Published:Updated:

''மோடி.எம்.கே-வை வீழ்த்தியது உண்மையான ஏ.டி.எம்.கே.!''

''மோடி.எம்.கே-வை வீழ்த்தியது உண்மையான ஏ.டி.எம்.கே.!''
''மோடி.எம்.கே-வை வீழ்த்தியது உண்மையான ஏ.டி.எம்.கே.!''

''அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் அக்கிரமங்கள் மக்களிடம் கோபமாகவும், பழிவாங்கப்படுபவர் மீதான அனுதாபமாகவும் மாறும்'' என யாரோ சொன்ன பொன்மொழிக்குப் பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்!

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, சசிகலாவின் தலையைத் தொட்டு ஆறுதல் சொன்னார் பிரதமர் மோடி. ஜெயலலிதாவின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை, ராணுவ வீரர்கள், சசிகலாவிடம்தான் அளித்தார்கள். அதுவரையில் சசிகலா குடும்பத்தினர்மீது பி.ஜே.பி-க்கு எந்த வெறுப்புமில்லை. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனதும் பன்னீரை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் பதவியில் அமர நினைத்ததும் பி.ஜே.பி-யின் நிறம் மாறியது.

''மோடி.எம்.கே-வை வீழ்த்தியது உண்மையான ஏ.டி.எம்.கே.!''

நாட்டின் 3-வது பெரிய கட்சிக்கு சசிகலா தலைவரா? என நினைத்தது பி.ஜே.பி. அ.தி.மு.க-வை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள பி.ஜே.பி. முடிவு எடுத்த தினம் 2016 டிசம்பர் 30-ம் தேதி. அது பொதுச் செயலாளராக சசிகலா சார்ஜ் எடுத்த நாள். அப்போது பேசிய சசிகலா, ‘மதச்சார்பற்ற கட்சியாகவே அ.தி.மு.க. தொடரும்’ என்றார். அங்கே ஆரம்பித்தது பிரச்னை. 'பழிவாங்கும் படலம்' ஆரம்பமானது. முதல்வர் நாற்காலியை நோக்கி சசிகலா நகர ஆரம்பித்தபோது இனியும் விட்டு வைக்கக் கூடாது என்பதுபோலவே மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்தன. அப்போலோ தொடங்கி எடப்பாடியையும் பன்னீரையும் கைகோத்தது வரையில் வித்தியாச சாகர் ஆனார் வித்தியாசாகர். ஆளுநரா? ஆள்களை சேர்த்து வைக்கும் ஆள் அவரா? என விமர்சனம் எழுந்தது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சசிகலாவை முதல்வராக தேர்வுசெய்து அதற்கான கடிதத்தை அளித்தும் வித்தியாசாகர் ராவ் உடனே பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை. மும்பையில் முடங்கிக் கிடந்தார். ஆனால், அணிகள் இணைப்பு அன்றே பன்னீருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மகாராஷ்டிராவிலிருந்து ஓடி வந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் கூட்டாளியாக வர்ணிக்கப்பட்ட சேகர் ரெட்டியைக் குறி வைத்தது வருமானவரித் துறை. பொதுப்பணித் துறை கான்ட்ராக்டரான சேகர் ரெட்டி கொழுத்தக் கிடாவாக மாற்றிய பொதுப்பணித் துறை கைவசம் வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் வருமானவரித் துறை கண்டுகொள்ளவே இல்லை. சேகர்ரெட்டியுடன் போஸ் கொடுத்த பன்னீர்செல்வத்தை மட்டும் பதமாக வழக்கிலிருந்து பிரித்தார்கள். சேகர் ரெட்டி கைதைக் காட்டி பன்னீருக்கு ஜெயில் பயத்தைக் காட்டினார்கள். ‘அம்மாவின் நிழலாக இறுதிவரை இருந்து, அவரின் மெய்க்காப்பாளராக, உயிர் காக்கும் தோழியாக, உன்னத சேவகியாக, உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்து வருபவர் எங்களின் பாசத்திற்குரிய சசிகலா. அம்மா வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ராணுவ அமைப்புப் போல கட்சியைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று வழிநடத்துவதுதான்’ என அன்றைக்கு அறிக்கைவிட்ட பன்னீர்செல்வத்தை தடம் மாற்றினார்கள்.''

சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்து, அதற்கான தீர்மானத்தை சசிகலாவிடம் கொடுத்துக் கெஞ்சியதும் சசிகலா காலில் விழுந்ததும் பன்னீர்தான். சசிகலா முதல்வர் ஆவதற்காக ராஜினாமா செய்து வழிவிட்ட பன்னீர், பிப்ரவரி 7-ம் தேதி முகாம் மாறினார். ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்து திடீர் புரட்சியைக் கிளப்பினார். இந்தப் புத்தருக்கு டெல்லி ஞானோதயம் வந்த பிறகுதான் எல்லாமே மாற ஆரம்பித்தது. சசிகலாவை நேரடியாகப் பழிவாங்காமல் பன்னீரை வைத்து காய் நகர்த்தியது பி.ஜே.பி. ‘கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்கள்.' எனப் பன்னீர் கொதித்தெழுந்த நேரத்தில் சசிகலாவுக்கு உடனடியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை வித்தியாசாகர் ராவ். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு தேதியும் வந்து சேர்ந்தது. வித்யாசாகர் ராவின் மவுனமும் இழுத்தடிப்பும் பன்னீரை ஆட்சியில் அமரவைப்பதற்காக தரப்பட்ட கால அவகாசம் கடைசியில் பயன் அளிக்கவில்லை. பிறகு எடப்பாடியை வளைத்தார்கள்.

''மோடி.எம்.கே-வை வீழ்த்தியது உண்மையான ஏ.டி.எம்.கே.!''

ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக்கப்பட்ட பன்னீருக்குச் சிறப்புப் பாதுகாப்பு எதுவும் தரப்பட்டதில்லை. ஆனால் பி.ஜே.பி-யால் பன்னீர்செல்வத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டபோது சாதாரண எம்.எல்.ஏ-வாக நினைத்த நேரத்தில் எல்லாம் மோடியைச் சந்தித்துவிட்டு வந்தார். பி.ஜே.பி-யின் பாசத்தால் பன்னீர் தனிக் கச்சேரி நடத்தினார். 'சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது, இரட்டை இலைக்கு உரிமை' எனத் தேர்தல் கமிஷனில் நடந்த முறையீடுகள் எல்லாமே பன்னீரை வைத்தே வேகம் எடுத்தன. அது ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து வரையில் வந்து நின்றது.''

சசிகலா சிறைக்குப் போன பிறகும் நிம்மதி பெருமூச்சை பி.ஜே.பி-யால் விடமுடியவில்லை. அதற்குள் தினகரன் தலை தூக்கினார். அ.தி.மு.க. வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டு, எடப்பாடி அமைச்சரவை ஆர்.கே.நகரைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. தினகரன் ஜெயித்துவிடுவார் என்கிற நிலை உருவானபோது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தது வருமானவரித் துறை. ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சேகர் ரெட்டியை வைத்து பன்னீருக்கு திகில் காட்டியதுபோல இந்த ரெய்டைக் காட்டி எடப்பாடியை வளைத்தார்கள். முன்பு ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு பிரசாரம் செய்த எடப்பாடிக்குத் தெரியாதா தினகரன் வென்று வந்தால் அவர் முதல்வர் நாற்காலிக்கு குறி வைப்பார் என்பது. ஆனாலும் தினகரனை ஆதரித்தார். பன்னீரை வளைத்ததுப்போல எடப்பாடியையும் இழுத்தார்கள். 'தினகரன் ஜெயித்தால் முதல்வர் பதவி போகும்' எனச் சொன்னார்கள். அதுவரையில் சசிகலா ஆதரவு அரசாக இருந்த எடப்பாடி ஆட்சி பி.ஜே.பி. ஆதரவு அரசாக மாற ஆரம்பித்தது. இரட்டை இலைக்குப் பேரம் பேசியதாக தினகரன் மீது வழக்கு பாய்ந்தபோதுதான், 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைக்கிறோம்' என்கிற குரலை ஓங்கி ஒலித்தார்கள் அமைத்தார்கள். ''யாருக்கோ பயந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்' என்றார் தினகரன். திகார் சிறையில் தினகரன் திணிக்கப்பட்டதில் தொடங்கி பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த தினகரனின் ஃபெரா வழக்குகள் தூசி தட்டப்பட்டு தினமும் நடக்க ஆரம்பித்தது எல்லாமே தினகரனின் என்ட்ரிக்குப் பிறகுதான்.

சேகர் ரெட்டி பங்குதாரராக இருக்கும் ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள சுப்ரமணியம் பழனிசாமியின் மகள் திவ்யாவைத்தான் எடப்பாடி பழனிசாமி மகன் மணமுடித்திருக்கிறார். இப்படியான சிக்கலில் எடப்பாடியின் பிடி மத்திய அரசின் கையில் இருந்ததால் பி.ஜே.பி-க்குத் தலையாட்டி தினகரனுக்குச் சவால் விட்டார். சேகர் ரெட்டியின் டைரியில் லஞ்சம் வாங்கிய அமைச்சர்களின் பெயர்கள் இருந்தன. விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் பணப்பட்டுவாடா லிஸ்டில் எடப்பாடியின் பெயரும் இருந்தது. இந்த ஆவணங்கள் எதற்கு பயன்பட்டதோ இல்லையோ எடப்பாடியைப் பணிய வைக்கப் பயன்பட்டது. பன்னீரைப் போலவே எடப்பாடிக்கும் ரேஸ் கோர்ஸ் சாலை கம்பளம் விரித்து சுருட்டிக் கொண்டது. இத்தனைக்கும் பிறகுதான் தன்னை முதல்வராக்கிய சசிகலாவைவிட தன்னைச் சிறையில் அடைக்காத மோடியே பெட்டர் என நினைத்தார் எடப்பாடி. அது தினகரனையே எதிர்ப்பதற்கான துணிவைக் கொடுத்தது. அ.தி.மு.க.வுக்குள் எந்தத் தொடர்பும் இல்லாத ஆடிட்டர் குருமூர்த்தியைப் போய் பார்த்த பிறகுதான் எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்பு நடந்தன.

மாநில முதல்வர்கள் பதவியேற்கும்போதும் பிரதமர் வாழ்த்துச் சொல்வது மரபுதான். ஆனால் அரசியல் அமைப்பில் இல்லாத துணை முதல்வர் பதவியேற்புக்கு பிரதமர் வாழ்த்துச் சொன்னார். இது பன்னீர் பாசம் என்பதைவிட மறைமுக தினகரன் எதிர்ப்புதான் காரணம். அ.தி.மு.க-விலிருந்தே தினகரன் முற்றிலும் துடைத்தெறியப்பட்டார். ‘எடப்பாடியை முதல்வராக ஏற்க முடியாது’ எனச் சொல்லி, பொறுப்பு கவர்னர் வித்தியாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் கடிதங்கள் வழங்கினார்கள். ஆனால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசியில் ஆட்சிக்கு ஆபத்து வந்தவிடக் கூடாது என்பதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்தார்கள். ஆனால், தினகரன் கூட்டத்தைத் திரட்டி மாஸ் காட்டி வந்தார். ‘‘எடப்பாடி பழனிசாமி அரசு டிசம்பருக்குப் பின் நீடிக்காது. ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன’’ என திரி கொளுத்திப் போட்டார் தினகரன். அது எடப்பாடிக்கு உதறலை கொடுத்தது. விளைவு சோதனையாக வந்தது வருமானவரித் துறை சோதனை. இரட்டை இலை விவகார வழக்கு தேர்தல் கமிஷனில் இறுதி விசாரணை முடிக்கப்பட்ட அடுத்த நாள் ரெய்டு நடத்தப்பட்டது. இந்தியாவில் இதுவரையில் நடத்தப்படாத மெகா ரெய்டாக அது அமைந்தது. தேர்தல் செலவுக்குக்கூட பணம் கிடைக்கக் கூடாது என்பதற்காகவும் ரெய்டு நடத்தினார்கள் என விமர்சனம் கிளம்பியது. அடுத்து இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி - பன்னீர் அணிக்குக் கொடுத்த அடுத்த நாளே ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவித்தது தேர்தல் கமிஷன். இரட்டை இலையும் போச்சு.. கட்சி சின்னமும் கிடையாது என சுயேச்சையாக களமிறங்கிய தினகரனுக்குத் தொப்பிகூட கிடைத்துவிடக் கூடாது என்பதில் காய் நகர்த்தினார்கள். இத்தனை பழிவாங்கல்களையும் அடைகாத்து மொத்தமாக அ.தி.மு.க, பி.ஜே.பி கட்சிகளை குக்கரில் வேக வைத்துவிட்டார் தினகரன். தினகரனை வீழ்த்த நினைத்து, அ.தி.மு.க. வீசிய அஸ்திரங்களும் பி.ஜே.பி. எடுத்த விஸ்வரூபமும் குக்கரில் வேகவில்லை.

கற்பக கார்டனில் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தபோது உணர்ச்சிப் பிழம்பாய் நிர்வாகி சொன்ன வாசகம் இது.

''மோடிஎம்கே-வை வீழ்த்தியது உண்மையான ஏடிஎம்கே!''