Published:Updated:

“400 ஆண்டுகளுக்கு முந்தைய ஆணிவேர்!” கௌசல்யா - சங்கர் வழக்கு : ஒரு திட்டமிட்ட ஆணவப் படுகொலையின் சாட்சியங்கள் பகுதி 1

“400 ஆண்டுகளுக்கு முந்தைய ஆணிவேர்!” கௌசல்யா - சங்கர் வழக்கு : ஒரு திட்டமிட்ட ஆணவப் படுகொலையின் சாட்சியங்கள் பகுதி 1
“400 ஆண்டுகளுக்கு முந்தைய ஆணிவேர்!” கௌசல்யா - சங்கர் வழக்கு : ஒரு திட்டமிட்ட ஆணவப் படுகொலையின் சாட்சியங்கள் பகுதி 1

“இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா?"- டீக்கடையில் அமர்ந்து அரசியல் பேசுபவர்களிடையேயும், நடுநிலை மனப்பான்மை உள்ள பலரின் பேச்சுகளிலும் இந்தச் சொற்றொடர் பிரயோகத்தை அடிக்கடிக் கேட்கலாம்! உண்மையில் இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கே காலடி எடுத்துவைத்த, பணமே பிரதானமான கார்ப்பரேட் சமூகத்துக்கு, அதற்குப் புறவெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் சாதியச் சமூகம் சற்று அந்நியமானதுதான். 'சாதியச் சமூகம்' என்பது ஊடகங்களில் பார்ப்பதுபோல இன்று, நேற்று உருவானது அல்ல. அதற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. சாதியத்தின் கோரமுகமான ஆணவக் கொலைகள், ஏதோ சமூக-பொருளாதாரச் சூழலும் முகநூல் உலகமும் அண்மைக்காலங்களில் உருவாக்கிவிட்ட  பிரச்னை போலப் பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல , "ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆணோ அல்லது பெண்ணோ சாதிய அடுக்கில் மேலே இருக்கும் ஒருவருடன் திருமணம் செய்துகொண்டால் அது எதிர்க்கப்படும். திருமணம் செய்துகொண்டவர்கள் கொல்லப்படுவார்கள். காலப்போக்கில் அவர்கள் தெய்வங்களாக வணங்கப்படுவார்கள். அப்படி உருவானவர்கள்தான், முத்தளமாரி, காத்தவராயன் தொடங்கி அத்தனைபேரும். இந்தக் கொடுமையான நிலைமை 400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது!” என்று தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் ஆய்வாளர் அ.கா.பெருமாள். 

400 ஆண்டுகளாகத் தொடரும் சமூகச் சாபத்தின் தற்கால வெளிப்பாடாக காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கௌசல்யா-சங்கர் இணையர் மீது உடுமலைப்பேட்டையில் 2016 மார்ச் 13-ம் தேதியன்று நடத்தப்பட்ட ரத்தவெறித் தாக்குதலைச் சொல்லலாம். உடுமலைப்பேட்டை பலசரக்குக் கடை ஒன்றின் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த அந்தத் தாக்குதலை தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாகப் பார்த்த கார்ப்பரேட் உலகம் உள்பட அனைத்து தரப்பும்... ‘இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா?' என்று அதற்குப் பிறகுச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. 

டூவிலரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நடத்திய சராமரித்தாக்குதல் அரிவாள் வெட்டில் சங்கர் உயிரிழந்தார். கௌசல்யாவுக்குப் பின் மண்டையில் அரிவாள் வெட்டு விழுந்து உடலெங்கும் குருதி வழிந்தோடிய நிலையில் அபாய ஓலத்துடன் சாலையில் சாய்ந்தவாறே, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அந்தக் கூலிப்படையை, தன் மகளையும், அவளின் கணவர் சங்கரையும் கொன்றுவிடும்படிக் கட்டளை பிறப்பித்திருந்தார் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி.

இந்த கொலைவெறித் தாக்குதலின் பின்னணியில் அந்தக் குடும்பம்தான் இருந்தது என்பது சில மணி நேரங்களிலேயே காவல்துறையினருக்குத் தெரியவந்தது. சங்கரைக் கொலை செய்ததற்காகவும், தங்கள்மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் அவர்கள்மீது கௌசல்யாவே சிலரின் உதவியுடன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் மீதான தீர்ப்பு, 2017 டிசம்பர் 12-ம் தேதி, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜனால் வழங்கப்பட்டது. கொலைக்குப் பின்னணியில் இருந்த சின்னச்சாமி மற்றும் தாக்குதல் நடத்திய கூட்டத்தினர் உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனையும் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஒருவருக்கு ஐந்து வருட சிறை வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் வழக்கில் பத்தாவதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரசன்னா ஆகியோர் வலுவான சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர். கௌசல்யா இந்த மூவரின் விடுதலைகுறித்து மேல்முறையீடும் செய்ய இருக்கிறார். ‘தந்தை’ என்கிற உணர்வற்று, நெஞ்சை உறையவைக்கும் கொலைதிட்டத்தை சின்னச்சாமி எந்த மனநிலையில் நிறைவேற்றினார்? அன்னலட்சுமி, பாண்டித்துரை ஆகியோரின் விடுதலை எதனடிப்படையில் நிகழ்ந்தது?" என்கிற கேள்வியும் எழுகிறது. 

சமூகம் இப்படித்தான் இருக்கிறது! இப்படியான சமூகமும் இருக்கிறது. அது காதலைக் குற்றமாக்குகிறது, கொன்று குவிக்கிறது என்கிற புரிந்துணர்வு 'கேண்டில் லைட்' டின்னரில் ‘வாலண்டைன்ஸ் டே பார்ட்டி’ கொண்டாடும் சமூகத்தின் இந்தப் பகுதிக்கும் தேவை. இதற்காகவே இந்தக் குற்றம் பற்றிய விரிவான பார்வையும் அவசியமாகிறது.

சின்னச்சாமியின் பின்னணி என்ன? ஏன் அவர் கொலை செய்யும் அளவுக்குச் செல்ல வேண்டும்? எதனால் அப்படிச் செய்தார்? எப்படி அதற்காகத் திட்டமிட்டார்?...

(தொடர்ந்து பேசுவோம்...)