Published:Updated:

அரசியல் தலைவர்கள் முன்னிலையில் குட்டிக்கதை சொன்ன குஷ்பு!

அரசியல் தலைவர்கள் முன்னிலையில் குட்டிக்கதை சொன்ன குஷ்பு!
அரசியல் தலைவர்கள் முன்னிலையில் குட்டிக்கதை சொன்ன குஷ்பு!

அரசியல் தலைவர்கள் முன்னிலையில் குட்டிக்கதை சொன்ன குஷ்பு!

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் 70-வது பிறந்தநாள் விழா சென்னை, வேலப்பஞ்சாவடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தவிழா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்தநாள்விழா என்பதை விட காங்கிரஸ் கட்சியின் விழா என்றே கூறலாம். அந்தளவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் நிறைந்திருந்தது விழாப் பந்தல்.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் காதர் மொகிதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே ரங்கராஜன் எம்.பி., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், முன்னாள் மத்திய அமைச்சர் கமல் நாத், புதுச்சேரி பேரவைத் தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் இராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர்.சி மற்றும் பல கட்சிகளின் தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். அரசியல் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததோடு மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கையும் வைத்தனர்.

விழாவில் பேசிய குஷ்பு சுந்தர்.சி, “விழாவின் நாயகன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். இது வெறுமனே பிறந்தநாள் விழா மட்டுமல்ல. இந்த விழாவானது அடுத்து வரும் தேர்தலில் மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான அரசும், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசும் அமையவேண்டும் என்பதற்கான முன்னோட்ட விழா. 7 வருஷமாக பொய்யை மட்டுமே சுமந்து வந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஓ.பி சைனிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். 

மேலும், தொடர்ந்து பேசிய குஷ்பு, தொண்டர்களுக்கு ஒரு குட்டிக் கதையையும் சொன்னார். "ஒரு ஊரில் வசித்து வந்த ஒருவனுக்கு தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த பிரகாசமான வெளிச்சம் தினமும் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. ஒருநாள் அது என்ன வெளிச்சம் என்று பார்க்க வெளிச்சத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால், அவனால் அந்த பிரகாசமான வெளிச்சத்தை அடையவே முடியவில்லை. இப்படியே தினம் தினம் அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால், அவனால் அந்த வெளிச்சத்தை அடையவே முடியவில்லை. இப்படியே மூன்று ஆண்டுகள் ஓடியது. தனது கண்ணில் ஏதோ பிரச்னை உள்ளது என அவன் எண்ணத் தொடங்கினான். அதனால் மருத்துவரை சந்தித்தான். காரணத்தை கேட்டறிந்த மருத்துவர் 'இந்தப் பிரச்னை உனக்கு மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அனைவருக்குமே உள்ளது. உன் கண்ணில் ஒரு பிரச்னையும் இல்லை என்று கூறி அந்த நபரை போகச் சொன்னார்.

அப்படிதான் தற்போது இந்தியாவும் இருந்துவருகிறது. டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா என ஏதேதோ சொல்லி, ஒரு பிரகாசமான இந்தியாவை உருவாக்கிவிட்டதாக பி.ஜே.பி அரசு சொல்லி வருகிறது. ஆனால், அவர்கள் உருவாக்கியதாக சொல்லும் இந்தியாவும் இந்தக் கதை போன்றதே. விரைவில் பி.ஜே.பி அரசை தோல்வியுறச் செய்து ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வெளிச்சம் பெறும்” என்றார் குஷ்பு சுந்தர்.சி.

விழா நிறைவில், அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பொன்னாடை அணிவித்து 70 வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு