Published:Updated:

ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா?

ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா?
ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா?

ரசிகர்கள் உருவாக்கியுள்ள புதியகொடி..! ரஜினிகாந்தைக் கவருமா?

கன்னியாகுமரி பாதிப்புகள், மீனவர்கள் மாயம், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு 2ஜி தீர்ப்பு இவைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதன்மைச் செய்தியாக ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு ஊடகங்களில் இடம் பெற்றுவிட்டது. டிசம்பர் 26-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை ஆறு நாட்கள் தன் ரசிகர்களைச் சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இதையொட்டி, ரஜினி ரசிகர்கள் வழக்கம்போல் தங்களது கவன ஈர்ப்புச் செயல்களில் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த மே மாதம் ரஜினியுடனான ரசிகர்கள் சந்திப்பின் போதே, ரசிகர்கள், அவர்கள் உருவாக்கிய ஒரு கொடியை பிரபலப்படுத்த  முயற்சித்தார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். அப்போதே, அந்தக் கொடிக்கு தங்கள் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற முயற்சித்து அது அவர்களால் முடியாமல் போனது. இந்த வருடம் தலைவரின் பிறந்தநாளின்போது, 2012-ம் வருடம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ரஜினி கலந்துக்கொண்டதுபோல கூட்டம் நடைபெறும். அதில் இந்தக் கொடிக்கு ரஜினியின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடலாம் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், எந்த வருடமும் இல்லாத வழக்கமாக, ரஜினிகாந்த் எந்தவித பரபரப்பும் இல்லாமல் தனது பிறந்தநாளை அமைதியாக கடந்து போனார். ராகவேந்திரர் கோவிலுக்குச் சென்றதோடு சரி.

இதோ,இந்தமுறை நடக்கும் ரசிகர்கள் சந்திப்பின் போது, எப்படியாவது அந்தக் கொடிக்கு ரஜினிகாந்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டிய ஏற்பாடுகளை சில மாவட்டப் பொறுப்பாளர்கள் சத்தமில்லாமல் செய்துக்கொண்டிருக்கின்றனர். அது குறித்துத் தகவல் தெரிந்து, அந்தக்கொடியில் அப்படி என்ன விசேஷம் என்று விசாரித்தோம்.

"2006-ம் வருடம் காரைக்குடியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் நீலம் சிவப்பு பின்னணியில் வெள்ளை நிற நட்சத்திரத்தில் ரஜினி சிரிப்பது போல் கொடி ஒன்று தயார் செய்து, பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. விசயம் தெரிந்து அந்த மன்ற நிர்வாகியை அடிப்படைப் பொறுப்பிலிருந்து நீக்கியதோடு, ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில்,தலைமை அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக இதுபோன்ற செயல்களில் மன்றப் பொறுப்பாளர்கள் ஈடுபடக்கூடாது. அப்படி செயல்பட்டால், அடிப்படைப் பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யப்படுவீர்கள்' என்று கடுமையாக எச்சரித்திருந்தார். நாங்களும் ரஜினியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அது போன்ற காரியங்களில் ஈடுபடாமல் இருந்தோம். கிட்டதட்ட பத்து வருடங்கள் தனிக்கொடி, கட்சிக்குப் பெயர் போன்ற விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருந்தோம். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தலைவரை அரசியலுக்கு வருமாறு போஸ்டர் அடித்து ஒட்டுவதோடு சரி. இந்த வருடம்தான் தலைவர் எங்களைச் சந்திக்க நாள் குறித்தபோது, இந்தப் புதியக்கொடியை எங்கள் மன்ற நிர்வாகிகள் உருவாக்கினார்கள். ரஜினியிடமிருந்து இதற்கு எதிர்ப்போ, கண்டன அறிக்கையோ வரவில்லை. அந்த நம்பிக்கையில் இந்தக் கொடிக்குத் தலைவரின் அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம். இந்தக்கொடியின் வடிவமைப்பைப் பார்த்ததுமே, இரண்டு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, ஆன்மிகவாதிகள் ரஜினியின் பின்னால் வருவார்கள். காரணம் பிஜேபியினரை ஈர்க்கும் தாமரை, காங்கிரஸ்காரர்களை ஈர்க்கும் கை, ஆன்மிகவாதிகளை கவரும் பாபா முத்திரை மூன்றுமே இந்தக் கொடியில் இருக்கிறது" என்கிறார்கள்.

ஆனால், ரஜினியின் மனநிலையை நன்றாக அறிந்தவர்களோ, "கட்சி தொடங்குவதாக இருந்தால், அதற்க்கென்று கொடி, கட்சியின் பெயர் போன்றவற்றை ரஜினியே முடிவெடுப்பார். பாபா குகையில் தீட்சை பெற்றவர் அவர். இதற்கென்று விரதம் இருந்து, பாபா உத்தரவுக்காகக் காத்திருப்பார். அவருடைய தியானத்தில் கட்சியின் பெயரும் கொடியின் வடிவமைப்பும் உத்தரவாக அருளப்படும் என்று ரஜினி நம்புகிறார். அப்படி பெறப்படும் கொடியும் பெயருமே ரஜினியின் அரசியல் அடையாளங்களாக இருக்கும்" என்று உறுதியான குரலில் கூறுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு