Published:Updated:

மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய ’பார்ட்டி’ -சென்னை பிறந்த கதை! - பகுதி -5

மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய ’பார்ட்டி’ -சென்னை பிறந்த கதை! - பகுதி -5
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய ’பார்ட்டி’ -சென்னை பிறந்த கதை! - பகுதி -5
மெட்ராஸின் 300 வருடங்களுக்கு முந்தைய ’பார்ட்டி’ -சென்னை பிறந்த கதை! - பகுதி -5

நியூ இயர் பார்ட்டிதான் தற்போதைய ஹாட் ட்ரெண்டிங் சப்ஜெக்ட். இன்னைக்கு மெட்ராஸ் மக்கள் பார்ட்டி கொண்டாட ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர். பக்கம் போனால் பார்ட்டியோ பார்ட்டிதான். ஆனால், கிட்டத்தட்ட 350 வருடங்களுக்குமுன் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், மெட்ராஸில் காலடி எடுத்து வைத்தபோது, ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் எல்லாம் இல்லை. குளிர்தேசத்தில் இளம் சூடான மதுபானங்களை சுவைத்தபடி, காற்றில் தவழும் மெல்லிசைக்கு நோகாமல் டான்ஸ் ஆடி பார்ட்டி கொண்டாடிய பார்ட்டிகள், இப்படி வெயில் வறுத்தெடுக்கும் நாட்டிற்கு வந்ததும் உண்மையிலேயே நாக்கு தள்ளிப் போனார்கள்.

கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான பிரான்சிஸ் டே, சென்னை என்ற இந்த நிலப்பகுதியை தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமே இது கடலுக்கு மிக அருகில் இருக்கிறது என்பதால்தான். கூடுதலாக, கோட்டைக்கு அருகிலேயே கூவம் நதியும் (அந்த காலத்தில் உண்மையில் நதியாகத்தான் இருந்தது) இருந்ததால் இங்கு வீசும் காற்றில் குளுமை இருந்தது. அவர்களின் வணிகத்திற்கு கடலும், வாட்டும் வெயிலுக்கு மாலையில் வீசும் சில்லென்ற கடல் காற்றும் பெரும் உதவியாக இருந்தன. ஆனாலும் அவர்களுக்கு ஒரு பெரிய குறை இருந்தது. தங்கள் நாட்டில் இருந்ததைப்போல இங்கு தினமும் இரவில் பார்ட்டி கொண்டாட முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஐஸ் கட்டி கிடைக்காததுதான். இங்கிலாந்தில் இருந்து வரும் கப்பல்களில் வணிகச்  சரக்குகளுடன் சேர்த்து பார்ட்டிக்கான “சரக்கையும்” ஏற்றி வந்துவிடலாம். ஆனால் அதில் போட்டு மிதக்கவிட ஐஸ் கட்டிக்கு என்ன செய்வது? அப்படியே பாளம்பாளமாக ஐஸ் கட்டிகளை கப்பலில் ஏற்றி வந்தாலும், அதை எப்படி நாள்கணக்கில் பாதுகாத்து வைப்பது? இதெல்லாம் அன்றைய “குடி”மகன்களின் தலையாய பிரச்னைகளாக இருந்தன.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணப் பிறந்ததுதான் இன்றைய விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்படும் அன்றைய 'ஐஸ் ஹவுஸ்'. பார்ட்டிக்கு உதவும் கட்டடம் என்பதாலோ என்னவோ பிரமாண்டமான பிறந்தநாள் கேக் போல கட்டிவிட்டார்கள். இந்த கட்டிடம் தோன்றிய கதை ரொம்பவே சுவாரஸ்யமானது. இதைக் கட்டியவர் ஒரு மகாராஜா. சாதாரண மகாராஜா அல்ல, ஐஸ் மகாராஜா. அட, ஆமாங்க! அவரை அப்படித்தான் அந்தக் காலத்தில் எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெயர் ஃபிரெட்ரிக் டூடர் (Fredric Tudor). ஐஸ் கட்டி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்ததால் அவருக்கு இந்த பட்டப்பெயர் வந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த டூடர், தன் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு அப்படியே ஹாயாக ஊர்சுற்ற ஆரம்பித்தார். சும்மா உள்ளூரில் சுற்றாமல் வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றியதுதான் அவர் வாழ்வில் பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. அப்படி ஒருமுறை கியூபா சென்ற டூடர், அங்கு சுட்டெரித்த சூரியனைப் பார்த்து மெர்சலாகி விட்டார். "அப்பப்பா.. என்னா வெயில்...என்னா வெயில்.. கொஞ்சம் ஜில்லுனு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமே" என்று எண்ணியவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு அற்புதமான யோசனை கிடைத்தது. "அமெரிக்காவில் வீணாகப்போகும் ஐஸ் கட்டிகளை ஏன் கியூபாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடாது?" என்பதுதான் அந்த அதிஅற்புத யோசனை. இதேபோல வெயில் பட்டையை உரிக்கும் நாடுகளின் பட்டியலை தயாரித்தார் டூடர். அதில் இந்தியாவும் இருந்தது. ஐஸ் வியாபாரியாக மாறிய டூடர், முதன்முதலில் 1833-ல் கிளிப்பர் டுஸ்கானி (Clipper Tuscany) என்ற கப்பலில் இந்தியாவிற்கு ஐஸ் கட்டிகளை அனுப்பி வைத்தார். இப்படித்தான் முதன்முதலில் இம்போர்டட் ஐஸ் ஜில்லென்று இந்தியாவிற்குள் வந்தது. ஐஸ் கட்டிகளை அனுப்பிவைத்தால் மட்டும் போதாது, அவற்றை பல மாதங்கள் பத்திரமாக சேமித்து வைத்து விற்பனை செய்ய ஏற்ற கட்டடங்கள் வேண்டும் என்பதை டூடர் உணர்ந்தார். அதற்காக இந்தியாவில் மூன்று கட்டடங்களைக் கட்டினார். பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய பெருநகரங்களில் கடலை ஒட்டி அவர் தனது ஐஸ் கிடங்குக்கான கட்டடங்களைக் கட்டினார். இதில் பம்பாய், கல்கத்தா கட்டிடங்கள், ஐஸ் கட்டியைப்போல காலத்தால் கரைந்து காணாமல் போய்விட்டன. சென்னையில் அமைக்கப்பட்ட ஐஸ் ஹவுஸ் கட்டடம் மட்டும் இன்றும் கில்லி மாதிரி நிற்கிறது. அதுதான் மெரினா சாலையில் இன்று விவேகானந்தர் இல்லமாக மாறி இருக்கிறது.

ஐஸ் ஹவுஸ் கட்டிடம் 1842-ல் கட்டப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து பெரிய கப்பல்களில் வரும் ஐஸ் கட்டிகளை சிறிய படகுகளில் இறக்கி கரை சேர்ப்பார்கள். பின்னர் அந்த ஐஸ் கட்டிகள் கடற்கரைக்கு மிக அருகிலேயே  (அப்போதெல்லாம் கடல் இன்னும் பக்கத்தில் இருந்தது) அமைந்திருந்த ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் சேமித்து வைக்கப்படும். வெயிலில் கரைந்து விடக்கூடாது என்பதற்காக சூரிய ஒளி உள்ளே புகாத வகையில் இந்த கட்டிடம் வட்டவடிவில் ஜன்னல்கள் ஏதுமின்றி பெரிய குடோன் போன்ற அமைப்பில் கட்டப்பட்டது. ஒரு பவுண்ட் எடையுள்ள ஐஸ் கட்டி நான்கு அணா என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. வாங்கிச்செல்லும் ஐஸ் கட்டிகள் சீக்கிரம் கரைந்துவிடாமல் இருக்க, அவற்றின் மீது போர்த்தும் கனமான போர்வைகளையும் டூடர் விற்பனை செய்தார். 

டூடரின் ஐஸ் கட்டிகளுக்கு சென்னையில் நல்ல மவுசு இருந்தது. அந்தக் காலத்தில் கோட்டைக்குள் நடந்த பார்ட்டிகளில் எல்லாம் டூடரின் ஐஸ்தான் கோப்பைகளுக்குள் மிதந்து கொண்டிருந்தன. இதில் டூடருக்கு நல்ல லாபம் கிடைத்தது. இப்படியே சுமார் 40 ஆண்டு காலம், சென்னையில் இந்த ஐஸ் வியாபாரம் கனஜோராக நடைபெற்றது. 1880-களில் இந்தியாவிலேயே நீராவி முறையில் ஐஸ் கட்டி தயாரிக்கும் முறை அறிமுகமானதும், டூடரின் வியாபாரம் படுத்துவிட்டது.

இதனால் வியாபாரத்தை மூட்டைகட்ட முடிவு செய்த டூடர், ஐஸ் ஹவுஸ் கட்டடத்தை பிலிகிரி அய்யங்கார் என்ற மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்கு விற்றுவிட்டார். வீடாகப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில்தான் அய்யங்கார் இதை வாங்கினார். எனவே அதற்கேற்ப வராண்டாக்கள், நிறைய ஜன்னல்கள் என அந்தக் கட்டடத்தில் பல மாற்றங்களை செய்து, அதற்கு கெர்னன் கேஸ்டல் எனப் பெயரும் வைத்தார். கட்டடத்தின் ஒரு பகுதியில் ஏழை மாணவர்களையும் பிலிகிரி அய்யங்கார் தங்க வைத்திருந்தார். ஆனால், எத்தனை ஜன்னல்கள் வைத்தபோதும் அந்த வீட்டில் காற்றோட்டம் போதுமான அளவு கிடைக்கவில்லை. கடைசிவரை, ஒரு நல்ல வீடாக இருக்கும் வாய்ப்பு அந்தக் கட்டிடத்திற்கு வாய்க்கவே இல்லை. இந்த சமயத்தில்தான் இங்கு வந்து தங்கினார் ஒரு தேசியப் பிரபலம். அவர்தான் இந்தியாவின் வீரத்துறவி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றிவிட்டு, பெரும் புகழுடன் 1897-ல் தாய்நாடு திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஊருக்குச் செல்லும் வழியில் சென்னைக்கு வந்தார். அவருக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. நம்ம பிலிகிரி அய்யங்கார் விவேகானந்தரின் தீவிர சீடர் என்பதால் சுவாமிகள் தனது வீட்டில் சிறிது காலம் தங்க வேண்டும் என விண்ணப்பம் வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஐஸ் ஹவுசில் தங்க வைக்கப்பட்டார். இங்கு தங்கியிருந்த நாட்களில், விவேகானந்தர் எழுச்சிமிக்க ஏழு உரைகளை ஆற்றினார். சென்னைவாசம் முடிந்து ஊருக்குப் புறப்பட்ட விவேகானந்தரிடம், சுவாமிகளின் ஆன்மீகப் பணிகளுக்காக சென்னையிலேயே ஒரு நிரந்தர மையம் அமைக்க வேண்டுமென உள்ளூர் பக்தர்கள் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஐஸ் ஹவுஸ் கட்டடத்திற்குள்ளேயே ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுதான் மெட்ராசில் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் முதல் கிளை. 1906-ல் பிலிகிரி அய்யங்கார் பரமபதம் அடைந்த பிறகு, ஒரு ஜமீன்தார் இந்த வீட்டை வாங்கினார். பின்னர் 1917-ல் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த வீட்டை அவரிடம் இருந்து வாங்கி, பிராமண விதவைகளுக்கான ஹாஸ்டலாக மாற்றியது. பின்னர் சில காலம் ஆசிரியர்கள் தங்கும் விடுதியாகவும், பி.எட். பயிற்சி மாணவர் விடுதியாகவும் இந்த வீடு செயல்பட்டது. இந்நிலையில் 1963-ல் சுவாமி விவேகானந்தரின்  நூற்றாண்டு விழா வந்தது. இதனையொட்டி, இந்த கட்டிடத்தின் பெயர் விவேகானந்தர் இல்லம் என தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. 1997-ல் இந்த கட்டடமும், அருகில் உள்ள நிலமும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு லீசுக்கு விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் பற்றிய நிரந்தர கண்காட்சி அமைக்கப்பட்டது. இங்கு விவேகானந்தரின் அரிய புகைப்படங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்படித்தான் கால ஓட்டத்தில், சிற்றின்பத்திற்கு உதவுவதற்காக கட்டப்பட்ட கட்டிடம் பேரின்பத்திற்கு வழிகாட்ட உதவும் இடமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இந்த தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே ‘க்ளிக்’ செய்யவும்

அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4