Published:Updated:

  ``எப்போதும் இளமையாக இருக்க...'' - கவிப்பேரரசு  வைரமுத்து சொல்லும் சக்ஸஸ் சீக்ரெட்! 

  ``எப்போதும் இளமையாக இருக்க...''  - கவிப்பேரரசு  வைரமுத்து சொல்லும் சக்ஸஸ் சீக்ரெட்! 
  ``எப்போதும் இளமையாக இருக்க...'' - கவிப்பேரரசு  வைரமுத்து சொல்லும் சக்ஸஸ் சீக்ரெட்! 

“நம் பிள்ளைகளை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக  உருவாக்குகிறோமோ இல்லையோ,  ஐ.பி.எஸ் அதிகாரியாக  உருவாக்குகிறோமோ இல்லையோ, அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டும். இதுதான் கல்வி நிறுவனங்களின் முதல் கடமை. அறிவுப்பஞ்சத்தைவிட மனிதநேயப் பஞ்சம்தான் இப்போது அதிகம். அறிவு, கூடிக்கொண்டேபோகிறது. மனிதநேசமும், ஒழுக்கமும், பண்பாடும் மெள்ள மெள்ள இந்தத் தொழில்நுட்ப யுகத்தைவிட்டு நகர்ந்து போயிக்கொண்டே இருக்கின்றன”  என்று கவிப்பேரரசு வைரமுத்து பேச ஆரம்பிக்க, ஒட்டுமொத்தக் கூட்டமும் அப்படியே அமைதியானது. 

சமீபத்தில்,  கோவை பிருந்தாவன் வித்யாலயா பள்ளி  ஆண்டுவிழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் கவிப்பேரரசு வைரமுத்து. ``உங்கள் விருப்பத்தைத் திணித்து பிள்ளைகளை வளர்க்காதீர்கள்.  தொலைந்துபோன உங்கள் கனவுகளை உங்கள் பிள்ளைகளைக்கொண்டு ஈடேற்ற நினைக்காதீர்கள்.  நீங்கள் கல்லூரியில் பெற முடியாத இடத்தை உங்கள் பிள்ளையை வைத்து நிரப்பப் பார்க்காதீர்கள். பிள்ளைக்கு எதன் மீது நாட்டம் எனக் கண்டறிவதுதான் ஒவ்வொரு பெற்றோரின் முதல் கடமை. உங்கள் பிள்ளை மானா  அல்லது மீனா என்பதை முதலில் கண்டறியுங்கள். மானாக இருந்தால், காட்டுக்குள் ஓடவிடுங்கள். மீனாக இருந்தால், நீருக்குள் நீந்தவிடுங்கள். மானைக் கொண்டுபோய் தண்ணீருக்குள் விட்டுவிடாதீர்கள். மீனைக் கொண்டுபோய் காட்டுக்குள் விட்டுவிடாதீர்கள். குயிலாக இருந்தால் பாடவிடுங்கள், மயிலாக இருந்தால் ஆடவிடுங்கள்.  பிள்ளைகள் எதை நோக்கிப் பயணம் செய்கிறார்களோ, அதைச் செப்பம் செய்து கொடுப்பது மட்டும்தான் பெற்றோரின் வேலை. தனக்குப்  பிடித்தம் இல்லாத துறையைத் தேர்ந்தெடுப்பதால்தான் அல்லது திணிக்கப்படுவதால்தான் மாணவர்கள் மன அழுத்தத்தில் தற்கொலை வரை தள்ளப்படுகிறார்கள். 

உங்களுக்கு ஏதாவது கற்றுக்கொடுத்துவிட்டுப் போகவேண்டும் என நான் இங்கு வரவில்லை. உங்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டுபோகலாம் என நினைப்பேன். நமக்குத் தெரியாத ஓர் உலகத்தை,  நமக்குத் தெரியாத ஒரு வாழ்க்கையை இளம் குழந்தைகள் சிந்திக்கிறார்கள்.

நான் ஒரு பள்ளி ஆண்டுவிழாவுக்குச் சென்றிருந்தேன். அந்தப் பள்ளியில், பரிசு பெற்ற மாணவனை எனக்கு முன்னர் பேசவைத்தார்கள்.  அந்தச் சிறுவன் சொன்ன கருத்தைக் கேட்டு, `இவனல்லவா பேச்சாளன், இவனல்லவா சிந்தனையாளன்' என அசந்துபோனேன். `இவனைப் போன்ற மாணவனை அல்லவா இந்தத் தமிழகம் தத்தெடுத்து வளர்க்க வேண்டும்' என நினைத்துக்கொண்டேன்.

அரைக்கால் சட்டை, கசங்கிய மேல் சட்டை, எண்ணெய் இல்லாத தலைமுடி, கண்களில் சூரிய வெளிச்சம்... ஒரு பரபரப்பு என, பக்கா கிராமத்துப் பையன். அவன் வந்தான் `தேசியக்கொடியில் மூன்று வண்ணங்கள் இருக்கின்றனவே. அவற்றுக்கான பொருள் தெரியுமா?' என்று கேட்டான். இப்போது எப்படி நீங்கள் மெளனமாக இருக்கிறீர்களோ, அதேபோல அந்தச் சபை மெளமானது. கேள்வியை சபையில் விதைத்த அந்தச் சிறுவன், பதில் வராது எனத் தெரிந்த பிறகு விடையை அவனே சொல்ல ஆரம்பித்தான்.

`நமது தேசியக்கொடியில் மூன்று வண்ணங்கள் இருக்கின்றன. மேலே காவி, நடுவில் வெள்ளை, கீழே பச்சை என்று இந்தக் கொடிக்கு நிறம் கொடுத்தவர்கள் பொருள் பொதிந்து கொடுத்திருக்கிறார்கள். மேலே இருக்கும் காவி, இந்துக்களின் நிறம். நடுவில் இருக்கும் வெள்ளை, கிறிஸ்துவத்தின் நிறம். கீழே இருக்கும் பச்சை இஸ்லாத்தின் நிறம். தேசத்தில் இந்த மூன்று மதத்தவர்களும்  ஒரே உயரத்திலிருந்து பறக்க வேண்டும் என்பதால்தான் தேசியக்கொடியை இந்த வண்ணங்களில் அமைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்” என்று சொன்னான்.

இப்படியான  மாணவர்களின் அறிவை நாம் தூண்டிவிட வேண்டாமா? ஒரு மாணவனுக்கு நீங்கள் இரண்டு உத்தரவாதங்கள் கொடுக்க வேண்டும். முதலாவது, அவன் கல்விக்கான பொருளாதாரம். இரண்டாவது, அவன் கனவுகளை வளர்த்தெடுக்கக்கூடிய சூழல். இந்த இரண்டையும் நம் பிள்ளைகளுக்குக் கொடுத்தால், அவர்கள் சிறந்த மாணவர்களாக வருவார்கள். பாடத்திட்டத்தில் மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வி அல்ல. மனிதாபிமானத்தைக் கற்றுக்கொடுக்காத கல்வி எதுவும் கல்வி அல்ல; அன்பைச் சொல்லாத கல்வி எதுவும் கல்வி அல்ல; ஆற்றலைப் பெருக்காத கல்வி எதுவும் கல்வி அல்ல.

நாங்களெல்லாம், பள்ளிக்கூடத்தின் வார்ப்புகள்; ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவர்கள். பெரியார், அண்ணா, கலைஞர், கண்ணதாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற ஆளுமைகளாலும் ஆசிரியர்களாலும் உருவாக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். `பத்து வயதில்  எனது பேச்சுப்போட்டிக்கு எழுதிக் கொடுத்த தாள்தான், என்னை இன்று உங்கள் முன் நின்று பேச வைத்துக்கொண்டிருக்கிறது. பிள்ளைகள் தோல்வியடைந்துவிட்டால், தட்டிக்கொடுங்கள். வெற்றி என்பது, ஒரு நாள் அனுபவம். தோல்வி என்பது, வாழ்நாள் அனுபவம். மொத்தத்தில், முதல் மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றவன் ஒரு சதவிகிதம்தான். 99 சதவிகிதம் அதற்குக் கீழே! இந்த உலகம், தோற்றுப்போனவர்களால் மட்டுமே இயங்குகிறது.  தோற்றுப்போனவர்களை எல்லாம் கழித்துவிட்டால், இந்த உலகம் இயக்குமா? இயங்காது! இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் ஆத்துல விழுந்து சாகுதுங்க... கிணத்துல விழுந்து சாகுதுங்க, தூக்குப் போட்டு சாகுதுங்க... அந்த உயிரின் மதிப்பு தெரியுமா?  குழந்தைகளின் பின்னடைவுக்கு ஆசிரியர்களோ, பெற்றோர்களோ காரணமாக இருந்தால் அந்தச் சமுதாயம் மேம்படுவதற்கு வாய்ப்பே இல்லை

ஒரு துளி, சமுத்திரமாக வேண்டுமென்றால்... அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது சமுத்திரத்தில் விழுந்துவிடவேண்டியதுதான். வேறு வழி இல்லை. ஒரு மனிதன் இளமையாவதற்கு ஒரு வழிதான் இருக்கிறது.  இளமையான உள்ளங்களோடு உறவாடுவதுதான் ஒரு மனிதனுக்கு உண்மையான இளமை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆசிரியர்களுக்கு வயதாவதில்லை. காரணம்,  அவர்கள் இளம் மாணவர்களோடு உறவாடி உறவாடி, முதுமையைத் தொலைத்துவிடுகிறார்கள்''  என்று இளமை ரகசியத்தைப் போட்டுடைத்தார் கவிப்பேரரசு.