Published:Updated:

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம்!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம்!
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம்!

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம்!

‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் 15 நாட்களுக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையம். 

கடந்த 16-ம் தேதி (16-12-2017) அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அனைவராலும் நேசிக்கப்பட்ட அவரது உடல்நிலை பற்றிய உண்மை நிலையை அப்போதைய சூழ்நிலையில் வெளியே சொல்லியிருந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருந்ததால், உண்மையை மறைத்து அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று” என்று சொல்லி அனைவரையும் திடுக்கிட வைத்திருந்தார். 
இந்நிலையில், 'ஜெயலலிதா மருத்துவச் சிகிச்சை பெறும் வீடியோ' வெளியாகி தமிழக அரசியல் அரங்கில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. இதற்கிடையில் தற்போது, விசாரணை ஆணையமும் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து சசிகலாவிடம் விளக்கம் கேட்டுள்ளது.

22-9-2016 அன்று அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவச் சிகிச்சையில் இருந்த அவருக்கு, என்னென்ன சிகிச்சைகள் தரப்படுகின்றன எனக் குறிப்பிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியான செய்திகளிலேயும்கூட பல்வேறு முரண்பாடுகள் இருந்தன. 

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் குறித்து ஜூனியர் விகடனில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு வந்தோம். அந்தச் செய்திகளின் தொகுப்பு இங்கே...

ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகி 50-வது நாளை எட்டவிருந்த சூழலில், மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி,  ''தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதல்வர் உணர்கிறார். நன்றாக இருக்கிறார். வீட்டுக்கு எப்போது போகவேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்'' என அறிவித்தார்.

9-11-2016 தேதியிட்ட ஜூனியர் விகடனில்,

'கான்ஷியஸ்... அன்கான்ஷியஸ்' என்ற தலைப்பிலான செய்தி வெளியானது. அதில், ''அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள எம்.டி.சி.யு வார்டில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் கருவிகள் உதவி தேவைப்படுகிறது. கால் மற்றும் கைகள் இயக்கத்துக்கு பிசியோதெரபி செய்யப்படுகிறது. ஜெயலலிதாவின் கழுத்தில் இணைக்கப்பட்டுள்ள செயற்கை மூச்சுக்குழாயை (tracheostomy) தற்காலிகமாக எடுத்துப் பார்க்கிறார்கள். முழுமையாக அக்கருவி இல்லாமல் அவரால் சில நிமிடங்கள் கூட இயங்க முடியவில்லை என்பதுதான் மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நேரங்களில் கான்ஷியஸ் ஆகவும் சில நேரங்களில் அன்கான்ஷியஸ் ஆகவும் மாறிமாறி இருக்கிறார். அதனால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை என்று மருத்துவர்களுக்குள் சொல்லிக்கொள்கிறார்கள். 

'என்னால் முடிந்த அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். இதற்கு மேல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமானால், லண்டனுக்கு வந்தால்தான் செய்ய இயலும்' என்று மருத்துவர் ரிச்சர்டு பியெல் சொல்லிச் சென்றதாகக் கூறப்படுகிறது.'' 

 6-11-16 தேதியிட்ட இதழில், 'ரேகை சொல்லும் உண்மை' 

'ஜெயலலிதாவுக்கு Tracheostomy செய்திருப்பதால், அவரால் வலது கையில் கையெழுத்துப் போட முடியாது. அதனால் அவரின் இடது கை விரல் ரேகைப் பதிவை என் முன்னிலையில் வைத்திருக்கிறார்' என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறுதுளை அறுவைச் சிகிச்சை நிபுணரும் சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியருமான பி.பாலாஜி ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி விண்ணப்பங்களில் குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டிருக்கிறார். அதற்கு சாட்சியாக அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் பாபு பிரகாம் கையெழுத்து போட்டுள்ளார்.'

2-11-17 தேதியிட்ட இதழில்,

''ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துவரும் அப்போலோ மருத்துவர் ஒருவர் கூறும்போது, ''தற்போது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு எந்த ஆன்டிபயாட்டிக் மருந்தைத் தந்தாலும், அதை ஏற்கெனவே ஜெயலலிதா பயன்படுத்தியிருக்கிறார். அதனால், அந்த மருந்து தற்போது மெதுவாகத்தான் வேலை செய்கிறது. ஜெயலலிதாவின் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வென்டிலேட்டர் உதவியுடன்தான் சுவாசிக்கிறார். அது இல்லாவிட்டால், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதயத்துக்கு பேஸ்மேக்கர் இணைக்கப்பட்டுள்ளது. தொண்டை மூச்சுக்குழலில் துளையிட்டு (tracheostomy) நடக்கும் சிகிச்சையும் தொடர்கிறது.''

5-10-2016 தேதியிட்ட இதழில்,

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.சி.கில்நானி, மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சன் த்ரிகா, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

8-10-2016 தேதியிட்ட இதழில், 

முதலமைச்சருக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம், பாஸிவ் பிசியோதெரபி, நோய்த் தொற்றுப் பிரச்னைகள் இருக்கின்றன.

28-12-16 தேதியிட்ட இதழில்,

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்திலேயே ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருந்த 'அக்குபஞ்சர்' டாக்டர் சங்கரின் பேட்டியில்,

''கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், ஜெயலலிதாவுக்கு சர்க்கரையின் அளவு 300-க்கு மேல் இருந்தது. ரத்த அழுத்தம், மூட்டுப் பிரச்னையாலும் அவதிப்பட்டு வந்தார். கார்டிகோ ஸ்டீராய்டு (cortico steroid) மாத்திரைகள் அதிக அளவில் எடுத்துக்கொண்டால், கூன் விழும்; எதிர்ப்பு சக்தி குறையும்; முகத்தின் கீழ் கொழுப்பு சேர்ந்து முகம் வட்டவடிவமாக மாறும். 'மூன் ஃபேஸ் சிண்ட்ரோம் (moon face syndrome) என்ற இந்தப் பாதிப்பு ஜெயலலிதாவுக்கு அதிகமாக இருந்தது'' என்று கூறியிருந்தார். 

- இவ்வாறு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவரங்கள் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஜூனியர் விகடனில் வெளியாகியிருந்தன. ஜெ. சிகிச்சை வீடியோ, விசாரணை ஆணைய நடவடிக்கைகளுக்குப் பிறகு மறுபடியும் இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது. விரைவில் மக்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் என நம்புவோம்!

அடுத்த கட்டுரைக்கு