Published:Updated:

செமதி வாத்தியார்

ஆ.விஜயானந்த், படம்: கே.கார்த்திகேயன்

ழகியலின் அருஞ்சொற்பொருள் தமிழச்சி தங்கபாண்டியன்... அவரது வீடும் அப்படியே! 

செமதி வாத்தியார்

சென்னை, நீலாங்கரையில் இருக்கும் தமிழச்சியின் வீடு எங்கும் விளக்குகள், மரப்பாச்சி பொம்மைகள், அலங்காரச் சின்னங்கள், அழகழகான ஓவியங்கள்.தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன், தன் மகளுக்கு எழுதிய அன்புக் கடிதம் ஒன்றும்!

தமிழச்சியின் கணவர் சந்திரசேகர் ஐ.பி.எஸ்., தமிழ்நாடு காகித ஆலையின் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி. 'முதன்முதலில் நான் சுமதியைப் (தமிழச்சியின் இயற்பெயர்) பார்த்ததே, மதுரை மீனாட்சி காலேஜில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில்தான். பிரமாதமா ஆடுனாங்க. அப்ப இவங்கதான் எனக்கு மனைவியா வரப்போறாங்கனு தெரியாது. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நாங்க பேசினதுகூடக் கிடையாது. இப்ப வீட்டுல அவங்க பேசிக்கிட்டே இருக்காங்க' என்கிறார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சரயு, பி.இ எலெக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு போட்டோகிராஃபியில் ஆர்வமாக இருக்கிறார். இரண்டாவது மகள் நித்திலா, எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு மாணவி.

''அப்பா உங்களுக்கு நேரம் ஒதுக்குவாரா?''

'வீட்டுக்கு எவ்வளவு லேட்டா வந்தாலும் எங்களைப் பார்க்காம தூங்க மாட்டார். சினிமாவுக்குக் கூட்டிட்டுப்போவார். ஆனா, ஸீட்ல உட்கார்ந்த வேகத்துல தூங்கிடுவார். அவர் கண் முழிச்சுப் பார்த்த படம், 'வாயை மூடி பேசவும்’ '' என நித்திலா சொல்லிச் சிரிக்க, இடைமறித்த சந்திரசேகர், 'குழந்தைகள் விருப்பம் எதுவோ அதுதான் எனக்கு முக்கியம். என் மைத்துனர் (தங்கம் தென்னரசு), எங்கே நல்ல சாப்பாடு கிடைக்கும்னு தேடிப்பிடிச்சுக் கூட்டிட்டுப்போவார். நான் சென்னை தி.நகர் டி.சி-யா இருந்தப்ப, இவங்களை சினிமாவுக்குக் கூட்டிட்டுப்போயிட்டு நைட் ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு வரும்போது, சேர்ந்து வீட்டுக்கு வருவோம்'' எனச் சொல்ல, 'ஆமாமா... எப்ப சனிக்கிழமை வரும்னு வாராவாரம் காத்திருப்போம்'' என கண்களில் புன்னகை மின்னச் சொல்கிறார் சரயு.

செமதி வாத்தியார்

மகள்கள் பேசுவதைச் சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்த தமிழச்சி, 'இப்ப வரைக்கும் மறக்க முடியாத விஷயம், மாயாதான். அது ஒரு பொம்மை. எப்பவும் நித்திலாகூடவே அது இருக்கும். அதுகூட பேசிட்டே இருப்பா. என் குழந்தைகளைக் கவனிச்சுக்கிற மாதிரியே அதையும் கவனிப்பேன். அதை உயிருள்ள பொம்மையாகவேதான் நடத்தினோம். இப்ப அந்தப் பொம்மை கை, கால் பிஞ்சுபோய் இருக்கு. டைரக்டர் மிஷ்கின் அதைப் பார்த்துட்டு, 'சரிபண்ணித் தர்றேன்’னு சொல்லியிருக்கார். அவங்க அறையில் ஏகப்பட்ட பொம்மைகள் இருக்கு. பெரிய பொண்ணு சரயு, எதுவா இருந்தாலும் எனக்கு லெட்டர் எழுதுவா. 'நான் கோபமா இருக்கேன்... சந்தோஷமா இருக்கேன்’னு எதைச் சொல்றதுன்னாலும் லெட்டர் மூலமாத்தான் பதில் வரும். ரொம்ப வித்தியாசமா இருக்கும்'' என்கிறார் சிரிப்போடு.

'எங்களுக்கு அம்மாவை கவிஞராத்தான் பிடிக்கும்; அரசியல்வாதியாகப் பிடிக்காது. அவங்களுக்கு அரசியல் சரிப்பட்டு வராது'' என்கிறார் நித்திலா.

''அரசியல், இலக்கியம்... எதுக்கு முன்னுரிமை கொடுப்பீங்க?''

''என் முதல் முன்னுரிமை... என்னை நான் பாத்துக்க நேரம் ஒதுக்குவதுதான். அப்புறம் குழந்தைகள். அதுக்கு அப்புறம்தான் கவிதை, நாடகம், இலக்கியம் எல்லாம்.''

''அரசியல் பணிகளுக்கு உங்களை எப்படித் தயார் பண்ணிக்கிறீங்க?''

'உண்மையைச் சொல்லணும்னா, நான் டி.வி-யே பார்க்க மாட்டேன். ஏதாவது பார்க்கணும்னு நினைச்சா ஜெயா டி.வி-யில் 'தேன் கிண்ணம்’ நிகழ்ச்சி பார்ப்பேன். பழைய பாடல்களைத் தேர்வுபண்ணிப் போடுவாங்க. ரொம்பப் பிடிக்கும்''.

''ஜெயா டி.வி பார்க்கிறீங்க... இப்பக்கூட பச்சை கலர் புடவை கட்டியிருக்கீங்க. இந்த காம்பினேஷனை எப்படிப் புரிஞ்சுக்கிறது?''

(பதற்றத்தோடு) ''அடப்பாவிகளா... இப்படிக்கூட கொளுத்திப்போடுவீங்களா? இதுக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.'

செமதி வாத்தியார்

''எப்பவும் இளமையா இருக்கீங்களே எப்படி?''

'எனக்கு எப்பவும் நம்ம ஊர் சாப்பாடுதான். ராகி, கம்பு கூழ். அப்புறம் வாக்கிங், யோகா.  காலையில் பப்பாளிப்பழம், தேனில் ஊறிய நெல்லிக்காய், உலர் பழங்கள், கறிவேப்பிலை ஒரு உருண்டைன்னு எடுத்துக்குவேன். மதியம் கீரை, காய்கறி, சின்ன வெங்காயம். எல்லாம் அளவா இருக்கும். இரவு கம்பு, கேழ்வரகில் சமைச்ச பொருட்களைச் சாப்பிடுவேன். அவ்வளவுதான். என் ரகசியம் ஒண்ணே ஒண்ணுதான்... என் மனதின் உற்சாகம் எப்போதும் முகத்தில் தெரியும்.''

''வீட்டில் செல்லப் பெயர்?''

''வாத்தியார்.''

''ஊரில் செல்லப் பெயர்?''

''செமதி.''

''வாங்க நினைக்கும் புத்தகம்?''

''குற்றப் பரம்பரை.''

''பிடிக்காதது?''

''தங்க நகை.''

''தங்கம் தென்னரசு?''

''இப்ப வரைக்கும் 'கண்ணு’னுதான் கூப்பிடுவேன்.''

''ரோல்மாடல்?''

''வேலுப்பிள்ளை பிரபாகரன்.

உலகத்துலயே அந்த மாதிரி ஒரு தியாகத்தை எந்தத் தலைவரும் பண்ணலை.''