Published:Updated:

“திருநங்கைகள் குறித்து அரசு தெரிந்துகொள்ள வேண்டும்!” - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 4

“திருநங்கைகள் குறித்து அரசு தெரிந்துகொள்ள வேண்டும்!” - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 4
“திருநங்கைகள் குறித்து அரசு தெரிந்துகொள்ள வேண்டும்!” - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 4

அமைப்புகள் படுத்தும் பாடு:

மத்திய அரசின் மாற்றுப் பாலினத்தவர்கள் (உரிமைப் பாதுகாப்பு) மசோதா 2016-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் 'எந்த அமைப்புகளும் மாற்றுப் பாலினத்தவர்களை புறக்கணிக்கக் கூடாது!' என்ற வரி சொல்லும் சங்கதிகள் பல... கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகிய மூன்று துறைகளை மட்டும் நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இதில் "திருநங்கைகள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? மத்திய-மாநில அரசுகள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னென்ன?" என்பது குறித்துப் பார்க்கலாம்.

இதுதொடர்பாக திருநங்கைகள் செயற்பாட்டாளரும், இந்தியாவின் முதல் ‘Transgenders Resource Centre’ அமைப்பை உருவாக்கி, திருநங்கைகள் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புஉணர்வு ஏற்படுத்திவரும் திருநங்கை பிரியா பாபுவிடம் பேசினோம். 

“முதலில் கல்வி உரிமை குறித்து பேச விரும்புகிறேன். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் வளர் இளம் பருவ மாணவன், தன்னைப் பெண்ணாக அங்கீகரித்து, அடையாளப்படுத்த எண்ணுகிறான் என்றால் முதலில் அவன் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகும் இடம் அவன் பயிலும் கல்வி நிலையங்கள்தாம். 'உடல்ரீதியான மாற்றம் இயல்பான ஒன்றுதான்; மாபெரும் குற்றம் இல்லை' என்பதை சக மாணவர்கள் அறியாமல் இருந்தால்கூட பரவாயில்லை. படித்துப் பட்டம் வாங்கிய ஆசிரியர்களும் உணராமல் இருப்பதுதான் உண்மை நிலவரம். அந்த மாணவனை அழைத்து, அவனுக்கு மாற்றுப்பாலினம் குறித்த தெளிவை கொடுக்க முடியும். அதேபோல், அந்த மாணவனின் பெற்றோர்களைப் பள்ளிக்கு வரவழைத்து, அவர்களுக்கும் புரியவைக்க முடியும்.

இதனை ஓர் ஆசிரியரால் நிச்சயம் சாத்தியப்படுத்த முடியும். எனவேதான், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, தற்போது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் மாற்றுப்பாலினக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது, சில தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் முயற்சியே என்றாலும் அரசின் சார்பில், ஆசிரியர்களுக்கு என்ன மாதிரியான விழிப்புஉணர்வுப் பயிற்சிகள் கொடுக்கலாம் என்று தற்போதைய மசோதா பேசியிருக்கலாம். பாலியல் கல்வியில் மாற்றுப்பாலினம் பற்றிய பாடங்களைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கலாம். மேலும், தேசியக் குழந்தைகள் கொள்கையில் மாற்றம் செய்து, ஒரு குழந்தை பள்ளியில் மாற்றுப்பாலினத் தன்மையுடன் காணப்பட்டால் ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை ஏற்படுத்தலாம். 

இது ஒருபுறம் என்றால், பாதியில் கல்வியை விட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கைகள் பலர், தற்போது கல்வி கற்க வேண்டும் என்கிறார்கள். வயதான பிறகும், 'ஒரு டிகிரி வாங்க வேண்டும்' என்று ஆசைப்படும் திருநங்கைகளுக்குக் கல்வித்துறையில் என்ன சலுகைகள் இருக்கின்றன என்று பார்த்தால், எதுவும் இல்லை. படிக்க வேண்டும் என ஆசைப்படும் திருநங்கைகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவசக் கல்வி கொடுப்பது பற்றி மசோதா பேசியிருக்கலாம். 

அதேபோல மருத்துவமனைகளில் ஏற்படும் புறக்கணிப்புகள் குறித்து நான் சொல்லியே ஆக வேண்டும். ஓர் ஆண், தன்னை திருநங்கையாக மாற்றிக்கொள்ள ஆசைப்பட்டால் சில லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் தொடங்கி, ஹார்மோன் ஊசிகள்வரை மொத்தமாக மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும். வீட்டை விட்டு ஓடிவரும் ஒரு திருநங்கையால் இது எப்படிச் சாத்தியமாகும். இதனால், குறைந்த செலவில், தரமில்லாத மருத்துவமனையை அணுகி அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இதனால் பலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு எனத் தனியாக ஒரு வார்டுகூட இல்லை. 

இதுதொடர்பாக மருத்துவத்துறைக்கு ஒரு விழிப்புஉணர்வு தேவை. இதனை மசோதா மேலோட்டமாகக்கூட பேசியிருக்கலாம். ஆனால், அதுபோன்று எதுவும் பேசவில்லை. அடுத்ததாக, திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு குறித்த எந்தத் தகவலும் மசோதாவில் இல்லை. 

இடஒதுக்கீட்டை அழுத்தமாகச் சொல்லிய முந்தைய மசோதாவிற்கும், இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இன்னும் கொஞ்சம் பொறுமையாக, பலரின் கருத்துகள் பெறப்பட்டு, மசோதாவை உருவாக்கியிருக்கலாம் என்பதே எனது நிறைவுக் கருத்து’’ என்றார்.

மதுரையைச் சேர்ந்த ஆராதனா என்ற திருநங்கை, பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் வீட்டைவிட்டு வெளியேறி திருநங்கைகளுடன் சேர்ந்துகொள்கிறார். பல வருட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது மேல்படிப்புப் படித்து, நல்ல வேலைக்குச் செல்ல நினைக்கிறார். உடனே, தான் படித்த பள்ளிக்குச் சென்று பத்தாம் வகுப்பு சான்றிதழைக் கேட்கிறார். படிக்கும் காலத்தில் அவருக்கு இருந்த பெயரிலேயே சான்றிதழ் வழங்குவதாகவும், அதில் பால் அடையாளத்தில் 'ஆண்' என்றுதான் குறிப்பிட முடியும் எனவும் சொல்லப்படுகிறது. அதனை ஏற்காத ஆராதனா, தன்னை 'திருநங்கை' என்று குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்குமாறு கேட்கிறார். ஆனால், அதனை ஏற்க பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. இந்த விஷயம் திருநங்கை ப்ரியா பாபுவிற்குத் தெரியவர, உடனே களத்தில் இறங்கி சான்றிதழில் 'திருநங்கை' என்று குறிப்பிட்டு வழங்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. சுமார் ஏழு மாதங்கள் தொடர் சட்டப் போராட்டங்களைக் கடந்து இறுதியில் ‘திருநங்கை’ என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கியது பள்ளி நிர்வாகம். இந்தச் சம்பவம் எப்போதோ நடந்தது இல்லை. கடந்த வாரம் மதுரையில் நடந்தது.

2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, தற்போது கல்வி சார்ந்த உரிமைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் திருநங்கைகள். சில இடங்களில் அந்த உரிமை மறுக்கப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களை களைவதற்காகவே சட்டம் இயற்ற முனைகிறது மத்திய அரசு. மிகவும் சாதாரண கோரிக்கையான, சான்றிதழில் ‘திருநங்கை’ என்று குறிப்பிட்டு பள்ளி, கல்லூரிகள் சான்றிதழ் வழங்க மத்திய அரசின் மசோதா உதவுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. காரணம், அதுதொடர்பான ஷரத்துகள் புதிய மசோதாவில் இல்லை. அதற்கான தெளிவான விளக்கங்களும் இல்லை. இன்றும் பல அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் வேலைக்குச் சேர அல்லது பயிற்சியில் சேர விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யும் போது, ஆண்/பெண் (‘M’ or ‘F’) என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அருகில், ‘T’ (Transgender) என்று திருநங்கைகளை குறிப்பிடலாமே.

நன்மை இல்லாமல் இல்லை:

தற்போதுவரை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே திருநங்கைகள் பல்வேறு இடங்களில் தங்களது உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். மத்திய அரசின் மசோதா பொதுவாக ‘அமைப்புகள்’ என்று சொல்லி இந்தியாவின் அனைத்து அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் நிறுவனங்களை ஒரேகுடையின் கீழ் கொண்டுவரும்போது, இவற்றில் திருநங்கைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்று அழுத்தமாகச் சொல்லும்போது எல்லா இடங்களிலும் சமமான உரிமைகளை திருநங்கைகளால் பெற முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 

சமீபத்தில் திருநங்கையாக மாறிய விமானப்படை வீரர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் நடந்து இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்தது. சமூக 'கட்டமைப்புகளின்' பிடியில் சிக்கி, போராடி, வெற்றிபெற்று இன்று நல்ல வேலையில் இருக்கும் எத்தனையோ திருநங்கைகளை நம்மால் பார்க்க முடிகிறது. பலர் திருநங்கைகளின் நலன் சார்ந்தும் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் (உதாரணத்திற்கு) தனக்கென ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என்று சிந்திக்கிறார். திருமணம் செய்துகொண்டு, தொடர்ந்து குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். ‘உனக்கு என்ன உரிமை இருக்கிறது திருமணம் செய்துகொள்ள?, உனக்கு என்ன சமூக அங்கீகாரம் இருக்கிறது குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள?’ என்று கேட்கிறது இந்தச் சமூகம்...! நல்ல நிலையில், தனக்கென ஒரு வாழ்க்கை வாழும் திருநங்கைக்கே இந்தநிலை என்றால், ஜமாத்தில் இருந்துகொண்டு தினம் ஒருவேளை சாப்பிடவே கஷ்டப்படும் திருநங்கைகளின் நிலை? அவர்களுக்கு வாழ்க்கைத்துணை வேண்டாமா? குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க உரிமை இல்லையா? 

ஒரு திருநங்கை, திருமணம் செய்து கொள்வதையும், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதையும், மாற்றுப்பாலினத்தவர்களின் (உரிமைப் பாதுகாப்பு) மசோதா-2016 எப்படிப் பார்க்கிறது?

(தொடர்ந்து அலசுவோம்….)

இந்தத் தொடரின் மற்ற பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3