Published:Updated:

ஆர்.கே.நகர் வெற்றிக்குக் கைகொடுத்ததா கூட்டு மனோபாவம்? - சமூக உளவியல் அலசல்

ஆர்.கே.நகர் வெற்றிக்குக் கைகொடுத்ததா கூட்டு மனோபாவம்? - சமூக உளவியல் அலசல்
ஆர்.கே.நகர் வெற்றிக்குக் கைகொடுத்ததா கூட்டு மனோபாவம்? - சமூக உளவியல் அலசல்

மிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து, சென்னை ராதாகிருஷ்ணன்நகர்வாசிகள் சுயேச்சை வேட்பாளர் தினகரனை வெற்றிபெறச் செய்துள்ளதன் பின்னணியில் ‘கும்பல் மனோபாவம்’(crowd phsycology) செயல்பட்டிருக்கிறது என சமூக உளவியல்சார்ந்த கருத்து முன்வைக்கப்படுகிறது. 

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரோடு கால்நூற்றாண்டு காலம் உடனிருந்த சசிகலா, ஜெ.வுடன் சேர்ந்து ஊழல்செய்து சொத்துக்குவித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அதிமுகவில் காட்சிகள் மாறின என்பதெல்லாம் பழைய கதை.
கட்சியைக் கைப்பற்றும் போட்டியில் வென்ற எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றியதால், இடைத்தேர்தலில் வெற்றி உறுதி என்று நம்பிக்கையை உண்டாக்கியது. சசிகலாவால் அதிமுகவின் துணைப்பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், அந்தக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அவர் போட்டியிடுவாரா மாட்டாரா என கேள்வி நீடித்தநிலையில், தினகரன் சுயேச்சையாகப் போட்டியிடுவது அறிவிக்கப்பட்டது. 

அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ் இருவருமே தொகுதியில் நன்கு அறியப்பட்டவர்கள் என்பதாலும் அவர்களுக்கு இடையில்தான் போட்டி என முதல்கட்ட நிலைமை காணப்பட்டது. ஆனால் தினகரன் தரப்பினர் தொகுதிக்குள் இறங்கியபின்னர் அவருடனான போட்டியை ஆளும் கட்சி கடுமையாகவே எதிர்கொண்டது. கடைசி ஒரு வாரத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி என்பதைவிட, அதிகாரப்பூர்வமான அதிமுகவுக்கும் அதிகாரத்தை இழந்த அதிமுகநிர்வாகியான தினகரன் தரப்புக்கும் நேருக்குநேர் முட்டல்மோதலாக பல இடங்களில் பிரச்னைகள் ஏற்பட்டன. 

சில இடங்களில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக தினகரன் தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கையும் களவுமாக சிலரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தபோதும், அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. தினகரன் தரப்பினரும் 10 ரூபாய், 20 ரூபாய் டோக்கன் முறையில் ஓட்டுக்குப் பணம் தருவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். 

வாக்காளர்களுக்குப் பணம் தரமுயன்றதாக தினகரன் தரப்பினர் மீது வழக்கு பதியப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர். பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசையும் ஓட்டுக்குப் பணம் தரப்படுவதால் தேர்தலை ரத்துசெய்யவேண்டும் எனக் கூறி, வாக்குப்பதிவுக்கு முந்தைய பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நேரத்தில் தொகுதித் தேர்தல் அதிகாரியும் டெல்லிக்குச் செல்ல, கடந்த முறையைப் போல இந்த முறையும் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்படுமோ என்று பதற்றம் ஏற்பட்டது. அதற்கு மத்தியில் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில், 77% வாக்குகள் பதிவாகின. 

இடைத்தேர்தலில் மிக அதிகமான வாக்குப்பதிவு இல்லை என்றாலும், யாருக்கு வெற்றி என்பதை வாக்குப்பதிவு அளம்கூட கண்ணாமூச்சி காட்டியதைப் போல அமைந்தது. பல தரப்பினரும் எதிர்பாராத திருப்பமாக, சுயேச்சை வேட்பாளரான தினகரனுக்கு வெற்றியைத் தந்திருக்கிறார்கள், ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாக்காளர்கள். 

தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஆளும் கட்சியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் பாதியளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பது மிகவும் அரிதானது. இதற்குக் காரணம், தொகுதி முழுவதும் வாக்காளர்களிடம் நிலவிய ‘கும்பல் மனோபாவம்’ என்கிறார்கள், சமூக உளவியல் வல்லுநர்கள். 

”பொதுவாகவே நமக்கு மேல் இருக்கும் அதீதசக்திகொண்ட மனிதர்கள் சமூகத்தில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என நம்பும் ஒரு மனோபாவம் இருக்கிறது. தன்னால் செய்யமுடியாததை அந்த அதிமனிதர்(சூப்பர் ஹுயூமன்) செய்யமுடியும் என நம்புவதால்தான், திரைப்பிம்பங்களாக இருந்த எம்ஜிஆர், இப்போது ரஜினி, கமலஹாசன் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதற்கு வரவேற்பு இருக்கிறது. ஊடகங்களும் மாற்றான தனி நபர்களை தொடர்ந்து முன்னிறுத்தும்நிலையில், இந்த அதிமனிதர்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது” என்பது சமூக உளவியல் வல்லுநர்களின் கருத்து. 

இன்னொரு பக்கம், இதை ஒரு கும்பல் மனோபாவமாகப் பார்க்கவேண்டும் எனும் கருத்தும் வைக்கப்படுகிறது. கும்பல் மனநிலை (crowd pshycology) குறித்து இத்தாலியின் கிறிஸ்டோபர் காட்வெல், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எலியா கனெட்டி போன்றோர் இதைப் பற்றி எழுதியுள்ளனர்.

கனெட்டியின் எழுத்துகளை தமிழில் மொழிபெயர்த்தவருவரும் கும்பலாட்சி, கும்பல் மனநிலை குறித்து தமிழில் எழுதிவருபவருமான எழுத்தாளர் ரவிக்குமாரிடம், இந்தப் பின்னணியில் தினகரனின் வெற்றி குறித்து கருத்துகேட்டோம். 

”பாஜகவுக்கு வேறு எதையும் சிந்தித்துப் பார்க்கமுடியாதபடியாக சரியான அடி விழுந்திருக்கிறது. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் குறிப்பாக சிறுபான்மையினரின் வாக்குகள் தினகரனுக்கு இந்த வெற்றியைக் கொடுத்திருக்கின்றன. பாஜகசார்ந்த வகுப்புவாத அரசியலால் பாதிக்கப்பட்ட ஒருவராக குறிப்பிட்ட வாக்காளர்கள் தினகரனைக் கருதியிருக்கிறார்கள். அதற்காக எதிர்ப்பின் அடையாளமாக தினகரனைப் பார்த்துவிடமுடியாது. ஜனாதிபதி தேர்தல் துணை ஜனாதிபதி தேர்தலில் எல்லாம் அவர் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் இருந்தார். இவராக பாஜகவுக்கு வலிந்து ஆதரவு அளித்தார். அவர்கள் இவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனாலும் ஓபிஎஸ்+ இபிஎஸ்-ஐச் சேர்த்துவைத்ததைப் போல, மூன்று பேரையும் இந்த ஆளுநரை வைத்து கைகோர்க்கவைத்தால், இவர் அந்தப் பக்கம் போவதற்குத் தயாராகத்தான் இருப்பார். 

இந்தத் தேர்தல் முடிவானனது இந்தத் தேர்தல் ஜனநாயகத்தின் முழுமையான தோல்வியாகவும் அமைந்துள்ளது. பணம் இருந்தால்தான் யாரும் தேர்தலில் வெல்லமுடியுமா? முக்கியப் போட்டியாளர்கள் வாக்குக்குப் பணம் தரவேண்டும் என்கிற மனநிலை மிகவும் ஆபத்தானது. தேர்தல் களத்தில் எந்த சக்தியைத் தேர்ந்தெடுக்கவேண்டும், முறைகேடுகளுக்கா நியாயத்தின் பக்கமா, மோசமான நிர்வாகமா ஆட்சித்திறனா என இல்லாமல், பிரபலமா மற்றவர்களா அதுவும் அதிமுகவுக்குள் யார் தலைமைவகிக்கவேண்டும் என்பதாக வாக்காளர்களின் மனநிலை மாறிவிட்டது. பிரச்சார உத்திகளுக்கு மக்கள் பலியாகியிருக்கிறார்கள்.
இந்த ஆட்சியை அகற்றக்கூடிய வலிமை, போதுமான சட்டப்பேரவை உறுப்பினர் பலம் திமுகவுக்கு இருக்கிறது. அவர்கள் மீதான 2 ஜி குற்றச்சாட்டுகூட அடிபட்டுப்போனது. ஆனால் திமுகவோ இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் என மாற்றியமைக்கத் தவறிவிட்டது. 

பிரச்சாரத்துக்காக தினகரன் எங்கு சென்றாலும் தமிழகம் முழுவதுமிருந்து வந்த ஆயிரம் பேர் அங்கு நின்றார்கள். அவர்கள் பெரிய ஆள்பலத்தைக் காட்டினார்கள். இத்தனைக்கும் தினகரனுக்கு இருந்த எம்பி, எம்.எல்.ஏ.கள் பலமும் இல்லை. அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. இரட்டை இலைச் சின்ன வழக்கில்கூட அவர் சிறையில் இருந்துவிட்டு வந்தார். தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் பின்னுக்குப் போய், அவரை பாஜகவால் பாதிக்கப்பட்ட நபர் எனப் பார்க்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலடியாக அமைந்துவிட்டது. மைய, மாநில அரசுகளோடு தேர்தல் ஆணையமும் சேர்ந்து தினகரன் தரப்புக்கு எதிராக தன்னிச்சையாகச் செயல்பட்டதும் முக்கியமானது. இந்திய வரலாற்றிலேயே கேள்விப்பட்டிராதபடி, ஒரு விசாரணை ஆணையத்தின் சார்பில் (தினகரன் தரப்பு மீது) போலீசில் புகார் செய்ததும் நடந்தது. 

வாக்குக்குப் பணம் தரப்பட்டதைத் தாண்டி, ‘கும்பல் மனோபாவம்’ என்பது இங்கு வினை ஆற்றியிருக்கிறது. தினகரன் மீதான ஈர்ப்பும் கவனிக்கவேண்டிய அம்சம்; திமுகவின் மருதுகணேசோ அதிமுகவின் மதுசூதனனோ மக்களை ஈர்க்கக்கூடியவர்களாக இல்லை. மாறாக, தினகரனை ஒரு நாயகனாகப் பார்க்கும் மனநிலை உருவானது. கஷ்டமான நிலையில் குறிப்பாக வருமானவரித்துறை ரெய்டு நடத்தியபோது அவர் அதை சர்வசாதாரணமாகக் கையாண்டது, கோமாதா பூஜை நடத்தியது போன்றவை, அதற்கு ஊட்டம் தருவதாக அமைந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக இது தேர்தல் ஜனநாயகத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அதற்காக என்ன ஆனாலும் ஆகட்டும் என விட்டுவிடவும் முடியாது” என்கிறார், எழுத்தாளர் ரவிக்குமார்.