Published:Updated:

மார்பிங் விவகாரம் அறியாமல் முதல்வரை கடுமையாக விமர்சித்த திருநாவுக்கரசர்!

மார்பிங் விவகாரம் அறியாமல் முதல்வரை கடுமையாக விமர்சித்த திருநாவுக்கரசர்!
மார்பிங் விவகாரம் அறியாமல் முதல்வரை கடுமையாக விமர்சித்த திருநாவுக்கரசர்!

மார்பிங் விவகாரம் அறியாமல் முதல்வரை கடுமையாக விமர்சித்த திருநாவுக்கரசர்!

புதுக்கோட்டையில் இன்று காலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திருநாவுக்கரசர். எடுத்த எடுப்பிலேயே, "கன்னியாகுமரிக்கு புயல் பாதிப்புகளைப் பார்வையிட வந்த மோடியை வரவேற்க, தனது சட்டைப்பையில் வைத்திருந்த ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு, மோடியின் படத்தை வைத்துக்கொண்டு, செல்கிறார் எடப்பாடி. அந்த அளவுக்கு மோடியின் பினாமி அரசின் முதல்வராகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி" என்று கூறினார். 

"திருநாவுக்கரசர் சொல்லும் சம்பவம் உண்மையில் நடந்தது அல்ல. மோடி படம் எடப்பாடி பழனிசாமியின் சட்டைப்பையில் இருப்பதுபோல் மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த உண்மையைக் காங்கிரஸ் மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர் அறிந்துக்கொள்ளாமல் உளறிக் கொட்டியிருக்கிறார்" என்ற முணுமுணுப்பு அங்கிருந்தவர்கள் மத்தியில் எழுந்தது. இதுபற்றி அவரிடம் பிறகு சுட்டிக்காட்டலாம் என்று அமைதிகாத்தனர் பத்திரிகையாளர்கள்.

தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசர், கன்னியாகுமரி புயல் பாதிப்புகள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து காரசாரமாகப் பேட்டியளித்தார்.  
"கன்னியாகுமரி பாதிப்புகள் நடந்த உடனே ஒரு முதல்வர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ 10 நாள் கழித்துப் போகிறார். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து பாதிப்பு பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வந்துகொண்டு இருந்தபோதும், ஓர் இடத்தில் மட்டும் பார்வையிட்டுவிட்டு வந்துவிட்டார். இரும்பு இதயம் கொண்ட சர்வாதிகாரிகூட இப்படி நடந்துக்கொள்ள மாட்டார்கள்.

எடப்பாடி ஒரு முதல்வராக, மக்களின் துயர்துடைக்கும் லட்சணம் இதுதானா?" என்று கேட்ட திருநாவுக்கரசர், அடுத்ததாக,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றியும் பேசினார். "அங்கு நடந்தது தேர்தலே இல்லை. மோடியும் எடப்பாடியும் சேர்ந்து தினகரனை ஜெயிக்க வைத்துவிட்டார்கள். தி.மு.க கூட்டணியில் நாங்கள் இருந்தோம். இன்னும் பல முக்கிய கட்சிகளும் அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. அந்த வகையிலும் அ.தி.மு.க பிளவுப்பட்டு தேர்தலை சந்தித்த நிலையிலும் தி.மு.க வேட்பாளர்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதையும் மீறி தினகரன் வெற்றி பெறுகிறார் என்றால், அதற்குக் காரணம் கோடி கோடியாய் வாரி இறைக்கப்பட்ட பணம்தான். நாங்களோ தி.மு.க-வோ வாக்காளர்களுக்கு பணம் தரவில்லை" என்றார். தி.மு.க-வினரும் காங்கிரஸினரும் பணம் வாங்கிக்கொண்டு தினகரனுக்கு ஓட்டு போட்டதாகச் சொல்லப்படுவது பற்றி அவரிடம் கேட்டபோது, "அதுபற்றி விசாரிக்க இரண்டு கட்சிகளிலும் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.காங்கிரஸைப் பொறுத்தவரை தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்றார். 

அடுத்த கட்டுரைக்கு