பம் உருவாக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாகக் கூறப்பட்டவை அனைத்தும் புரளியும் புனைவுமாக இருப்பதால், இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்' என்று கூறி தீர்ப்பளித்தார். புரளியும் புனைவுமாக இருந்தாலும் 122 அலைக்கற்றை உரிமங்கள் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

2012 இல் அப்போது சில சமூக ஆர்வலர்களால், 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டு முக்கியக் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஒன்று, இயற்கைச் செல்வங்களை வெளிப்படையற்றத் தன்மையில் அரசே கையாளலாமா? இரண்டு, அலைக்கற்றை விநியோகத்தில், அப்போதைய தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா பாரபட்சமாக சுயலாப நோக்கத்துடன் செயல்பட்டாரா? என்பதுதான். 

அதற்கு கருத்து சொன்ன உச்சநீதிமன்றம், ‘நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்ட ஆவணங்களின்படி ராசா தனது சுயலாபத்துக்காக, சில கம்பெனிகளுக்கு ஆதரவாக கேட்ட விலைக்கு அலைவரிசைகளை விற்றார்' என்று கூறியது. நீதிமன்றத்தைப் பொருத்தவரை ராசா அலைக்கற்றைகளை விற்ற கம்பெனிகளின் உரிமங்களின் அடிப்படையில் அது தனது கருத்துகளை வெளியிட்டிருந்தது. 

மேலும் அலைக்கற்றை விநியோகம் 'முதலில் வருபவருக்கே முன்னுரிமம்' என்கிற அடிப்படையில் நடக்காமல் ஏலமுறையில் நடத்தப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்தால் மட்டுமே இப்படி அலைக்கற்றைகளை விநியோகிக்கச் சாத்தியம் என்று கூறி அந்த நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்தது. 

ஆனால், அண்மையில் தீர்ப்பளித்துள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றமோ இதனை வேறொரு கோணத்தில் அணுகுகிறது. "சி.பி.ஐ நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரெக்கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல குற்றம்சாட்டப்பட்டவர்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை தரப்படும் என்பதிலோ, கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதிலோ, ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்களின் தகுதி ஆய்வினைப் புறக்கணித்ததாகவோ எவ்வித ஆதாரங்களும் இல்லை” என்று அது தனது தீர்ப்பில் கூறியிருந்தது. 

2012 ஆம் ஆண்டு இந்த வழக்கில், ஒரு மனுதாரராக இணைந்த பத்திரிகையாளர் பிராஞ்சய் குகா இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து... கருத்து கூறுகையில், “சைனியின் இந்தத் தீர்ப்பு இறுதியானப் பதிலாக இல்லாமல், இன்னும் பல கேள்விகளையே எழுப்பியுள்ளது. 2 ஜி அலைக்கற்றை விநியோகம் ஜனநாயகத்துக்குப் புறம்பாக நடந்தது என்பது அழிக்கப்பட முடியாத உண்மை” என்கிறார்.

இதில் கருத்து கூறியுள்ள மத்திய அரசு வழக்கறிஞரான சித்தார்த் லுத்ரா... “2012 இல் இந்த வழக்கு தொடர்பான பதிவுகள் உச்சநீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டபோது அது பொதுநலவழக்கு என்கிற அடிப்படையில் நீதிமன்றம் கருத்து கூறியது. ஆனால், சி.பி.ஐ நீதிமன்றம் விரிவான பார்வையில் இந்த வழக்கை அணுகியாக வேண்டும். அப்படி அணுகிய நிலையில், பதிவுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதுதொடர்பான வலுவான ஆதாரங்கள் கொடுக்கப்படாததால் சைனி இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார்” என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு